இலங்கை

யாழ்., உரையின் விளைவு பதவிக் காலம் முடிந்ததும் அநுரவை கைது செய்யுங்கள்; ஜனாதிபதி இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயல்வதாக பிவித்துறு ஹெல உறுமய சி.ஐ.டி.யில் முறைப்பாடு

இனங்களுக்கிடையே வெறுப்புணர்வையும் முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவதாக கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பதவிக்காலம் முடிவடைந்ததும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவை கைது செய்து, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ் வழக்கு தொடருமாறு கோரி பிவித்துறு ஹெல உறுமயவின் இளைஞர் செயலாளரான குமார ராஜரத்தவினால் நேற்று திங்கட்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிகழ்த்திய உரையின் போது, தெற்கில் ஶ்ரீமகா போதி உள்ளிட்ட விகாரைகளையும் கடந்து பௌத்தர்கள் வடக்கில் விகாரைகளுக்கு செல்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டே அவருக்கு எதிராக இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் குமார ராஜரத்தவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனவரி 16ஆம் திகதி யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றும் போது, ”புனிதத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு மோதல்கள் நிலவுவதாகவும், பௌர்ணமி தினங்களில் சில் எடுப்பவர்கள் ஶ்ரீமகா போதியையும் கடந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்றனர். இங்கு சில் எடுப்பது அன்றி வெறுப்புணர்வே இருக்கின்றது. இல்லையென்றால் எதற்கு இந்தளவு விகாரைகளையும் கடந்து யாழ்ப்பாணத்திற்கு சில் எடுக்க வர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த கருத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டன.

இந்த கருத்தானது வடக்கில் வரலாற்று பௌத்த வணக்கஸ்தளங்களை வழிபட செல்லும் இந்நாட்டு பௌத்த மக்கள் தொடர்பில் தவறான கண்ணோட்டத்தை வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும், வடக்கிற்கு வரும் பௌத்தர்கள் மீது வடக்கு மக்களுக்கு வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையிலும் அமைகின்றது. இதனால் வடக்கிற்கு யாத்திரை செல்லும் பௌத்தர்கள் இடையூறுகளுக்கு உள்ளாகும் அபாயமும் உள்ளது.

இதன்படி இந்த கருத்தின் மூலம் வடக்கில் இருந்து இந்து ஆலயங்கள் பலவற்றை கடந்த கதிர்காமத்திற்கு வழிபாட்டுக்காக வரும் தமிழ் மக்கள் தொடர்பிலும் தெற்கு சிங்களவர்கள் மத்தியில் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தலாம். அத்துடன் தெற்கில் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களை கடந்து வடக்கிலுள்ள தேவாலயங்களுக்கு வழிப்பாட்டுக்கு செல்லும் கத்தோலிக்க மக்கள் மீதும் ஜனாதிபதியின் இந்த கருத்து பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

இதனால் ஜனாதிபதியின் இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாட்டில் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்கம் உள்ளிட்ட சகல மதக் குழுக்களுக்கு இடையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தலாம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2007/56ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தை மீறியுள்ளார் என்பது இந்த கருத்தின் ஊடாக தெளிவாகின்றது.

ஆனால் அநுரகுமார திஸாநாயக்க தற்போது நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதால் அவருக்கு ஜனாதிபதி விடுப்பாட்டு உரிமையை கொண்டவராக இருக்கின்றார். இதனால் அவரின் பதவிக் காலம் முடிவடைந்த உடனேயே. அநுரகுமார திஸாநாயக்கவை கைது செய்த சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ் வழக்கு தொடருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *