இலங்கை

வடக்கில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம்;  ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு 

வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வமாகவுள்ள நிலையில் அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் கீழான தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவு – செலவுத் திட்டத் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழான உலக வங்கியின் திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்றுத் திங்கட்கிழமை மாலை யாழ் சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் வடக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வமாக மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும்.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் வடக்கு மாகாணம் மீளக் கட்டியெழுப்பப்படுவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும் கிராமப்புற வீதிகள் மற்றும் தீவகப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான நீண்ட பயண நேரம் சுற்றுலாவிகளுக்குச் சவாலாகவுள்ளது. எனினும், இந்தியாவுடனான நேரடி வான் மற்றும் கடல்வழித் தொடர்புகள் சுற்றுலாவிகளின் வருகையை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் அதிகரிக்கவுள்ள சுற்றுலாவிகளைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும்- 21 ஆம் திகதி நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டைக் கருத்தில் கொண்டும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

எமது மாகாணத்தின் மூலப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் முடிவுப் பொருட்களாக இங்கேயே விற்பனைக்கு வரும் நிலை மாற்றப்பட வேண்டும். இங்கேயே அவற்றைப் பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதற்குரிய பொறிமுறைகள் அவசியம். உலக வங்கியின் புத்துயிர்த் திட்டத்தின் முதல் கட்டத்தில் யாழ். மாவட்டம் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களும் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளன. எனவே, ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி எமது பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த நாம் விரும்புகின்றோம் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் மேலும் வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *