பொற்காலத்தின் புதிய ஏரா…. கி.செ.துரை

அத்தியாயம் 02
முதல் அத்தியாயத்தை வாசித்து கருத்துரைத்த அனைவரையும் வணங்கி, அதைவிட அதிகமான ஈடுபாட்டைக் காட்டும்படி கேட்டு, இதை எழுதுகிறேன்..
ஒரு வீடு ஒரு தமிழன் பத்திரிகை வடிவில் வெளியான முதல் தமிழ் நாவல். 2025 ம் ஆண்டை பெருமைப்படுத்த எடுக்கப்பட்ட உன்னதமான முயற்சி.. அதுபற்றித்தான் இந்த அத்தியாயம் பேசுகிறது..
புத்தாண்டை இந்த உலகம் பல வழிகளில் பெருமைப்படுத்துகிறது. ஆனால் ஓர் ஆண்டு பெருமை பெறுவது எதனால், அந்த ஆண்டில் நடந்தேறும் செயற்கரிய செயல்களினால்தான். அப்பலோ விண்கலம் சந்திரத்தரையில் இறங்கியாதால் அந்த ஆண்டு பெருமை பெற்றதே அதுபோலத்தான்.
நாவல் என்றால் என்ன..? அது தடிப்பான புத்தகம், அது படித்தவர்களுக்கானது, நமக்கல்ல என்ற எண்ணம் நம்மில் பலரிடையே இருக்கிறது. இதனால் நாவல் இலக்கியம் மக்களை விட்டு வெகு தொலைவு சென்றுவிட்டது. அந்த இடைவெளியை குறைக்க, மக்களை நெருங்கிச் சென்று கதை சொல்ல ஒரு மாற்றம் அவசியம். அதற்கான ஒரு முயற்சிதான் பத்திரிகை வடிவில் நாவல் இலக்கியத்தைக் கொண்டு வருவதாகும்.
மனித முயற்சிகளில் பெரிய முயற்சி சிறிய முயற்சி என்று எதுவுமே கிடையாது, முயற்சி என்றாலே அது பெரியதுதான். நாவலை வடிவம் மாற்றி பத்திரிகையாக தரும் போது அது தமிழில் முதல் முயற்சியாக வரலாற்றுப்பதிவு பெறும்.. அந்த வகையில் சந்திரனில் காலடி பதித்தது போல இதுவும் நமது சிறிய காலடிதான், ஆனால் முதலாவது காலடி அதுவே இதன் சிறப்பு..
முயற்சியை ஆரம்பித்த போது மனக்கண்ணில் அழகான காட்சிகள் வரிசையாக ஓடின.. தமிழில் வெளியான பல மிகச்சிறந்த நாவல்களை பத்திரிகை வடிவில் கொண்டுவந்து மீள் உருவாக்கம் செய்தால் எப்படியிருக்கும், கனவு மெய்ப்பட வேண்டுமென இன்னொரு பாரதியாக பாட முடியாது, செய்ய வேண்டும், செயலில் இறங்கினேன்.
அதுவே ஒரு வீடு ஒரு தமிழன்..

மற்றவர்களின் படைப்பை எடுத்து நமது பரிசோதனைக் களமாக்கக் கூடாது. எனது நாவலையே பத்திரிகை வடிவில் கொண்டு வரவேண்டும். அதன் வெற்றியே இந்த முயற்சியில் மற்றவரையும் இறங்க வைக்கும். அதேவேளை ஒரு வீடு ஒரு தமிழன் எனது நாவலாக இருந்தாலும், அது தரமான நாவலாக இருக்க வேண்டும்.
மக்கள் இந்த அரும் பெரும் புதுமை முயற்சிக்கு இந்த நாவல் பொருத்தமானதுதானா என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்காக கடந்த அறுபது ஆண்டுகளாக பல்லாயிரம் அற்புத நூல்களை அன்றாடம் வாசித்து, அன்றாடம் எழுதி என்னை புடம் போட்டேன்.
பதின்நான்கு வருடங்களுக்கு முன்னதாக அலைகள் இணையப்பத்திரிகையில் இருபத்தைந்து வாரங்கள் தொடராக எழுதப்பட்ட நாவலே ஒரு வீடு ஒரு தமிழன்.
இதை தமிழகத்தில் புத்தக வடிவில் கொண்டுவர முயற்சித்து அன்று மித்ர பதிப்பகத்தில் பணியாற்றிய நண்பர் ரவியுடன் தொடர்பு கொண்டேன். யாருமே அச்சடிக்காதளவிற்கு குறைந்த செலவில் அச்சடிக்கலாம் என்றார்.
எப்படி..?
மற்ற நாவல்களை அச்சடிக்கும் போது அச்சு இயந்திரத்தில் ஓடும் கடதாசியில் ஒரு பக்கம் அச்சடிக்கப்படாமல் வெற்றுக் கடதாசியாக ஓடும். அந்த கடதாசியை ஆதாரமாக வைத்து ஓரமாக இதன் ஏடுகளை ஓடவிட்டு, வெளியே எடுத்தார். அழகிய புத்தகம் உருவானது, அந்தச் செயல் ஓர் அற்புத சாதனையே..
ஆனால் புத்தகத்தின் உள்ளே இருக்கும் சரக்கு சாதாரணமானதல்ல. அதை விமர்சனத்திற்காக பதின்னான்கு வருடங்களுக்கு மேலாக பலருக்கு வழங்கினோம். எழுத்துலக போட்டியாளர் கூட மனம் திறந்து பாராட்டினார்கள். வேள்ட் கிளாஸ் தரம் ஒன்றில் படைப்பு இல்லாமல், உலகின் முதல் முயற்சியாக பத்திரிகை வடிவில் கொண்டு வரக்கூடாது. அதை உறுதி செய்ய பத்து வருடங்களுக்கு மேல் போராடி, தரத்தை உறுதி செய்த பின்னர்தான் பத்திரிகை வடிவில் மாற்றி அச்சடித்தோம்.
பத்திரிகை வடிவில் நாவலா..? பலரிடையே பலத்த ஆவல், பத்திரிகை வேகமாக பறந்தது. நிறையப் பேர் படித்தார்கள். ஆனால் அவர்களிடமிருந்து விமர்சனங்கள் அதே வேகத்தில் வரவில்லை. அப்போதுதான் ஓர் அதிர்ச்சி தரும் உண்மை தெரியவந்தது.
தமிழ் மக்களிடையே வாசிப்புக் கலை ஏறத்தாழ அழிந்துவிட்டது என்று பல சமூக ஆர்வலர்கள் கூறுவதில் முற்றிலும் உண்மையில்லை. வாசிப்புக் கலை அழியவில்லை. சரியான நீர் ஊற்றாமல் வாடிக்கிடக்கிடக்கிறது. அதை வளரவிடாது பல புறக் காரணிகள் தடுத்தவிட்டன.
அந்தத் தடைகள் இன்னமும் நமது மனங்களில் அச்சம் தரும் இருளில் ஓர் ஓநாய் போலப் பதுங்கியிருக்கிறது. அதன் மீது ஒளியடித்து விரட்டியடிக்க வேண்டும். அது என்ன..?
அதுதான் விமர்சனக் கலை.
வாசிப்புக்கலைக்கு ஊற்றப்படும் நீர்தான் விமர்சனம். ஆனால் எதையுமே விமர்சிக்க முடியாது போர் மக்களின் விமர்சன ஆற்றலை வேரோடு அழித்திருப்பது தெரிந்தது.
விமர்சனக் கலையின் வீழ்ச்சியே படைப்பிலக்கியத்தின் வீழ்ச்சிக்கு காரணம். இதுவே அனைத்தையும் கருவறுத்துப் போட்ட பெரு நோய். இந்த முயற்சியை எடுத்திருக்காவிட்டால் இந்த நோயை என்னாலும் கண்டுபித்திருக்க முடியாது.
வாசிப்பும், வற்றாத படைப்பாற்றலும் வளர வேண்டுமானால் விமர்சனக்கலையைத் தவித்து அதை வளர்தெடுக்க முடியாது.
இதற்கு ஒரே வழி மீண்டும் காத்திரமான விமர்சன அரங்கை உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் முதல் பாடசாலைகள் வரை ஏறி இறங்கத் தொடங்கினோம்.
இந்தப் பணியை முன்னெடுத்தால் ஒரு பாடசாலைக்கு 30.000 ரூபா பரிசு என்று அறிவித்தோம். அதாவது சரியாக வாசித்து விமர்சிக்கும் முதல் மூன்று மாணவர்களுக்கு தலா 10.000 ரூபா பரிசு. யாழ் மத்தியகல்லூரியில் முதலாவது விமர்சன அரங்கு அங்கு நடைபெற்றது. பணி தொடர்கிறது..
இந்த நேரம் ஒரு வாக்குறுதியை என்னால் தர முடியும். தமிழில் உலகத்தை அதிர வைக்கும் எழுத்துக்களை நாம் எழுதும் காலம் வந்துவிட்டது. உலகத்தின் எல்லாப் பிரபல எழுத்துக்களையும் வாசித்துவிட்டு அமைதியாக , அதை இங்கு உறுதியுடன் சொல்கிறேன்.
நம் ஆட்கள் மற்றவர்களை மிரட்டுவதற்காக மேடைகளில் புலம்புவது போல உலக எழுத்தாளர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. “ வேள்ட் நம்பர் வண் “ அமெரிக்கா அல்ல.. அது நாம்தான். அந்த மாபெரும் செயலை நோக்கியே இனி நாம் நடக்க வேண்டும்.
இந்த இலக்கை எட்டித் தொடுவோம், நம்மவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் உலகம் ஏற்றுக்கொள்ளும் நாள் வரும்.
பில்கேய்ட்ஸ் தொலைவில் இல்லை என்ற எனது புத்தகம் கடந்த பத்தாண்டுகளாக எழுதப்பட்டபடியே கிடக்கிறது. இந்த வெற்றியை அதில் எழுதியுள்ளேன். இந்த ஆண்டு வெளிவரும்.
தமிழனின் பொற்காலம் மலர்ந்துவிட்டது..
இனி
சென்ற ஆண்டு யாழில் என்னால் உருவாக்கப்பட்ட கே.எஸ்.ரி திரைப்பட ஸ்ரூடியோ என்ன செய்கிறது.. அடுத்த அத்தியாயத்தில் காணலாம்..
இது சென்ற ஆண்டில் ஓடப்பட்ட இன்னொரு பொற்காலத்தின் புதிய ஏரா..
![]()