இலக்கியச்சோலை

வெல்லாவெளி விவேகானந்தமின் மகாவலி கங்கைக் கரையினிலே நாவல் – ஒரு பார்வை…. சோலையூர் குருபரன்

இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் பேராதனைப் பல்கலைக்கழகம் என்பது வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டுச் சின்னம். மத்திய மலைநாட்டின் மத்தியில் இயற்கை எழில் கொஞ்சும் சூழல், ‘ஹந்தானை’ மலைத்தொடர், மகாவலி கங்கை, அங்கு நிலவும் தனித்துவமான கல்விச் சூழல் ஆகியன பல ஈழத்துத் தமிழ் நாவல்களின் தோற்றத்துக்குக் களமாக அமைந்தது. அத்தோடு இலங்கையின் அரசியல், சமூக, கலாசார மாற்றங்களின் மையப்புள்ளியாகவும் விளங்குகிறது. குறிப்பாக 1960 களின் பின்னர் தமிழ் இலக்கியத்தில் பேராதனைப் பல்கலைக்கழக வாழ்வைச் சித்தரிக்கும் படைப்புக்கள் பெரும்பாலும் அங்கு கல்வி கற்ற மாணவர்களாலேயே எழுதப்பட்டுள்ளன.

பேராதனைப் பல்கலைக்கழகச் சூழலோடு தொடர்புபட்ட வகையில் எழுதப்பட்ட நாவல்கள், சிறுகதைகளில் இயற்கை அழகு, காதல், பிரிவு, சோகம், கல்வி, விரிவுரைகள், விடுதி வாழ்க்கை, அதற்குள் நிலவிய ஒருவகையான அரசியல், மாணவர் போராட்டங்கள், பகிடி வதைகள் போன்றவற்றைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டவை. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பெரும்பாலான நாவல்கள் வெளிவந்திருக்கின்றன.

தமிழில் வெளிவந்த நாவல்களாக செ. கணேசலிங்கனின் நிழல் நிஜமாகிறது (1960), புதியதோர் உலகம (1963), செங்கை ஆழியானின் கங்கைக்கரை ஓரம் (1978), ஆச்சி பயணம் போகிறாள் (1981) அங்கையன் கயிலாயநாதனின் சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும் (2001), மு.பொன்னம்பலத்தின் ஒரு பல்கலைக்கழகப் படுகொலை (1980), மா.பாலச்சந்திரனின் நிழல்கள் (1990), தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் (1985) க. கைலாசபதியன் திறந்த மடல் (1980, கட்டுரை வடிவிலான புனைவு) அ.முத்துலிங்கம், சின்னத்தம்பி குருபரன் போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளிலும் பேராதனைச் சூழல் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதேபோல் கா.சிவத்தம்பி பல கட்டுரைகளிலும் பேராதனைப் பல்கலைக்கழகச் சூழல் சித்திரிக்கப்பட்டிருக்கப் பட்டிருக்கின்றன. அத்தோடு வெல்லாவெளி விவேகானந்தனின் மகாவலி கங்கைக் கரையினிலே (2025) நாவலும் முழுமையான சித்திரிப்புடன் பல்கலைக்கரகத் தளத்தில் இணைந்திருக்கிறது.

சிங்கள இலக்கியத்தில் பேராதனைப் பல்கலைக்கழகப் பின்னணியில் பல புகழ்பெற்ற நாவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம். சிறி குணசிங்கவின் Hevanalla (நிழல், 1960), கருணாசேன ஜயலத்தின Golu Muhuda (ஊமைக்கடல், 1970), மார்டின் விக்கிரமசிங்கவின் Viraagaya (விரக்தி 1956), கே. ஜயதிலகவின் Aadara Hasuna (1960), குணதாச அமரசேகர Sarasavi Diya Dahara (1970), எதிரிவீர சரத்சந்திரா மனமே, சிங்கபாகு போன்ற சிங்கள நாடகங்களும், பல நிங்களத் திரைப்படங்களும் இவற்றுள் அடங்கும். அத்துடன் ஆங்கில மொழியில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலர் பேராதனையின் இயற்கை அழகு, கல்விச் சூழலைப் பற்றியெல்லாம் விரிவாக நாவல்களில் சித்திரித்துள்ளனர். அவற்றுள் மிச்செல் டி கிரெட்சரின The Hamilton Case (2003), ஷியாம் செல்வதுரையின் |Funny Boy (1994) நிஹால் டி சில்வாவின் The Road from Elephant Pass (2003), கார்ல் முல்லரின் The Jam Fruit Tree (1993) போன்ற நாவல்களையும் குறிப்பிடலாம்.

மட்டக்களப்பின் வெல்லாவெளிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட த.விவேகானந்தம் பேராதளைப் பல்கலைக்கழகத்தில் கற்ற புவியியல் சிறப்புப் பட்டதாரி. இவர் ஆசிரியர் அற்றும் அதிபர் சேவையில் 30 வருட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆரம்பத்தில் கவிதை எழுதுவதிலும் நாடகத் தயாரிப்பு, நடிப்பு, கவி அரங்குகளில் கவிதை எழுதி வாசிப்பதிலும் விமர்சனத் துறையிலும் கட்டுரை எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார் பதுளையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ‘அரும்பு’ (1987) எனும் சஞ்சிகை தோன்றி வளரக் காரணமாக இருந்தார். அதேபோல் மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் ‘விழுது’ வருடாந்த சஞசிகையை 2007 இல் ஆரம்பித்து பதவி ஓய்வு பெறுமவரை நடாத்தி வந்தார். 2011 இல் கல்வி அமைச்சினால் சிறந்த அதிபருக்கான ‘குரு பிரதீபா பிரபா’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அரச பணி ஓய்வின் பின்னர் சிறுகதை, நாவல் எழுதுவதில் கவனம் செலுத்தி உமிச்சட்டி (2024) சிறுகதைத் தொகுப்பு, ஒற்றைப் பனை (2025) சிறுகதைத் தொகுப்பு, மகாவலி கங்கைக் கரையினிலே… (2025) நாவல் ஆகியவற்றை வெளியிட்டிருக்கின்றார். உமிச்சட்டி சிறுகதைத் தொகுப்புக்கு 2025 இல் கிழக்கு மாகாண சாகித்திய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்

மகாவல கங்கைக் கரையினிலே… நாவல் அழகான முன்னட்டைப் படத்துடனும் பின்னட்டையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபாலின் நூலாசிரியர் பற்றிய குறிப்புடனும் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்களின் அணிந்தரையுடனும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகர் கலாநிதி இரா.மகேஸ்வரன் அவர்களின் சிறப்புரை, நூலாசிரியன் உங்களோடு ஒரு நிமிடம் என்ற செய்தியினையும் தாங்கி கதையின் உள்ளடக்த்துடன் எல்லாமாக 168 பக்கங்களில் நாவல் வெளிவந்திருக்கிறது. இந்நாவல் 23 தொடர்களைக் கொண்டது. நாவலின் உள்ளடக்கம், கதைப்போக்கு, அது உள்ளடக்கிய கால ஊடாட்டம் என்பவற்றைக் கத்தில் கொண்டு இதனைக் குறுநாவல் வகைக்குள் அடக்கலாம்.

ஒரு புனைகதை ஆசிரியன் தான் கண்டு, கேட்டு, பார்த்து இரசித்த சம்பவங்கள், தான் வாசித்து இன்புற்று மகிழ்ந்த, மனதை நெருடிய சம்பவங்களையே நாவலின் கதைப் பொருளாகத் தெரிவு செய்வான். அவ்வாறு தெரிவு செய்த கதையில் பின்வரும் விடயங்கள்மீது கவனம் செலுத்துவது கட்டாயமாகிறது. கதையின் கரு, கதைக் களம், உருவம், உள்ளடக்கம், உத்தி, பாத்திரப் படைப்பு, வர்ணனை,மொழிநடை, உரையாடல், கதையின் ஆரம்பம், மத்தி, முடிவு, கதை கூறும் பாங்கு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு தனக்கேயுரிய பாணியில் கதையை நகர்த்திச் செல்ல வேண்டும். அதில்தான் கதை ஆசிரியரின் வெற்றி தங்கியுள்ளது.

வெல்லாவெளி விவேகானந்தம் 1977/1978 கல்வியாண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்துக்குத் தெரிவாகிக் கல்வி கற்ற காலப்பகுதியில் முதலிரு ஆண்டுகளிலும் தன்னைப் பாதித்த, மனதைத் தொட்ட சம்பவங்களைக் கருப் பொருளாகக் கொண்டு, அதனைக் கோர்த்தெடுத்து இக்காலப் பகுதிக்கும் ஏற்றவாறு நாவலின் கதையை நகர்த்திச் சென்றிருக்கின்றார்.

மகாவலி கங்கைக் கரையினிலே கதைக்களம் கந்தானை மலைத் தொடர், போராதனைப் பல்கலைக்கழகச் சூழலில் ஆரம்பமாகி மட்டக்களப்பின் தென்பாலுள்ள கிராமியச் சூழலிலுக்குச் சென்று, பேரூந்துப் பயணம், பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் கண்டி மாறகரச் சூழலில் நின்று நிலைத்திருந்து, பின்னர் விடுமுறை காலத் தரிசிப்பு என்று மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் சம்மாந்துறை ஆகிய இடங்களில் உலாவி பேராதனைப் பல்கலைக்கழகச் சூழலில் நிறைவுறுகிறது. இந்நாவலில் ஒவ்வொரு கதைக்களத் தளங்களும் முடிந்தவரை வர்ணித்துச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.

புனைகதை ஆசிரியன் தான் தெரிவு செய்த கதைக்கு உருவத்தைக் கொடுத்துக் கதையை நகர்த்திச் செல்வதில் அதன் வெற்றி காண்கிறான். அதற்குள் உள்ளடக்கம், பாத்திரப்படைப்பு, உரையாடல், மொழி நடை, உத்தி, கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு, உயிரோட்டம், கதையின் ஆரம்பம், மத்தி, நிறைவு ஆகியவற்றுடன் வர்ணனை, உவமை, உருவகம், உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றம், முரண்நிலை, முரண்நகை ஆகிய அழகியல் அணிகளும் இணைந்துக் கதையை நகர்திச் செல்வதில் ஆசிரியரின் சாமர்த்தியம் தங்கியுள்ளது. கதையின் தன்மை, கதைக்களம், உள்ளடக்கம் என்பன பொறுத்து இவற்றுள் ஒரு சில விடயங்கள் விடுபடவும் வாய்ப்புள்ளது. இந்நாவலில் பல வடயங்கள் இணைந்து உருவத்தைக் கொடுத்துக் கதை மாந்தர்களை வாசகரின் மனக் கண்முன் உயிர்ப்புடன் நடமாட விட்டிருப்பது சிறப்புக்குரியது.

கதையிள் உள்ளடக்கம் 23 தொடர்களைக் கொண்டது. கந்தானை மலைச்சாரலில் ஆரம்பமாகி ஊசலாடும் உயிர் என்ற இறுதித் தொடரோடு நிறைவுறுகிறது. முக்கால்வாசிக்கு மேற்பட்ட கதை போரதனைப் பல்கலைக்கழகச் சூழலிலேயே நடைபெறுகிறது. மிகுதிக் கதை யாமினி, இளமாறனின் பேருந்துப் பிரையாணம், கண்டி குயின்ஸ் ஹொட்டல் களியாட்டம், கண்டிப் பெஹரா, விடுமுறைகாலச் சுற்றுலா எனக் கதையின் இடையிடையே களம் இடம் மாறிச் செல்கிறது. பல்கலைக்கழகச் சுற்றுச் சூழல், படிப்பு, காதல், சோகம், நூலகம், குறிஞ்சிக் குமரன் கோயில், தமிழ்ச் சங்கத் தேர்தல், பேராதனைப் பூங்கா, ஈ.ஓ.வி.பெரேராத் தியேட்டர், மாணவர் விடுதிகள் ஆகியன கதைக் களங்களுக்கான உள்ளடக்கங்களாக அமைந்திருக்கின்றன.

ஒரு நாவலுக்கு பாத்திரப்படைப்பு மிக முக்கியமானது. வாசகரின் மனதில் பதியத்தக்க வகையில் அளவோடு அமைந்திருப்பது விரும்பத்தக்கது. அப்பாத்திரங்களுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவம் மொழி நடை, உரையாடல் என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும். கதைப் போக்கில் பாத்திரங்கள் வாசகரின் மனக் கண்முன் உயிரோடு நடமாட வேண்டும். அவர்களின் நடை, உடை, பாவனை், அங்க அசைவுகள், உடல் மொழி ஆகியவற்றுடன் உரையாடல், மொழி நடை, பாத்திர அறிமுகம், வர்ணனை என்பவற்றுக்கூடாகத் தத்ரூபமாகப் பாத்திரங்கள் நகர்திச் செல்லப்பட வேண்டும். அந்த வகையில் மகாவலி கங்கைக் கரையினிலே நாவலின் பாத்திரப் ஊருவாக்கம், அதன் முக்கியத்துவம் என்பவற்றில் ஆசிரியர் நன்கு கவனமெடுத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இக்கதை நடந்து முடிந்த உண்மைச் சம்பவம் என்பதனால் உயிரொடு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற கதை மாந்தர்களே பாத்திரங்களாகப் புனையப்பட்டிருக்கின்றனர். கதையின் நாயகன், நயகிகளாக இளமாறன், யாமினியும் பிரதான பாத்திரங்களாக மனோ, இனியன், வசந்தன், சிவா, கனகம்மா ஆகியோரும் துணைப் பாத்திரங்களாக முகுந்தன், ஸ்ரனி, சிந்து, கார்திதிகேசு, குமார், சிவா, தனபாலன், ரவி, முருகேசுவுடன் இன்னும் சில பாத்திரங்களும் கதையில் ஊடாடுகின்நனர். இவற்றுள் இளமாறன், யாமினி, மனோ, இனியன், வசந்தன், சிவா, கனகம்மா, கார்த்திகேசு ஆகிய பாத்திரங்கள் அளுத்தமானவையாகும். அதிலும் இளமாறன், யாமினி ஆகியோரின் பாத்திர உள்ளடக்கம் வாசகரின் மனதை விட்டகலாதவை. கார்த்திகேசு பாத்திரம் இளமாறன், யாமினி ஆகியோரின் மௌனக் காதலை வெளிப்படுத்துவதற்கான திருப்பு முனையாக அமைந்துவிடுகின்றது.

கதைக் களமும் கதை மாந்தர்களும் மனதில் நின்று உலாவுவதற்கு வர்ணனை பிரதான இடம் வகிக்கிறது. கள வர்ணனை செங்கை ஆழியான், வ.அ.இராசரெத்தினம், எஸ்.பொன்னுத்துரை. அங்கையன் கைலாயநாதன், முத்துலிங்கம், கணேசலிங்கன், செம்பியன் செல்வன், கதிர்காமநாதன், பாலச்சந்திரன், சண்முகசுந்தரம், ஞானசேகரன், தெளிவத்தை யோசப், மாத்தளை சோமு, தெணியான், மண்டூர் அசோகா, ரஞ்சகுமார், மைக்கல் கொலின் ஆகியோரின் கதைகளில் வருவதுபோல் குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை. வர்ணனை வலிந்து கூறுவதாக இருக்கக்கூடாது. சரளமான நடையில் அழகியல் அம்சங்கள் கலந்து சுவாரசியமாக அமைதல் வேண்டும். ஒவ்வொரு பாத்திரங்களின் அறிமுக வர்ணனை குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. ‘மாறனின் சுருள் சுருளான அழகான முடி, கத்தரித்து வெட்டப்பட்ட அவனது குறுந்தாடி, கூரான அவன் மூக்கு… எல்லாமே மாறனுக்கு அழகுதான்…’. என மாறனை அறிமுகம் செய்கிறது. ‘… இளமை அவளிடம் நளினம் காட்டி நர்த்தனம் செய்கிறது’ சுடிதாரில் மிக அழகாக இருந்தாள். அவளின் எடுப்பான மூக்கு …. பிறைபோன்ற அவளது நெற்றி. அப்பாடா பிரமன் தன் கைவண்ணத்தில் எவரும் குறை சொல்ல இடம் வைக்கவில்லை. அப்படியொரு அழகு. அவளது அழகைச் சொல்லவா வேண்டும்….’ என யாமினியை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். இவ்வாறு ஒவ்வொரு பாத்திரங்களும் வர்ணனைகளோடு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. வர்ணனைகள் பல சந்தர்ப்பங்களில் வலிந்து கூறப்பட்டிருப்பது போலான தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஒரு இலக்கை எப்படி எவ்வாறு, அடைந்து கொள்வதற்கான திட்டமிடல் உத்தியாகும். இது பொதுவானது. புனைகதை இலக்கியத்தில் ஆசிரியர் கதை ஒன்றைக் கூறும்போது சுவாரசியமாகவும், வாசகர்களைக் கவரக்கூடிய வகையிலும் கொண்டு செல்லப் பயன்படுத்தும் நுட்பங.கள் உத்திகளாகக் கொள்ளப்படுகின்றன. கதை சொல்லும் முறை, பின்னோட்டம், முன்னோட்டம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், கதையோட்டம், வர்ணனை, உரையாடல், மொழிநடை என்பவற்றில் அசிரியர் தனக்குப் பிடித்தமான அல்லது கதைக்குப் பொருத்தமான உத்திகளைப் பயன்படுத்திக் கொள்வார். இந்நாவலின் ஆசிரியர் தான் பல்கலைக்கழகத்தில் கற்ற கலாத்தில் நிகழ்ந்த சம்பவம் என்பதனால் பிரதான கதை சொல்லியாகத் தானே இருந்து நனவிடை உத்தியினூடாகக் கதையைச் சுவாரசியமாகக் கூறி இருப்பது பாராட்டத்தக்கது. கதையில் உத்திகளைப் பயன்படுத்துவதில் ஆசிரியருக்கிருந்த முதிர்ச்சி ஒருவாறு தென்படுகிறது. மாறுபட்ட உத்திகளைக் கதைகளில் பயன்படுத்திக் கதை கூறி வெற்றி கண்டவர்களாகப் புதுமைப்பித்தன், மௌனி, கல்கி, அகிலன், லா.சா.ரா, பிச்சமூர்த்தி, கு.ப.ரா, அசோகமித்திரன், ஜெயமோகன், இலங்கையர்கோன், செங்கை ஆழியான், வ.அ.இராசரெத்தினம், செம்பியன் செல்வன், பொன்னுத்துரை, கனக.செந்தில்நாதன், முத்துலிங்கம், தெணியான், போன்றோரைக் குறிப்பிடலாம்.

புனைகதைகளில் மொழி நடையும் உரையாடலும் கதைக்கு அழகு சேர்ப்பன. உரையாடல் சிக்கனமாகவும் மௌனம், உடல்மொழி, குறியீடு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். கதைக்குப் பயன்படுத்தப்படும் மொழிநடை வட்டார வழக்கில் அமைந்த பேச்சு வழக்காக இருத்தல் வேண்டும். பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மைகளைகள், குண இயல்புகளைக் கொண்டவை. அவர்கள் வாழ்ந்த குடும்பம், சூழல், பிரதேசம், கல்வி, பொருளாதாரம், அந்தஸ்து என்பன உரையாடலின் மொழி நடையைத் தீர்மானிக்கும். அந்த வகையில் கதைக் களம் பல்கலைக்கழகச் சூழல் என்பதனால் இலங்கை பூராகவும் இருந்து கற்க வந்த நணபர்களின் கூட்டம் பரந்தது. அந்தப் பாத்திரங்களுக்கேயுரிய வட்டார வழக்கு மொழிநடையைப் பின்பற்றுவது அவசியமாகிறது. அந்தப் பேச்சு வழக்கில் அமைந்த உரையாடல் உயிர்ப்பானதாகவும் உணர்வு பூர்வமானதாகவும் உள்ளத்து உணர்வுகளைத் துண்டிவிடக் கூடியதாகவும் கண் முன்னே தோன்றுவதாகவும் யதார்த்தமானதாகவும் அமைந்திருத்தல் வேண்டும். அசிரியர் இந்நாவலின் பாத்திர உரையாடல்களில் இலகுவான, சரளமான மொழி நடையைக் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது. இருந்தும் சில பாத்திரங்களின் உரையாடல்களில் வட்டார வழக்குப் பேச்சு நடை பயன்படுத்தப்படவில்லை. இந்நாவலை உணர்வு பூர்வமாக ஊன்றி வாசிப்பவர்களுக்கு இவ்விடயம் தெரியவரும். பல இடங்களில் உரையாடல்களில் சொற்கள் வலிந்து சேர்க்கப்பட்டவை போலான பிம்பத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. இருந்தும் கதைக் கருவும் எள்ளடக்கமும் கதை கூறும் பாங்கும் சிறப்பாக அமைந்திருப்பது பெருமைக்குரியது.

நாவலின் கதை கந்தானை மலைச் சாரல், மகாவலி கங்கை, பல்கலைக்கழகச் சூழலை ஒட்டிய இயற்கை வர்ணனைகளுடன் ஆரம்பமாகி ஜே.பி மண்டபத்தில் தனது அறையில் இருந்த இளமாறன் இயற்கை வனப்பை ‘ஆஹா! எவ்வளவு அற்புதம்…’ எனக்கூறி அழகை ரசிப்பதாக உயர்திணை முன்னிலைப் படர்க்கையில் சுவாரசியமாகக் கதை தொடர்ந்து செல்கிறது. இந்த நாவலைப் பொறுத்தவரையில் கதையின் ஆரம்பத்தை இளமாறன் துக்கத்தின் விளிம்பில் நின்று கொண்டு பாடும் ‘வானுயர்ந்த சோலையிலே, நீ நடந்த பாதையெல்லாம், நானிருந்து பாடுகிறேன், நாவறண்டு பாடுகிறேன்….’ என்ற சனிமாப் பாடலடியுடன் கதையை ஆரம்பித்தீரந்தால் கதையில் முடிவுக்கு ஏற்றால் போல் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது பல வாசகர்களின் கருத்தாகும். கதையின் பின்னால் நடக்கப்போகும் ஒரு பெரிய சம்பவத்தைப் பற்றிக் கதையின் ஆரம்பத்திலேயே சிறு குறிப்புகளைத் தருவது முன்னோட்டம் (Foreshadowing) என்பர். இது வாசகர்களிடையே கதையின்மீது ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் (Suspense) தூண்டுவதாக அமையும்.

மட்டக்களப்பில் இருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கான பேரூந்துப் பயணத்தின் போது இளமாறன், யாமினி ஆகியோரிடையே ஆரம்பித்த இனம்புரியாத நட்பு காதலாக மாறி வெளிப்படுத்த முடியாமல் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. மாறன் காதலை வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான். மாறன் தனது காதலை முதலில் கூறட்டும் அதன் பின்னர் தானும் கூறலாம் என்ற பெண்மை உணர்வுடனான மனப் போராட்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறாள் யாமினி. இது செங்கை ஆழியானின் கங்கைக் கரை ஓரம் நாவலில் வரும் சிவராசன், கங்கா ஆகிய இரு பாத்திரங்களையும் ஞாபகமூட்டுவதாக அமைகின்றது. மாறன், யாமினி இருவருக்கும் இடையில் ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தால் போல்’ யாமினியின் தூரத்து உறவினனான கார்த்திகேசு கதையின் மத்திக்குச் சற்று முன்பாக உள்நுளைந்து இருவரினதும் காதலைக் குழப்ப முயற்சிக்கிறான். இதுவே கதைக்குத் திருப்பு முனையாக அமைந்து, பல்கலைக்கழக வூஸ் கன்டினில் இருவரும் I love you சொல்லிக் காதலை வெளிப்படுத்தக் காரணமாய் அமைந்தது. அதன் பின்னர் காதலர் இருவரும் கருத்தொருமத்துக் காதல் பறவைகளாக பல்கலைக்கழகத்தில் முழுவதும் கதையோடு இணைந்ததாகத் தமிழ்ச் சங்கத் தேர்தல், வெற்றி விழா, பேராதனைப் பூங்கா, குறிஞிசிக் குமரன் கோயில் எனக் கதை காதலர்களோடு நகர்ந்து செல்கிறது. இதற்கிடையில் கார்த்திகேசு தனது நண்பன் ஒருவனுடன் இணைந்து யாமினியைக் கடத்திச் சென்று கட்டுகஸ்தோட்டையில் வைத்துப் பதிவுத் திருமணம் செய்யத் திட்டமிடுகிறான். அதனை அறிந்த இளமாறனும் இனியன், மனோ, வசந்தன், சிவா ஆகிய நண்பர்களும் அந்த விபரீதம் ஏற்படாமல் தடுத்துக் கார்த்திகேசுவுக்குத் தக்கபாடம் புகட்டுகின்றனர். அதனைத் தொடர்ந்து ஜே.பி. மண்டப இரவுக் களியாட்டம், மயான காண்டம், நூலகத்தில் யாமினி, கண்டிப் பெரஹரா, பல்கலைக்கழக விடுமுறை உலா, பேராதனையில் வசந்த காலம் எனக் கதை காதல், களியாட்டம், நண்பர்கள் கும்மாளம் மகிழ்ச்சி, சந்தோசத்தோடு நகர்ந்து செல்வதைக் காண முடிகிறது.

கதையின் இறுதியில் துன்பம், துயரம், சோகம் கதைத் தளம் மாறுகிறதுஃ சூழ்ந்தது பேரவலம், ஊசலாடும் உயிர் என இரு தலைப்புக்கள் இருள் சூழ்ந்த துன்பியலைக் கூறிச் செல்கின்றன. சங்கமித்தா மண்டபத்தில் யாமினிக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படல், பல்கலைக்கழகம் அவசரமாக மூடப்படல், யாமினியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதால் கந்தக்காடு இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்படல். பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படல், யாமினியின் உடல்நிலை மோசமானதை அறிந்து சோகம், விரக்தி, பயம் கலந்து இளமாறனின் மனததை ஆக்கிரமித்துக் கொள்ளல். யாமினி சுகமடைந்த செய்தியை முதலில் தாயக்குக் கூறுகிறாள். அந்தச் செய்தியைக் கூறுவதற்காக யாமியின் தாய் கனகம்மா மாறனுக்கு அழைப்பெடுக்கிறாள். கைப்பேசி அலறியதும் மாமினியின் மரணச் செய்தியைக் கூறவே அழைப்பு எடுக்கிறார் என நினைத்துக் கொண்டு கைப்பேசியைக் கட்டில்மீது எறிந்துவிட்டு மகாவலி கங்கையில் வீழ்ந்து சாகப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு பாய்ந்து சென்ற மாறனைக் குண்டுகட்டாாகப் பிடித்துத் தூக்கி வருகிறான் வசந்தன். நீண்ட நேரம் இடைவிட்டுவட்டு ஒலித்த மாறனின் கைப்பேசியை மனோ எடுத்துக் கதைத்ததும் யாமினி உடல்நலம் தேறியமை தெரிய வருகிறது. ‘… “யமனுடன் போராடிய மகள் யாமினி நாளைக்குச் சுகத்துடன் வீட்டுக்கு வருகிறாள். தம்பி மாறனிடம் செய்தியைச் சொல்லி விடுங்க” எனக் கூறி கனகம்மா அழைப்பைத் துண்டிக்கிறாள்.
அதே நொடியில் யாமினியின் அழைப்பு. மாறனின் கைப்பேசி மனொவிடம் இருக்கிறது. “டேய் மாறா, யாமினி அழைக்கிறாள்” அடுத்த கணமே சிவாவின் கையிலிருந்த கைப்பேசி மாறனின் கைக்கு மாறுகிறது. “அவன் ஆசை தீருமட்டும் ககைதைக்கட்டும்” எனக் கூறிக் கொண்டு அறையிலிருந்த நண்பர்கள் வெளியேறுகின்றனர்.

“காலனையே வென்ற கார்குழலே! யாமினியே!
காத்திருக்கன் நானிங்கு ஜாலமென்ன நீ செய்தாய்
கொவிட் அரக்கன் கோரப்படி நீங்க.
என்னுயிரே யாமினியே எமனிடமே நீ
கைவரிசை காட்டிவிட்டு
மண்ணுக்கு மீண்டு வந்தாய்.
பொன்மகளே புறப்பட்டு நீ வருக”
“கவிஞரே உங்கள் கவிதை அபாரம். காலம் முழுவதும் உங்கள் மடிமீது கிடந்து இனி நான் கவிதை கேட்பேன்”.

“வா யாமினி ஓடி வந்துவிடு. உனக்காக ஓராயிரம் கவிதை சொல்வேன்.
“நான் நமக்காகவே இன்னும் வெறுமையாய்க் காத்துக் கிடக்குது அந்த மகாவலி கங்கைக் கரையோரம்” எனக் கூறிக் கதை முற்றுப் பெறுகிறது. வாசகனை இடை நடுவில் தவிக்க விட்டுச் சென்றது போலான உணர்வு தோன்றுகிறது.

நாவலின் கருவும் பொருளும் கதை சொல்லும் பாங்கும் நன்று. இது வெல்லாவெளி விவேகானந்தம் அவர்களின் முதலாவது நாவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாவலுக்குரிய அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கிறார். இருந்தும் ஏற்கனவே கூறியவற்றோடு பின்வரும் விடயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். நாவலின் முன் அட்டைப்பட வர்ணம், கதையின் உள்ளடக்கத்துக்கு ஏற்றவிதமான தலைப்பு, உப தலைப்புக்கள், வர்ணனை, வட்டார வழக்கு மொழிநடை, உரையாடல், கதை நகர்ந்து செல்லும் காலம், யதார்த்தம், கதையின் முடிவு ஆகிவற்றில் அவதானம் செலுத்தி இருந்தால் நாவல் மேலும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். நாவலில் மேலும் இரு தொடர்களை இணைத்து, ஒன்றில் மாறன், யாமி மற்றும் நண்பர்களது னிபல்கலைக்கழகப் படிப்பு நிறைவடைவதைக் காட்டி இருக்கலாம். அதற்கிடையில் காதலர்களுக்கு இடையேயான புலவி, ஊடல், துனி அதன் பின்னர் கூடலைச் சித்திரித்திருக்கலாம். ஏனெனில் பல்கலைக்கழகக் காதல் வாழ்க்கைத் தளத்தில் இவை எல்லாம் சர்வசாதாரணம். இறுதித் தொடரில் இருவரும் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொள்வதாகப் புனைந்திருந்தால் நாவலும் முற்றுப் பெற்றிருக்கும். இத்தகைய காரணங்களுக்காக இந்நாவலைக் குறுநாவல் என்ற வகைக்குள் சேர்க்கப்பட வேண்டியதாகிறது.

இந்நாவல் ஆசிரியரின் கன்னி முயற்சி என்பதனால் சிறுசிறு தவறுகள் இடம் பெற்றிருக்கலாம். இருந்தாலும் பேராதனைப் பல்கலைக்கழக சூழல் தளத்தில் எழுந்த நாவல் வரிசையில் வெல்லாவெளி விவேகானந்தம் அவர்களின் நாவலும் இணைந்திருக்கிறது. இவர் எழுத்துத் துறையில் மேலும் பல நாவல்கள், சிறுகதைத் தொகுப்பக்ளை வெளியிட வேண்டும். அதற்குரிய ஆரோக்கியம் அவருக்குக் கிடைக்க வேண்டும். தமிழ் இலக்கிய உலகு அவரிடமிருந்து ஆரோக்கியமான மேலும் பல படைப்புக்களை எதிர்பார்க்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *