முச்சந்தி

வடக்கிற்கான ரயில் சேவை இடை நிறுத்தம்; புது வருடம் வரை சேவைகள் இல்லை

‘டித்வா’ சூறாவளியினால் கடுமையாக சேதமடைந்த வடக்கு ரயில் பாதையின் பல பிரிவுகள் இன்று 19 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே பொது மேலாளர் கே. ரவீந்திர பத்மப்பிரிய தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய மஹவ – அனுராதபுரம் பிரிவு இன்று 19 ஆம் திகதி முதல் மூடப்படும்.

மஹவ – ஓமந்தை பிரிவு விரிவான புனரமைப்பு பணிகளுக்காக ஜனவரி 26 ஆம் திகதி முதல் முழுமையாக மூடப்படும்.

அதேநேரம் மதவாச்சி – தலைமன்னார் பாதையின் புனரமைப்புப் பணிகள் இன்று19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்தத் திட்டத்தின் கீழ் மஹவ – ஓமந்தை பாதையில் உள்ள ஐந்து ரயில் பாலங்களை மாற்றுதல் மற்றும் யானைகள் நடமாட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைத்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பணிகளை முடித்து, வடக்கு-தெற்கு ரயில் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவர அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

யாழ் ராணி சேவை இன்று 19 ஆம் திகதி அனுராதபுரம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலும், ஜனவரி 27 முதல் ஓமந்தை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலும் இயக்கப்படும்.

இதேவேளை மட்டக்களப்பிற்கான புலத்திசி இன்ரசிற்றி எக்ஸ்பிரஸ் மற்றும் உதயதேவி ரயில் சேவைகள் நாளை 20 ஆம் திகதி முதல் இயக்கப்படும்.

மேலும் திருகோணமலைக்கான இரவு நேர தபால் ரயில் தனது சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *