பிரதமர் ஹரிணிக்கு எதிராக ஜே.வி.பிக்குள் இருந்தே சூழ்ச்சி; அவருக்கு அருகில் இருப்பவர்களே அவருக்கு குழி பறிக்கின்றனர்

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக ஜே.வி.பிக்குள் இருந்தே சூழ்ச்சிகள் செய்யப்படுகின்றதா? என்ற சந்தேகங்கள் எழுவதாகவும், அவரைப் பற்றி தெரியாத விடயங்களை அவருக்கு அருகில் உள்ளவர்களே வீதிக்கு கொண்டு வருகின்றனர் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
முஜிபூர் ரஹ்மான் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டு தயாரித்து வரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் அவரின் தனிப்பட்ட விடயங்கள் எதுவும் கிடையாது. அதில் அவரின் கல்வி அமைச்சு விடயத்துடன் தொடர்புடைய கல்வி மறுசீரமைப்பில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளே அந்த நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளது.
ஆனால் அவரின் தனிப்பட்ட விடயங்களை கூறுவதாக ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். அவர்களே பிரதமருக்கு எதிராக சேறு பூசுகின்றனர். எவராவது சேறுபூசுவார்களாக இருந்தால் அதற்கு எதிராக பிரதமருக்கு நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். அவ்வாறு இருக்கையில், ஆனால் அவர்களின் தரப்பினரே சந்திகளில் ஆர்ப்பாட்டம் செய்து இந்த பிரச்சினையை லொறிகளில் நின்றுகொண்டு கூறும் நிலைமையே காணப்படுகின்றது. லொறிகளில் ஏறி நின்று அவர்களே எங்களுக்கு தெரியாத விடயங்களையும் கூறுகின்றனர்.
இவ்வாறாக பிரதமர் ஹரிணிக்கு எதிராக ஜே.வி.பிக்குள் உள்ளேயே சூழ்ச்சிகள் உருவாகி வருகின்றதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. பிரதமருக்கு அருகில் இருப்பவர்களே அவருக்கு குழி பறிக்கின்றனர் என்றுதான் கூற வேண்டும். இது வீதியில் கதைக்க வேண்டிய விடயமல்ல. அபகீர்த்தி ஏற்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதனை விடுத்து ஏன் சந்திகளில் நின்று கதைக்க வேண்டும் என்று கேட்கின்றேன்.
ஒரு காலத்தில் ஜே.வி.பிக்கும் என்.பி.பிக்கும் இடையே பனிப்போர் இருந்தது. அந்த பனிப்போர் இப்போது வெளியில் வருவதை போன்றுதான் தெரிகின்றது. பிரதமர், அவரின் அருகில் உள்ள குழுக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்பட்டுள்ள உண்மையான பிரச்சினையை மூடி மறைப்பதற்காக அவர்கள் பிரதமர் விடயத்தை முன்னால் எடுத்து செயற்படுகின்றனரா? என்றும் கேட்க வேண்டியுள்ளது. இதனால் அவர் எதிர்க்கட்சியிடம் இருந்து அல்லாமல் அவருக்கு அருகில் இருப்பவர்களிடமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
![]()