சிற்றுண்டிச்சாலையில் சாப்பிடுவதுடன் சபையில் கூச்சலிடுவதே அர்ச்சுனாவின் வேலை

பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் வடக்கு மாகாணத்தின் ஏனைய எம்.பி.க்களிடமிருந்து அர்ச்சுனா எம்.பி கற்றுக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதும், சிற்றுண்டிச்சாலையில் சென்று சாப்பிடுவதும் மாத்திரம் பணியல்ல என்பதை அவர் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற கடை,அலுவலக ஊழியர் ( ஊழியத்தையும், வேதனத்தையும்,ஒழுங்குப்படுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. ரோஹன பண்டார மிகவும் கீழ்த்தரமான வகையில் பிரதமர் மீது விமர்சனங்களை முன்வைத்தார். சைகை மற்றும் வார்த்தை பிரயோகத்தால் பிரதமரை விமர்சித்தார். எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஆகியோர் இந்த கீழ்த்தரமான செயற்பாட்டை ஏற்றுக்கொள்கின்றார்களா?
அதேபோல் எதிர்க்கட்சியின் பெண் உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன, சந்திராணி கிரியெல்ல ஆகியோர் இந்த கீழ்த்தரமான செயற்பாட்டை ஏற்றுக்கொள்வார்களா?
வடக்கை சேர்ந்த அர்ச்சுனா இராமநாதன் எம்.பி காலையில் இருந்து சபையில் கூச்சலிட்டுக் கொண்டு ஏனைய உறுப்பினர்களுக்கு இடையூறாக செயற்படுகிறார்.வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் சிறந்த முறையில் செயற்படுகிறார்கள். பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. அவர்களிடம் கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.
பாராளுமன்ற நிலையியல் கட்டளை புத்தகம் மாத்திரம் பாராளுமன்றத்தின் முழு நடவடிக்கையல்ல, பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதும், சிற்றுண்டிச்சாலையில் சென்று சாப்பிடுவது மாத்திரம் பணியல்ல என்பதையும் அர்ச்சுனா எம்.பி.விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
![]()