இலக்கியச்சோலை

கொழுந்தாய் முகிழ்ந்த விருட்சம்… அந்தனி ஜீவா – ஓராண்டு நினைவுகளில்…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

மலையக இலக்கிய மூலவேரான அத்தனி ஜீவாவின் ஓராண்டு நினைவு நாள் இலக்கிய உலகில் நினைவு கூறப்படுகிறது. கொழுந்தாய் முகிழ்ந்த விருட்சமாக அந்தனி ஜீவாவின் இலக்கிய பயணம் மலையகம் முழுவதும் விரிந்து பரந்து கிடக்கிறது.

படைப்பின் இலட்சியம் சமுதாயத்தின்தேவையாக இருக்க வேண்டும். அதில்மண்ணின் மணம் இருக்க வேண்டும். கலைஞன் மானுடம் படைக்கும்ஆத்மாவின் ராகமாகத் திகழ வேண்டும்” என்ற தமது கூற்றின் வழி நின்றுஇலக்கியம் படைத்து வரும் அந்தனிஜீவாவின் புகழ் ஈழத்து மலையகஇலக்கிய வரலாற்றில் என்றும்நிலைத்திருக்கும். அந்தனி ஜீவாவை கடந்த வருடம் 2025 ஜனவரி 10ம் திகதி தமிழ் கூறும் நல்லுலகம் இழந்தது.

எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர், சிறுகதை ஆசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர் எனப்பன்முக ஆளுமைப் படைத்த அந்தனி ஜீவா 1944 மே 26இல் பிறந்தார். கலையையும், இலக்கியத்தையும் வெறும் பொழுதுபோக்குக்காக அல்லாது, சமூக விழிப்புணர்வுக்கான ஊடகமாகக் கருதித் தமது பணியை மேற்கொண்டவர்.

கொழும்பு சுவர்ண வீதியிலிருந்த தமிழ்ப் பாடசாலையிலும் பம்பலப்பிட்டி புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி கற்ற அந்தனி ஜீவாவின் தந்தை செபஸ்டியன்; தாய் லட்சுமி அம்மாள் ஆவார்.

1960 இல் எழுதத் தொடக்கிய இவர் கண்டியூர் கண்ணன், மாத்தளை கௌதமன், கவிதா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, சிரித்திரன், அமுதம், தேசபக்தன், நவமணி, தினகரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.

நாடகத்துறையிலும் பங்களித்துவரும் இவர் எழுதிய முதல் நாடகமான ‘முள்ளில் ரோஜா’ 1970 இல் மேடையேறியது. 1970களில் தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்ட அக்கினிப்பூக்கள், வீணை அழுகின்றது முதலான நாடகங்களை உருவாக்கினார்.

இவற்றில் வீணை அழுகின்றது என்ற நாடகத்திற்கு சிறிலங்கா அரசு தடை விதித்ததும் நாடே அறிந்ததே.அத்து 1980களில் தெரு நாடகங்களைக் கொழும்பு, மலையகப் பகுதிகளில் நடாத்தி உள்ளார்.

மலையக இலக்கியத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்:

மலையக இலக்கியங்களையும், இலக்கியக் கர்த்தாக்களையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் என்ற பெருமையும் அந்தனி ஜீவாக்கு உண்டு.

மலையகத்தில் தமிழ் வளர்த்தோரும், கலை வளர்த்தோரும், மலையக மக்களிடம் உரத்த சிந்தனைகளை விதைத்தோரும், மலையக மக்களின் விடுதலைக்கு உழைத்தோரும் எனப் பன்னிருவர் பற்றிய தகவல்கள் அடங்கிய ‘மலையக மாணிக்கங்கள்’ என்னும் நூலை 1998 ஆம் ஆண்டு கொழும்பு துரைவி வெளியீடாக கொண்டு வந்தார்.

அந்நூலில், மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த முன்னோடிகளான கோ. நடேசய்யர், மீனாட்சி அம்மையார், பெரி. சுந்தரம், இராமானுஜம், ஜெ.எஸ். பெரோ, ஜார்ஜ் ஆர். மேத்தா, மலையக காந்தி ராஜலிங்கம், வி.கே. வெள்ளையன், சி.வி. வேலுப்பிள்ளை, ஏ. அஸீஸ், சோமசுந்தரம், அசோகா பி.டி. ராஜன் ஆகியோர் பற்றிய சிறப்பான பதிவுகள் இடம் பெற்றுள்ளன.

மலையக இலக்கியச் சுடர்

கொழும்பு நாவல திறந்த பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத் துறையில் டிப்புளோமா பட்டம் பெற்ற அந்தனி ஜீவா தினபதி, செய்தி, ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.

கொழுந்து, குன்றின் குரல் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் வெளியிட்ட ஜனசக்தி என்ற மாத இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 31.10.1984 அன்று சுட்டுகொல்லப்பட்டதன் எதிரொலியாக தினகரன் இதழின் வாரமஞ்சரியில் ‘அன்னை இந்திரா’ தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பானது நூலாகவும் வெளிவந்தது.

அத்துடன் ஈழத்தில் தமிழ் நாடகம் (1981), அன்னை இந்திரா (1985), காந்தி நடேசையர் (1990), மலையகமும் இலக்கியமும் (1995), முகமும் முகவரியும் (1997), மலையக மாணிக்கங்கள் (1998), அக்கினிப் பூக்கள் (1999), சி. வி. சில நினைவுகள் (2002) குறிஞ்சிக் குயில்கள் (2002), மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லீம் எழுத்தாளர்களின் பங்களிப்பு (2002), மலையகம் வளர்த்த கவிதை (2002), கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் (2002), திருந்திய அசோகன் (2003), நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் (2003), மலையகத் தொழிற்சங்க வரலாறு (2005), சிறகு விரிந்த காலம் (2007), ஒரு வானம்பாடியின் கதை (2014) போன்ற நூல்களை அந்தனி ஜீவா எழுதியுள்ளார்.

கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர்:

மலையக எழுத்துக்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளிலும் பங்களித்து வரும் அந்தனி ஜீவா, தான் செயலாளராகப் பணியாற்றும் மலையக வெளியீட்டகம் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அந்தனி ஜீவா கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

மலையக பெண்களின் எழுத்துக்களை தொகுத்து குறிஞ்சி மலர்கள் (சிறுகதைகள், 2000), குறிஞ்சிக் குயில்கள் (கவிதைகள், 2002), அம்மா(சிறுகதைகள், 2004) போன்ற தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் இவர் அரச சாகித்திய விருது, அரச இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஈழத்து நாடக மேடையில் புதிய வீச்சு:

அந்தனி ஜீவா ஈழத்து நாடக மேடையில் புதிய வீச்சுக்களையும், புதிய தரிசனங்களையும் கொண்ட நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
மலையகத்தில் 1980 களில் வீதி நாடகங்களை முதன் முதலில் ஆரம்பித்தவர் என்ற பெருமை அந்தனி ஜீவா அவர்களையே சேரும்.

இவர் 1980 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்குச் சென்று வீதி நாடக முன்னோடியான பாதல் சர்கார் சென்னையில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்றார்.
மக்களுடன் நேரடியானதும், நெருக்கமானதுமான தொடர்பினை ஏற்படுத்தும் சிறந்த கலை ஊடகமான தெரு நாடகங்கள் அந்தனி ஜீவாவின் முயற்சியால் மலையகத்தில் புத்துயில் பெற்றது.

இவரின் ‘வீணை அழுகிறது’ என்ற சமூக நாடகம் பெரிய இடத்து அரசியல் வாதிகளின் தோலை உரித்துக் காட்ட முனைந்ததால், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதும் தெரிந்ததே. அலைகள்’ நாடகம் இலங்கை கலாச்சாரப் பேரவை 1978ஆம் ஆண்டு நடத்திய தேசிய நாடக விழாவில் இரு விருதுகளைப் பெற்றது.

அத்துடன் கொழும்பிலும், மலையகத்திலும் பல வீதி நாடகங்களை நடத்தியுள்ளார். இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 1994 ஆம் ஆண்டு நடத்திய தமிழ் நாடக விழாவில் இவரது ‘ஆராரோ ஆரிவரோ’ என்ற நாடகம் விருது பெற்றது. மகாகவி பாரதி, ஆராரோ ஆரிவரோ, கவிதா, பறவைகள், வெளிச்சம், சாத்தான் வேதம் ஓதுகின்றது, ஒன்று எங்கள் ஜாதியே, அக்கினிப் பூக்கள், தீர்ப்பு, வீணை அழுகின்றது, முள்ளிள் ரோஜா, அலைகள், பறக்காத கழுகுகள் முதலிய நாடகங்கள் உட்பட 14 நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.

படைப்பின் இலட்சியம் சமுதாயத்தின் தேவையாக இருக்க வேண்டும். அதில் மண்ணின் மணம் இருக்க வேண்டும். கலைஞன் மானுடம் படைக்கும் ஆத்மாவின் ராகமாகத் திகழ வேண்டும் என்ற தமது கூற்றின் வழி இன்றும் இலக்கியம் படைத்து வரும் அந்தனி ஜீவாவின் புகழ் ஈழத்து மலையக இலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *