பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 05 … செங்கதிரோன்

தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையும் தமிழ்ச்சங்கமும் இணைந்து 23.10.2025 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட கேட்போர் கூடத்தில் மொழித்துறைத் தலைவர் (தெ.கி.ப) கலாநிதி அமரசிறி விக்கிரமரத்ன அவர்களின் தலைமையிலும் கலை கலாசார பீடாதிபதி (தெ.கி.ப) பேராசிரியர் எம்.எம்.எம். பாஸில் அவர்களின் முன்னிலையிலும் நடாத்திய ‘இலக்கியவெளி’ கலை இலக்கிய அரசியல் பண்பாட்டு இதழின் நீலாவணன் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வில் ‘நீலாவணனின் காவியங்கள்’ எனும் தலைப்பில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆற்றிய உரை.
நீலாவணனின் காவியங்கள்
தமிழிலே ஐம் பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள் மற்றும் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களுடன் நளவெண்பா, அரிச்சந்திரபுராணம் போன்றவைகளெல்லாம் காவியங்களாகக் கருதப்படுகின்றன.
வடமொழி இலக்கியமரபைத் தழுவித் தமிழில் எழுந்த இலக்கிய வடிவங்களுள் காவியமும் ஒன்று. வடமொழிச்சொல்லான காவியம் என்பதற்கான தமிழ்ச்சொல்லே காப்பியம். எனினும் காவியம் என்பதும் தமிழில் வழக்கிலிருக்கிறது.
மூல நூலான வடமொழித் தண்டி நூலையொட்டித் தமிழில் பின்னாளில் காவியமரபு கூறும் ‘தண்டியலங்காரம்’ எனும் நூல் எழுந்தது. இந்தப் பின்புலத்தில் மேற்கூறப்பெற்ற காவியங்களெல்லாம் வடமொழித்தண்டி அல்லது தமிழ்த் தண்டியலங்காரம் கூறும் ஒரு காவியமரபிற்கு உட்பட்டுக் கடினமான செய்யுள் நடையிலே உருவானவையே எனக் கருத இடமுண்டு. இக்காவியங்கள் கூறிய கதையையும் பொருளையும் சாமான்யர்கள் புரிந்து கொள்வதற்குப் பின்னாளில் உரையாசிரியர்களும் பொழிப்புரை, பதவுரைகளும் தேவைப்பட்டன.
தமிழில் நவீன இலக்கியங்கள் தோற்றம்பெற்ற இருபதாம் நூற்றாண்டில் பழந்தமிழ்க் காவிய மரபைத் தகர்த்துச் சாமான்யர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் நவீன கவிதைப் போக்கில் காவியங்கள் படைக்கப்பட்டன. இவ்வாறு சொல் புதிதாகவும் பொருள் புதிதாகவும் எளிமையான சந்தங்களிலும் முதலில் காவியம் சமைத்தவன் பாரதி. ‘பாஞ்சாலிசபதம்’ இதற்கோர் எடுத்துக்காட்டு.
பாரதிதாசன் படைத்த ‘புரட்சிக்கவி’ – ச.து.ச.யோகியாரின் ‘அகல்யை’ போன்ற காவிங்களையும் குறிப்பிடலாம். இக்காவியங்கள் யாவும் புராண, இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை.
தமிழின் பழம்பெரும் காவியங்கள் மட்டுமல்ல இருபதாம் நூற்றாண்டில் எழுந்த நவீன காவியங்கள்கூட ஒரு குறிப்பிட்ட காலம்வரை மன்னர்களையும் – கடவுள்களையும் – மதத்தலைவர்களையுமே பாட்டுடைத்தலைவனாகக் கொண்டவை. நவீன இலக்கியக் காலத்தில் படைக்கப்பெற்றிருந்தாலும்கூட கவிஞர் கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ – இலங்கையிலே முருகையனின் ‘இளநலம்’ ஜின்னா ஷரிபுத்தீனின் ‘திருநபி காவியம்’ என்பவையும் இவ்வகையைச்; சார்ந்தவையே.
ஆனால், இந்த மரபையும் – போக்கையும் தூக்கியெறிந்துவிட்டு சாதாரண சமூக மாந்தரைக் கதாநாயகர்களாகவும் கதாபாத்திரங்களாகவும் கொண்டு காவியம் இயற்றியவர்களுள் ஈழத்திலே மகாகவி, முருகையன், நீலாவணன் ஆகியோரே முன்வரிசையில் நிற்கிறார்கள். தமிழகத்திலே ‘தெய்வமாகி நின்றான்’ காவியம் படைத்த பிரபல நாவலாசிரியர் கு.சின்னப்பாரதியைக் குறிப்பிடலாம்.
இத்தகையதோர் பின்புலத்திலேதான் நீலாவணனின் காவியங்கள் பற்றியதொரு சிற்றுரையை ஆற்றும்படி இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் குறிப்பாக எனது அன்பு கெழுமிய எப்போதும் எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சகோதரர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்களால் கேட்டுக் கொள்ளப்பெற்று அப்பணியை நிறைவேற்ற உங்கள் முன் வந்து நிற்கிறேன்.
தலைவர்க்கும் தகைமைசால் பெரியோர்க்கும் அவையோர்க்கும் எனது அன்பான இனிய மாலை வணக்கங்கள். நிகழ்வை ஏற்பாடு செய்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையினர் மற்றும் தமிழ்ச்சங்கத்தினருக்கும், பேராசிரியர் றமீஸ்அப்துல்லா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
‘நீலாவணன் காவியங்கள்’ எனும்போது அச்சில் வெளிவந்த அவரது மூன்று காவியங்கள் பற்றியே பேசப்படுகின்றன. அவையாவன ‘பட்டமரம்’ – ‘வடமீன்’ – ‘வேளாhண்மை’
இவற்றில் ‘பட்டமரம்’ 1956 இல் எழுதப்பெற்றதாகும். ‘ஈழகேசரி’ இதழில் 1957 இல் இருவாரங்கள் தொடர்ச்சியாக வெளிவந்ததாகும்.
‘உலகிலே நல்லார் ஒரு சிலரே தோன்றி
நிலவினார் அன்புவழி நின்று – கொலைவல்ல
காலன் அவர்க்கின்று கல்லறைகள் கட்டிவிட்டான்
ஞாலமே துன்பநதி’
என்று தொடங்கும் 39 வெண்பாக்களால் இக்காவியம் பாடப்பெற்றுள்ளது. பா வகைகளிலே வெண்பாதான் இயற்றக் கஸ்டமானது. இந்த வெண்பாக்களை இருபத்தாறு வயதாகவிருக்கும்போதே கவிஞர் நீலாவணன் பாடியிருப்பது அவரது கவிதா மேதாவிலாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. தனது கன்னிக் காவியமான பட்டமரத்தை அவர் வெண்பாவில் படைக்கத் துணிந்தது அவரது வித்துவத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல அவரது மன ஒர்மத்தையும் உறுதி செய்கிறது.
பட்டமரம் ஒன்றுதான் இக்காவியத்தில் கதைசொல்லி. பண்ணையாரின் மகள் பத்மாவைப் பண்ணையாளரிடமே பணி செய்யும் பரந்தாமன் காதலிப்பதும் – அதை ஏற்காத பண்ணையார் பரந்தாமனைக் கொன்று பட்டமரமொன்றின் கீழ் இரகசியமாகப் புதைப்பதும் – பத்மா கிணற்றிலே பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்வதும்தான் கதை.
ஆனால், பண்ணையாரின் பணச் செல்வாக்கினால்,
‘பண்ணையார் பெண்ணைப் பரந்தாமன் காதலித்தான்
கன்னி களவாய்க் கர்ப்பமுற்றாள் – பெண்ணவளை
அற்பனவன் கைவிட்ட டகன்றானதனாலே
தற்கொலை செய் தாளந்தத் தாய்’
என்று வந்த பத்திரிகைச் செய்தியை ஊர் நம்புகிறது.
உண்மையில் என்ன நடந்ததென்பதற்குக் காவியத்தில் கதை சொல்லியாக வரும் பட்டமரமே சாட்சி.
‘பத்திரிகைச் செய்தி பணத்தின் பெருமையினால்
உத்தமனைக் குற்ற முரைத்தார்கள் – இத்தனைக்கும்
பட்டமரமென் கீழ்ப் பரந்தாமன்! கண்டறிந்தால்
திட்டுமே வையம் தினம்’
என்று பட்டமரம் உண்மையை உரைக்கிறது. இக்காவியம் ஊடகத்துறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இக்காவியம் கூறும் நுட்பமான செய்தி இதுதான் எனலாம்.
அடுத்தது ‘வடமீன்’ காவியம்
‘பட்டமரம்’ காவியத்தின் பின் ‘வடமீன்’ வருவதற்கு ஐந்து வருடங்கள் எடுத்துள்ளன. ஆனால் இக்காவியம் எந்த இதழ்களிலும் பிரசுரமாகாமல் கையெழுத்துப் பிரதியாகவே கிடந்ததை நீலாவணனின் மகன் எழில்வேந்தன் தேடியெடுத்து ‘நீலாவணன் காவியங்கள்’ எனும் நூலில் உள்ளடக்கி 2010 இல் பதிப்பித்தார். நீலாவணன் மரணித்தது 1975 இல் ஆகும்.
நீலாவணனின் இரண்டாவது காவியமான ‘வடமீன்’ மொத்தம் 47 விருத்தப்பாக்களால் படைக்கப்பெற்றுள்ளது.
இக்காவியம் கணவனின் உத்தியோக நிமித்தம் கொழும்பிலே வசிக்க நேரிடும் யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகளிடையே அவர்களுடைய கொழும்பு வாழ்க்கையிலே அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் பாலியல் சார்ந்த குடும்பப் பிரச்சினையொன்றைத் தோற்றுவித்துத் தொட்டுக்காட்டி அதற்கான தீர்வையும் தெளிவாக முன்வைக்கிறது.
மனித வாழ்வில் எழும் பாலியல் பிரச்சினைகளைக் கருப்பொருளாகக் கொண்டு மேற்கு நாடுகளில் எழுத்துக்கள் தோன்றிய அளவுக்குத் தமிழிலே அவற்றை எழுதத் துணிந்தவர்கள் குறைவு. தமிழர்தம் இறுக்கமான பண்பாட்டுப் பின்புலம் அதற்குக் காரணமாயிருக்கலாம். ஆனால் அதனையும் மீறித் தமிழ்நாட்டில் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவல், ஈழத்திலே எஸ்.பொ.வின் ‘சடங்கு’ நாவல் என்பன துணிவு மிக்க சில இலக்கிய ஆளுமைகளினால் எழுதப்பட்டுள்ளன. அத்தகையதோர் துணிச்சலோடும் – இலக்கிய ஆளுமையோடும்தான் நீலாவணன் ‘வடமீன்’ காவியத்தைப் படைத்துள்ளார்.
கொழும்பில் கந்;தோரொன்றில் வேலைபார்க்கும் ஆண்பனை அனைய செம்மலான மூர்த்தி தனது நாற்பேத்தாழாவது வயதில் தனது அம்மாச்சிமகள் அனாதை அருந்ததியைத் திருமணம் செய்து கொழும்பில் கொட்டகெனவில் ‘அனெக்ஸ்’ ஒன்றிற்குக் குடித்தனம் வருகிறான்.
மூர்த்தி வேலைபார்க்கும் கந்தோரில் கணக்கில் கவலையீனத்தால் நேர்ந்த பிரச்சினையால் சம்பளத்தில் வெட்டுவிழுகிறது. அதனைச் சரிக்கட்டுவதற்கு ‘அனெக்ஸ்’ சின் அண்டைய அறையில் வாழும் அழகான இளைஞன் ஆனந்தன் மூர்த்திக்கு உதவத் தானாகவே முன்வருகிறான். இதனால் மூர்த்தியின் குடும்ப நண்பனாக ஆகிய ஆனந்தன் அதுவரையில் ஹோட்டலில் சாப்பிட்டு வந்தவன் மூர்த்தியின் வீட்டிலேயே சாப்பாட்டையும் வைத்துக்கொள்ள நேரிடுகிறது. கிராமத்துப்பெண்ணான அருந்ததியும் ஆனந்தனுக்கு வஞ்சகமில்லாது உணவு பரிமாறுகிறான். இது வழமையான கதைதான். ஆனால் காவியத்தின் சிக்கல் இங்குதான் நிகழ்கிறது.
ஒருநாள் அருந்ததி,
“அடுக்களை புகுந்தாள் ; ஆங்கே
குப்புறப்படுத்துக் கொண்டே
குறிவைக்கும் எலியைப், பூனை
அப்புறம் போகும் வண்ணம்
அதட்டினாள்…”
அடுக்களையிலிருந்த பூனை அடுத்திருந்த ஆனந்தனின் அறைக்குள் ஓடுகிறது.
“அடுப்பிலே நெருப்புப் பொங்கி
அணைந்தது ; சமையலாக
படுத்திருக்கின்ற ஆனந்
பக்கமாய் சென்று, தண்ணீர்
பிடித்துளேன், குளித்துச் சாப்பிட்
டானபின் தூங்கும்…”
என்று அருந்ததி ஆனந்தனுக்குச் சொல்லுகிறாள்.
அருந்ததியின் வீட்டு அறைக்குள் உணவுண்ணப் போன ஆனந்தன்
“…… அறைக்குள் தொங்கும்
கண்ணாடிப்படத்துக்குள் ஓர்
கடபுட சத்தம் கேட்க,
அண்ணார்ந்து பார்த்தான், வெள்ளை
ஆடையில்லாத பல்லி
பெண்ணொன்றை மருவல் கண்டு”
பேசாமற் கதவை அடைக்கிறான்.
கவிஞர் நீலாவணன் அவர்கள் கவிதையிலே காட்டும் ‘குப்புறப்படுத்துக்கொண்டே எலியைக் குறிவைக்கும் பூனை’ , ‘அடுப்பிலே நெருப்புப் பொங்கி அணைதல்’ , ‘ஆடையில்லாத வெள்ளைப்பல்லி பெண்ணொன்றை மருவல்’ ஆகிய காட்சிப் படிமங்களால் வாசகர் மனதிலே ஆனந்தன் – அருந்ததி ஊடாட்டத்தின் மீது சந்தேகநெருப்பை மூட்டுகிறார். அமரர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால் இப் படிமங்கள் வாசகனுடைய மனதில் பாலியல் முகிலைப்பரப்பத் தொடங்குகின்றன.
அடுத்தது என்ன என்ற ஆவலுடன் காவியத்தைத் தொடர்ந்து படிக்கையில்,
“அருந்ததி, என்றான் ஆகா
அற்புதம் கறிகள் இன்று
விருந்துதான் படைத்தாய்! உன்கை
வேகுமா நெருப்பில்! என்றான்
திருந்திழை மார்பின் சேலை
திருத்தினாள் ; திறவா வாயில்
பொருந்தினாள் நகையே! உள்ளம்
பூரித்தாள் புசித்தான் ! போனான்!”
“பருப்பினைப் பிசைந்தான் ஆனந்
பசுநெய்யே வடிதல் கண்டான்
இறைச்சிக் கூட்டுள் அகப்பை
இட்டிட்டு ஈரல் தேடி
உருப்படியாக உண்டான்!
ஒண்ணாத மட்டில் விட்டு
அருப்பிடம் அகன்றான் அந்த
அம்புயம் ஆனந்தித்தாள்”
எனும் காவிய வரிகளைக் காணுகிறபோது, வாசகனின் மனதிலே மூண்ட சந்தேக நெருப்பு சுவாலைவிட்டு எரிகிறது. ஆனந்தன் – அருந்ததி உறவின் மீது ஒரு பாரிய பாலியல் சந்தேகம் விஸ்வரூபம் எடுக்கிறது. இதற்குக் காரணம் கவிஞர் நீலாவணனின் இரட்டை அர்த்தங்கள் நிறைந்த கவிதைமொழிதான்.
இந்தக் கட்டத்தில் காவியம் இப்படித் தொடர்கிறது.
“மூர்த்தி கந் தோரால் வந்தான் ;
முகம் கறிச் சட்டியானான்
ஆத்திரம் கொப்பளிக்க
ஆனந்தன் இந்த வாரம்
ராத்திரி வேலை யாமோ?
பகலெலாம் இருந்தான் போலும்!
நேர்த்திதான் என்று பல்லை
நெறுநெறு சத்தம் செய்தான்”
பின்பு வீட்டில் பெரிய களேபரமே நடக்கிறது.
“என்னிலே பிழைதான்! பேயன்!
இனியவன் இந்த வீட்டில்
உண்ணவும் கால்வைத்தானேல்
ஒரேவெட்டு! கவனம்…..”
என்று ஆனந்தனைக் குறித்து ஆத்திரப்படுகிறான். மூர்த்தி மூண்டெழுந்த கோபத்தில்
“தேவடியாளே உன்னைத்
தீர்க்கிறேன் என்றான் நின்றோர்
காவடியாட்டம் போட்டான்”
அருந்ததிக்கு நாலுச் சாத்துச் சாத்தினான். கீழ்சாதி நாயே! என்று திட்டினான்.
“அத்தான் ஏன் என்னை வீணாய்
அடிக்கிறீர்…”
என்று கேட்ட அருந்ததிக்குப்
“பொத்தடி! என்று மூர்த்தி
புறப்பட்டான் கோல்பேசிக்கு”
வீட்டைவிட்டு வெளியேறிக் ‘கோல்பேசி’ற்குச் சென்ற மூர்த்தி இரவு,
“பத்தரை மணிக்கு வந்தான்
பலமான குரலில், இல்லாள்
சத்தத்தை அறிந்து காதைச்
சரியாகப் பிடித்துக் கேட்டான்”
இங்கேதான் காவியக் கதையின் சிக்கல் அவிழ்கிறது. கவிஞர் நீலாவணனின் புனைவாற்றலும் கவிதைமொழியும் இக்காவியத்தில் உச்சம் கொள்கின்ற இடம் இதுதான்.
அருந்ததி – ஆனந்தன் சம்பாஷணையை மூர்த்தி காதுகொடுத்துக் கேட்கிறான்.
“வானந்தான் இடிந்துவந்தென்
வாழ்விலே விழுந்ததின்று!
ஆனந்தா! இந்த வீட்டில்
அடிவைக்க வேண்டாம்;@ போய் வா!
ஏனென்ன நடந்த? தென்றான்!
எனக்கொன்றுந் தெரியா தென்றாள்!
மோனத்தில் நிமிடமொன்று
முடிந்தது முறைத்துப் பார்த்தான்”
“போகலாம் வெளியே என்று
பொருமினாள்! செருமிக் கொண்டு
சாகலாம்! நாயே! என்று
சலித்தா வா றுள்ளே வந்த
வேகத்தில், மூர்த்தி காலை
விறாந்தையில் இடறி வீழ்ந்தான்!
போகிறான் ஆனந் ஹோட்டல்
புதுக்கணக் காரம்பிக்க”
மனைவி அருந்ததி மீது கணவன் மூர்த்திக்கு ஏற்பட்ட சந்தேக முடிச்சு தானாகவே அவிழ்;கிறது. ஆனந்தனுடனான அருந்ததியின் வஞ்சகமற்ற ஊடாட்டம் உள்ளங்கை நெல்லிக்கனியாகிறது. அருந்ததி ‘அருந்ததி’யாகவே (நட்சத்திரமாகவே) ஜொலிக்கிறாள். முகம் கறிச்சட்டியான மூர்த்தி தெளிவடைகிறான்.
இக்காவியத்தில் நீலாவணனின் படைப்பாளுமை என்னவெனில், தனது புனைவாற்றலாலும் கவிதை மொழியாலும் அருந்ததி – ஆனந்தன் ஊடாட்டத்தின் மீது பாரிய பாலியல் சந்தேகத்தை வாசகரிடத்திலே ஏற்படுத்திய நீலாவணன் – காவியக் கதையிலே சிக்கலை ஏற்படுத்திய நீலாவணன் மிகவும் நுட்பமாக அருந்ததியையே உண்மைக்கு உண்மையாய்ப் பேசவைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அச்சிக்கலைத் தீர்த்து வைத்துக் காவியத்தை முடிக்கிறார். காவியம் இவ்வாறு முடிகிறது.
“நீலவான் மீதில் நின்ற, நிலவெங்கோ மறைய, விண்மீன்
கோலத்தின் நடுவே, யூன்றிக் குறிப்பாகப் பார்த்தான் மூர்த்தி
பூலோகமெங்கும் கற்பைப் புதுப்பிக்கும் வடமீன் நங்கை
ஆலாலமுண்ட கண்டன் அணைப்பிலே கிடந்தாள். வாழ்க”
இக்காவியத்தின் மகுடம் இதன் ‘வடமீன்’ எனும் தலைப்புத்தான்.
‘சிலப்பதிகாரம்’ காப்பியம் இயற்றிய இளங்கோவடிகள் காப்பியத்தின் முதல் காதையான அறுபத்தியெட்டு வரிகளைக் கொண்ட மங்லவாழ்த்துப் பாடலின் இருபத்தியேழாவது வரியிலே,, ‘தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்’ என்று கண்ணகியை ஏத்துகிறார்.
‘வடமீன்’ வடமொழி வைதீக மரபில் செல்வாக்கு மிகுந்ததொரு தொன்மம். பெண்ணை உயர்வு செய்யும் ஒரு தொன்மம் எனத் தி.சு.நடராசன் (தமிழ்நாடு) தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் மரபில் அதனை ‘அருந்ததி’ என்கிறோம். விண்ணுலகப் பொருளொன்றினை கற்புடைப் பெண்டிருக்குக் – கண்ணகிக்கு – உவமையாக்கும்போது அல்லது உருவகப்படுத்தும்போது (வடமீன் நங்கை) கற்புடைப் பெண்டிரை வானுறையும் தெய்வத்துள் வைத்துப் பார்க்கும் – பெண்ணைப் போற்றும் – தமிழர்தம் பண்பாடும் துலாம்பரமாகிறது.
‘வடமீன்’ காவியத்தின் தலைவிக்கு அருந்ததியெனும் பெயரைக் கொடுத்து அருந்ததியைக் கவிஞர் நீலாவணன் காவியத்தின் கடைசிப் பாடலிலே ‘வடமீன் நங்கை’யாக அர்த்தப்படுத்தும் போது ‘சிலப்பதிகாரம்’ செய்த இளங்கோவடிகளின் புனைவாற்றலும் கவித்திறமும் சொல்லாட்சியும் கவிஞர் நீலாவணனிலும் ஊடுபாய்கிறது.
இனி நீலாவணனின் மூன்றாவது காவியமான ‘வேளாண்மை’ க்குள் இறங்கலாம்.
நீலாவணன் எழுதி முற்றுப்பெறாத காவியமாகவே இது கருதப்படுகிறது.
நீலாவணனின் ‘பட்டமரம்’ – ‘வடமீன்; – ‘வேளாண்மை’ ஆகிய மூன்று காவியங்களையும் ஒருங்குசேரத்தொகுத்து நீலாவணனின் மகன் எழில்வேந்தன் 2010 இல் பதிப்பித்து வெளியிட்ட ‘நீலாவணன் காவியங்கள்’ எனும் தலைப்பிலான நூலுக்குக் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் வழங்கியுள்ள முன்னுரையில் 1965 இல் இக்காவியத்தின் அரைவாசி எழுதப்பெற்றிருந்ததாகக் குறிப்பிடுகிறார். எம்.ஏ.நுஃமான் அவர்களின் கூற்றில் நீலாவணன் இக் காவியத்தை 1960களின் தொடக்க ஆண்டுகளில் எழுதினாரென்றும் 1963 இல் அல்லது 1964 இல் அதுவரை எழுதிய பகுதிகளைத் தன்னிடம் வாசித்துக் காட்டினாரென்றும் அதன் கையெழுத்துப் பிரதிகளைத் தானும் படித்து மகிழ்ந்ததாகவும் வெளிப்படுத்தியுள்ளார். ஆக கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் கூற்றும் எம்.ஏ.நுஃமான் அவர்களின் கூற்றும் இங்கே ஒத்துப்போகின்றன. இருவருமே நீலாவணனுடன் நெருக்கமாக இருந்தவர்கள். மூன்றாவது காவியமான ‘வேளாண்மை’ தான் நீலாவணன் எழுதிய கடைசிக்காவியம்.
கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார்;. அதன் விளைவே அன்னாரின் ‘வேளாண்மை’க் காவியம். ஈழத்தமிழ் பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்பின் பாரம்பரியங்களையும், சடங்குகளையும், அம்மக்களின் வஞ்சகமில்லா வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடிப்பதற்காகவே நீலாவணன் ‘வேளாண்மை’யை விதைத்தார். ஆனால் வேளாண்மைக் காவியத்தை நிறைவு செய்து, அதன் முற்றிய முழு விளைச்சலையும் காணுமுன்பே ‘கதிர்’ப்பருவத்திலேயே அவரின் உயிரைக் காலன் கவர்ந்து சென்றுவிட்டான். ‘வேளாண்மை’க் காவியத்தின் ‘குடலை’ , ‘கதிர்’ ஆகிய இரு பகுதிகளையே அவர் எழுதி முடித்திருந்தார். அவையும்கூட கையெழுத்துப் பிரதியாகவே அவர் வீட்டில் கிடந்தது. கவிஞர் நீலாவணன் 11.01.1975 இல் காலமானார். 1980 காலப்பகுதியில் ஈழத்தின் முதுபெரும் பிரபல எழுத்தாளர் காலஞ்சென்ற வ.அ.இராசரத்தினம் அவர்கள் கல்முனைப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தபோது கவிஞர் மு.சடாட்சரன் அவர்கள் கவிஞர் நீலாவணன் எழுதி முற்றுப்பெறாத ‘வேளாண்மை’ எனும் காவியத்தை நீலாவணனின் மனைவியிடமிருந்து பெற்று அவரிடம் படிக்கக் கொடுத்தார். அப்போது வ.அ.அவர்கள் மூதூரிலே சிறு அச்சுக்கூடம் ஒன்றிற்குச் சொந்தக்காரனாக இருந்தார். அதனால் ‘வேளாண்மை’ குறுங்காவியம் எனும் நூலின் முதற்பதிப்பு 1982 செப்டம்பரில் தங்கம் வெளியீடாக (தங்கம் வெளியீடு திரிகூடம், மூதூர்) வெளிவந்தது. நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள வ.அ.இராசரத்தினம் அவர்கள், “இக்காவியத்தின் மூலம் இயந்திர நாகரிகத்தாற் கற்பழிந்து விடாத மட்டக்களப்பின் குமரியழகையும், மட்டக்களப்பாரின் விருந்திருக்க உண்ணாத வேளாண்மைத் தனத்தையும் வெளியுலகிற்குக் காட்டத்தான் நீலாவணன் ஆசைப்பட்டிருக்கின்றார் எனத் துலாம்பரமாகிறது.”
“தான் ஆசை பற்றி அறைய வந்ததை நீலாவணன் கம்பகாம்பீர்யத்தோடு விருத்தப் பாற்களாற் பாடியிருக்கிறார். மட்டக்களப்பின் பழகு தமிழ்ச் சொற்கள் அவரின் கவிதா காம்பீர்யத்திற்குக் கைகட்டிச் சேவகம் புரிந்து இலக்கிய அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. ஏடறியாப் பெண்களும் கவி இசைக்கும் தெற்கு மட்டக்களப்பின் கவிவளம் இக்காவியத்தின் இலக்கணக் கரைகளுக்குளடங்கிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியாகப் பாய்கிறது” என்று சிலாகித்துள்ளார்.
“ஆரங்கே? பொன்னம்மா உன்
அடுப்படி அலுவல் ஆச்சா
நேரமும் கடந்து போச்சே!
நீ என்ன செய்கின்றாய் போய்
சோறெடு சிவா… சிவா… ஏய்
கரைக்காயை என்ன செய்தாய்?
நீறினை நெற்றியிட்டு
நெஞ்சினை வயலில்விட்டு
சோறொடும் மீனைப்பிட்டுச்
சுவைக்கின்றார் கந்தப்போடி”
‘சோக்கான கறிகா! தோலிச்
சுண்டலில்வை@ முன்னால் நான்
கேட்காமல் அள்ளிவைப்பாய்,
கிழவனாய்ப் போனேன் பாரு…’
என்று வயலுக்குச் சூடடிக்கப்போவதற்கு ஆயத்தமாகும் கந்தப்போடிக்கு மனைவி பொன்னம்மா உணவு பரிமாறும் காட்சிப்படுத்தலுடன் ஆரம்பமாகும் இக்காவியம் ‘குடலை’, ‘கதிர்’ எனுமிரு பகுதிகளுடன் முழுதும் விளையாமல் – முற்றுப்பெறாமல் நீலாவணன் இறந்துவிட்டார். 273 அறுசீர்விருத்தங்களினால் ‘வேளாண்மை’ இயற்றப்பட்டது.
கவிஞர் ‘வேளாண்மை’க் காவியத்தின் தொடர்ச்சியை ‘காய்’ ‘பழம்’ எனுமிரு மீதிப்பகுதிகளாக நான் எழுதி ‘விளைச்சல்’ எனும் பெயரில் 2017 இல் நூலாக வெளியிட்டேன்.
நேரமுகாமைத்துவம் கருதியும் ஒப்பீட்டளவில் ‘பட்டமரம்;’ மற்றும் ‘வடமீன்’ காவியங்களை விடவும் நீலாவணனனின் ‘வேளாண்மை’க் காவியம் பற்றியும் அதன் தொடர்ச்சியான ‘விளைச்சல்’ காவியம் பற்றியும் இலக்கிய உலகில் போதியளவு பரவலாகப் பேசப்பட்டுள்ளதாலும் அவற்றைப்பற்றி விபரமாக உரையாற்றுவதைத் தவிர்த்துக் கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.
![]()