பொற்காலத்தின் புதிய ஏரா…. கி.செ.துரை

அத்தியாயம் 01.
சென்ற ஆண்டில் எட்டித் தொட்ட இலக்குகளில் முதல் முக்கியமானது உலகச் செய்திகள் என்ற இரண்டு புத்தகங்களை வெளியீடு செய்து, பாடசாலைகளிலும், நூல் நிலையங்களிலும் படிக்கச் செய்ததும், மாணவரிடையே விமர்சன அரங்கை ஏற்படுத்தியதுமாகும்.
ஏன் உலகச் செய்திகளை நூல் வடிவில் கொண்டு வரவேண்டும்.? பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் உலகச் செய்திகள் வருகின்றனதானே.. அப்படியிருக்க மீண்டும் ஏன் சிறப்பாக எழுத வேண்டும்..?
அதற்கான விடை இதுதான்..
பத்திரிகைகளில் உலகச் செய்திகள் வெறும் தகவல்களாகவே வருகின்றன, அவை துண்டு துண்டாக இருக்கும் தொடர்பு இருக்காது. அதற்கும் நமது உலகச் செய்திகளுக்கும் தொடர்பே கிடையாது. அவ்வப்போது உலகில் நடந்த நிகழ்வுகளை தகவல்களாக பதிந்து தரும் பதிவேடல்ல நமது உலகச் செய்திகள், அதன் தயாரிப்பே முற்றிலும் வேறுபட்டது, இதுவரை இல்லாத யுனிக்கான ஒரு முயற்சியாக இருக்கும்.
படிக்கும் போது கண்களை அகலத்திறக்க வைக்கும்.

அன்றாடம் எனது உலகச் செய்திகளை காணொளி வடிவில் தருவதற்காக மாதந்தோறும் சுமார் ஆயிரம் பக்கங்கள் மொழி பெயர்ப்பு செய்கிறேன். வருடம் பன்னிரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் மொழி பெயர்ப்பு செய்யப்படுகிறது. அத்தோடு பல்லாயிரம் புத்தகங்களைப் படித்து, உலக வரலாறு, ஐரோப்பிய சிறப்பு வரலாறு, இரண்டாயிரமாண்டு தமிழிலக்கிய வரலாறு, பழமொழிகள், நாற்பது வருட ஐரோப்பிய வாழ்வின் அனுபவங்கள் அனைத்தும் இணைத்து உருவாக்கப்டும் எழுத்தின் வைர ஏடு இது.
நாலாயிரம் பக்கங்களில் எழுதப்பட்ட, சுமார் நான்கு மாத காலப்பகுதிக்கான உலகச் செய்திகளையும், உலகப் பெரும் அறிஞர்களின் செய்தி ஆய்வுகளையும் உள்ளடக்கி, சுமார் நாற்பது பக்கங்களில் நச்சென கச்சிதமாக உரைக்கும் புத்தம் புதிய தமிழ் எழுதுகை இந்த நூல்.
நான்கு மாதங்களாக உலகத்தின் நகர்வுகளை சிறிதும் பிசகாமல் பளபளக்கும் அச்சாணி போல வடிவமைத்திருக்கும் ஓர் எழுத்தின் ஓட்டம். வாசிக்க மிகவும் எளிமையாக இருக்கும், ஆனால் உள்ளடக்கம் சர்வதேச தரத்தில் இருக்கும். நியூயோர்க் ரைம்சில் இருந்து சவுத் சைனா மோர்னிங் போஸ்ற் வரையான உலகின் பிரபமான ஏடுகளின் செய்திகள் அனைத்தும் அறிவு உலையில் கொதிக்க வைத்து, புதிதாக வார்க்கப்பட்டிருக்க காண்பீர்கள்.
கடந்து போன நான்கு மாதங்களின் முக்கிய உலகச் செய்திகளின் மீதான ஆய்வாக, அத்தியாயங்கள் நகரும். எல்லா செய்திகளுமே ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்புபடுகின்றன என்பதை கலைத்துவமான மாலை போல கட்டியிருக்கும். அத்தோடு நின்றுவிடாது, அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு உலகம் எங்கே போகும் என்பதையும் ஆய்வின் முடிவில் காணலாம்.
இதனுடைய கதையோட்டம் ஒரு ஹொலிவூட் திரைப்படத்தின் திரைக்கதை போல வடிவமைக்கப்பட்டிருக்கும். இரண்டாவது மலராக வெளி வந்த உலகச் செய்தி, உலகின் மிகச்சிறந்த திரைக்கதை என்று வர்ணிக்கப்படும் லையன் கிங் திரைப்படத்தின் திரைக்கதைக்குள் பொருத்தப்பட்டு அத்தியாயங்கள் எழுதப்பட்ட கலை வடிவமாகும்.
எடுத்தவுடனேயே ஒரு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் கதைபோல த்ரில்லராக கதை ஆரம்பிக்கும். நீர்ச்சுழிக்குள் சிக்குப்பட்ட மரக்கட்டை போல வாசகரை விடுபட முடியாது ஆழ ஆழ இழுத்தும் சென்றுவிடும். ஒவ்வொரு அத்தியாயமும் மயிர்க்கூச்செறிய வைக்கும். நாம் தேடினாலும் கிடைக்காத அரிதிலும் அரிதான இரகசியங்கள் எல்லாம், தங்கத்திலே வைரங்களாக ஆங்காங்கு ஜொலிக்கும்..
படித்து முடிந்து சிறு பொழுது சிந்தித்தால், எந்த ஊடகத்திலும் இப்படியொரு ஆக்கம் வெளிவரவில்லையே என்பதை வாசகன் ஒப்புக்கொள்ளும் வகையில் உள்ளே விடயங்கள் நிறைந்திருக்கும். ஓர் எழுத்துக்கூட அங்கே தேவையில்லாமல் இருக்காது. அப்படி இறுக்மாக, ஒரு விமான இயந்திரத்தின் வரைபுபோல இருக்கும். ஆனால் படித்தவன் முதல் பாமரன் வரை எல்லோருக்குமே புரியக்கூடிய வகையில், புத்தம் புதிய தமிழ் நடையில் எழுதப்பட்டிருக்கும்.
தெரியாத சம்பவங்கள் கூட அலாதியான எழுத்து நடையினால், நமக்கு முன்னரே தெரிந்தது போல தேளில் கை போட்டு, கண்களைச் சிமிட்டும்.
“இதை உலகம் சிந்தித்திருக்க முடியாது..” என்று எண்ணுமளவிற்கு புத்தம் புதிய வடிவமாக படைக்கப்பட்டிருக்கும். அதற்கான உழைப்பு புத்தகத்தில் வியர்வைத் துளிகளாகத் தெறிக்கும். இந்த இரண்டு புத்தகங்களையும் பாராட்டாதவர் எவருமில்லை. அடுத்த புத்தகம் தயாராகிறது. எனது அறுபது வருடங்கள் தாண்டிய எழுத்து வாழ்வில் இந்த இரு புத்தகங்களும் சாதனைப்படைப்புகளே. சென்ற ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது பெருமை என்பதை விட, காலத்தின் கருணை என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
உலகச் செய்திகள் சஞ்சிகைக்கான எழுத்து தொடர்கிறது..
இனி..
சென்ற ஆண்டு பத்திரிகை வடிவில் வெளியான எனது ” ஒரு வீடு ஒரு தமிழன் ” என்ற நாவலின் சாதனை முயற்சி அடுத்த வாரம்..
கி.செ.துரை
டென்மார்க்
சென்ற வாரம் பாராட்டும் கருத்தும் தெரிவித்த அனைவரையும் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்..
![]()