கட்டுரைகள்

அண்டனூர் சுராவின் கட்டுரைகள்: தொடர் – 01…. முட்டாள்களின் கீழ் உலகம்

– அண்டனூர் சுரா

சிரிப்பூட்டுவதற்கென்று ஒரு வாயு இருக்கிறது. அது நைட்ரஸ் ஆக்ஸைடு. ஆனால் கோபமூட்டுவதற்கென்று ஒரு வாயு இல்லை . அதற்கு பதிலாக வாய் இருக்கிறது. வாய் உதிர்க்கும் சொற்களில் கோபமூட்டும் சொல் எது தெரியுமா? “முட்டாள்” என்பதுதான்.
“அடேய் முட்டாள் புருனோ! நீ சொல்வதைப்போல உலகம் உருண்டை என்றால் சொர்க்கம் எங்கேயடா இருக்கும்?” மதக்குருமார்கள் முன்னிலையில் நீதிபதிகள் கேட்ட கேள்வி இது. இதற்கு புருனோ இவ்வாறாக பதில் சொன்னார். “அதையேதான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்?” நீதிபதிகளின் கேள்விக்கு புருனோவால் பதில் சொல்ல முடிந்தது. ஆனால் புருனோவின் கேள்விக்கு இதுநாள் வரைக்கும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. முட்டாள் யார், புத்திசாலி யார் என்று முடிவு செய்வது காலமே தவிர மதமோ, நீதிமன்றமோ அல்ல.

பிரெஞ்சு உளவியலறிஞர் ஆல்பர்ட் பீனே மனிதனின் கால வயதை மன வயதால் வகுத்து சதவீதமாக மனிதனின் நுண்ணறிவைப் பகுத்தார். இதன்படி முட்டாள், பின்னடைந்தோர், பின்தங்கியோர், திறனுடையோர், புத்திசாலிகள், மிக்க திறனுடையோர், மேதைகள் என அட்டவணைப்படுத்தினார். இவரது பகுப்பின்படி உலக மக்கட்தொகையில் ஒரு சதவீதம் மேதைகளும் ஒரு சதவீதம் முட்டாள்களும் இருப்பதாக அவரது கோட்பாடு கூறுகிறது. அவரது கோட்பாட்டின்படி 50 முதல் 69 வரை நுண்ணறிவு ஈவு பெற்றவர்கள் முட்டாள்கள் என்றும் 140 முதல் 169 வரை நுண்ணறிவு ஈவு பெற்றவர்கள் மேதைகள் என்றும் அவர் அட்டவணை பகுத்துள்ளார்.

பீனே கோட்பாட்டைத் தழுவி ஆய்வு மேற்கொண்ட உளவியல் அறிஞர்கள் பார்வையில் கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் மேதைகளின் மேதையாக பார்க்கப்படுகிறார். சாக்ரடீஸ் வாழ்ந்த காலம், அவர் சந்தித்த நெருக்கடிகள் இவற்றை வைத்து பார்க்கையில் அவருடைய நுண்ணறிவு ஈவு நூற்று எழுபதுக்கும் இருநூறுக்கும் இடைப்பட்டதாக இருந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. சாக்ரடீஸ் கோட்பாட்டு கருத்துகளை வழிமொழிந்த பிளேட்டோ, அரிஸ்டாடில், புருனோ போன்றவர்கள் இன்றைய சராசரி மேதைகளை விடவும் மேலானவர்கள்!

இது ஒருபுறம் இருக்க மற்றொரு உளவியலாளர் கில்கிறிஸ்ட் ஆல்பர்ட் பீனே கோட்பாட்டுக்கு எதிரான கருதுகோளை வைத்தார். இவரது கருதுகோளின்படி மேதைகள் வாழ்ந்து இறந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுநாள் வரைக்கும் ஒரு முட்டாள்கூட பிறக்கவேயில்லை என்கிறார்.

கடந்த நூற்றாண்டில் மூளையை அதிகமாக பயன்படுத்தியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தானாம். அவர் கண்டுப்பிடித்த சார்புநிலை தத்துவம் உலகத் தத்துவங்களில் தலை சிறந்தது என்கிறார்கள். அத்தகைய விஞ்ஞானி ஐன்ஸ்டீனை முட்டாள் என்று பாவிப்பவர்களும் உண்டு. அவர் வீட்டில் வளர்த்த பூனை கூண்டுக்குள்ளேயிருந்து வெளியே வர ஒரு பெரிய பாதையையும், அதன் குட்டிகள் வெளியே வர ஒரு சிறிய பாதையையும் வைத்திருந்தார். தாயும், குட்டிகளும் வெளியே வர ஒரு பொது வழி போதுமனது என்கிற பொது அறிவு அவரிடம் இல்லை என்று விமர்சிப்பவர்கள் உண்டு.

இப்படியாக முட்டாள் என்று சித்தரிக்கப்பட்டவர்களால்தான் உலகம் பல மாற்றங்களை கண்டிருக்கிறது. தாய் ஒரு நாள் தன்னை முட்டாள் என்று திட்டியதற்காக துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள முயற்சித்தான் ஒரு சிறுவன். ஒரு முறையல்ல மூன்று முறை. என்ன அதிர்ஷ்டம் பாருங்கள்! மூன்று முறையும் அந்தத் துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. முட்டாள் என்று தாயால் அழைக்கப்பட்ட அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் ஆழமாக காலூன்ற காரணமாக இருந்தான். அவன் ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்படும் இராபர்ட் க்ளைவ்.

ஜெர்மினிய சர்வதிகாரி ஹிட்லரை இரண்டு நிகழ்வுகள் அதிகமாக கோபமூட்டின. ஒன்று சார்லி சாப்ளினின் திரைப்படங்கள். 1940 ஆண்டு சாப்ளின் , த கிரேட் டிக்டேட்டர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹிட்லரின் ஆட்சியைக் கேலி செய்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து வெளிவந்த அனைத்து படங்களிலும் ஹிட்லரைக் கேலி செய்வதைப் போல அவரது மீசையை வைத்துகொண்டு நடித்தார். இந்த நடவடிக்கை ஹிட்லரை அதிகம் கோபமூட்டினாலும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீண்டும் வந்துவிட்டான். ஆனால் ஹிட்லரின் ஆட்சி முட்டாள் ஆட்சி என்று சொன்ன யூதர்கள் மீதான கோபம்தான் கடைசி வரைக்கும் அவனை கோபமூட்டிக்கொண்டியிருந்தது. அதற்காக யூதர்களை அவன் கொத்துக்கொத்தாக கொன்றுக் குவித்தான். இந்திய நாடாளுமன்றத்தில் மிக நீண்ட காலம் ஹிட்லர் என்கிற பெயர் தடைசெய்யப்பட்ட பெயராக இருந்தது. இதேபோன்று ஹிட்லரின் ஒரு கட்சி ஆட்சி அவையில் முட்டாள் என்கிற சொல் தடைசெய்யப்பட்ட சொல்லாக இருந்தது.

முட்டாள் என்கிற சொல் விளையாட்டு துறையிலும் அதிகம் விளையாடியிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டின் தாயகம் பிரிட்டிஷ். ஒரு கட்டத்தில் அந்த நாடு கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இந்த விளையாட்டைப் பிரிட்டிஷ் எழுத்தாளர் பெர்னாட்ஷா இவ்வாறு விமர்சித்தார். “பதினொரு முட்டாள்கள் விளையாட, பதினோராயிரம் முட்டாள்கள் பார்த்து ரசிப்பது கிரிக்கெட்.” அந்த விமர்சனம் இன்று இரண்டு விதமான சந்தேகங்களை எழுப்பி நிற்கிறது. அவர் விமர்சித்தது கிரிக்கெட்டையா? அல்லது அந்த விளையாட்டு தன்னகத்திற்குள் கொண்டிருக்கும் அரசியலையா?

உலக அளவில் இரண்டாவது பெரிய விளையாட்டாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்தக் கிரிக்கெட் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குள் மிக நீண்ட காலம் வரை நுழைய முடியாமல் போனதற்கு கிரிக்கெட் மீது பெர்னாட்ஷா வைத்த விமர்சனமே காரணம்.
முட்டாள் கதாப்பாத்திரங்கள் இலக்கியத்துறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. உலகில் அதிக மக்களால் விரும்பி வாசிக்கப்படுவது முட்டாள் அரசனை கதாப்பாத்திரமாகக்கொண்ட ஆயிரத்து ஓர் இரவுகள் எனும் அரேபிய புத்தகம்தான். உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை “முட்டாள் நண்பன் “ என்கிற அமெரிக்க கதை. தமிழ் மாணவர் என அழைக்கப்படும் வீரமாமுனிவர் எழுதிய முட்டாள் சீடர்களைக் கொண்ட பரமார்த்தக் குரு கதைக்கு இன்றளவும் வாசகர் வட்டம் உண்டு.

உலக அளவிலான நாடாளுமன்ற விவாதத்தில் முட்டாள் சொல் பற்றிய விவாதமே மிகச்சிறந்த நகைச்சுவை விவாதமாக கருதப்பட்டு வருகிறது. ஜெர்மனி நாடாளுமன்றத்தில் ஒரு முறை பிஸ்மார்க் சொன்னார் “இங்கே இருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள்.” அவரது இந்தக் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பைச் சமாளிக்க அவரது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் “இங்கே இருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள் அல்ல.”
முட்டாள் என்கிற சொல் இன்று மன்னர், அரசியல், குடியரசு என்கிற மூன்று சொல்லிற்கு அடுத்ததாக அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாக இருந்துக்கொண்டிருக்கிறது. அதற்காக ஒரு தினம் கொண்டாடுமளவிற்கு அந்த சொல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இந்தியர்களாகிய நாம் 1947 முதல் ஆகஸ்ட் 15 தினத்தை சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் அதற்கு முன்பே சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. 1931 ஆம் ஆண்டு முதல் நம் முன்னோர்கள் ஜனவரி 26 தினத்தை சுதந்திர தினமாக கொண்டாடினார்கள். ஆனால் சுதந்திரம் 1947 ஆகஸ்ட் 15 அன்று கிடைத்தது. ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாட்டத்தை தொடர்ந்து கொண்டாட வைக்கும் பொருட்டு 1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றும் பணி முழுமையாக நிறைவுற்றாலும் இந்நாளின் வருகை வரை காத்திருந்து 1950 ஜனவரி 26 ஆம் தேதி அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்து அந்நாளைக் குடியரசு தினமாக அறிவித்தார்கள். மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருவது ஆகஸ்டு 15, ஜனவரி 26 இரண்டில் எதுவென்றால் ஜனவரி 26 தான்! அதே போன்றுதான் ஜனவரி முதல் தேதி ஆங்கில புத்தாண்டாக உலகம் கொண்டாடி மகிழ்ந்தாலும் நீண்ட காலம் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது ஏப்ரல் முதல் தேதியே.

முதல் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதனாக அழைக்கப்படுகிறார் ஜுலியஸ் சீசர். இவர்தான் முதலில் காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். வருடதத்திற்கு 365 ¼ நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டதும் இவர் காலத்தில்தான். சீசருக்கு முந்தைய காலத்தில் காலண்டர் முறை இருந்தாலும் அது சந்திரனை அடிப்படையாக்கொண்டு இருந்தது. சோஜிஜென் எனும் வானவியல் வல்லுநரின் ஆலோசனையின்பேரில் சீசர் சூரியனை அடிப்படையாகக்கொண்டு காலண்டர் முறையினை அறிமுகப்படுத்தினார்.

இந்த காலண்டரானது பத்து மாதங்களைக் கொண்டும் வருடத்தின் முதல் மாதமாக ஏப்ரலை கொண்டும் இருந்தது. ஏப்ரல் என்பதற்கு கிரேக்க மொழியில் தொடக்கத்திலிருந்து எனப் பொருள்படும். இந்த காலண்டர் 1581 வரை நடைமுறையில் இருந்தது. 1582 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போப் கிரிகோரி எனும் புதிய காலண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காலண்டர் 12 மாதங்களைக் கொண்டும் முதல் மாதமாக ஜனவரியைக் கொண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த காலண்டர்தான் இன்று நடைமுறையில் இருக்கிறது.

உலகில் பல வகையான காலண்டர்கள் உள்ளன. டிசம்பர் 21 உடன் முடிந்த மாயன் காலண்டர், இஸ்லாமிய நாடுகளில் அரபிக் காலண்டர், சீனக்காலண்டர், தமிழ் நாட்டில் திருவள்ளுவர் காலண்டர்…. இப்படியாக. இதேப்போன்று ஒவ்வொரு நாட்டிலும் வருடப்பிறப்பில் சர்ச்சைகள் இருந்துக்கொண்டியிருக்கின்றன. தமிழர்களின் ஆண்டு பிறப்பு சித்திரை என்றும் தை என்றும் இரு கருத்துகள் இருப்பதைப் போல. இந்தியாவில் முகலாய மன்னன் ஔரங்கசிப் காலம் வரைக்கும் கனிஷ்கர் அறிமுகப்படுத்திய சக ஆண்டு காலண்டர் நடைமுறையில் இருந்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வருகைக்குப்பின் ஆங்கில காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் தேசிய காலண்டராக சக காலண்டர் முறை இருந்துவருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் இன்றும் இரண்டு விதமான காலண்டர்கள் பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு பிரிவினர் ஜனவரி முதல் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடி மகிழ்கின்றனர். மற்றொரு பிரிவினர் ஏப்ரல் முதல் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில மொழியைத் தாய் மொழியாக்கொண்ட நாடுகள் ஒன்றுகூடி ஒரு முடிவை அறிவித்தன. ஜனவரி முதல் தேதியே புத்தாண்டு. இதை ஏற்க மறுத்து ஏப்ரல் முதல் தேதியை கொண்டாடுபவர்கள் முட்டாள்கள் என்று சித்தரித்தார்கள். அது முதல் ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினமாக கருதப்பட்டு வருகிறது.

இந்திய பிரதமர்களில் முற்போக்குவாதியாக செயல்பட்டவர் ஜவஹர்லால் நேரு. அவர் ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினம் என சித்தரிப்பதை ஏற்க மறுத்தார். அந்நாளில் அவர் ஒரு புரட்சிகரமான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினார். 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அவர் மக்கள் முன் உரையாற்றுகையில் “ஏப்ரல் முதல் தேதியை உலகம் எப்படி பார்க்கிறதோ, நாம் இந்த நாளை மாற்றத்தின் தினமாக பார்ப்போம்“ என்றவர் காலணா, அரையணா நாணய முறையை ஒழித்து, தசம நாணய ( உரூபாய்) முறையை அறிமுகப்படுத்தினார்.

இந்த உலகில் தன்னை முட்டாள் என அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் இரண்டு பேர்கள். ஒருவர் நடிகர் சந்திரபாபு. “நானொரு முட்டாளுங்க, நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க“ என்று பாடினார். மற்றொருவர் பிரெஞ்ச் நாட்டு புரட்சியாளர் வால்டர், “உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நினைத்திருந்துவிட்டேன். நான் ஒரு முட்டாள் “ என்றார்.

உலகத் தலைவர்கள் முட்டாள் என்கிற சொல்லை பலவிதமாக கையாண்டிருக்கிறார்கள். “ நான் முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதை விடவும், புத்திசாலிகளுக்கு வேலைக்காரனாக இருக்கவே விரும்புகிறேன் “ என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன். ஆனால் தென்னாட்டின் சாக்ரடீஸ் என அழைக்கபட்ட ஈ.வெ.ரா அவர்கள், “திராவிட கழகத்திற்குத் தேவை முட்டாள்களே தவிர புத்திசாலிகள் அல்ல“ என்றார்.

உலகில் முதன்முதலாக முட்டாள் என குற்றம் சாட்டப்பட்டவர் சாக்ரடீஸ். அவர் நஞ்சு பருகி மரணத்தை தழுவும் முன் இவ்வாறு சொன்னார் “ நான் ஒரு முட்டாள் என்கிறீர்கள். அப்படியானால் இனி இந்த உலகம் முட்டாள் கீழ்தான் இயங்கும்.”

அவரது கருத்திலிருந்து இந்த உலகத்தைப் பார்த்தால் இன்றைய உலகம் முட்டாள்களின் கீழ்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்று இந்த உலகத்தை இயக்கிக்கொண்டிருப்பது கணினி. கணினி என்பது முட்டாள் இயந்திரம் அல்லவா!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *