மழைத் தெய்வம் – காதல் கவிதைகள் – யாழ். எஸ். ராகவன் – ஒரு பார்வை – பொன். குமார்

காதல் கவிதைகள் சங்க இலக்கியங்களிலிருந்தே தொடங்கி குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை போன்ற சங்க நூல்களில் மிகுதியாக வாசிக்கக் கிடைகின்றன. நவீன காலத்தில் அப்துல் ரகுமானின் முதல் கவிதைத் தொகுப்பான பால்வீதி புதுக்கவிதை வடிவத்தில் குறிப்பிடத்தக்க காதல் கவிதைகளைக் கொண்டிருந்தது. மேலும் பல நவீனத் தொகுப்புகள் காதல் கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளன. காதல் கவிதைகளையும் ஒவ்வொரு
கவிஞரும் ஒவ்வொரு விதமாக பாடினர். கவிஞர் யாழ். எஸ். ராகவன் தன் பாணியில்
மழைத் தெய்வம் என்னும் ஒரு காதல் கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார்.
உன்னைக் கண்ட ஆவலில்
சுடர்விட்டு ஒளிரும் விளக்குகள்
என காதலியிடம் பேசுவதாக தொகுப்பைத் தொடங்கியுள்ளார். காதலியைக் கண்ட ஆவலில் விளக்குகள் மட்டும் சுடர்விட்டு ஒளிரவில்லை கவிஞரும் கவிதைகள் எழுதி ஒளிர்ந்துள்ளார். கவிதைகளை ஒளிரச் செய்துள்ளார்.
காதலியைக் கண்டால் குதூகலம் அடையாதவர் யார். காதலி அழகாக இருந்துவிட்டால் குதூகலம் இரட்டிப்பாகிவிடும்.
ஈரம் ததும்பிய வாசலில்
அன்னமிடும் உன் அழகைக் கண்டு
எல்லா ஜீவராசிகளும்
குதூகலமடைகின்றன
என எழுதியுள்ளார். காதலன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் குதூகலமடைகின்றன என தன் குதூகலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறது அது நன்றாகவே நடக்கிறது
எதைக் கொண்டு வந்தாய்
எதைக் கொண்டு செல்வதற்கு
கடமையை செய்
பலனை எதிர்பார்க்காமல்
என்பது கீதா உபதேசம். இதை காதலியுடன் இணைத்து எழுதிய வரிகள்
காதல் கீதை போதிக்கும் இமைகளில்
தவிடுபொடி ஆகிறது குருச்சேத்திரம்
என்பதாகும். குருச்சேத்திரம் என்பது மகாபாரத போர் நடந்த இடமாகும். காதலியின் இமைகளில் குருச்சேத்திரமே தவிடுபொடி ஆகிறது என இமைகளின் இம்சைகளைத் தெரிவித்துள்ளார்.
மந்தகாசம் என்பது புன்சிரிப்பு.
இருளடைந்த காட்டில்
மின்மினிப் பூச்சியாய்
உன் மந்தகாசம்
என்னும் வரிகளில் காதலியின் புன்சிரிப்பு இருளடைந்த காட்டில் மின்மினிப் பூச்சியாய் இருக்கிறது என்று வியக்கிறார். இருளில் மின்மினி வெளிச்சம் வழிகாட்டும் என்பர். கவிஞரும் காதலியின் புன்சிரிப்பில் வெளிச்சத்தைக் கண்டு களித்துள்ளார்.
நீ உள் வாங்கி
வெளியிடும்
மூச்சுக் காற்றை உள்ளிழுத்துப் பார்
என் பெயர் சொல்லும்
என்னும் வரிகளில் காதலியின் மூச்சுக் காற்றையும் கவிஞர் விடவில்லை என தெரிகிறது. காதலியின் சுவாசக் காற்றே காதலனுக்கு மூச்சு காற்றாகிறது என்பதை உணர்த்தியுள்ளார். காதலியே சுவாசம்தானே?
மெளனம் என்பது உதடுகள் பேசாத மொழி. உச்சரிக்கப்படும் சொல்லுக்கு ஒரே அர்த்தம் மட்டும் இருக்கும். ஒரே ஒரு சொல்லை மட்டுமே குறிக்கும். ஆனால் மெளனம் பேசாததை எல்லாம் பேசும். சொல்லாததை எல்லாம் சொல்லும். எனவே கவிஞர்
எல்லையற்ற சொற்களை
மௌனத்தின் வழியே
கடத்துகிறாய்
என மெளனத்தின் வலிமையைக் கூறியுள்ளார். மெளனத்திற்கு மகத்தான சிறப்புண்டு.
பற்றிலான் பற்றைப்
பற்றுவதற்கும்
நீதான் பற்று
என பற்றுடன் எழுதியுள்ளார். பற்றில்லாதவர்க்கும் பற்றை உண்டாக்கும் பற்றுக்குரியவள் காதலி என்கிறார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை
அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்னும் திருக்குறளைப் பற்றியுள்ளன வரிகள்.
சட்டென்று உன்னைக் கண்ட
விசிலடிச்சான் குஞ்சு
சிறகசைத்தபடி பறக்கும்
நொடி அபூர்வமானது
என்னும் அபூர்வமான கணங்களை எல்லாம் கவிஞர் கவிதைகளில் ஆங்காங்கே பதிவு செய்துள்ளார். அபூர்வ கணங்கள் அரிது காண்பது. கவிஞர் காணச் செய்துள்ளார்.
போதி மரத்தடியில் ஞானம் பெற்றான் புத்தன். கவிஞர் காதலியிடம்
நீ போதியாகி
ஞானம் சுரந்தாய்
புத்தனாகிறது
மழை
என்று கூறி காதலியை போதியாக்கியுள்ளார். காதலி மழையை மட்டும் புத்தனாக்கவில்லை யாழ். எஸ். ராகவனையும் கவிஞராக்கியுள்ளார்.
காதல் என்றாலும் சிலிர்ப்பு. காதலியைக் கண்டாலும் சிலிர்ப்பு.
சிலிர்ப்பைத் தரும்
யாவும்
உன்னில் இருந்தே
அரங்கேறும்
என்று சிலிர்ப்பு தருபவைக் காதலியிடமிருந்தே அரங்கேறுகிறது என்கிறார். காதலிக்காக எழுதப்பட்ட கவிதைகளோ காதலியிடமே அரங்கேற்றியுள்ளன.
மழை பெய்கிறது என்று பொதுவாகக் கூறுவர். கவிஞர் காதலியுடன் உறவாடுகிறது என்கிறார்.
உனக்கும் மழைக்குமான
உரையாடல்களில்
நனைந்து கொண்டே இருக்கின்றன
என்னைப்போலவே யாவும்
என்னும் உரையாடலில் நனைந்து கொண்டே இருக்கின்றன யாவும் என்பது குறிப்பிடத்தக்கது. வாசிப்பவரையும் நனையச் செய்துள்ளார்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
என்கிறது திருக்குறள்.
நான் ஒன்றும் இன்னா
செய்யவில்லை ஆனாலும்
நான் நாண நன்னயம் செய்
என்கிறது கவிஞர் குரல். இன்னா செய்யாமலே தான் நாண நன்னயம் செய் என்று வேண்டுகிறார். காதலியிடம் வேண்டுவது தவறில்லை.
ஸ்படிகம் என்றால் பூமியின் அடியில் நீண்ட காலமாகப் படிந்து உறைந்த நீரிலிருந்து உருவாகும் ஒரு வகை படிகப் பாறை. உடல் சூட்டைக் கட்டுப்படுத்துதல், மனதை அமைதிப்படுத்துதல், நேர்மறை ஆற்றலை ஈர்த்தல் போன்ற ஆன்மீக மற்றும் அறிவியல் ரீதியான பலன்களைக் கொண்டிருப்பவை என்கிறார்கள். மாலைகள், லிங்கங்கள் போன்றவை தயாரிக்க ஸ்படிகக் கல் பயன்படுத்தப்படுகிறது.
எல்லாக் கூடைகளையும்
பூக்களால் நிரப்பும்
உனது விரல்களின்
ஸ்பரிசத்தில் ஸ்படிகமாகிறேன்
என்று ஒரு கவிதையில் தெரிவித்துள்ளார். பூமிக்கு அடியில் நீண்ட காலமாக படிந்து உருவாகும் ஸ்படிகம் காதலியின் ஒரு ஸ்பரிசத்திலேயே உருவாகிறது என்று காதலியின் ஸ்பரிசத் தன்மையை விளக்கியுள்ளார். வியக்கச் செய்துள்ளார்.
அமுதம் பொழியும்
இரவொன்றில்
நீ கைபிடித்த
கோப்பையாகிறேன்
உள்ளும் புறமும்
நிரம்பிய பிரியத்திற்கு
உனது சாயல்
என்றொரு கவிதை. காதலி என்றாலே பிரியம் தானே? கவிஞரோ பிரியத்திற்கு காதலியின் சாயல் என்கிறார். கவிதைகள் எல்லாமே காதலியின் சாயலாகத்தான் உள்ளன.
கவிஞர் யாழ். எஸ். ராகவன் மழைத் தெய்வம் என்னும் தலைப்பிலான தொகுப்பில் காதல் மழையைப் பொழிந்துள்ளார். கவிதைச் சாரலாக சில்லிடச் செய்கின்றன. காதலிக்காக ஒரு நூறு கவிதைகள் எழுதியுள்ளார். நூறு கவிதைகளிலும் கவிஞர் யாழ். எஸ். ராகவனின் அன்பும் காதலும் வெளிப்பட்டுள்ளது. காதலியை வர்ணிக்கிறார். காதலியைக் கொண்டாடுகிறார். காதலியை பாராட்டுகிறார். காதலியிடம் வேண்டிகிறார்.
நின்னையே சரணடைந்தேன் என்று பாரதி சரணடைந்தது போல கவிஞரும் சரணடைந்துள்ளார். கவிஞர் சரணடைந்தாலும் கவிதைகள் சுதந்திரமாக வெளியில் வலம் வருகின்றன. மழை பல வகையாக பெய்தாலும் மென்மையாகவும் பெய்யும். மென்மையாக பெய்யும் மழை போல் கவிதைகளையும் மென்மையாக எழுதியுள்ளார். மனத்தை நனைக்க செய்துள்ளார். காதல் கவிதைகள் எழுதும் போது வார்த்தைகள் போட்டி போட்டுக் கொண்டு வரும். மழைத் தெய்வம் தொகுப்பிலும் கவிதைகளில் வார்த்தைகள் காதலால் வெளிப்பட்டவையாகும். காதலும் உள்ளது. கவிதையும் உள்ளது. தெய்வம் வணக்கத்திற்குரியது. மழைத் தெய்வம் வாசிப்பிற்குரியது.
கட்டிக் காத்ததை
கொட்டித் தீர்த்தது
பருவமழை
என்றொரு கவிதை தொகுப்பில் உள்ளது. கவிஞரும்
எழுத நினைத்ததை
எழுதித் தீர்ததது
மழைத் தெய்வம். வாழ்த்துகள்.
வெளியீடு
வேரல் புகஸ் சென்னை
9578764322
கவிஞர் யாழ். எஸ். ராகவன்
8056814747
பொன். குமார் 9003344742
***
.
![]()