பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 04 … செங்கதிரோன்

‘பூப்பூக்கும் ஓசை’ (சிறுவர் பாடல்கள்)
மகுடம் பதிப்பகத்தின் 101 ஆவது வெளியீடான சோ. அருளானந்தம் (மன்னனூர் மதுரா) யாத்த சிறுவர்பாடல்களின் தொகுப்பு நூலான ‘பூப்பூக்கும் ஒசை’யின் வெளியீடு 19.10.2025 அன்று மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
‘மகுடம்’ கலை இலக்கியவட்டம் நடாத்திவரும் பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வுத் தொடரின் 63 ஆவது நிகழ்வான இதனை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் மகுடம் கலை இலக்கிய வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
சோ. அருளானந்தம் அவர்களின் கன்னிக் கவிதைத் தொகுதியான ‘அக்கினிக்குஞ்சுகள்’ வெளிவந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது இரண்டாவது வெளியீடான ‘பூப்பூக்கும் ஓசை’ வந்திருக்கிறது. இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வில் பார்வையாளனாகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நூலின் நயவுரையை மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் க. மோகனதாசன் ஆற்றியிருந்தார்.
மேற்கு நாடுகளில் சிறுவர் இலக்கியங்கள் வளர்ச்சிபெற்ற அளவுக்குத் தமிழ்ச் சூழலில் பெரிதாக இல்லையென்பதே இதுவரை காலத்து அனுபவம். சிறுவர் இலக்கியத்தில் சிறுவர் பாடல்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதிலும் இசைகூட்டிப் பாடக்கூடிய சிறுவர் பாடல்கள் குழந்தைகளை அதிகம் கவர்கின்றன.
அந்தவகையிலே மகாகவி பாரதியாரின் ‘ஓடிவிளையாடு பாப்பா! நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!’ எனும் பாடல் வரிகளும் தங்கத் தாத்தா என அழைக்கப்பெற்ற யாழ்ப்பாணம், நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ‘ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!’ எனும் பாடல்களும் இன்றும் இனையோர் முதியோர் என்றில்லாமல் எல்லோருடைய மனதிலும் பசுமரத்தாணிபோல் பதிந்து போயுள்ளன.
இந்தப் பின்புலத்தில் சோ. அருளானந்தம் அவர்களின் ‘பூப்பூக்கும் ஓசை’ யின் வரவு சமகாலத்தில் முக்கியம் பெறுகிறது. அருமையான பாடல்களுடன் மட்டுமல்ல அழகான படங்களுடனும் அச்சாகி வந்துள்ளது இந்நூல். மொத்தம் நாற்பத்தைந்து பாடல்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
ஓய்வுநிலை அதிபரான இந்நூலாசிரியர் அருளானந்தம் அவர்கள் ஆசிரியராக – உப அதிபராக – அதிபராகப் பணியாற்றிய காலப்பகுதிகளில் மாணவர்களின் உடல், உள உயர்ச்சிக்காக எழுதிய பாடல்கள் இவை.
கடந்த காலங்களில் பல மெல்லிசைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும், மேடை மற்றும் வானொலி நாடகங்களையும் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். பத்திரிகைகளில் இவரது பத்தியாக்கம்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அமைதியாகவும், அடக்கமாகவுமிருந்து கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபாடு காட்டிவரும் அருளானந்தம் அவர்கள் நல்ல பாடகரும்கூட.
பொலனறுவை மாவட்டத்தில் மன்னம்பிட்டிக் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரென்பதால் ‘மன்னனூர் மதுரா’ எனும் புனைபெயரைச் சூடிக்கொண்டுள்ளார் போலும்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல, இந்நூற் தொகுப்பிலுள்ள பாடல்களிலொன்று.
மரம் வளர்ப்போம்
மரம் வளர்ப்போமே மண்ணில்
மரம் வளர்ப்போமே – இதன்
அருமையுணர்ந்து அக்கறையாய்
நாம் வளர்ப்போமே
மண்ணரிப்பைத் தடுப்பதற்காய்
மரம் வளர்ப்போமே – இதைக்
கண்ணைப் போலப் பேணிக் காத்து
நாம் வளர்ப்போமே
மழை நன்கு பெய்வதற்கே
மரம் வளர்ப்போமே – இங்கு
விளை பயிர்கள் செழிக்க வேண்டி
அதை வளர்ப்போமே
வேர், இலை, பூ மருந்தாகும்
விரும்பி வளர்ப்போமே – இதன்
அருங் கனியோ விருந்தாகும்
அறிந்து வளர்ப்போமே
இயற்கை அன்னை தந்தவரம்
இணைந்து வளர்ப்போமே – இதன்
பயன் அறிந்து நாமுமிங்கே
போற்றி வளர்ப்போமே.
இந்நூலிலுள்ள பாடல்களை எதிர்காலத்தில் இசையமைத்து இறுவட்டாக வெளியிடும் எண்ணமிருப்பதாக அருளானந்தம் அவர்கள் அறிவித்தும் உள்ளார். ஆம்! அருளானந்தத்தின் ‘பூப்பூக்கும் ஓசை’ – அதைக் கேட்கத்தான் ஆசை.
![]()