இலங்கை

தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்களைக் கைவிட்டுவிட்டது – திஸ்ஸ விதாரண கடும் விமர்சனம்

தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் நிலை குறித்து பேராசிரியர் திஸ்ஸ விதாரண கவலை வெளியிட்டுள்ளார்.

பொரளையில் அமைந்துள்ள கலாநிதி என். எம். பெரேரா மத்திய நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி விமர்சனம் முன் வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

தற்போதைய அரசாங்கம் முதலாளித்துவ முறையையே தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் சாடினார்.

சாதாரண மக்கள் மீது மறைமுக வரிகள் மற்றும் வாட் (VAT) வரி பாரிய சுமையாக சுமத்தப்பட்டுள்ள நிலையில், வரி செலுத்தக் கூடிய வசதி படைத்தவர்களிடம் முறையான வரி வசூலிக்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்தச் சூழல் சமூகத்தில் பெரும் அநீதியை உருவாக்கி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு எதிராகச் லங்கா சமசமாஜக் கட்சி என்ற ரீதியில் முழுமையாகப் போராடப் போவதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதோடு, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுவதால், அவர்களின் தேவைகளுக்கு அரசாங்கம் விசேட முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில், இளைஞர்கள் மத்தியில் மீண்டும் சோசலிச மற்றும் இடதுசாரி கொள்கைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது ஒரு சிறந்த மாற்றமாகும் என அவர் குறிப்பிட்டார்.

ஒரு சரியான இடதுசாரி அரசாங்கமே நாட்டிற்குத் தேவை என்பதை வலியுறுத்திய அவர், தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்களின் பிரச்சினைகளை விடுத்து முதலாளித்துவ வர்க்கத்திற்கே முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்துத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்த பேராசிரியர், இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்க இராணுவம் நாட்டிற்குள் நுழைவது இலங்கையின் இறையாண்மைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என எச்சரித்தார்.

சோபா (SOFA) மற்றும் எம்.சி.சி (MCC) போன்ற உடன்படிக்கைகள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பதால், வெளிநாடுகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல் ஒரு சுதந்திரமான நாடாக இலங்கை செயல்பட வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *