இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி விரைவில் மலரும்: மரிக்கார் நம்பிக்கை

மக்களை ஏமாற்றி, கனவுலகில் வாழ வைத்த ஒரு வருடம் இன்றுடன் முடிவுக்கு வருவதாகவும், பிறக்கவிருக்கும் 2026ஆம் ஆண்டு நாட்டிற்கு மிகவும் சவாலான ஒன்றாக அமையப்போவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,

ரூபாயின் வீழ்ச்சி காரணமாக வெளிநாட்டு கடன் சுமை 703 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அனர்த்த நிலைமைகளால் சுற்றுலாத்துறை மற்றும் விவசாயத்துறை பாரிய பாதிப்புகளைச் சந்தித்துள்ளதால், ஏற்றுமதி – இறக்குமதி இடைவெளி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை நேரடி வெளிநாட்டு முதலீடுகள் எவையும் கிடைக்கவில்லை எனவும், 2026 இலும் அத்தகைய முதலீடுகள் வருவதற்கான அறிகுறியும் இல்லை எனவும் அவர் சாடினார்.

சர்வதேச இறையாண்மை பிணைமுறி தவிர்ந்த ஏனைய அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களையும் செலுத்த வேண்டியுள்ள நிலையில், நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள 900 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சேதங்களைச் சீரமைப்பது பெரும் சவாலாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் முயற்சிக்காது என்று கூறிய அவர், ஆனால் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவர முடியாத மற்றும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கத் தெரியாத இந்த திறமையற்ற அரசாங்கத்திற்கு எதிராக, ஒரு வலுவான வலதுசாரி பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், தற்போது அதன் சாதகமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத தூய்மையான நபர்களை ஒன்றிணைத்து, நாட்டை முடக்கும் இடதுசாரி சக்திகளுக்கு எதிராக ஒரு பலமான தென்னிலங்கை முகாமை உருவாக்கப்போவதாகத் தெரிவித்த மரிக்கார், ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் தாய்க்கட்சி எனவும் அதன் பிரதான இல்லம் ‘சிறிகொத்த’ எனவும் குறிப்பிட்டார்.

சில காரணங்களால் பிரிந்து சென்ற போதிலும் நாம் நிரந்தரமாகப் பிரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இந்த இரு கட்சிகளும் இணைவதைத் தடுப்பதற்கு எவருக்கும் முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் தற்போது அரசாங்கத்தின் மீது கடும் விரக்தியில் உள்ளதால் அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தலைமைத்துவப் பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த இணைப்பைச் சீர்குலைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். பெரும்பான்மை பலம் ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ள போதிலும், ரணில் விக்ரமசிங்கவின் அனுபவம் மற்றும் முதிர்ச்சியையும் ஆலோசனைகளாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர், இந்த புதிய அரசியல் பயணம் நாளை முதல் ஆரம்பமாகும் எனத் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *