7 கோடித் தமிழ் மக்களின் பாதுகாப்பை நாம் நாடாமல் இருப்பது முட்டாள்தனம்; தமிழக விஜயம் தொடர்பில் கஜேந்திரகுமார் தெரிவிப்பு

தமிழ் தேசத்தின் இருப்புக்காக எமது மக்கள் எவ்வளவோ தியாகம் செய்தாலும் அது வீண் போகாத வகையில் இயற்கை அந்த தியாகங்களை அடைவதற்கு நிச்சயமாக சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். அதனுடைய ஆரம்ப புள்ளியாகத்தான் நாம் தமிழ்நாட்டு விஜயத்தை நாங்கள் பார்க்கிறோம் என தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்
இனவழிப்புக்குள்ளான இனம் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்தாலும் அவற்றையும் தாண்டி எமது பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வை காணும் வகையில் அண்மையில் தமிழக விஜயத்தை நாம் மேற்கொண்டோம்.
தமிழ் தேச அங்கீகாரமே எமது இறுதி இலக்கு. நாட்டை பிரிக்காமல் தமிழ் தேச அங்கீகாரத்தை பெறுவதாக இருந்தால் சுயநிர்ணய உரிமை முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்திற்கு நாம் விஜயம் மேற்கொண்டிருந்தாலும் சில வதந்திகள் காரணமாக அது முழுமையாக நடைபெறவில்லை.
2009 யுத்தத்தின் பின்னர் உயிர்களின் அழிவு நிறுத்தப்பட்டாலும் ஏதோவொரு வகையில் இலங்கை அரசாங்கம் இனவழிப்பை மேற்கொண்டே வந்தது.
தமிழகத்தில் பதவி வழியின் படி முதலாவதாக முதலமைச்சரையும் அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவரையும் பின்னர் ஏனைய கட்சி தலைவர்களையும் சந்தித்தோம்.தமிழக சந்திப்புகளை நாம் வெளிப்படையாகவே செய்தோம்.எந்த ஒளிவு மறைவும் இருக்கவில்லை. மகஜர்களை கையளித்ததுடன் அதனை வெளிப்படுத்தியிருந்தோம்.
ஒற்றையாட்சி தொடர்வது எங்கள் இனத்தை அழிப்பதற்கு நாங்களே இணங்குவது போன்றதாகும்.இதை தமிழகம் விளங்கிக் கொண்டு அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். இது அவசரமாக தேவை.
புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து நிறைவேற்றுவதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அழுத்தங்களை வழங்குவது உடனடியாக செய்யப்பட வேண்டியதாகும்.இதனை தமிழக தலைவர்களுக்கு நாம் தெளிவு படுத்தினோம்.
பதிமூன்றாம் திருத்தத்தை விட பலவீனமான அம்சங்களை கொண்டே ஏக்கியராஜ்ய அரசியலமைப்பு வரைவு வடிவமைக்கப்பட்டது. தமிழக மக்கள் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் எங்கள் பிரச்சினையை கதைத்து உணர்வுகளை கிளப்பிவிடும் என்பதால் ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விரும்பிய தலைவர்களுக்கு அது தலையிடியாக இருக்கும் என்பதால் வேண்டுமென்றே அந்த இடைவெளியை பேணினார்கள்.
நாம் சந்தித்த அனைத்து தலைவர்களும் நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.தமிழ் இனத்திற்கு ஏகமனதாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஒற்றையாட்சிக்குள் அரசியலமைப்பை உருவாக்குவதை தாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் ஒற்றையாட்சிக்குள்
முடக்குவதற்கு நாம் எதிர்ப்பை காட்டுவோம் எனவும் தெரிவித்தனர்.
இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளில் மற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்னவென தமிழக முதலமைச்சர் எம்மிடம் கேள்வி கேட்டார். ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ் தேசம் அங்கீகரிக்கும் சமஸ்டி தீர்வுக்கு அவர்கள் ஆதரவு வழங்குவார்களா எனக் கேட்டார்.
அந்த கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் அங்கீகாரம் வழங்கியது சமஷ்டி தீர்வுக்கே. ஆகவே அதற்கு எதிராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியோ, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியோ செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டால் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்பதை தெரிவித்தோம்.
மீன்பிடி பொருளாதாரத்தை அழிப்பது தமிழின அழிப்பின் ஒரு கூறு ஆகும். அதை தமிழகம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி முதலமைச்சரிடம் கேட்டோம். இந்த விடயத்தை உடனடியாக பேசி அழுத்தம் கொடுப்பதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். இதற்கு முதலில் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. அது இடை நிறுத்தப்பட்ட நிலையில் துரிதமாக இந்த மோதலை நிறுத்தவும் என்னால் இயன்ற செயற்பாட்டை செய்ய தயார் என்பதை தெளிவாக வலியுறுத்தினார்
தமிழ்நாட்டு விஜயம் 2009 மே மாதத்தின் பிற்பாடு தமிழ் அரசியலில் திருப்புமுனையை உருவாக்குவதற்கான அத்தியாயம்.நாம் சென்று சந்தித்த அனைத்து கட்சி தலைவர்களும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு ஈழத் தமிழர்களுடைய விவகாரத்தில் உணர்வுபூர்வமாகவும் உறுதியாகவும்இருந்த அதே நிலையில் தான் தற்போதும் இருக்கிறார்கள் என்பதில் துளி கூட நமக்கு சந்தேகங்கள் கிடையாது.
நாங்கள் தமிழ்நாட்டு மக்களை அரவணைக்காமல் இருக்கிறோம். அந்த இடைவெளியை திட்டமிட்டு ஈழத் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் கடந்த காலங்களில் அந்த இடைவெளியை விரும்பி உருவாக்கினார்கள். அதுவே எங்கள் மோசமான துரதிஷ்டம்.
அந்த நிலைமையை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. ஏழு கோடி தமிழ் மக்கள் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்க வடகிழக்கில் போருக்கு பிற்பாடு எங்கள் தேச இன அழிப்பு தீவிரமாக்கப்பட்ட நிலையில் அந்த 7 கோடி தமிழ் மக்கள் எமக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் அவர்களுடைய அந்த பாதுகாப்பை நாம் நாடாமல் இருப்பது அடி முட்டாள்தனம்.
ஆகவே தான் நாங்கள் இதற்கு முதல் எடுத்த பல முயற்சிகள் வெற்றி அளிக்காத நிலையில் இன்று அந்த முயற்சி வெற்றி அடைவதாக இருந்தால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு ஐங்கரநேசனுக்கும் தொல் திருமாவளவனுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
தேசத்தின் இருப்புக்காக எமது மக்கள் எவ்வளவோ தியாகம் செய்தாலும் அது வீண் போகாத வகையில் இயற்கை அந்த தியாகங்களை தியாகங்களின் அடைவதற்கு நிச்சயமாக சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். அதனுடைய ஆரம்ப புள்ளியாகத்தான் தமிழ்நாட்டு விஜயத்தை நாங்கள் பார்க்கிறோம் – என்றார்.
![]()