ரணில் தரப்பு சஜித் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இருதரப்புக்கும் இடையில் இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பானது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,எமது தாய்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேசிய இலக்குகளை பயனுள்ள மற்றும் திறமையான முறையில் நிறைவேற்ற புதுமையான கொள்கை நடவடிக்கைகளை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள மற்றும் நேர்மறையான கலந்துரையாடல்கள் நடைபெற்றன என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கலந்துரையாடலின் பின்னர் தொடர்ந்தும் எதிர்காலத்தில் சந்திப்புக்களை நடத்துவதற்கு இருதரப்பிலும் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த சந்திப்பை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினத்தில் கட்சியின் தலைவரான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்த சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
![]()