முச்சந்தி

நிதிப் பயன்பாட்டில் 100% சாதனை; யாழ்.மாவட்டம் முதலிடத்தில்

யாழ்ப்பாணம் மாவட்டம் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தில் 100% முன்னேற்றத்தை காண்பித்து தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளரின் 08.12.2025 ஆம் திகதி அறிக்கையிடலின் பிரகாரம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டம் 100% முன்னேற்றத்தை காண்பித்து முதலாவது இடத்தை பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற கூட்டத்தில் அரசாங்க அதிபர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றியமைக்கு எம்முடன் பூரணமாக ஒத்துழைப்பு நல்கிய மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு நன்றியினைத் தெரிவிப்பதாகவும், பிரதேச மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு பிரதேச செயலாளர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, பிரதேச செயலாளர்களுக்கு உறுதுணையாக செயற்பட்ட பிரதி ,உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் விடய உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்தும் யாழ் மாவட்டம் முன்னிலையில் திகழ்வதற்கு பூரண ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும் கேட்டுக் கொண்டார்.

மேலும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் வழங்கப்பட்டு வரும் வழிகாட்டுதல்களுக்கும் தமது நன்றியினை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில்,

பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு மத்தியில் நேர்த்தியான முறையில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவிப்பதாகவும், அரசாங்க அதிபர் அவர்கள் 03 தேர்தல்களை வெற்றிகரமாக நடாத்தி முடித்தவர் எனவும், அவரின் நிர்வாக செயற்பாடுகளை அவதானித்து வருவதாகவும், 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் எமது மாவட்டம் முன்னிலைமை பெற்றதையிட்டு, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

மேலும் எமது அரசாங்கம் அரசாங்க உத்தியோகத்தர்கள் மீதான எதுவித பழிவாங்கல்களும் மேற்கொள்வதில்லை என்ற கொள்கைக்கு அமைவாக செயற்பட்டுவருவதாகவும், அண்மையில் “டித்வா” புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து எமது நாடு பழைய நிலையினைக்காட்டிலும், மேலும் முன்னேற்ற அடைய வேண்டும் என்பதே ஜனாதிபதியின் இலக்கு என்றும், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வரும் ஜனாதிபதிக்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு நல்கி எமது நாட்டை முன்னேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *