2026 இல் பொருளாதார நெருக்கடி ஏற்படாது; வீழ்ந்தாலும் மீண்டெழுவோம் -அமைச்சர் விஜித்த ஹேரத்

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் 2026 ஆம் ஆண்டு எந்தவித பொருளாதார நெருக்கடியும் ஏற்படாது என்பதுடன் எரிவாயு விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படாது.பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது. வீழ்ந்தாலும் சிறந்த முறையில் மீண்டெழுவோம்.அதற்கான சக்தி எமக்குள்ளது என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த நிலைமையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரச இயந்திரம் சிறந்த முறையில் செயற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினரும், பொலிஸாரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். நவம்பர் 28 ஆம் திகதி பிரதமர் தலைமையில் இராஜதந்திர பிரநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தினோம். ஆகவே அரசாங்கம் என்ற அடிப்படையில் இயற்கை அனர்த்த நிலைமையை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தோம்.
இயறக்கை அனர்த்த நிலைமை தீவிரமடைந்து ஆறு மணித்தியாலத்துக்குள் இந்திய அரசாங்கம் மீட்பு பணிக்காக இரண்டு ஹெலிகொப்டர்களையும், மீட்புப் பணியாளர்களையும் அனுப்பி வைத்தது.அதேபோல் பாகிஸ்தான் அரசாங்கமும் ஹெலிகொப்டரையும், நிவாரண பொருட்களையும் வழங்கியது. 24 மணித்தியாலத்துக்குள் சர்வதேச நாடுகள் நிவாரணங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கின .
இந்தியா – பாகிஸ்தான் இலங்கை விவகாரத்தில் இணக்கமாகவே செயற்பட்டன .இன்றும் அவ்வாறே செயற்படுகின்றன . அதேபோல் உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கையின் அனர்த்த நிலைமைக்கு அனுதாபம் தெரிவித்தார்கள்.இலங்கை தனிமைப்படவில்லை என்று உலக நாடுகள் நம்பிக்கையளித்தன. அதேபோல் சர்வதேச நிதி நிறுவனங்களும் இலங்கைக்கு நிதி மற்றும் ஏனைய நிவாரணங்களை வழங்கி உதவின.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான சிவில் அமைப்புக்களும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினர் . மக்களும் தனிப்பட்ட முறையில் பிறிதொருவருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.இயற்கை அனர்த்த நிலைமையின் போது இலங்கையில் பல இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருந்தார்கள். ஒருவருக்கு கூட எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணமளிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த பேரிடரினால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் நிவாரணம் வழங்கலின் போது குறைபாடுகள் காணப்படலாம். அவற்றை ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.அதனை விடுத்து அரசியல் செய்ய முற்படக் கூடாது.
நெருக்கடியான நிலையின் போது எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கினர் .ஒருசிலர் மாத்திரம் தான் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். அவர்களை கருத்திற்கொள்ளப் போவதில்லை.சுற்றுலாத்துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. டிசம்பர் மாதம் முதல் காலப்பகுதியில் மாத்திரம் 93 ஆயிரம் பேர் நாட்டுக்கு வந்துள்ளார்கள். இந்தாண்டு மாத்திரம் நாட்டுக்கு 22 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
தற்போதைய அனர்த்த நிலைமையினால் 2026 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்படும், எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்க்கட்சியினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களை அச்சமடைய செய்ய முயற்சிக்கிறார்கள்.இது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடு . எரிவாயு விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஓமான் நிறுவனத்தை விடவும் .15 டொலர் குறைவான விலைக்கு புதிய நிறுவனம் ஒன்று இணங்கிய நிலையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதலாவது எரிவாயு கப்பல் நாட்டுக்கு வரும்.
எனவே நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் 2026 ஆம் ஆண்டு எந்தவித பொருளாதார நெருக்கடியும் ஏற்படாது ம்,எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என்றார்.
![]()