முச்சந்தி
பன்முக ஆளுமை மிக்க படைப்பாளி: பவளவிழாக் காணும் கோகிலா மகேந்திரன்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈழத்துத் தமிழ்க் கலை, இலக்கியப் படைப்புலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து, சமூகப் பெறுமானம் மிக்க தன் பணிகளை இற்றைவரை முனைப்புடன் முன்னெடுத்துவரும் கலாபூஷணம் திருமதி கோகிலா மகேந்திரன் இவ்வருடம் பவளவிழாக் காண்கிறார்.பவளவிழா நாயகி:
பவளவிழா நாயகியின் மாணவர்கள், கலை இலக்கியத் துறை நண்பர்கள், உறவினர்கள், சக ஆசிரியர்கள், உளவளத் துணையாளர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ளும் விழா தாயக மண்ணில் நடைபெறுகிறது.
கலாபூஷணம் கோகிலா மகேந்திரன் அவர்களின் பவள விழா 2025 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் யாழ்ப்பாணம் இல. 37, இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் சிறப்புற நடைபெறவுள்ளது.
கலாபூஷணம் கோகிலா மகேந்திரன் அவர்கள் ஆரம்பத்தில் ஆசிரியத்துறையில் தன்னை இணைத்துக் கொண்டு, பின்னர் அதிபராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். அத்துடன் ஆக்க இலக்கிய கர்த்தாவாக, நாடக வல்லுநராக, உளவளச் சிகிச்சையாளராக, சமூகச் செயற்பாட்டாளராகவும் இயங்கி, தன் நுண்மாண் நுழைபுலத்தைப் பன்முகத்தளங்களினூடு தமிழுலகிற்கு அளித்துவருகிறார்.
மேலும் சிறுகதை, நாவல், நாடகம், உளவியல்சார் கட்டுரைகள் என்று பரந்து விரியும் இவரது இலக்கியப் பணிகள், அரச விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளன.இவரது ஆளுமையால் செழுமையுற்று இன்று உலகெங்கும் பரந்துவாழும் இவரின் மாணவர்கள் ஒன்றிணைந்து தம் ஆசிரியப் பெருந்தகைக்கு நல்விழாவாம் பவளவிழாவைக் காணிக்கையாக்குகிறார்கள்.
பவளவிழா மங்கல விளக்கேற்றல், தமிழ்வாழ்த்து, வரவேற்புரை, நாதசங்கமம், ஆசியுரை, வாழ்த்துரைகள், பவளவிழா நூல் வெளியீடு, போலச் செய்தல் ( நடிப்பு அளிக்கை), பட்டிமண்டபம், நாடகம், நன்றியுரை ஆகிய நிகழ்வுகளால் பொலிவுறவுள்ளது.
எழுத்துலகில் கோகிலா மகேந்திரன்:
கலைத் திறானாய்வாளரும் சமூக சிந்தனையாளரும் உளவள ஆலோசகருமான கோகிலா மகேந்திரன், 17 நவம்பர் 1950இல் பிறந்தவர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம் எனப் பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞரும் ஆவார்.
இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகள் பலவற்றில் இடம் பிடித்திருக்கின்றன. இவர் க.பொ.த சாதரண தரத்தில் படிக்கும் போது “மலர்களைப் போல் தங்கை” என்ற குறுநாவலை எழுதினார். அது எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை. 1972 இல் “குயில்” சஞ்சிகையில் பிரசுரமான ‘அன்பிற்கு முன்னால்’ என்ற சிறுகதையே அச்சில் வெளிவந்த இவரது முதலாவது படைப்பாகும்.
அதனைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் விழி, விழிசைக்குயில், பசுந்தி, பதுமலாஞ்சனன் ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். இதுவரை இவரது கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஆறு சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றுள் “பிரசவங்கள்’, “வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்’ ஆகிய இரு தொகுதிகளும் தேசிய சாகித்ய விருது பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் “சிறுவர் உளநலம்”, “மகிழ்வுடன் வாழ்தல்”, “சின்னக் சின்னப் பிள்ளைகள்,” “உள்ளக் கமலம்”, “முற்றத்தில் சிந்திய முத்துக்கள்”, “சுனாமியில் சிதறிய சித்திரங்கள்” ஆகிய உளவியல் பயிற்சி சார் கைநூல்களின் நூலாசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.
அத்தோடு “மனதைக்கழுவும் மகாசமர்த்தர்கள்” என்ற உளவியல் சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியராகவும் இருந்ததுடன் “மனமெனும் தோணி”, “உள்ளம் பெருங்கோயில்”, “நேர் கொண்ட பாவை”, “சிறுவர் பாதுகாப்பு”, “ போன்ற பல உளவியல் கட்டுரைத் தொகுப்புகளினதும் வாழ்வின் முன்னேற்றத்துக்கான கற்றல் போன்ற கல்வி உளவியல் பயிற்சிக் கைநூல்களினதும் ஆசிரியராக அல்லது ஆசிரியர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.
“திருப்பங்கள்” என்ற குறுநாவலின் ஆசிரியர்களில் ஒருவரான இவர் அதன் பதிப்பாசிரியரும் ஆவார். “தண்பதப் பெருவழி” என்ற நூலின் நூலாசிரியர்களில் ஒருவராகவும் தொகுப்பாசிரியரில் ஒருவராகவும் பதிப்பாசிரியராகவும் விளங்குகிறார். இவர் “இணைகரத்தின் அயற்கோணங்கள்” என்ற சிறுகதைத் தொகுதிக்கும் “ மனநாடக மேடை” என்ற நாடகம் சார் தன்வரலாற்று நூலிற்கும் முடிவைத் தொடுவாய் முயன்று” என்ற கட்டுரைத் தொகுதிக்கும் நூலாசிரியர் ஆவார். இவர் “மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும்” “கதிராசி விழி (விழிசிட்டியின் வரலாறு) “என்ற சரித்திர நூல்கள், “கலையும் வாழ்வும்” நூல், “விழிமுத்து”, “விழிசைச் சிவம் ஜனன நூற்றாண்டு மலர்” ஆகியவற்றின் தொகுப்பாசிரியர். “தங்கத்தலைவி”, “விழிசைச் சிவம்” ஆகிய தனிமனித ஆளுமை சார் நூல்களின் ஆசிரியரும் ஆவார்.
இவர் “பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை சிறு நூல்” போன்றவற்றையும் வெளியிட்டுள்ளார். இவரது 60ஆவது, 65ஆவது, 70ஆவது 75ஆவது அகவை நிறைவாகச் “சோலைக்குயில்”, “விழிசைக் குயில்”, “பூங்குயில்”, “தேன்குயில்” ஆகிய மலர்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாடகவுலகில் பிரகாசித்தவர்:
ஈழத்துத் தமிழ்க் கலை, இலக்கியப் படைப்புலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து இவர் 23 நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். ஆறு நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்ததோடு தானும் நடித்துள்ளார். இரண்டு நாடகங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
வானொலி நாடகங்களையும் எழுதிய இவர் மாணவப் பருவத்தில் ஆசிரியர்களின் நெறியாள்கையில் ஐந்து நாடகங்களில் நடித்துள்ளார். “குயில்கள்” என்ற நூல் இவர் எழுதிய சில நாடகங்களின் தொகுப்பு. “கோலங்கள் ஐந்து” என்ற நாடகத் தொகுதியின் நூலாசிரியர்களில் இவரும் ஒருவர். “கேள்விகளின் முழக்கம்’ எனும் இவரது நாடகம், வட இலங்கைச் சங்கீத சபையின் “நாடக கலாவித்தகர்’ என்ற பட்டத்தினை இவருக்கு ஈட்டிக்கொடுத்தது.
அறிவியல் கதைகளை படைத்த ஆளுமை:
கோகிலா மகேந்திரனின் அறிவியல் கதைகள் பன்முகத்தன்மை கொண்ட அவரது படைப்பாற்றலுக்கு மற்றொரு புதிய வடிகாலாக அமைந்திருக்கிறது என டாக்டர். எம்.கே.முருகானந்தன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுடன் ஆசிரியராக இருந்து பெற்ற நீண்ட அனுபவமும், மற்றவர்களின் உணர்வுகளை ஊடுருவி உணர்ந்து அவற்றை வழிப்படுத்தும் உளவள ஆலோசகரான அவரது தன்னார்வப் பணியும் நிறையவே பயன்பட்டிருப்பதை, அவரது நூலைப் படிக்கும் போது உணர முடிந்தது.
அத்துடன் சிறுவர்களின் அகவய உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும், எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதையிட்டு தெளிவான உணர்வுடன் சொல்லப்பட்ட கதைகளாக இவை இருக்கின்றன. எவற்றைச் சொல்லக் கூடாது என்று கருதப்படுபவற்றை அடியோடு தவிர்த்தும் இருக்கிறார். வளர்ந்தவர்களுக்கான இலக்கியத்தில் மறைபொருளில் சொல்லுதல், பூடகமாகச் சொல்லுதல், சிலேடைகளைப் பயன்படுத்தல் போன்றவை படைப்பாக்கிய இலக்கியத்திறனின் அடையாளமாகக் கருதப்படுவதுண்டு. ஆனால் சிறுவர் இலக்கியத்தில் இவை அவர்களைக் குழப்படையச் செய்துவிடும். அதிலும் முக்கியமாக இவை அறிவியல் உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளும் கதைகளாக இருக்கின்றன காரணத்தால் வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல்லப்பட வேண்டியது அவசியமாகிறது என்று டாக்டர், எம்.கே.முருகானந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
கோகிலா மகேந்திரனின் அறிவியல் கதைகளில் தனது இலக்கிய ஆற்றலை நயமிக்க சொல்லாடல் முறையைத் தவிர்த்து சிறுவர்களுக்கு ஏற்றவாறு கதைகளை தெளிவானவும் நேரடியாகவும் சொல்லியிருப்பதை அவதானிக்க முடிகிறது என்றும் டாக்டர். எம்.கே.முருகானந்தன் கூறியுள்ளார்.
ஈழத் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட சிறந்த படைப்புகளின் ஆசிரியருமான கோகிலா மகேந்திரன் தமிழ்க் கலை, இலக்கியப் படைப்புலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்துள்ளார். பவளவிழா காணும் கோகிலா மகேந்திரன் அவர்கள், சமூகப் பெறுமானம்மிக்க தன் பணிகளை இற்றைவரை முனைப்புடன் முன்னெடுத்து வருகிறார்.

![]()