முச்சந்தி

இந்தியாவின் யூத பினீ மெனாஷே மக்கள்; இஸ்ரேலுக்கு மீண்டும் குடிபெயரும் திட்டம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இவர்கள் எங்கள் இரத்தம், 2700 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த உறவு மீண்டும் இணைகிறது என்று தான் இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது. இந்த மக்களின் குடியேற்றத்தின் மூலம், இஸ்ரேல் தனது எல்லையைப் பலப்படுத்தவும், தொலைந்துபோன தங்கள் உறவுகளை மீண்டும் இணைக்கவும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை இஸ்ரேல் அடித்துள்ளது)

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் ஒரு பழங்குடியின மக்களை இஸ்ரேல் “தங்கள் இரத்தம்” என்று சொந்தம் கொண்டாடி, அவர்களை தங்கள் தாய்நாட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாராகி வருகிறது.

சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு அசீரியர்களால் நாடுகடத்தப்பட்ட பத்து பழங்குடியினரில் ஒன்றான மெனாஷே (Bnei Menashe) பழங்குடியினரைச் சேர்ந்த சுமார் 2,500 சமூக உறுப்பினர்கள் ஏற்கனவே இஸ்ரேலில் வசிக்கின்றனர். மேலும் இந்த சமூகத்தின் பெரும்பாலான இளைஞர்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் போர் பிரிவுகளில் பணியாற்றுகிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.

2030 ஆம் ஆண்டுக்குள் மிசோரம் மற்றும் மணிப்பூரிலிருந்து மேலும் 5,800 பினீ மெனாஷே யூதர்களை யூத நாட்டிற்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து தொலைந்து போன பழங்குடி உறுப்பினர்களை நோஃப் ஹாகலில் மற்றும் கலிலி பிராந்தியத்தில் உள்ள பிற நகரங்களில் குடியேற்ற இஸ்ரேல் அரசு விரும்புகிறது. இந்த இந்தியர்கள் கணிசமான அரபு மக்கள்தொகை கொண்ட மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றப்படுவார்கள். இதன் மூலம் இஸ்ரேலிய நாட்டுக்கு மேலும் பாதுகாப்பை வலுப்படுத்துவார்கள்.

2700 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த மக்கள் மீண்டும் இணைகின்றனர் என்று இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளமை, இந்தியாவில் யூத இன மக்கள் இடையேயான உணர்வுப்பூர்வமான வரலாற்று தொடர்பை இந்த விடயம் உணர்த்தியுள்ளது

பினி மெனாஷேவின் பின்னணி என்ன?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் மிசோரம் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரே பினி மெனாஷே (Bnei Menashe) ஆவர். இவர்கள், இஸ்ரேலின் வரலாற்றில் ‘மறைந்து போன பழங்குடி இனங்களில்’ ஒன்றான மனாசேயின் சந்ததியினர் என்று நம்பப்படுகிறார்கள்.

சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆசேரியப் (Assyrian) பேரரசால் மத்திய கிழக்கில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் தாங்கள் என்றும், தங்கள் பூர்வீகம் இஸ்ரேலே என்றும் இவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

அவர்கள் மரபணு ஆய்வால் உறுதிப்படுத்தப்பட்ட உறவுகளாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். இவர்களின் யூதத் தொடர்புகள் தெளிவாகத் தெரிந்தாலும், இஸ்ரேல் நாடு இவர்களை 2005ஆம் ஆண்டு வரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மரபணு ஆய்வு ஒன்று, பினி மெனாஷே சமூகத்திற்கும் மத்திய கிழக்கில் வசித்தவர்களுக்கும் இடையிலான வம்சாவளி உறவை சந்தேகமின்றி நிரூபித்தது. இந்த ஆய்வு முடிவைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசாங்கம் இவர்களைத் தங்கள் நாட்டு மக்களாக உணர்ச்சிப்பூர்வமாக அங்கீகரித்தது.

இந்தியாவில் யூத இனப்பரம்பல்:

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நட்புறவு நீண்ட் காலமாக உள்ளது. இந்தியாவில் யூத வரலாறு பண்டைய காலங்களிலிருந்தே தொடங்குகிறது. குறிப்பாக சாலமன் அரசனுன் நாட்கள் தொடங்கி பின்னர் கி.பி 52 இல் புனித தாமஸின் காலத்தில் யூதர்களின் வருகை பற்றிய குறிப்புகளும் உள்ளன. பல நூற்றாண்டுகளாக, மும்பை மற்றும் குஜராத்தில் பெனே இஸ்ரேல், கேரளாவில் கொச்சின் யூதர்கள், மும்பை மற்றும் புனேவில் பாக்தாதி யூதர்கள் மற்றும் மணிப்பூர் மற்றும் மிசோரமில் பினீ மெனாஷே போன்ற யூத சமூகங்கள் செழித்து வளர்ந்து வாழ்ந்து வந்தன என்பதற்குரிய ஆதாரங்கள் உள்ளன.

இதன் பின்னர் 1948 இல் இஸ்ரேல் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பலர் இஸ்ரேலுக்குத் திரும்பினார்கள். இருப்பினும் ஒரு சிறிய சமூகத்தை மட்டுமே விட்டுச் சென்றனர். இன்று, வாரணாசி, தர்மசாலா மற்றும் கோவா போன்ற இடங்களில் அமைதியை தேடி ஆயிரக்கணக்கான இளம் இஸ்ரேலியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு வருகிறார்கள்.

இஸ்ரேலின் பிரம்மாண்டமான திட்டம்:

இந்தியாவுடன் இணைந்து, இந்தப் பூர்வீக குடிமக்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லும் பிரம்மாண்டமான திட்டத்தை இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இத்திட்டத்திற்கு ‘Operation Bnei Menashe’ என்ற பெயரையும் இஸ்ரேலிய அரசு சூட்டியுள்ளது.

இஸ்ரேல் அரசாங்கம் வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் 5,800 பினி மெனாஷே மக்களை இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் கட்டமாக, 2026-ஆம் ஆண்டில் 1,200 பேர் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இடம்பெயர்ந்து செல்லும் இவர்களுக்கு குடியிருப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, மற்றும் ஹீப்ரு மொழியைக் கற்பிப்பது போன்ற அனைத்துப் பொறுப்புகளையும் இஸ்ரேலின் ராணுவமே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 2040 கோடிஇந்திய ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சியோனிச மீள் வருகை திட்டத்தின் (Return To Zion) இஸ்ரேலிய வடக்கை பலப்படுத்தும் வியூகத்தில் அழைத்துச் செல்லப்படும் இந்தப் பழங்குடியினர், இஸ்ரேலின் வடக்கு எல்லையில் உள்ள கலிலி பகுதிக்கு படிப்படியாக இடம்பெயரச் செய்யப்படுவார்கள். இந்தப் பகுதி லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள எல்லைப் பகுதியாகும்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அவர்கள், இந்த நடவடிக்கை சியோனிச ரீதியாக மிகவும் முக்கியமானது என்றும், இது இஸ்ரேலின் வடக்குப் பகுதியை வலுப்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார். இதன் மூலம், இஸ்ரேல் தனது எல்லையைப் பலப்படுத்தவும், தொலைந்துபோன தங்கள் உறவுகளை மீண்டும் இணைக்கவும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை இஸ்ரேல் அடித்துள்ளது.

யூதமயமாக்கும் திட்டம்:

இந்த சமூக மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கையின் நோக்கம் கலிலியை யூதமயமாக்குவது மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க அரபு மக்களைக் கொண்ட சுற்றுப்புறத்தை வலுப்படுத்துவதன் மூலம் மேல் கலிலி பிராந்தியத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதாகும்.

லெபனான் ஹெஸ்புல்லாவுடனான மோதலால் இந்தப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இப்பகுதியை விட்டு வெளியேறினர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நடவடிக்கையை வடக்கு மற்றும் கலிலியையும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மற்றும் சியோனிச முடிவு என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலின் தொலைந்து போன பழங்குடியினரான பினீ மெனாஷே, கிமு 722 இல் தங்கள் சொந்த இராச்சியம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய இஸ்ரேலில் இருந்து நாடுகடத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். பின்னர் இந்தியாவில் அவர்கள் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது.

1950 ஆம் ஆண்டில், இஸ்ரேலின் பாராளுமன்றமான நெசெட் இவர்கள் மீள திரும்பும் சட்டத்தை நிறைவேற்றியது. இஸ்ரேலியரல்லாத யூதர்கள் மற்றும் யூத மதத்திற்கு மாறிய அனைவரும் இஸ்ரேலில் குடியேறி அதன் குடிமக்களாக மாற அனுமதித்தது.

அப்போதிருந்து, இஸ்ரேலிய அரசாங்கம் உலகம் முழுவதிலுமிருந்து யூதர்களை இஸ்ரேலுக்கு வரவழைத்து வருகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, முந்தைய அரசாங்க முடிவுகளின் கீழ், பினீ மெனாஷே சமூகத்தைச் சேர்ந்த சுமார் 4,000 உறுப்பினர்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

மணிப்பூர் – மிசோரம் பினீ மெனாஷே சமூகம்:

இஸ்ரேலின் பழங்குடியினரில் ஒன்றான விவிலிய மெனாஷே பழங்குடியினரிடம் தங்கள் வேர்களை தற்போது கண்டறிந்துள்ளனர்.

கி.மு. 722 இல் தங்கள் இராச்சியம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மத்திய ஆசியா முழுவதும் சீனாவை நோக்கி கிழக்கு நோக்கி பயணித்து இறுதியாக இந்தோ-பர்மிய எல்லை தாண்டிய பகுதிகளில் குடியேறினர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பினீ (Bnei) என்றால் குழந்தைகள் என்றும், (Menashe) என்றால் பேரக்குழந்தை என்றும் பொருள்படும். இஸ்ரேல் மக்களின் பாரம்பரிய மூதாதையராகக் கருதப்படும் ஜேக்கப்பின் பேரன்களே மனாசேயில் சமூகத்தின் தோற்றம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *