முச்சந்தி

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி: 13 வரை பல பகுதிகளிலும் கடும் மழைக்கு வாய்ப்பு!; மக்களை விழிப்பூட்டுவது சிறந்தது என்கிறார் பேராசிரியர் 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாகப் புதிய காற்றுச் சுழற்சியொன்று உருவாகியுள்ளது. இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்குத் தெற்காக தெற்கு வங்காள விரிகுடா பகுதியை அண்மிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (09 ) முதல் எதிர்வரும்- 13 ஆம் திகதி சனிக்கிழமை வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர். நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய நிரம்பல் நிலையை எட்டியுள்ளது. எனவே, அந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட மழை கிடைத்தால் குறித்த பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே மேற்குறிப்பிட்ட காலப் பகுதியில் தாழ் நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாகவிருப்பது அவசியம். அத்துடன் மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இலங்கை மக்கள் அனைவரும் எதிர்வரும்- 09 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை கனமழை மற்றும் அதனுடன் இணைந்த மண்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாகவிருப்பது அவசியம். துறைசார் அதிகாரிகள் இதுதொடர்பில் ஆராய்ந்து உரிய திணைக்களங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்களை விழிப்பூட்டுவது சிறந்தது.

குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாண மக்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டத்தைச் சற்றுக் குறைவாகப் பேணுவது சிறந்தது. அத்துடன் எதிர்வரும்- 15 ஆம் திகதி அன்று மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *