முன்னாள் அமைச்சர் இராஜதுரை காலமானார்

முன்னாள் அமைச்சரும், மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர முதலாவது மேயரும், மலேசியவுக்கான முன்னாள் இலங்கைத் தூதரும் சொல்லின் செல்வருமான செல்லையா இராஜதுரை, தனது 98 வது வயதில், சென்னை வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் காலமானார்.
அவரது இறுதிக்கிரிகைகள் நாளை செவ்வாய்கிழமை, சென்னையில் அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை தழிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரான இராஜதுரை,அன்றைய காலகட்டத்தில், பல அரசியல் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
பிரபல இலக்கியப் பேச்சாளர், எழுத்தாளரான இவர்,தமிழரசுக் கட்சியின் உத்தியோகப் பத்திரிகையான “சுதந்திரன்” இல் அப்போதைய ஆசிரியராக இருந்த, அமரர் எஸ்.டி. சிவநாயகத்துடன் துணை ஆசிரியராக கடமைபுரிந்தவர்.
தமிழக அரசியல்வாதிகளின் பெரும் நட்பைப் பெற்றவர். முன்னால் தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரனின் உற்ற நண்பர், ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருந்து, இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது இந்து சமய. கலாசார அமைச்சர் என்ற பதவியையும், இந்து சமயத்தில் மேன்மையான “அஸ்வமேத யாகத்தை” நடாத்திய பெருமைக்குரியவர். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தீவிர பக்தருமாவார்.
![]()