இன உரிமை போராட்டம் வெற்றி பெற கூட்டு உழைப்பு உத்தியே அவசியம்!… மெல்பேர்ணில் தமிழக எழுத்தாளர் ராஜா உரை

புத்தகங்களைப் போல நமக்கு புரிதல் தரக்கூடியவை வேறு இல்லை. புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாட்டின் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ” உடற்பயிற்சி செய்ய தசைகள் விரிவாவது போல் “” புத்தக வாசிப்பு மனங்களை விரிவு செய்யும்” என்பார்.
அதேபோல் திரு ஜெயமோகன் “மொழி, இலக்கியம், கலாச்சாரம், அறிவிற்கு, மானுட குலத்திற்கு, வாசிப்பு எனும் ஒற்றைச் செயல் மூலம் வாசகன் பெரும் சமூக பங்களிப்பை செய்ய முடியும், அது பெரும் கடமை பெரும் பொறுப்பு என வாசிப்பையும் வாசகனையும் ஒருசேர உயர்த்துகிறார் என கடந்த அக்டோபர் 25ம் நாள் மெல்பேர்ணில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் தமிழக எழுத்தாளர் திரு. ராஜா தெரிவித்தார்.
வாசிப்பில் நேசிப்பை கொண்ட வாசகர் வட்டத்தில் பங்கு பெற்றதை கேள்விப்பட்டே நூலாசிரியர் ஐங்கரன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு அவரின் ” தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள் ” நூலுக்கான திறனாய்வை தர இயலுமா எனக் கேட்டபோது, பதறி மறுத்துவிட்டேன்.

நூல் திறனாய்வு என்பது அறிஞர்கள் செய்ய வேண்டியது. நான் ஒரு புத்தக ரசிகன் மற்றும் வாசகன் என்று கூறிய போது, புத்தகங்கள் வாசகனுக்காகத் தானே எனவே ஒரு வாசகனின் பார்வையிலேயே நீங்கள் இந்த நூல் குறித்து உரையாடலாம் என சிறப்பு அனுமதி அளித்தார். அவருக்கு என் உளமார்ந்த அன்பும் நன்றியும், இப்படி நூல் வாசிப்பு எனும் ஒற்றை தகுதி அறிஞர்கள் சூழ்ந்த இந்த அவையில் என்னையும் நிறுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் மதுரையிலிருந்து வந்து இப்போது மெல்பேனில் வாழ்ந்து வருகிறேன். மெல்பேனில் வந்த முதல் வாரம் தொடங்கி இன்று வரை பொது நூலகங்களுக்கு செல்வதும் புத்தகங்கள் வாசிப்பதும் எனது விருப்பமான செயலாகும்.
மெல்பன் “வாசகர் வட்டம்” எனும் அமைப்பில் மாதம் ஒரு நூலை வாசித்து விட்டு அந்த நூல் குறித்த கலந்துரையாடல்களில் பங்கு பெறும் அனுபவம் உண்டு தவிர மேடைப் பேச்சுக்களில் பழக்கம் இல்லை.
அறிஞர்கள் அலங்கரித்திருக்கும் இந்த அற்புதமான அரங்கிற்கும், மேடையில் வீற்றிருக்கும் சான்றோர் பெருமக்களுக்கும், இந்த அழகிய மாலையை அர்த்தமுள்ள மாலையாக மாற்ற அரங்கு நிறைந்து அமர்ந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் தலை தாழ்ந்த பணிவான வணக்கங்களை உரித்தாக்குகிறேன் என எழுத்தாளர் திரு. ராஜா தெரிவித்தார்.
நூலாசிரியர் ஐங்கரன் அவர்கள் பற்றி குறிப்பிடும் பொழுது தனது இளம் வயதிலேயே சிறுவர் இலக்கிய ஆய்வாளராக தனது பணியினை துவக்கி, பின்பு கவிதை உலகில் தோய்ந்து 12 கவிதை தொகுதிகளை வரவாக்கி, இன்று உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடக்கும் பல்வேறு விதமான போராட்டங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் இந்த ஆறு நூல்கள் வெளியிட்டு விழாவில் நான் பேச இருக்கும் புத்தகம்” தென் கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்” எனும் நூலாகும். போராட்டங்கள் குறித்து சமீபத்தில் நான் வாசித்த புத்தகம் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் அவர்களின் போராட்டங்களின் கதை எனும் நூலாகும். புத்தகத்தின் முன்னுரையில் ” நாம் இன்று சொகுசாக அனுபவித்துக் கொண்டிருக்கும் அன்றாட வாழ்வின் “எட்டு மணி நேர வேலை, சம்பளம், வாக்குரிமை, சொத்துரிமை போன்றவை அனைத்தும் மனித சமூகம் போராடிப் பெற்றவையே எனக் கூறியதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.
நூலாசிரியர் ஐங்கரன் அவர்கள் கவிதை மனம் கொண்ட காரணத்தால், “அணைத்துக்கொள் உன்னை சங்கமம் ஆக்கு, மானிட சமுத்திரம் நான் என்று கூவு” எனும் பாரதிதாசன் அவர்களின் வரிகளை மெய்ப்பிப்பது போல் உலக வரைபடங்களில் காணப்படும் கண்டங்களில் உள்ள சிறு நாடுகளிலும் நடக்கும் பல்வேறு வகையான போராட்டங்களை மனிதம் எனும் உயரிய நோக்கில் கண்டு அவற்றையெல்லாம் வரலாற்று ஆவணங்களாக வரும் தலைமுறைகளும் அறிந்து கொள்ளும் விதமாக ஆறு நூல்களாக நமக்கு வழங்கியிருக்கிறார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் என்பவை இந்தியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடைப்பட்ட நாடுகள் ஆகும்.
அங்கு நடக்கும் போராட்டங்களை துல்லியமாக ஆராய்ந்து அவை எதற்கான போராட்டம் போராட்டக் காரணிகள் யாவை போராட்டங்களால் பொதுமக்களின் பாதிப்பு என்ன, வன்முறை என்ன என நூலில் மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறார், நூலின் முன்னுரையில் அவரே கூறி இருப்பது போல ” சுய நிர்ணய உரிமைக்காக போராடும் தேசிய இனங்களின் வரலாற்றின் படிப்பினைகள் யாதெனில், ஒன்று வரலாற்று ரீதியிலான இன அழிப்பு, இன சுத்திகரிப்பு, இன்னொன்று பூலோக அரசியல் காரணிகள் இவற்றின் விளைவாக எழுந்த போராட்டங்கள்.
21 ஆம் நூற்றாண்டை கடந்தும் தொடர்கின்ற இந்த உண்மையின் யதார்த்தத்தை தான் இந்த நூலில் ஆவணப்படுத்தி இருப்பதாக நூலாசிரியர் ஐங்கரன் அவர்கள் தெரிவிக்கின்றார். போகன் வில்லே, நியூ கலிடோ னியா, உய்க்குர்( சீனா) திபெத், திவான், ஹாங்காங், மின்டோனா, மாவோரி( நியூசிலாந்து), கரேன், ரோஹிங்கியா(மியான்மர் ), கிழக்கு திமோர், மேற்கு பப்புவா, ஆச்சே ( இந்தோனேஷியா ) வியட்நாம், இங்கெல்லாம் வாழும் 14 தேசிய இன மக்களின் போராட்டங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு தான் “தென்கிழக்கு ஆசிய விடுதலைப் போராட்டங்கள்” எனும் நூலில் உள்ளன என்று எழுத்தாளர் திரு. ராஜா மேலும் தெரிவித்தார்.
இக்கட்டுரைகளை வாசித்த போது இவற்றின் அடிநாதமாக பிரிவினை வாதங்கள், இதை உணர்ந்து தான் பாரதி அன்றே தன் பாடலில் ” நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்?- ஒரு கோடி என்றால் அவை பெரிதமோ? என்றும், மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனிண்டோ?- நம்மில் அந்த வாழ்க்கை இனி உண்டோ? என கேள்வியும் கேட்டு பிரிவினைகள் எதனால் என சிந்தித்து
” சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் என்றும்”, “ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்”
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே” பாரதி மேலும் கனவு கண்டு “எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம் எல்லாரும் இந்நாட்டும் மன்னர் – ஆம் எல்லாரும் நாட்டு மன்னர்- வாழ்க என பாடினான்,
இன்றைய அதிநவீன அறிவியல் உலகில் சமூக ஊடகங்கள் வாயிலாக வரும் செய்திகளை உள்வாங்குவதில் அதிக கவனம் தேவை.

ஏனெனில் பெரும்பான்மை சமூக வலைதள பக்கங்கள் ஏ ஐ ஆல் நிர்வகிக்கப்படுவது. people engagement எனும் அடிப்படையில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் வெறுப்புச் செய்திகளையே சுமந்து வருகின்றன. எனவே கூடுதல் கவனத்தோடு செய்திகளை உள்வாங்குதல் வேண்டும் என மனிதவள செயல்பாட்டாளர்கள் பலரும் அறிவுறுத்துகின்றனர்.
“தென் கிழக்கு ஆசிய விடுதலைப் போராட்டங்கள் ” நூலுக்கு முன்னுரை வழங்கி இருக்கும் தமிழ் நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் திரு ஆழி செந்தில்நாதன் அவர்கள் மிகவும் அர்த்தமுள்ள முன்னுரை ஒன்றை வழங்கி இருக்கிறார். அதில் அவர் குறிப்பிடுவதைப் போல ” இன உரிமைப் போராட்டங்கள் வெற்றி பெற அணு வளவேனும் வாய்ப்பில்லை என்பதையும் நீண்ட கால பொறுமையுடன் போராடும் இனங்களின் கூட்டுறவு கூட்டு உழைப்பு போன்ற உத்திகளோடு தான் இப்ப பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனத் தோன்றுகிறது என்பதை ஒரு தீர்வாக இந்நூலினை வாசிக்கும் அனைவரையும் சிந்திக்கச் செய்பவை. அதற்கு இத்தகைய நாடுகள் இனங்கள் போராட்டங்கள் பற்றிய அறிவு நமக்கு எல்லாம் வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தோடு இந்நாடுகளில் நடக்கும் போராட்ட வரலாற்றை தொகுத்து ஆவணப்படுத்தியதோடு அதை அனைவருக்கும் நூலாக வழங்கிய நூலாசிரியர் நமக்கான வாய்ப்பை அளித்திருக்கிறார்.
“தெளி உறவே அறிந்திடல் வேண்டும், தெளிவு பெற மொழிந்துடல் வேண்டும்” என்பான் பாரதி, அதைப்போல நூலாசிரியர் ஐங்கரன், உலகில் நடக்கும் இவ்வகையான போராட்டங்களை தெளிவுற அறிந்து, வாசகர்களாகிய நாமெல்லாம் தெளிவு பெற மொழிந்து நமக்குத் தந்திருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய நன்றியை இத்தருணத்தில் உரித்தாக்குவோம்.
நாமும் நூலாசிரியர் ஐங்கரன் அவர்களின் இந்த ஆறு நூல்களையும் வாசித்து நமது சமூகப் பணியை தொடர்வோம் என அன்போடு கேட்டுக்கொண்டு, “தென்கிழக்கு ஆசிய விடுதலைப் போராட்டங்கள்” எனும் இந்நூல் வாசிப்பின் மூலம் ஒரு வாசகனாக நான் உள்வாங்கியதை அதனால் விளைந்த சிந்தனைகளை தொடர்புள்ள செய்திகளை புத்தகங்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மன மகிழ்ச்சி அடைகின்றேன். நல் வாய்ப்பினை எனக்கு வழங்கிய பாடும் மீன் ஶ்ரீகந்தராசா அவர்களுக்கும், நூலாசிரியர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களுக்கும் இந்நிகழ்வில் பங்கு கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் பணிவான வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன் என இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் தமிழக எழுத்தாளர் திரு. ராஜா தெரிவித்தார்.
![]()