சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை உடன் கூட்டுங்கள்; கடன் மீளிப்பையும் பிற்போடக் கேளுங்கள்- ஹக்கீம் வலியுறுத்து

இயற்கை பேரழிவால் அழிந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி உடனடியாக சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி இரு வாரங்களுக்குள் சர்வதேச நன்கொடையாளர் மாநாடொன்றை கொழும்பில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
நாட்டில் தற்போது ஏற்படட இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பையும் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பையும் ஒப்பிட்டுபார்க்கும்போது, சுனாமியால் 1 பில்லியன் டொலருக்கும் அதிக இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இந்த அனர்த்தத்தில் 6 முதல் 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படுள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியானால், இந்த அனர்த்தம் 6 தடவைகள் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதற்கு சமமாகும். அத்துடன் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3முதல் 5 வீத இழப்பாகும்.
எனவே இந்த இயற்கை அனர்த்த பேரழிவு தொடர்பிலான சர்வதேச நாடுகளின் கவனம் இன்னும் இரண்டு வாரங்களில் வேறு நாடுகளுக்கு திரும்பிவிடும். அதனால் ஜனாதிபதி உடனடியாக செயற்பட்டு, சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி இரு வாரங்களுக்குள் சர்வதேச நன்கொடையாளர் மாநாடொன்றை கொழும்பில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக ஜனாதிபதி விஜயம் மேற்கொண்ட இந்தியா, ஜப்பான், ஜேர்மன், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகள் மற்றும் கட்டார், சவூதி அரேபியா நாட்டு தலைவர்களுடன் தொடர்புகொண்டு, சர்வதேச நன்கொடை மாநாடொன்றை நடத்தி, 2,3பில்லியன் டொலர்களை தேடிக்கொள்ள வேண்டியுள்ளது.. அதற்கானதொரு முயற்சியை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும்.
அதேபோன்று எமது முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ச , சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன போன்ற அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு, ஏற்பட்டுள்ள இந்த தேசிய அனர்த்தம் தொடர்பில் கலந்துரையாட வேண்டும். கட்சித் தலைவர் என்றவகையில் இந்த கோரிக்கையை ஜனாதிபதிக்கு முன்வைக்கிறேன்.
அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பது தொடர்பில் எங்களுக்கு பிரச்சினையில்லை. அது அவ்வாறு இடம்பெறட்டும். அதற்கு மத்தியில் இந்த அனர்த்தத்தில் இருந்து மீள நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் எமக்கு தேவையான இந்த பாரிய நிதியை தேடிக்கொள்ள முடியாது.
அவ்வாறு இல்லாவிட்டால், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி, நாங்கள் கடன் மீள செலுத்தும் காலத்தை 3 வருடங்களுக்காவது ஒத்திவைப்பதற்கு அவர்களுடன் கலந்துரையாட முடியும்.அதனால் இந்த இரண்டு மாற்று வழிகளில் ஒன்றை நாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இடம்பெற்ற வெள்ள அனர்த்த்தில் கம்பொளை, மல்வானை, வெல்லம்பிட்டி, மூதுர், கின்னியா, கொலன்னாவை உள்ளிட்ட பல நகரங்கள் முற்றாக நீரில் மூழ்கி அனைத்தும் இழக்கப்பட்டுள்ளன. விசேடமாக கண்டி மாவட்டம் பாரிய சேதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதனால் கண்டி மாவட்டத்தை மீளக் கட்டியெழுப்ப விசேட வேலைத்திட்டத்தை நாங்கள் தயாரித்திருக்கிறோம்.அக்குரணை ரம்புக்வெல பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் 29பேர் வரை உயிரிழந்துள்ளனர். 11 சடலங்களே மீட்கப்பட்டிருக்கின்றன.அதேபோன்று அங்கு பல பகுதிகள் முற்றாக மண்சரிவில் புதையுண்டு அழிந்துள்ளன.
அதனால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களுக்கு விரைவாக வீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டியுள்ளது . அதற்கு அரச காணிகள் இனம்கண்டு, அந்த காணிகளுக்கு கட்டிட ஆராச்சிய நிறுவனத்தின் சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள கட்டிட ஆராச்சி நிறுவனத்தில் போதுமான அதிகாரிகள் இல்லை. அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
கண்டி தெல்தோட்டையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும் பெருமளவிலான வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. என்றாலும் தற்போது சில மக்கள் போவதற்கு இடமில்லாமல் அங்கு இருக்கிறார்கள். அதனால் இந்த மக்களுக்கு மாற்றுத் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
![]()