முச்சந்தி

மழை ஓய்ந்தாலும் மண் சரிவு ஓயாது!; எச்சரிக்கிறார் சிரேஷ்ட பேராசிரியர்

மழைக்காலம் ஓய்ந்த பின்னர், மண்சரிவுகள் ஏற்பட்ட இடங்களில் நிலம் ஓரளவு ஸ்திரமடைந்திருப்பது போல் தோன்றினாலும், மிகச் சிறிய மழை நிலைமையிலும் கூட அந்த இடங்கள் மீண்டும் செயலில் ஈடுபடுவதற்கு (சீரழிவுக்குள்ளாவதற்கு) அதிக வாய்ப்புகள் இருப்பதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மண்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த இடங்களின் பாதுகாப்புக் குறித்து வழங்கிய அறிவுறுத்தல்களிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

மண்மேடுகள் சரிந்து விழுந்த இடங்கள் அல்லது மண்சரிவுகள் ஏற்பட்ட இடங்களில், பாதிப்படையாதிருக்கும் வீடுகளில் மீண்டும் குடியேறச் செல்லும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

நிலத்தினுள் நடைபெறும் செயல்முறைகள் குறித்து அறிந்திராத சிலர், இவ்வாறான இடங்களைப் பார்ப்பதற்காகச் செல்வதாகவும், இதன் மூலம் அவர்கள் பெரிய அனர்த்தங்களுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் பேராசிரியர் எச்சரித்துள்ளார்.

மண்சரிவுகளினால் தற்போது எஞ்சியுள்ள பகுதிகளை தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) உள்ளிட்ட பொறுப்புள்ள நிறுவனங்கள் பரிசோதனை செய்து, அவை பாதுகாப்பானவை என்று உறுதியான அறிவித்தலை வெளியிடும் வரை, அந்த இடங்களில் குடியேறுவது முற்றிலும் பொருத்தமற்றது என பேராசிரியர் சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

மழை இல்லாத காலத்திலும் கூட, தற்போது மண்ணில் காணப்படும் ஈரத்தன்மையுடன் சேர்ந்து பெரிய கற்கள் உடைந்து விழும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *