முச்சந்தி

வவுனியா தமிழர் பகுதியில் எழும் விகாரைகள்?… தொல்லியல் துறையில் தனி சிங்கள ஆதிக்கம்!… நவீனன்

(வேண்டும் என்றே தமிழர் அற்ற தொல்லியல் துறையாக, தமிழ் அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டு, தவிர்க்கப்பட்டு இருக்கின்றார்கள்)

போரின் பின்னர் தீவிரமடையும் பௌத்த சிங்கள இனவாதத்தின் உண்மை முகமான விகாரைகளை அமைக்கும் முயற்சிகள் வவுனியாவில் மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளன. புதிய விகாரைகள் அமையவுள்ள இடங்களாக, இரட்டைப்பெரியகுளம் பொலிஸ் நிலையம் அருகில், வவுனியா பொலீஸ் நிலையமும் வனவள திணைக்களமும் உள்ள மணிக்கூட்டு கோபுர சந்தி, தாண்டிக்குளம் ஒன்மார்ட் ராணுவ உணவகம் உள்ள பகுதியிலும் தெரிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஓமந்தை பொலீஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதி, பன்றிக்கெய்தகுளம் அரசமரம் அமைந்துள்ள காணி, புளியங்குளம் புரட்சி விளையாட்டு மைதானத்திற்கு அண்மையில் உள்ள காணியிலும் புதிய விகாரைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. வவுனியாவில் தமிழர் பகுதியில் பத்து விகாரைகள் அமைக்கும் திட்டத்தில் அரசின் ஒரு தமிழ் எம்பியின் தலைமையில் இந்த வேலைத் திட்டங்கள் ஆரம்பமாகி உள்ளன.

தனி சிங்கள தொல்லியல் குழு:

பௌத்த விகாரைகளை அமைப்பதுலும், சிங்கள பேரினவாத கலாச்சாரத்தை தமிழர் தாயகத்தில் நிலைநிறுத்த சிறிலங்கா தொல்லியல் ஆலோசனை குழு தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

ஸ்ரீ இரத்னபால உபாலி நாயக்க தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த 19 சிங்களவர்கள் அடங்கிய தொல்லியல் ஆலோசனை குழுவில் மேலும் நான்கு பேர் சேர்க்கப்பட்டு இருக்கின்றார்கள்.

ஆனாலும் தனி சிங்கள தொல்லியல் ஆலோசனை குழு தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து நான்கு தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் வெறும் கண் துடைப்புக்காக தற்போது மேலும் ஒரு சிங்களவர் இணைக்கப்பட்டு உதிரியாக இரு தமிழர்கள் மற்றும் ஒரு முஸ்லிம் இணைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

இதில் தொல்லியல் துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற எட்டு சிங்கள பேராசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதே போல ஓய்வு பெற்ற இரு சிரேஷ்ட சிங்கள தொல்லியல் துறை பேராசிரியர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இது தவிர, தொல்லியல் மற்றும் வரலாற்று துறையில் கலாநிதி பட்டம் பெற்ற ஆறு மூத்த சிங்கள தொல்லியல் ஆய்வாளர்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றார்கள். இது போதாதென்று தொல்லியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்று (Bhiksu University) பீஸ்க்கு பல்கலைக்கழக பீடாதிபதியாக பணியாற்றும் பிக்கு உட்பட மூன்று பௌத்த தேரர்களுக்கு தொல்லியல் ஆலோசனை குழுவிற்கு இணைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

அதாவது இலங்கையில் தொல்லியல் துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இருபது மூத்த சிங்கள புத்திஜீவிகள் தற்போது 23 பேர் கொண்ட தொல்லியல் ஆலோசனை குழுவிற்கு நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இந்த 87 சதவீதம் சிங்கள தொல்லியல் சிறப்பு தேர்ச்சி பெற்ற புத்திஜீவிகள் அங்கம் வகிக்கும் தொல்லியல் ஆலோசனை சபைக்கு ஓய்வு பெற்ற தமிழ் துறை பேராசிரியர் மகேஸ்வரன் மற்றும் பட்டய கட்டிடக் கலைஞர் ஒருவரை தமிழர்கள் சார்பில் இணைத்திருக்கின்றார்கள்.

தமிழர் அற்ற தொல்லியல் துறை:

வேண்டும் என்றே தமிழர் அற்ற தொல்லியல் துறையாக, தமிழ் அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டு,
தவிர்க்கபட்டு இருக்கின்றார்கள். தேவநம்பிய தீசன் காலத்திற்கு முன்பே பௌத்தம் இலங்கையில் வேர் ஊன்றி இருந்தது என வாதிடும் பேராசிரியர் ராஜ் சோமதேவா முதல் மட்டக்களப்பு தொப்பிகல (குடும்பிமலை) பகுதியை மையப்படுத்தி கிழக்கு மாகாண பௌத்த மத தோற்றம் குறித்து ஆய்வுகளில் ஈடுபடும் பேராசிரியர் சஸ்னி நர்மதா அமரசேகர வரையான சிங்கள புத்திஜீவிகள் இந்த தொல்லியல் துறையில் முன்னணி வகிக்கிறார்கள். இந்த நிலையில் துறை சாரத தமிழர்கள் இவர்களை எவ்வாறு எதிர் கொள்ள முடியும் என்பதே கேள்விக்குறியாகும்.

அத்துடன் இனவாத போக்கில், ஆய்வுகளில் ஈடுபடும் வடக்கு கிழக்கு பல்கலை கழகங்களின் வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்ந்த நிபுணர்கள் முழுமையாக தவிர்க்கபட்டு இருக்கின்றார்கள்.

முன்பு கோட்டாபய ராஜபக்சே அதிரத்தில் இருந்த போது 16 பேர் கொண்ட தனி சிங்கள கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்திருந்தார். அப்போதும் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை என்கின்ற குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது மேலும் ஒரு சிங்களவரை நியமித்து உதிரிகளாக தலா ஒரு தமிழருக்கும் முஸ்லிமுக்கும் இடம் வழங்கப்பட்டு இருந்தது.

அந்த நேரமும் வடக்கு கிழக்கு பல்கலை கழக துறை சார்ந்த நிபுணர்கள் தவிர்க்கப்பட்டு, அரசு தனது இனவாத நிலைப்பாட்டை பேணி வந்தது.
கோட்டாபய ராஜபக்சே செய்த அதே வேலையை தற்போது ஜேவிபி ஆட்சியாளர்களும் செய்கின்றார்கள். வெறும் எண்ணிக்கைக்கு வாய்ப்புகளை வழங்கி தங்கள் எண்ணங்களை செயலாக்க முயற்சிக்கின்றார்கள்.

இதற்கிடையில் தற்போதைய சூழ்நிலையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தந்தாமலை பகுதியை தொல்லியல் இடமாக அடையாளப்படுத்தி இருக்கின்றார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இப் பகுதியுள்ள தாந்தாமலை முருகன் ஆலயம் தொல்லியல் திணைக்கள நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்த நிலையில் இப்பகுதியை தொல்லியல் பகுதியாக அறிவிருத்திருக்கின்றார்கள்.

அநுர அரசு ஆட்சிக்கு வருமுன் கூறிய இனவாதம் ஒழிப்போம் என்றும், இன இனவாதத்திற்கு இடமில்லை என்றும் உளறிய வாய்ச்சவாடல்கள் பொய்த்துப் போய் விட்டன என்பதே உண்மையாகும்.

கடந்த வாரம் திருகோணமலையில் புத்தர் சிலை அடாவடியாக உருவாகியது போல, தற்போது வவுனியாவில் பல புதிய விகாரைகள் உருவாக உள்ளன. அத்துடன் தொல்லியல் துறையில்
தனி சிங்கள ஆலோசனை குழுவே மேலோங்கி உள்ளது. வேண்டும் என்றே தமிழர் அற்ற தொல்லியல் துறையாக, தமிழ் அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டு,
தவிர்க்கப்பட்டு இருக்கின்றார்கள். போரின் பின்னர் தீவிரமடையும் பௌத்த சிங்கள இனவாதத்தின் உண்மையான முகம் தற்போது சர்வதேச அளவிலும் தெரியத் தொடங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *