முச்சந்தி

அமைதியா போரா? யார் கையில்… ? ட்ரம்ப் 28 அம்ச = உக்ரைன் 19 அம்ச அமைதி திட்டம் எது சாத்தியமாகும் ?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(கிரெம்ளின் சார்பு நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துக் கொள்கிறது என்று கூறப்பட்டாலும், இந்த அமைதி திட்டம் விவாதிக்கப்பட வேண்டும் என்று ரஷ்ய அரசு கருதுகிறது. ஐரோப்பாவை தாக்க மாட்டோம் என்று ரஷ்யா உறுதிமொழியை வழங்கத் தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளது.
 
மேலும் 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் படையில் 100,000 வீரரே இருந்தனர். ஆனால் புதிய அமெரிக்க அமைதி திட்டத்தின்படி 600,000 துருப்புக்களை வைத்திருக்க முடியும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது)
ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி திட்டங்களை ட்ரம்ப் நிர்வாகம் முன்வைத்தது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் இணைந்து ஒரு புதிய அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கி உள்ளன.
அதன்படி அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நேட்டோ நாடுகளின் உறுப்பினர்களிடையே இந்த அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
28 அம்ச அமைதித் திட்டம்:
ட்ரம்ப் அரசால் முன்மொழியப்பட்ட 28 அம்ச அமைதித் திட்டம் போரை நிறுத்துவதுடன், உக்ரைன் அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறும். மேலும் உக்ரைன் அல்லது அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக இனி ரஷ்யா எந்த ஆக்கிரமிப்பையும் எடுக்காது. மேலும் ஐரோப்பாவை நோக்கி ஆக்கிரமிப்பு இல்லாத கொள்கையை மாஸ்கோ அதன் அரசியல் சட்டத்தில் இணைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இரு தரப்பிலிருந்தும் பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகள் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள். போரிடும் இரு தரப்புக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். அத்துடன் கருங்கடல் வழியாக தானியங்களை கொண்டு செல்ல டினிப்ரோ நதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளை மாஸ்கோ நிறுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் சர்ச்சைக்குரிய பிராந்தியங்களான ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியா, லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகள், வளமான டான்பாஸை உருவாக்கும் கெர்சன் மற்றும் சபோரிஷியா உள்ளிட்ட கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்க இந்த அமைதி திட்டம் முன்மொழிந்தது.
இந்த திட்டம் மூலம் உக்ரைனை 600,000 க்கும் உற்பட்ட இராணுவ வீரர்களுக்கு மட்டுப்படுத்தியது. மேலும் கீவ் அரசு அதன் அரசியலமைப்பில் நேட்டோவில் சேராது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரியது.
உக்ரைனின் 19 அம்ச திட்டம்:
ஜெனீவாவில் அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையேயான இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஒரு புதிய 19 அம்ச அமைதித் திட்டம் உருவானது. பேச்சுவார்த்தையில் உக்ரைனின் தரப்பில் ஜெலென்ஸ்கியின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக் மற்றும் தூதர் உமெரோவ் ஆகியோரால் வழிநடத்தப்பட்டன. அதே நேரத்தில் அமெரிக்க அதிகாரிகளில் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, டிரிஸ்கோல், குஷ்னர் மற்றும் விட்காஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உக்ரைனின் இராணுவத்திற்கான 600,000 உறுப்பினர் வரம்பை நீக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கூறியது. இருப்பினும் ரஷ்யா கைப்பற்றிய பிரதேசத்தை விட்டுக்கொடுப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கனிம வளம் மிக்க டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் சபோரிஷியா மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
என்னவாயினும் புட்டின் போரின் மூலம் அதிகபட்ச இலக்குகளை நோக்கி அடைந்து வருகிறார். அத்துடன் 2022 முதல் தனது கோரிக்கைகளில் உறுதியாக உள்ளார். கைப்பற்றிய ஐந்து பிரதேசங்களையும் முழுமையாக உரிமை கோரியும் உள்ளார்.
இதேவேளை உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்குவதை மாஸ்கோ கடுமையாக எதிர்த்து வருகிறது. உக்ரைனின் இராணுவ உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யா ஒப்புக் கொள்ளுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 2022 ஆம் ஆண்டில் உக்ரைனில் 100,000 க்கும் உற்பட்ட துருப்புக்களே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் போரில் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யப்படும். போர்க் குற்றங்களுக்கான முழுமையான மன்னிப்புக்கான திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் இந்த வரைவில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள உத்தியோக பூர்வமற்ற நேட்டோ நாடுகளின் துருப்புக்கள் பற்றியும், முந்தைய அமைதி ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது. நேட்டோ துருப்புக்கள் உக்ரைன் களத்தில் போராடுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் முடிவுறுமா ?
அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான புதிய அமைதி ஒப்பந்தம் குறித்து காரசாரமாக ரஷ்யாவால் விவாதிக்கப்படுகிறது. இதனால் எதிர்கால அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை உருவாக்க முடியாது என்று விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.
ஆனால் ஒரு அமைதி உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், தொடர்ந்து சண்டையிடவும், உக்ரைன் பிராந்தியங்களை கைப்பற்ற மாஸ்கோ தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையாக அமெரிக்க-உக்ரைன் அமைதித் திட்டம் ஒரு வரைவு மாற வேண்டும் என்று விளாடிமிர் புட்டின் கூறுகிறார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கத் திட்டம் அடிப்படையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா அரசு கிரெம்ளினின் நிலைப்பாட்டையே கூடியளவு கணக்கில் எடுத்துக்கொள்கிறது என உக்ரைனிய அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் வேகமெடுக்கும் நிலையில், அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் அடுத்த வாரம் மாஸ்கோவிற்கு வருகை தர உள்ளதாக கிரெம்ளினின் மூத்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளனர்.
உக்ரைன் படை வெளியேற்றம்:
உக்ரைன் துருப்புக்கள் தாங்கள் நிலை கொண்டிருக்கும் பிரதேசங்களிலிருந்து வெளியேறினால் சண்டை நின்றுவிடும். அவர்கள் வெளியேறவில்லை என்றால், ஆயுதம் வழிமுறைகள் மூலம் இதை அடைவோம் என்று புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ரஷ்யப் படைகள் உக்ரைனில் வேகமாக முன்னேறி வருவதாகவும் கூறியுள்ளார்.
உக்ரைன் தலைமை சட்டவிரோதமானது என்று தான் கருதுவதாகவும், எனவே உக்ரைனுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது சட்டப்பூர்வமாக சாத்தியமற்றது என்றும் புட்டின் தெரிவித்துள்ளார். எந்தவொரு ஒப்பந்தமும் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம் என்றும், பல சர்வதேச நாடுகள் உக்ரைனில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை அங்கீகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் உக்ரைன் மீதான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மாஸ்கோவை நோக்கிச் சார்புடையவராகக் காட்டினார் என்ற கருத்தையும் புட்டின் நிராகரித்தார்.
அமைதித் திட்டத்தில் உக்ரைன்:
போர் தீவிரமாக இருக்கையிலும் அமைதி முயற்சி தொடர்கின்றன என்று கீவ் அரசு கூறுகிறது. உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அமெரிக்க ஆதரவுடன் கூடிய அமைதித் திட்டத்தில் தொடர்ந்து பணியாற்ற உள்ளனர் என ஜெலென்ஸ்கியின் தலைமைத் தளபதி தெரிவித்தார்.
ஆனாலும் தற்போது டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மூலோபாய நகரமான போக்ரோவ்ஸ்க் மீது உக்ரைனும் ரஷ்யாவும் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளன. ரஷ்யா தனது நடவடிக்கைகளுக்காக
அங்கு ரிசர்வ் படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
ரஷ்யப் படைகள் இப்போது அயல் நகரமான மிர்னோஹ்ராட்டையும் முழுமையாகச் சுற்றி வளைத்துவிட்டன. போக்ரோவ்ஸ்க்கின் 70 சதவீதப் பகுதியை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது.
30 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு:
உக்ரைனை ஆதரிக்கும் முப்பது ஐரோப்பிய நாடுகளின், புதிய அமைதி ஒப்புதலோடு முன்னோக்கிச் செல்ல கீவ் தயாராக உள்ளது. ஆயினும் வாஷிங்டன் இப்போது ஐரோப்பாவை மட்டுமன்றி, மாஸ்கோவையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும் புட்டினுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் உணர்வையும் எழுத்தையும் அமைதி வரைவு பிரதிபலிக்க வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை ட்ரம்ப் உக்ரைனில் அமைதி நிறைவேறுவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இந்த அமைதித் திட்டத்தை இறுதி செய்யும் நம்பிக்கையில், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவில் ஜனாதிபதி புட்டினைச் சந்திக்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோல் உக்ரேனிய அதிபரை சந்திப்பார் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இறுதிக் கட்டமாக ஜெலென்ஸ்கி, புட்டினை விரைவில் சந்திப்பேன்.
ஆனால் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதியானதாகவோ அல்லது இறுதிக் கட்டத்தில் இருக்கும் போதோ அது சாத்தியம் என்று நினைக்கிறேன். முடிந்தவரை விரைவில் அமைதியை அடைய முடியும் என்று அனைவரும் நம்புவோம் என்று அவர் கூறியுள்ளார்.
சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு, உக்ரைனுக்கு வலுவான ஆயுதப் படையும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படும். மேலும் அந்நாட்டின் மீது எந்த ஆயுத நடவடிக்கையை திணிக்கக்கூடாது என்று ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.
நீண்ட காலமாக ஒரு தீர்வைக் காண அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சிகளை நாங்கள் மிகவும் நேர்மறையாகக் தற்போது கருதுகிறோம் என்று திரு மெர்ஸ் கூறியுள்ளார்.
இருப்பினும், ஐரோப்பியர்களின் பாதுகாப்பு நலன்களும் உக்ரைனின் பாதுகாப்பு நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *