துயிலும் இல்லங்களை அழித்த சிறிலங்கா… உரிமை மறுக்கப்பட்ட மாவீரர் நினைவுகூரல்!… நவீனன்

தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் பல இலங்கை படைகள் புல்டோசர் கொண்டு அழித்து தரைமட்டமாக அழித்துள்ளன. ஈழத் தமிழ் மக்களால் இதயக் கோவிலாக வணங்கப்பட்ட துயிலும் இல்லங்களை சிங்களப் படைகள் கொடூரமாகச் சிதைத்துள்ளன.
எத்தனை தடவை அழித்தாலும் தமிழர் உணர்வுகள் விதைத்த மாவீரர் துயிலும் இல்லம் என்பது வல்லமையும் நம்பிக்கையும் ஊட்டும் உறுதி நிலம் என்பதை தமிழ் மக்கள் எப்போதும் உணர்த்தியுள்ளனர்.
தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் அவர்களின் நிலத்திற்காகவும் போராடியவர்களை உறங்க இடமற்றவர்களாக அழித்து, அவர்களை நினைவுகூரும் உரிமையையும் அழித்து தமிழ் நினைவழிப்பை மேற்கொண்டது சிங்கள அரசு. இந்த பேரினவாத போக்கை தொடர்ந்தை காலங்காலமாக மேற்கொண்டு வருகிறது இலங்கை அரசு.

அத்துடன் துயிலும் இல்லங்களில் இராணுவ முகாங்களையும் தமக்கான விளையாட்டு மைதானங்களையும் அமைத்தது இலங்கை இராணுவம். தற்போது கார்த்திகை மாதத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் 32 இற்கு மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளன. தமிழ் இனத்துக்காக, விடுதலைக்காக போராடிய மாவீரர்கள். பொதுமக்கள் விதைக்கப்பட்டுள்ள அந்த புனிதமான – கண்ணியமான இடங்களை அழித்த வரலாற்று தவறை செய்து, சிங்கள அரசு தன் உண்மை முகத்தை காட்டியுள்ளது.
இதனாலேயே மாவீரர் துயிலும் இல்லங்களை வடக்க, கிழக்கில் வாழும் தமிழ் மக்களிடம் பொறுப்பு கொடுக்க வேண்டும், இந்த புனித இடங்களை அங்கீகரிக்க வேண்டும், இந்த இடங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும், தமிழ் மக்கள் சுதந்திரமாக நினைவு கூறுவதற்கு இடமளிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கை எழுந்துள்ளன.
எத்தனையோ நெருக்கடிகள் இருந்தாலும், சிங்கள அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத தடையையும் அனுமதியையும் தாண்டி துயிலும் இல்லங்கள் தோறும் பல்லாயிரக்கணக்காக மக்கள் ஒன்றுதிரண்டு, வடக்கு கிழக்கில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தமது உணர்வை நீண்ட காலமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள்:
1990களின் நடுப்பகுதியில், 2002 இல் போர்நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, பல மாவீரர் துயிலும் இல்லங்கள் சிங்கள அரசால் அழிக்கப்பட்டன. தற்போது மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு அரண்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சில காணிகள் அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

போர் மௌனிக்கப்பட்ட 2009இன் பின்னர் பல துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டாலும், தமிழ் மக்களின் முயற்சியால் புனரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பேரினவாத அரசின் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
யாழ் குடாவை கைப்பற்றிய அரசால் 1995–1996 காலகட்டத்தில் பல துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டன. மேலும் துயிலும் இல்லக் காணிகள் அரசாங்கத் திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனாலும் மீள்கட்டமைப்பு முயற்சிகள் தொடர்ந்தன. அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களை மீள புனரமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
சிறீலங்காபடை அழித்த புனித நிலம்:
கோப்பாய் – யாழ்பாணத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 1995 ஆம் ஆண்டு சிங்கள ஆட்சியில் தரைமட்டமாக்கப்பட்டது. வேலனை சாட்டியில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 1995 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. கொடிகாமம், தென்மராட்சியில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 1996 ஆம் ஆண்டு உளவு இயந்திரங்களின் மூலம் தரைமட்டமாக்கப்பட்டது.
எல்லான்குளம், வடமராட்சியில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 1996 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. ஆலன்கேணிக்குளம், சம்பூரில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 2006 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது.
கிழக்கில் கஞ்சிக்குடிச்சாறு, அம்பாறையில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 2007 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. பெப்ரவரி 2007இல் வாகரை கண்டலடியில் அமைந்திருந்த மாவீரர்துயிலும் இல்லம் சிறீலங்காப் படையினரால் முற்றாக அழிக்கப்பட்டது. நிலத்தை கைப்பற்றிய தமது வெற்றியை அடையாளப்படுத்தும் வகையில் கனரக இயந்திரங்களின் உதவியுடன் கண்டலடி மாவீரர்துயிலும் இல்லத்தை சிறீலங்காபடையினர் முற்றாக அழித்தனர்.
சர்வதேச ஜனநாயக விதிகளின் படி போர்க்கைதிகள், போரில் காயமடைந்தவர்கள், போர் நினைவாலயங்கள் என்பவை யார் வசம் இருந்தாலும் மதிக்கப்பட வேண்டியவை. போரில் வீரமரணம் அடைந்த போராளிகளின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதேசமே மாவீரர் துயிலும் இல்லமாகும்.
இது தமிழ் மக்களின் மிக விசேடமான நினைவு இடங்களாகும். மரணமடைந்த வீரர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் முகமாக இவ் இல்லங்களுக்கு சென்றுவருவது வழமை. இதனை தடுக்கவே சிறீலங்கா அரசு தனது இனப்போரின் ஒரு பகுதியாக மாவீரர் துயிலும் இல்லங்களை நீண்ட காலமாக அழித்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக வட கிழக்கில் இருந்த மாவீரர்துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சிறீலங்கா இராணுவத்தினால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டின் பின்னர் மீண்டும் புனரமைக்கப்பட்டன.
எனினும் 2009இன் இறுதியில் சிறீலங்கா படையினரால் இவை அனைத்தும் அழிக்கப்பட்டன.
மேலும் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மாவீரர்களுக்காக பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களையும் சிறீலங்காபடைகள் தொடர்ச்சியாக அழித்தன.
மாண்டவரை நினைவுகூரும் உரிமை:
தமிழரின் வீர வரலாற்றில் அடிமைத்தனத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டு, ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்து நிமிர்ந்தான்.
அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக் கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் மாவீரர்களே.
வென்றவர்களோ, தோற்றவர்களோ மாண்டு போனவர்களை நினைவுகூரும் உரிமை எவருக்கும் உண்டு. இலங்கையில் மாண்டவர்களுக்காய் கண்ணீர் விடவும் அழவும் உரிமைமறுக்கப்பட்ட கொடிய யுகம் இன்றும் தொடர்கிறது.

2009இல் ஈழப் போர் முடிவுற்றதன் பின்னர் பல ஆண்டுகளாக மாவீரர் தினங்களை மறைவிடங்களிலேயே மக்கள் அனுஷ்டித்து வந்தனர். கடந்த காலத்தில் மாவீரர் தினங்களின்போது இலங்கை அரச படைகள் வடக்கு கிழக்கை சுற்றி வளைத்து, ஒரு விளக்கை ஏற்றக் கூட அனுமதி மறுத்தது. ஆலயங்களில் விளக்கேற்றவும் மணி எழுப்பவும்கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கடந்து மக்கள் மாவீரர்களுக்கு தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள்.
யாழ் பல்கலைக்கழகத்தில் தொடந்து ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களுக்காய் விளக்காய் எரிந்தது. எங்கள் விடுதலைக்காக போரிட்டு மாண்டவர்களை நினைவுகூறும் எங்கள் தாகம் என்பது எங்கள் விடுதலைக்கான தாகமாக தீயாய் ஒளிர்ந்தது.
தமிழரின் வீர வரலாற்றில்:
தமிழீழ விடுதலைப் போராளிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்பு, மாவீரர் துயிலுமில்லம் எனப்படும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர்களின் வித்துடல்களைப் புதைப்பதற்கு எடுத்த தீர்மானம், எமது இனத்தின் முதுபெரும் வரலாற்றை அடியொற்றியது. விடுதலைப்புலி வீரர்களின் உடலங்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி இங்கு புதைக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்காக உயிர் நீத்தவர்களின் உடலங்களை வித்துடல்கள் என்றும் உடலங்கள் புதைக்கப்படுவதை விதைக்கப்படுவதாகவும் மரபு மாற்றப்பட்டது.
மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று மாவீரர்களின் பெற்றோர் நினைவுக்கற்களுக்கும், கல்லறைகளிற்கும் ஈகைச்சுடர் ஏற்றுவர். அதே வேளை அங்கு அங்கமைந்திருக்கும் பொதுச் சுடரினை தளபதிகள் ஏற்றி வந்தனர். நவம்பர் 27 மாலை 6.05 மணிக்கு வணக்கத் தலங்களிலும் மணியொலி எழுப்பப்பட்டு, சுடர் ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றுவர்.
2009 இல் விடுதலைப் போர் மௌனிக்கப்பட்ட பின்பு இந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இலங்கை படைத்துறையால் அழித்தொழிக்கப்பட்டன.
முதலாது துயிலும் இல்லம்:
முதலாது துயிலும் இல்லம் கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில் விடுதலைப்புலிப் போராளிகளின் உடலங்கள் அவரவர் பெற்றோர்களின் மதநம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப புதைக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் வந்தன. 1991இல் உடலங்கள் எரிக்கப்பட மாட்டாது, புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
தமிழர் தலைநகர் திருகோணமலையில் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம், வெளியகுளம் மாவீரர் துயிலும்ல்லம், தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம், உப்பாறு மாவீரர் துயிலுமில்லம் இலங்கை படைத்துறையால் அழித்தொழிக்கப்பட்டன.
மட்டக்களப்பில் தரவை மாவீரர் துயிலுமில்லம், தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம், வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம், அம்பாறையில் உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம் இலங்கை படைத்துறையால் அழித்தொழிக்கப்பட்டன.
வீரம் விளைந்த வன்னி மண்ணில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம், விசுவமடு மாவீரர் துயிலுமில்லம், துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம், வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம், அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டன.
தமிழரின் இதய பூமியான மணலாறு புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம், மணலாறு உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம், களிக்காடு மாவீரர் துயிலுமில்லங்களும் சிங்கள அரசால் அழிக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லமும் கூட அழிக்கப்பட்டன. வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், மன்னார் மாவட்ட ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம், பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லமும் சிங்கள அரசால் அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம், வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம், மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் கல்லறைகள் இருந்த இடமெல்லாம் முழுமையாக அழிக்கப்பட்டன.
இறுதியுத்தத்தில் சுதந்திரபுர மாவீரர் துயிலுமில்லம், தர்மபுரம் மாவீரர் துயிலுமில்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம், பச்சைபுல்வெளி மாவீரர் துயிலுமில்லம், முள்ளிவாய்க்கால் கிழக்கு மாவீரர் துயிலுமில்லம், முள்ளிவாய்க்கால் மேற்கு மாவீரர் துயிலுமில்லம் போன்ற நினைவிடங்களும் அழிக்கப்பட்டன.
மட்டு. தாண்டியடிப்பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கபட்டு அங்கு பொலிஸ் நிலையத்திற்கான கட்டிடம் அமைக்கப்பட்டது. மேலும்
2007இல மட்டு. படுவான்கரைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையில் அப்பிரதேசம் படையினரால் கைப்பற்றபட்டு, இதையடுத்து வாகரை மற்றும் தாண்டியடி பகுதிகளிலிருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இடம் தெரியாது படையனரால் முற்றாக அழிக்கபட்டன.
தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தை கைப்பற்றிய படையினர் நினைவுத் தூபிகளை இடித்துத்
தரைமட்டமாக்கியதுடன் மாவீரர் சமாதிகள் அனைத்தும் புல்டோசர்களால் கிளறியெறியப்பட்டு தற்போது அந்த இடத்தில் பொலிஸ் நிலையம்
கட்டிடம் அமைக்கபட்டது.
இந்த துயிலுமில்லத்தில் ஒரு பகுதியில் விஷேட அதிரடிப்படையினரின் பாரிய முகாம் ஒன்று அமைக்கபட்டுள்ளது. தங்களுக்காக போராடி உயிர் நீத்த போரிளிகளின் துயிலுமில்லத்தை முற்றாக அழித்து அங்கு படையினர் நிலை கொண்டுள்ளது கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
![]()