வடக்குக் கடல் தொடர்ந்தும் இந்திய மீனவர்களால் சூறையாடப்படுகிறது

இந்திய மீனவர்களின் அத்துமீறல், சட்டவிரோத மீன்பிடியாளர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளாலும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரக் கருவூலமான வடக்குக் கடல் தொடர்ந்தும் சூறையாடப்பட்டு வருகின்றது.
இவ்வாறாக எல்லோரும் சூறையாடிச் செல்வதற்கு வடக்கு கடல் ஓர் ஒழுங்குபடுத்தப்படாத, திறந்தவெளி அணுகல் வலயம் அல்ல வடக்குக்கடலென்பது வடமாகாணத்தைச் சார்பாக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திடல்.அது அவர்களின் உரித்தென தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்டஎம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
வடமாகாணத்தில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் பல முறை இந்த அவையிலே விவாதிக்கப்பட்டன. ஏனைய துறைகளில் கொள்ளும் கரிசனையைக்கூட இத்துறையில் இதுவரை அரசு காட்டாதிருப்பது ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இதுவரை காத்திரமான முடிவுகள் எட்டப்படாது நீடித்திருக்கும் இப்பிரச்சினைகளால் கடலை நம்பி வாழும் ஓரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இழுவைமடி படகுகள், வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல், சுருக்கு வலைகளில் மீன்பிடித்தல் உள்ளிட்டவை இலங்கையின் சட்டத்துக்கு அமைவாக தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள். இத்தொழில் முறைகளால் இலங்கையின் கடல் வளம் – அதிலும் குறிப்பாக வடகிழக்கின் கடல் வளம் தற்போது வெகுவாக சீர்குலைக்கப்பட்டு வருகிறது.
சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதிருப்பது அரசின் தவறே. சட்டத்திற்கு புறம்பாக இயங்குபவர்கள் கட்டுப்படுத்தப்படவேண்டிய சூழ்நிலையில் தற்போது சட்டத்தை மதித்து இயங்குபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள். அவர்களின் நாளாந்த வாழ்வாதாரம் தண்டிக்கப்படுகிறது.
தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளைக் கட்டுப்படுத்தாதிருக்கும் போது நாளுக்கு நாள் அவ்வாறான தொழில் முறைகளைப் பயன்படுத்தும் மீனவர்களின் எண்ணிக்கை வடகடல்பரப்பில் அதிகரித்துச் செல்கிறது. இந்த அரசு யாரைக்காக்கிறது? யாரை வஞ்சிக்கிறது? என்று தெரியவில்லை. கடல் தொழிலில் இந்த அரசு ஊழலுக்கு துணைபோகின்றது என்பதையே நடக்கும் நிகழ்வுகள் சான்றாக்குகின்றன.இத்தகைய மீன்பிடி முறைகள் இந்த ஆண்டோடு அதாவது 2025ஆம் ஆண்டோடு முற்றாக இலங்கைக்குள் தடைசெய்யப்படும் என மீன்பிடி அமைச்சர் இவ்வாண்டு உறுதியளித்திருந்தார்.உங்கள் வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றுவீர்களா?
அறத்தை மதித்து கடலை மதித்து மீன்பிடிக்கும் மீனவர்கள் உங்கள் காலத்தில் பட்டினியால் மாண்டார்கள் என்பதை நிகழ்வாக்கவேண்டாம். இலங்கை கடற்பரப்பினுள் தொடர்ச்சியாக அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தவேண்டியதும் இந்த அரசின் கடப்பாடு. இத்தகைய தொடர்ச்சியான அத்துமீறல் நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. எல்லோரும் பயன்படுத்திச் செல்வதற்கு வடக்கு கடல் ஓர் ஒழுங்குபடுத்தப்படாத, திறந்தவெளி அணுகல் வலயம் அல்ல. மாறாக இது வடமாகாணத்தைச் சார்பாக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திடல். அவர்களின் உரித்து. இந்தக்கடல் இந்தத்தலைமுறைக்கு மட்டும் அல்ல. இனி வரும் சந்ததிகளுக்குமானது. இனிவரும் காலத்திற்குமாக இக்கடல் வளத்தை முறையாக பேணவேண்டியது எம் எல்லோரின் பொறுப்பு.
முல்லைத்தீவின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில்முறைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளரிடம் முறையிடச்செல்லும் போது தன்னிடம் போதியளவு ஆளணி இல்லை என பதிலளிப்பதாகவே மீனவர்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.
இலங்கையின் அத்தனை பாதுகாப்புக் கட்டமைப்புகள் இணைந்து கூட கட்டுப்படுத்த இயலாதிருப்பின், தன்னிடம் போதியளவு ஆளணி இல்லை என முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கூறுவது உண்மை எனில் போதியளவு ஆளணியை குறித்த திணைக்களங்களுக்கு வழங்கி இவற்றை கட்டுப்படுத்த ஆவன செய்யுங்கள்.
அவ்வாறு போதிய அளவு ஆளணி உங்களிடம் இல்லையேல் இன்றுவரை சட்டத்துக்கு இசைவாக மீன்பிடிக்கும் எங்களின் நூற்றுக்கணக்கான மீனவர்கள் உங்கள் திணைக்களத்துடன் வருகிறோம். கட்டுப்படுத்துங்கள் என்றார்.
![]()