இலங்கை

மட்டக்களப்பு சம்பவங்களின் பின்னணியில் அரசு உள்ளதா?; சந்தேகம் தெரிவிக்கும் சாணக்கியன் 

திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை சம்பவத்தின் இரண்டு வாரங்களின் பின்னர் அவசரமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களம் முன்னெடுத்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு தெரிந்தே நடந்ததா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.கடந்த மூன்று வாரங்களாக இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் சரியில்லை. இந்த அரசு நடந்து கொள்ளும் முறை தமிழ் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளனவென தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்தார் .

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

கடந்த மூன்று வாரங்களாக இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் சரியில்லை.அரசின் இந்த செயற்பாடுகள் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளன . கடந்த சில நாட்களாக தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி நிலைமைகள் நடந்துள்ளன. திருகோணமலை சம்பவத்தின் இரண்டு வாரங்களின் பின்னர் அவசரமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு தெரிந்து நடந்ததா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இந்த சம்பவங்களை பார்க்கும் போது தொல்பொருள் என்ற விடயம் தொல்பொருள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இவ்வாறு நடக்கின்றது. சில ஊடகங்கள் இது தொடர்பில் நடந்துகொள்ளும் முறை தொடர்பிலும் பிரச்சினை உள்ளது.

தொல்பொருள் திணைக்களம் மட்டுமன்றி எந்த திணைக்களமாக இருந்தாலும் பிரதேச சபைக்கு அறிவித்தே பெயர் பலகைகளை அமைக்க முடியும். ஆனால் இந்த விடயத்தில் பிரதேச சபையின் சட்டத்தை இது மீறியுள்ளது. பிரதேச சபை தலைவருக்கு அதுபற்றி அறிவிக்கவும் இல்லை. இந்நிலையில் தவறான நிலைப்பாடுகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன் .நீங்கள் நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்கினாலே தமிழ் மக்களின் இந்த காயங்கள் ஆறும் .இந்த வடுக்களை ஆற்றும் சூழலை உருவாக்க முடியும்.

இதேவேளை வரலாறு பாடத்தை விருப்பத்திற்குரிய பாடமாக மாற்றுவது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் வரலாறு பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் சரியான வரலாற்றை கற்பிக்க வேண்டும் என்று கோருகின்றேன். மிக முக்கியமாக இந்த நாட்டில் 200, 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள், பிரித்தானியர்கள் இந்த நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை தந்த போது அதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற வரலாறு, அதேபோன்று 1926ஆம் ஆண்டில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வே இந்த நாட்டில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழியென பண்டாரநாயக்க கூறிய வரலாறு, டொனமூர் முதல் அரசியலமைப்பு தொடர்பான சகல சந்தர்ப்பங்களிலும் அதனை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்த்தார்கள் என்பது பற்றியும், 1948 முதல் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்பிலும் இந்த வரலாறு பாடத்தில் உள்வாங்கி அதனை பாடத்தின் ஊடாக கூறினால் மாத்திரமே எதிர்வரும் தலைமுறையிலாவது சகல இன மக்களும் சமமான மக்களாக கருதப்படுவார்கள்.

அவ்வாறு இல்லையென்றால் இப்போது தொல்பொருள் திணைக்களத்தால் மக்கள் படும் அவஸ்தைகள் போன்றவை இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும் நடக்கும்.என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *