முச்சந்தி

இன,மத ரீதியாக பிரித்தது நீங்களே; மனோ கணேசன் எம்.பி.தெரிவிப்பு 

எமது சிறுபராயத்தில் நாட்டில் தமிழ் பாடசாலை, சிங்களப் பாடசாலை, முஸ்லிம் பாடசாலை என இன,மத ரீதியாக பிரித்து பாடசாலைகளை உருவாக்கி விட்டு இப்போது சிறுவர்கள் பெரியவர்களான பின்னர் எல்லோரும் இலங்கையர்களாக எழந்திருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இப்போது காலம் கடந்து விட்டது. ரயில் புறப்பட்டு விட்டது என்று தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.அத்துடன் குறைந்த வளங்களைக் கொண்ட பிரதேச கல்வி நடவடிக்கைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த விடயங்கள் புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை கல்வி யமைச்சரான பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்.

கொழும்பு போன்ற பிரதேசங்களில் அனைத்து இன, மத மக்களும் இணைந்து வாழ்கின்றனர் . இங்கு தமிழ், சிங்களம்,கத்தோலிக்கம் முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இந்த சிந்தனை மாற்றப்பட வேண்டும்.

எமது சிறுபராயத்தில் நாட்டில் தமிழ் பாடசாலை, சிங்களப் பாடசாலை, முஸ்லிம் பாடசாலை என இன,மத ரீதியாக பிரித்து பாடசாலைகளை உருவாக்கி விட்டு இப்போது சிறுவர்கள் பெரியவர்களான பின்னர் இப்போது எல்லோரும் இலங்கையர்களாக எழுந்திருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இப்போது காலம் கடந்து விட்டது. ரயில் புறப்பட்டு விட்டது.

அதற்காக இப்போது கொழும்பிலுள்ள பாரிய அளவிலான ஆனந்த,நாலந்த, இந்துக் கல்லூரி போன்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளை அவ்வாறு உடனடியாக மாற்றி விட முடியாது என்பது எமக்குத் தெரியும். ஆனாலும் இப்போது எங்கிருந்தாவது அதை ஆரம்பிக்க வேண்டும்.

கொழும்பில் மூன்று தேசிய பாடசாலைகள் இயங்குகின்றன.அவற்றில் ரோயல் கல்லூரி, டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, இசிபத்தன கல்லூரிகள் உள்ளடங்குகின்றன. இந்த பாடசாலைகளில் தமிழ் மொழி மூல வகுப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன. நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவி வகித்த போதும் அது தொடர்பில் தர்க்கம் புரிந்துள்ளேன். குறிப்பாக ரோயல் கல்லூரியில் தமிழ் மூல வகுப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று அவ்வாறான வகுப்புகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை 20, 22 ஆகவே காணப்படுகிறது. சாதாரணமாகவே சுமார் 40 மாணவர்கள் இருக்க வேண்டும்.

சிங்கள மொழி மூலமான பத்து வகுப்புகள் காணப்படும் போது தமிழ் மொழி மூலமாக இரண்டு வகுப்புகளே காணப்படுகின்றன. எனினும் தமிழ்மொழி பேசும் மக்களே இந்த மாவட்டத்தில் 60வீதம் காணப்படுகின்றனர். அந்த வகையில் 50 வீதம் என்ற வகையில் வகுப்புகளைக் கொண்டுவர முடியும். புதிய அரசாங்கம் மாற்றங்களை கொண்டு வருவதாக தெரிவிக்கின்றது. அந்த வகையில் இந்த அரசாங்கம் அவ்வாறான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *