இலங்கை

ரில்வினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் எமக்கு உதவியவர்களல்ல

ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இங்கிலாந்துக்கு சென்றிருந்த போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் முன்னர் எங்களுக்கு உதவியவர்கள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின்சில்வா பிரிட்டனுக்கு சென்றிருந்த போது, அவருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட ஆர்பாட்டம் தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

புலம்பெயர்ந்தோர் கடந்த தேர்தலில் இந்த அரசாங்கத்திற்காக பல்வேறு உதவிகளை வழங்கினர். ஆனால் உங்களின் செயலாளர் அங்கு செல்லும் போது ஆர்ப்பாட்ட செய்கின்றனர். அவர்கள் இப்போது உங்களை விட்டு விலகிப்போயுள்ளனரா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதன்போது பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,

அங்கு நடந்த கூட்டத்தில் புலம்பெயர் இலங்கையர்களே கலந்துகொண்டிருந்தனர். இலங்கைக்கு வெளியில் இலங்கையின் நலனுக்காக செயற்படும் சிங்கள, தமிழ் உள்ளிட்ட அனைத்து இனத்தவர்களும் புலம்பெயர் இலங்கையர்களே. ஆனால் ஆர்ப்பாட்ட நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. எமக்கு உதவியவர்களே இப்போது மாற்றம் பெற்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என்றும் கூற முடியாது. இங்கிலாந்தில் நடந்த கூட்டங்களில் புலம்பெயர் இலங்கையர்களே கலந்துகொண்டனர்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பான அந்த அமைப்பு தொடர்பில் நம்பிக்கையுடன் உள்ள சிறிய குழுக்கள் எந்தவொரு நாட்டிலும் இருக்கலாம். அவர்கள் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடலாம். அவர்கள் எங்களுக்கு உதவினர். இப்போது உதவவில்லை என்று கூறுவது சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு வெளியிடப்படுபவையாகும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *