இலக்கியச்சோலை

வணக்கம் வள்ளுவ… இலக்கிய உரை…. அண்டனூர் சுரா

அனைவருக்கும் வணக்கம்,

புதுக்கோட்டை வீதிகள் குறித்து கட்டுரை எழுதச் சொன்னால் ‘புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம்’ குறித்து கட்டுரை எழுதும் அளவிற்கு வீதி கலை இலக்கிய களம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. வீதி இலக்கிய களத்திற்கு எனது வாழ்த்துகள்!!

“வீணை வருவதற்கு முன்பு இசை இருந்த இடம்” என்கிற தலைப்பில் ஈரோடு தமிழன்பன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். நான் இந்தத் தலைப்பையொட்டியே யோசிக்கிறேன். வீதி கலை இலக்கிய களம் உருவாவதற்கு முன்பு வீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா எங்கே இருந்தார்? அறிவொளி இயக்கம் வருவதற்கு முன்பு கவிஞர் நா. முத்துநிலவன் எங்கே இருந்தார்? ஒருவேளை புத்தகம் என்கிற ஒன்று கண்டுபிடிக்காமல் போயிருந்தால் கவிஞர் ஸ்ரீ மலையப்பன் பிறந்திருக்கக்கூட மாட்டாரோ? என்று

தம்பி ஸ்ரீ மலையப்பன் என்னை அலைபேசியில் அழைத்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, அண்ணே ஈரோடு தமிழன்பனின் ஒரு நூல் குறித்து உங்கள் பார்வையை வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதை ஏன் சிரித்தபடி சொல்கிறார் என்று யோசித்தேன். காரணம் கிடைத்தது. கவிதைகளில் நகைச்சுவையைக் கொண்டுவந்தவர் ஈரோடு தமிழன்பன். சென்ரியு எனும் கவிதை வடிவத்தைப் பரவலாக்கியவர் இவர்.

தேர்தல் காலங்களில் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யச் செல்கையில் எனக்கு ஈரோடு தமிழன்பனின் ஒரு கவிதை நினைவுக்கு வரும்.

ஆயிரம் பேர் சூழ
வேட்புமனு தாக்கல்
பத்து வாக்குகள்

இவர்கள் எழுதிய மற்றொரு சென்ரியு
“கோவிலிருந்து வெளியே போன கடவுள்

திரும்பி வந்து சிலையாகிப் போனார்
சிலையைக் காணோம்.”

தம்பி ஸ்ரீமலையப்பன் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் குறித்து பேச வேண்டுமென என்னிடம் கேட்டுக்கொள்கையில் என் நினைவுக்கு வந்தது, “வணக்கம் வள்ளுவ” எனும் கவிதை நூல்.

நான் எனது சம்பளத்திலிருந்து வாங்கிய முதல் புத்தகம் இது. எனக்கு அரசுப் பணி கிடைத்த வருடமும் அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்த வருடமும் ஒன்று. 2004. இதன்பிறகு இந்தத் தொகுப்பு என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நூலாகிவிட்டது.

இன்று திரு. கு.ம. திருப்பதி அவர்களின் தலைமையில் இரண்டாம் முறையாக உரையாற்றுகிறேன். இதற்கும் முன்பு கி.ரா படைப்புலகம் எனும் தலைப்பில் இணைய வழியில் உரையாற்றுகையில் அவர்தான் தலைவர்.

சிலரை அடைமொழியோடு சொன்னால்தான் புரியும். கலைஞர் மு. கருணாநிதி, கவிப்பேரரசு வைரமுத்து, கவியரசு கண்ணதாசன், கவிஞர் நா. முத்துநிலவன் இப்படியாக

சிலரை இன்சியலோடு சொன்னால் மட்டும்தான் புரியும். தி.க.சிவசங்கரன், தொ.மு.சி.ரகுநாதன்,..

கு.ம.திருப்பதி. இவரது பெயரை வெறும் திருப்பதி என்று சொன்னால் எனக்கு எனது நண்பன் சோலச்சிதான் நினைவுக்கு வருவார். அரவது இயற்பெயர் தீ.திருப்பதி.

கு.ம.திருப்பதி அவர்கள் தமிழ்த்துறையில் தனித்துவமானவர். அவரது தலைமையிலான இந்த அவையை வணங்குகிறேன்.

இன்று ஒரு குறிப்பு படித்தேன். புதுக்கோட்டையின் அடையாளம் வெள்ளாறு. தமிழக நிலப்பரப்பில் இரண்டு வெள்ளாறுகள்தான் ஓடுகின்றன. வட வெள்ளாறு, தென் வெள்ளாறு. தென்வெள்ளாற்றுக்கும் தென் புறத்தில் வாழும் பெண்கள் யாரும் வெள்ளாற்றைத் தாண்டி வட கரைக்கு வரக்கூடாது. வடகரையில் பிறந்த எந்தவொரு பெண்ணும் வெள்ளாற்றைத் தாண்டி தென்கரைக்குச் செல்லக்கூடாது. மீறிச்சென்றால் வடகரை, தென்கரை மக்கள் தன் மகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த தென் வெள்ளாறு சோழர்கள், பாண்டியர்களின் எல்லையாக இருந்தது. சோழர் நிலப் பெண்கள் யாரும் பாண்டிய நாட்டிலோ, பாண்டிய நாட்டின் எந்தவொரு பெண்ணும் சோழ நாட்டிலோ திருமணம் முடிக்கப்பட்டதில்லை. புதுக்கோட்டை மாவட்டதிற்குட்ட நெல்லூர் அன்றைக்கு சோழர் நாட்டின் எல்லையாக இருந்தது.

ஒரு காலத்தில் தென்கரையிலிருந்து வடகரைக்கும் வடகரையிலிருந்து தென்கரைக்கும் செல்ல முடியாதிருந்த புதுக்கோட்டையிலிருந்து அட்லாண்டிக் கடலைத் தாண்டி நம்முடைய சகோதரி எழுத்தாளர் கிரேஸ் பிரதிபா சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

நான் ஈரோடு தமிழன்பனின் ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்கு வருகிறேன். இந்த தலைப்பு என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஈரோடு தமிழன்பன் இந்த நூலில் வள்ளுவரைப் பார்த்து கேட்கிறார்.

வண்ணங்களுக்கு அப்பால் போய்
எப்படி
எண்ண முடிந்தது உன்னால்?

ஓசை ஒலிகள் காணாத எல்லையில்
போய்
எப்படி உன்னால்
வார்த்தைகள் தேடும் பொருளை
வாரிக் கொண்டுவர முடிந்தது.

தமிழ்க் கிண்ணத்தில்
உலகத்தை எப்படி
நிரப்பி வைத்தாய்?

தமிழை ஒரு கிண்ணமாகப் பார்ப்பது புதிது. தமிழ்க் கிண்ணத்தில் உலகை நிரப்புவது ஆகப்பெரிய கற்பனை. இது தமிழின் பெருமை. இதுதான் ஈரோடு தமிழன்பன்.

மழிந்துபோன முள் தராசுகளில் கற்களுக்குப் பதிலாக மனுதர்மத்தை வைத்து மனித தசைகளை எடைபோடுகின்ற இந்த உலகில் வண்ணங்களைத் தாண்டி எப்படி உன்னால் எண்ண முடிந்தது, என்று இக்கவிதை பாடுகிறது.

இந்த நூலுக்கு வணக்கம் வள்ளுவ என்று ஏன் பெயர் சூட்டினார்? வணக்கம் வள்ளுவர், வணக்கம் வள்ளுவன் இரண்டு பெயர்களைக் கொண்டு இத்தலைப்பை அணுகுகிறேன்.

எங்கள் கிராமத்திற்குள் சென்று விநாயகர் பெரியவரா, முருகன் பெரியவரா என்று கேட்டால விநாயகர்தான் பெரியவர் என்று சொல்வார்கள். எப்படியென்றால் விநாயகருக்கு ‘ர்’ வருகிறது. முருகனுக்கு ‘ன்’ வருகிறது.

ஈரோடு தமிழன்பன் தனது நூலுக்கு வணக்கம் வள்ளுவர் என்றோ, வணக்கம் வள்ளுவன் என்றோ பெயர் வைக்காமல் வணக்கம் வள்ளுவ என்று பெயர் வைத்திருக்கிறார். வள்ளுவர் பெரியவருக்கும் சிறியவருக்கும் அப்பாற்பட்டவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நூலின் அனைத்து கவிதைகளும் ஒரு தலைவன் பாடுபொருள். அவரது நூல்களில் இந்த நூல் முக்கியமானது. இந்த வடிவத்தில் வேறு யாரும் கவிதை எழுதவில்லையா? எழுதியிருக்கிறார்கள்! கவிஞர் சிற்பி எழுதியிருக்கிறார். பாரதியின் கைதி எண் 253.

பாரதி 1908 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து இடம் பெயர்ந்து பாண்டிச்சேரியில் அடைக்கலமாகி 1918 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி சென்னை மாகாணம் திரும்புகிறார். அப்பொழுது அவர் கடலூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவரது கைதி எண் – 253.

இந்தக் காலக்கட்டத்திலான பாரதியின் வாழ்வை இந்த நூல் கவிதை வடிவில் பதிவு செய்கிறது.

கவிஞர் நா. காமராசன் ‘பெரியார் காவியம்’ எனும் தலைப்பில் முழுக்க பெரியாரின் வாழ்வைக் கவிதையாகப் பதிவு செய்துள்ளார். இப்படியான ஒரு நபர் பொருண்மை நூல்கள் நிறைய உள்ளன.

இந்த வகை நூல்களில் வணக்கம் வள்ளுவ எந்த வகையில் சிறப்பானது?

பாரதி, பெரியார் குறித்த காவியங்கள் அவர்களின் வாழ்க்கைப் பதிவு செய்கின்றன. வணக்கம் வள்ளுவ எனும் நூல் வள்ளுவரிடம் கேள்விகள் கேட்கிறது. கவிதைகள் முழுவதும் கேள்விகள்தான்.

வள்ளுவரைப் பார்த்து ஒரு கவிதையில் கேட்கிறார் ஈரோடு தமிழன்பன்.

திருக்குறளில் ஏன் ஏழு சீர்களை மட்டும் வைத்து கவிதை எழுதியிருக்கிறாய்?

ஏழாவது சுரம்
கதவை இழுத்து மூடியதால்
எட்டாவது சுரம்
ஏமாந்து திரும்பியிருக்கலாம்.

ஆனால் இசை தேவதை
ஆலாபனை நிறுத்திவிட்டுக்
கதவைத் திறக்க
ஓடியிருக்க மாட்டாளா?

இப்படியாக செல்லும் இக்கவிதை

எட்டாவது சீர்கள் எல்லாம்
இப்போது உன் சிலை முன்
உண்ணாவிரம் இருக்கின்றன
என்ன கோரிக்கை தெரியுமா?

திரும்பவும்
நீ வந்து இன்னொரு திருக்குறள்
எழுதும்போது
ஏழு சீர்களுக்குள் இடம் தர வேண்டுமாம்!

திருவள்ளுவரின் மீது பலரும் மதச்சாயம் பூசுகிறார்கள். திருவள்ளுவர் சமணர் என்றும் பௌத்தர் என்றும் சைவர் என்றும் சொல்கிறார்கள். ஒருவர் இஸ்லாமியர் என்றார். என்னது வள்ளுவர் இஸ்லாமியரா? ஆமாம், தாடி வைத்துள்ளாரே, வேடிக்கைதான்!

திருவள்ளுவர் எப்படி சமணர்? சமணர்களி்ல் முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர். அந்த ஆதிநாதரைத்தான் வள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிநாதர் முதற்றே உலகு என்று எழுதியுள்ளார். ஆதிநாதரை ஆதிபகவன் என்று திருத்திவிட்டதாக சிலர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்கள்.

இல்லை, திருவள்ளுவர் பௌத்தர்! எப்படி பௌத்தர்? சித்தார்த்தன் பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்தவன். அவன் அரண்மனையில் ஓடி விளையாடிய இடங்களில் அவனது பாதங்களில் மண் படாமலிருக்க பூக்களைத் தூவினார்கள். இந்தப் புத்தரைத் திருவள்ளுவர் ஒரு குறளாக பதிவு செய்துள்ளார் “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்” இதைக் கொண்டு வள்ளுவர் பௌத்தர் என்று எழுதியிருக்கிறார்கள்.

இன்னும் ஓர் அறிஞர் வாலறிவன் எனும் சொல்லைக்கொண்டு சமணர் எனும் நிறுவியிருக்கிறார். வாலறிவன் எனும் சொல் சமணக் காலத்திய நூலான நாலடியாரில் பாடப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சைவர். எப்படி செய்வர்? திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் சைவர் என்கிற பொருளிலேயே உரை எழுதியுள்ளார். நாயன்மார்களில் ஒருவராக திருவள்ளுவரைக் காட்டுகிறார். திருவள்ளுவர் நாயனார்.

இல்லை, திருவள்ளுர் வைணவர். எப்படி வைணவர்?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார். அடிகளால் உலகத்தை அளந்தவன் திருமால். திருமாலுக்கு மூன்று அடிகள். வள்ளுவருக்கு இரண்டு அடிகள். ஆகவே திருவள்ளுவர் வைணவர் என்று சொல்வார் உண்டு.

சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் திருவள்ளுவர் சிலைக்கு காவி நிறத்தைப் பூசி திருவள்ளுவரை இந்து ஆக்கினார். நீரும் காற்றும் நிறமற்றவை. அதற்கு சாயம் ஏற்றுவது போன்றது வள்ளுவருக்கு சாயம் பூசுவது.

திருவள்ளுவருக்கு நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உரை எழுதியிருக்கிறார்கள். பரிமேலழகர் உரைக்கும் முன்பே பல உரைகள் எழுதப்பட்டுள்ளன. அந்த உரைகள் திருவள்ளுவரை சைவராக பதிவு செய்துள்ளன. நான் மிக நீண்ட காலம் திருக்குறளுக்கு பெண்ணாசிரியர் யாரும் உரை எழுதவில்லை என்றே நினைத்துவந்தேன். உரை எழுதியிருக்கிறார்கள்.

புதுக்கோட்டையில் ஓடும் வெள்ளாறு மருங்காபுரி வேழமலையில் தொடங்குகிறது. மருங்காபுரி ஜமீனின் ராணியாக இருந்தவர் லெட்சுமி அம்மணி. பல மொழிகள் கற்றவர். இவர்தான் திருக்குறளுக்கு உரை எழுதிய முதல் பெண் உரையாளர். இவர் பரிமேலழகர் உரையைத் தழுவி கதை வடிவத்தில் உரை எழுதியிருக்கிறார்.

திருவள்ளுவரை இவர் சைவராக கருதி எழுதியிருக்கிறார். இவரது கதையின்படி, சிவன் ஒரு நாள் மதுரைக்குச் சென்றார். மதுரை புலவர்கள் எல்லாரும் சேர்ந்து அவரை அவமானப்படுத்துகிறார்கள். சிவன் கோபம்கொண்டு மூவரைப் படைத்தார். பிரம்மாவைப் படைத்து திருவள்ளுவராக்கினார். திருமாலைப் படைத்து இடைக்காடர் ஆக்கினார். லெட்சுமியைப் படைத்து ஔவையராக்கினார் என்பதாக அவர் தன் உரையில் எழுதியுள்ளார்.

ஆனால் திருவள்ளுவர் இத்தகைய புனைவு கதைகளுக்கு அப்பாற்றபட்டவர். மதம், சமயம், சாதியைக் கடந்தவர். வள்ளுவரை நாம் மனித உருவமாகப் பார்க்கிறோம்.
ஈரோடு தமிழன்பன் அவரை கருத்தியலாகப் பார்க்கிறார். தத்துவமாகப் பார்க்கிறார். வாழ்வு நெறியாகப் பார்க்கிறார்.

வணக்கம் வள்ளுவ தொகுப்பில் ‘எது வள்ளுவம்’ என்று ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதை வள்ளுவத்தை இப்படியாக வரையறை செய்கிறது.

விடியும்போது
வானம் வள்ளுவம்

பொழியும் போது
மழை வள்ளுவம்

எரிக்க வேண்டியதை எரிக்கத்
தவணை கேட்காத
நெருப்பும்
அற்ப ஆயுளில்
முடிந்து போகாதபடி
அறத்தின் சுவாசப் பைக்கு
அவசியமாகும்
காற்றும் வள்ளுவம்

கர்ப்பம் தரிக்கும்போது
பூமி வள்ளுவம்

இப்படியாக நீளும் கவிதையில் ஓரிடத்தில் இப்படி எழுதுகிறார்

பசித்தவன் வயிற்றில்
பற்றி எரியும் நெருப்பிடம்
படைத்தவன்
முகவரியைக் கொடுத்துப்
பாதகம் இல்லை தாக்கு
என்று அனுப்புகிற வள்ளுவம்!

இதைத்தான் பாரதி சொல்கிறார், தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று.

எனது ஆசிரியர் சொல்வார், பெரியாரை படிக்க வேண்டுமா? பெரியாரை படி. பெரியாரைப் பற்றி எழுதியதைப் படிக்காதே. அம்பேத்கரை படிக்க வேண்டுமென்றால் அம்பேத்கர் எழுதியதைப்படி அம்பேத்கர் குறித்து பிறர் எழுதியதைப் படிக்காதே. திருவள்ளுவரைப் படிக்க வேண்டுமென்றால் திருக்குறளைப் படி. திருக்குறளுக்கு உரையெழுதியவர்களைப் படிக்காதே என்று.

ஈரோடு தமிழன்பன் “அப்போது கேட்பேன்” என்றொரு தலைப்பிலான கவிதையில் அதைத்தான் சொல்கிறார்.

நிலாவுக்கு
அர்த்தம் சொன்னார்கள்
முகம் என்றும் முறுவல் என்றும்
கன்னம் என்றும் புரிந்து.
நிலா என்னவென்று புரியாமல்
போனது.

கடல் என்பதற்குக்
கருத்துரை கேட்டேன்.
கவிதை, காதலி உள்ளம்
உப்புத் திடல், கப்பல் வீதி
இப்படிக்
கடல் எனக்குத் தெரியாதபடி
கண்டதைக் கொட்டி
மூடிவிட்டனர்.

பூ
என்ன என்பது எனக்குப் புரிந்த போதும்
பொருள் சொல்ல வந்தவர்கள்
குழந்தையின் கன்னம்
குமரிகள் சிரிப்பு
வண்டின் படுக்கை
மதுக்கிண்ணம், வாசவிடுதி…
என்னென்னவோ சொல்லிப்
பூவுக்கு
நெடுந்தொலைவில்
என்னை
இழுத்துக்கொண்டுபோய்
நிறுத்தினார்கள்.

இப்படித்தான்
வள்ளுவர்க்குப் பொருள் சொல்ல
வந்தவர்கள்
வள்ளுவர்க்குப் பொருள்
பரிமேலழகர் என்றார்கள்.
வள்ளுவருக்குப் பொருள்
மணக்குடவர் என்றார்கள்
வள்ளுவர்க்குப் பொருள்
மற்ற மற்ற மற்றையவர்கள் என்றார்கள்.

வள்ளுவருக்குப் பொருள்
வள்ளுவர் இல்லை என்றானபின்
வள்ளுவரை
ஏன் நான் படிக்க வேண்டும்

தண்ணீரின் பொருள்
தண்ணீராக இல்லாவிட்டால்
அது
என் தாகத்தைத் தணிக்குமா?

எப்போது
எனக்கு வள்ளுவரின் வள்ளுவர்
கிடைப்பார்?
அப்போது வள்ளுவரைக் கேட்பேன்
எப்போது
எனக்கு நான் கிடைப்பேன்?

இத்தொகுப்பில் ஒரு முத்தாய்ப்பான கவிதை “விலைமாதர்கள் திருவள்ளுவரிடம் கேட்ட வினாக்கள்.”

விலை மாதர்கள் குறித்து ஒரு கதை எழுத வேண்டுமென்று எனக்கோர் ஆசை. பலரும் பலவிதமாக எழுதியிருக்கிறார்கள்.

மாப்பசான் ஒரு கதை எழுதியுள்ளார். ரஷ்ய நாட்டில் ஒரு பெருஞ்செல்வந்தரின் மகள் பல அடுக்கு மாடியின் மேல் நின்றுகொண்டு தெருக்களைப் பார்க்கிறாள். தெருக்களில் ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் விலைமாதர்கள் தெருவில் நின்றுகொண்டு தெருவில் செல்லும் ஆண்களுக்கு சைகை செய்கிறார்கள். அதைக் கவனிக்கும் அந்த செல்வந்தரின் மகள் அவர்கள் செய்யும் சைகையைச் போல செய்ய விரும்புகிறாள். அவள் ஓரிடத்தில் நின்று அந்தத் தெருவில் வழியாகச் செல்லும் ஒரு ஆடவனைப் பார்த்து சைகை செய்கிறாள். அந்த வழியாகச் செல்லும் ஆடவன் இவ்வளவு பெரிய செல்வந்தர் வீட்டு மகள் பணத்திற்கு கஷ்டப்படுகிறாள் என்று பணத்துடன் வந்து அவளோடு உல்லாசமாக இருந்து அவளை விலைமாதுவாக்கி செல்கிறான். அப்பொழுதான் அவளுக்குத் தெரியவருகிறது. தெரு பெண்களின் சைகை என்ன சொல்கிறது என்று. இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று அவள் யோசிக்கிறாள்.

இந்தக் கதையை வாசிக்கும் யாருக்கும் ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் நினைவுக்கு வரும். ஜெயகாந்தன் பறிபோன கற்புக்கு இப்படியாக தீர்வு சொல்வார். “அட போ கழுதை குளி! சரியாப் போயிடும்“ என்று.

மாப்பசான் கதையில் கற்பைப் பறிகொடுத்தவள் தோழியிடம் ஆலோசனை கேட்கிறாள். தெருவில் நின்று பெண்கள் செய்த சைகையைத்தான் நான் செய்தேன். அவன் என் கற்பை எடுத்துக்கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். இந்தப் பணத்தை நான் என்ன செய்வது என்று.

தோழி சிரித்துவிட்டு சொல்கிறாள். இந்தப் பணத்தில் நல்ல விலை உயர்ந்த நினைவு பரிசு ஒன்று வாங்கி வைத்துக்கொள். உன்னை மணம் முடிப்பவனுக்கு அந்தப் பரிசைக் கொடுத்துவிடு என்று. இது மாப்பசான் கதை.

இந்தக் கதைக்கு பரவலான வரவேற்பும் எதிர்ப்பும் வருகிறது. இந்தக் கதை கற்பனை அல்ல. ரஷ்ய நாட்டில் அன்றைக்கு நடந்தேறிய சம்பவங்களின் பதிவு.

வணக்கம் வள்ளுவ தொகுப்பில் ஈரோடு தமிழன்பன் விலைமாதுக்களை வேறு விதமாக அணுகுகிறார்.

திருவள்ளுவர் ஒரு நாள் திண்ணையில் அமர்ந்திருக்கிறார். இரண்டு விலை மாதுக்கள் அவர்முன்பு வந்து நிற்கிறார்கள். அவர்கள் திருவள்ளுவரின் கண்களுக்குக் கேள்விக் குறிகளாக தெரிகிறார்கள். அவர் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார். ஒரு விலைமாது சொல்கிறாள். “வள்ளுவரே, எங்களையும் மதித்து ஓர் அதிகாரம் ஒதுக்கியதற்கு நன்றி ஐயா. வள்ளுவர் கண்களால் சமிக்ஞை செய்து திண்ணையில் உட்காரச் சொல்கிறார். நாங்கள் உட்கார்ந்தால் உங்கள் வீட்டுத் திண்ணை தீட்டாகிவிடாதா?

வள்ளுவரே நான் தெரியாமல் கேட்கிறேன். ஆண்களை வலிந்து கவிதை எழுதுகிறாயே, எங்களைப் பற்றி ஏதேனும் எழுதியிருக்கிறாயா?

காமுகர்கள் எங்கள் மீது பாய்கின்ற பொழுது நாங்கள் எங்கள் உடலிலிருந்து வெளியேறி விடுகிறோம். ஆண்கள் சுவைப்பது எங்கள் பிணத்தைதான்.

பிணத்திற்காக விளக்கு வைத்துக்கொண்டு தேடி அவர்களுக்கு குறள் எழுதிய நீ எங்களுக்காக என்ன எழுதியிருக்கிறாய்?

ஓரிடத்தில் சொல்லியிருக்கிறாய். உடல் என்பது காயம் என்று. சரிதான். எங்கள் உடம்பிலுள்ள காயங்கள் எல்லாம் காமுகர்களால் ஆனவை.

இன்னொரு இடத்தில் சொல்லியிருக்கிறாய் உடம்பு என்பது புண் என்று. சரிதான். புண்ணில் பூத்த பூக்கள் நாங்கள்.

வள்ளுவரே, உங்களிடம் நான் மூன்று கேள்விகள் கேட்கிறேன்
எந்த விலைமாது
சதை விற்று முதலாளி ஆனாள்?

எந்த விலைமாது
இரவுகளை விற்றுக் கிழக்கை கிரையம் செய்துகொண்டாள்.

எந்த விலைமாது
தன் மகளுக்குக் குபேரன் வீட்டில்
சம்பந்தம் பேசினாள்.

கவிதையை இப்படி முடிக்கிறார்

வள்ளுவரின் கண்கள் அவர்களுக்கு
விடையளித்தன
விடையளிக்க முடியாமலே!

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் ‘வள்ளுவம்’ எனும் இரு திங்கள் இதழில் வெளியான கவிதைகள். திரு. பல்லடம் மாணிக்கம், பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி இருவரும் இணைந்து நடத்திய இதழ் இது. இந்த இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்த ஈரோடு தமிழன்பனிடம் ஒவ்வொரு மாதமும் இதழுக்கு ஒரு கவிதை தரும்படி கேட்கிறார்கள். அப்படியாக இதழுக்கு இருபது கவிதைகள் எழுதிக்கொடுக்கிறார். கூடுதலாக ஒரு கவிதை கணியன் பூங்குன்றனார் பற்றியது.

பூங்குன்றனாரின் பேரன்கள் ஒரு பட்டறை தொடங்குகிறார்கள். அந்தப் பட்டறை உலக மனிதர்களை உருக்கி வார்க்கும் பட்டறை. சத்திய சுத்தியல் கொண்டு அடிக்கிறார்கள். அந்தச் சுத்தியலின் சம்மட்டி ஓசை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று ஒலிக்கிறது.

அந்தப் பட்டறைதான் இன்றைய உலகிற்குத் தேவையான பட்டறை. அந்தப் பட்டறையில் ஒன்றுதான் இந்த புதுக்கோட்டை வீதி இலக்கியக் களம். உலக இலக்கியத்தின் ஒரே தாரக மந்திரம் யாதும் ஊரே யாவரும் கேளிர்.

வணக்கம் வள்ளுவ. வணக்கம் ஈரோடு, வணக்கம் ஈரோடு தமிழன்ப, வணக்கம் வீதி, வணக்கம் நண்ப.

( 26.10.2023 அன்று புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களத்தில் ஈரோடு தமிழன்பனின் ஒரு நூலான சாகியத்ய அகாடமி விருது பெற்ற வணக்கம் வள்ளுவ நூல் குறித்து ஆற்றிய உரையின் சாராம்சம். அவருக்குப் புகழஞ்சலி செலுத்தும்படியாக அன்றைய உரையை எழுத்துருவாக்கம் செய்து பதிவிடுகிறேன்.)

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *