கதைகள்

புதிதாய் மலர்ந்தான்… கதை… சோலச்சி 

சோலச்சி

அலைபேசியில் தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. எதையும் சட்டை பண்ணாமல் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான் சோழன்.

“இவ்ளோ நேரம் என்ன பண்றான். மணி ஒன்பது ஆகுது. இன்னும் எந்திரிக்கல…” கேஸ் அடுப்பில் சமைத்துக்கொண்டே புலம்பினாள் சகுந்தலா.

“டேய் போன் அடிக்குதுல.. எந்திரிடா…” அடுப்படியிலிருந்து அதட்டினாள்.
“இந்த வூட்ல… ஞாயித்துக்கெழமை கூட நிம்மதியா தூங்க முடியல” முணுமுணுத்துக் கொண்டே எழுந்தான்.

“என் செல்லம்ல… முகத்த அலம்பிட்டு வாப்பா… டீ போட்டு வச்சுருக்கேன்.”
“ம்… ஏம்மா இன்னைக்கு லீவு தானே…” கடுகடுத்த முகத்துடன் பார்த்தான்.
“போன வாரம் பதினொரு மணிக்குத்தான் எந்திரிச்ச… நா…. ஏதாச்சும் கேட்டேனா… என் மகனோட வேலை அப்படி. ஆறுநாளும் அலையுறான். தூங்கட்டும்னு விட்டர்றேன்.”

“இன்னைக்கு என்னம்மா ஆச்சு உனக்கு… அதே மாறி விட்ற வேண்டியததானே…” தேங்காய் பூ துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு இருந்தவனின் தலையை மெதுவாக வருடிக் கொண்டே இப்படி சொன்னாள்….

“பக்கத்து வீட்டு சின்னம்மா ஆயாளுக்கு வயித்தே வலிக்குதாம்பா… காலைல இருந்து பத்து தடவைக்கும் மேல தாத்தாவும் ஆயாவும் வந்துட்டு போறாங்கப்பா.. பத்து மணிக்கு டாக்டர் வந்துருவாரு கூட்டிட்டு போயிட்டு வாயா… அவங்களுக்கு நம்மள விட்டா யாரு இருக்கா…”
“அந்தக் கெழவன் கூட்டிப் போக வேண்டியதுதானே… சளிப்புடன் பேசியவனைத் தடுத்தாள்.
“அப்புடி சொல்லாதப்பா. அந்த தாத்தாவுக்கும் வரவர கண்ணுத் தெரியலையாம். ஓம் மேல ரொம்பவும் பாசமா இருப்பாங்கய்யா. சின்னப்புள்ளைலருந்து தூக்கி வளத்தவுங்க…”
“ஆமா… பெரிய பாசம்… இந்த மாறி வேலைக்கு ஆள் வேணும்ல அதான்…”

“நம்ம தாத்தா பாட்டியா இருந்தா கூட்டிப் போக மாட்டியா…”
“எனக்குத்தான் தாத்தா பாட்டியே இல்லையே…”
“அப்டினா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உடம்பு சரியில்லனா இப்படித்தான பண்ணுவியாப்பா…”
அம்மா.. அப்படி சொல்லாதம்மா… சாப்பிட்டு கூட்டிப் போறேம்மா. போதும்…மா. சுத்தி முத்தி பார்த்தான்.

“அம்மா.. அப்பா எங்க..”
“கறி வாங்கப் போனவர இன்னும் காணோம்யா…”
அம்மாடி… பேரன் எந்திரிச்சுட்டானா.. வாசலிலிருந்த
சின்னம்மா ஆயாவின் உரிமைக்குரல் இதயக் கதவை தட்டியது…

எந்திரிச்சுட்டான் அத்தை… திண்ணையில உட்கார்ந்து இருங்க… கிளம்பி வர்றான்.
சளிப்புடனே கிளம்பிப் போனவனிடம் “வண்டிய பாத்து ஓட்டிக்கிட்டுப் போயா… சமத்துல்ல…. தோளுக்கு மேல் வளர்ந்தவனை திட்டவா முடியும் கொஞ்சி அனுப்பினாள்
சின்னம்மா ஆயா… வண்டியின் கைப்பிடியை இறுக பிடித்துக்கொண்டாள்.
இருசக்கர வாகனம் கிளம்பியது.

சாகப்போற காலத்துல நம்ம உசுர எடுக்குதுக. பத்துகிலோ மீட்டர் போகனும்… வண்டி என்ன தண்ணிலயா ஓடுது… முணுமுணுத்துக் கொண்டே ஓட்டினான்.

“ராசா… ஆசுபத்திரில எங்கிட்டும் போயிடாம பக்கத்துல இருந்து மருந்து மாத்திரை வாங்கிகுடுய்யா…”
“ம்… வாங்கித் தாரேன். வாங்கித் தாரேன். வண்டி ஓட்டும் போது செத்த பேசாம வாய்….யா…” எரிச்சலாகவே பேசினான்.

எளவட்ட புள்ளைங்க அப்படித்தான் இருக்கும். தூங்கிக்கிட்டு இருந்த புள்ளைய எழுப்பி கூட்டியாந்தா அது என்ன பண்ணும். நாமதான் நயந்து போகனும். இவங்கள விட்டாலும் நமக்குன்னு யாரு இருக்கா.. அதுனால அவனின் கோபத்தை பெருசா எடுத்துக்கல.
கோபிச்சக்காத ராசா.. தயங்கி தயங்கியே பேசினாள்.

காலைல பாண்டி ஏழெட்டு தடவைக்கும் மேல போன் பண்ணிருக்கான்… போன எடுத்திருந்தா அவன் கூட சாந்தி தியேட்டருக்கு படத்துக்காச்சும் போயிருக்கலாம்… இத கூட்டிப் போயிட்டு கொண்டாந்து விட எவ்ளோ நேரம் ஆகுதோ. நேரங்காலம் தெரியாம அவரு வேற கறி எடுக்கப் போயிருக்காரு. அவராச்சும் கூட்டிப் போயிருக்கலாம்….. அப்பா மீதும் கோபம் தலைக்கு ஏறியது. அதனால் மேடு பள்ளம் பார்க்காமல் வண்டியை ஓட்டினான்.

வண்டி தூக்கித்தூக்கிப் போட்டது… மெதுவா போயா… பாவிப் பயலுக ரோடு போட்டு அஞ்சாறு மாசம் கூட வரல. அதுக்குள்ள டோப்ப டோப்பயா எடுத்துக்கிட்டு பல்லக்காட்டுது. என்ன மாறி கெழவி கெட்டயெல்லாம் இதுல ரெண்டு தடவ போனா சீக்கிரம் போயி சேர்ந்துரு வேண்டியதுதான்…. சொல்லிச் சிரித்துக்கொண்டாள்.
பதிலுக்கு அவனும் நக்கலாக சிரித்துக்கொண்டான்.
தேரைவிட கொஞ்சம் வேகமாக ஓட்டினான். வண்டி மருத்துவமனை வாசலில் நின்றது.
ஆயாவை ஓரிடத்தில் உட்கார வைத்து விட்டு டோக்கன் வாங்குவதற்காக சென்றான்.
யாரு… அது ஒங்க பேரனா… பேச்சு வந்த திசையில் திரும்பினாள் ஆயா.
ஆம. ஆத்தா.. ஏம்புட்டு பேரன்தான். உனக்கென்னத்தா பண்ணுது…
ஓரமாய் உட்கார்ந்திருந்த காத்தாயி பாட்டி நடுங்கிக் கொண்டு இருந்தாள்.
அவளின் நெற்றியில் தொட்டுப் பார்த்தாள். குளிர் காய்ச்சல் கை வைக்க முடியவில்லை. வீட்டுக்காரர் இவ்ளோ நேரம் இருந்துட்டு இப்பத்தான் டீ குடிக்க போனதாக சொன்னாள்.
என்ன ஆத்தா… இப்புடி நெருப்பா கொதிக்குது… ஏதாச்சும் சாப்டியா.. ஒரே வயசு ஆளுங்குறதால அவளின் வலியை உணர்ந்திருந்தாள் ஆயா.

இல்லை என்பதாக தலையாட்டினாள். கண்களில் பூசம் பிடித்தது போல் இருந்தது. காத்தாயி பாட்டியை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த டீக்கடைக்குச் சென்றவள் பண்ணும் டீயும் வாங்கி வந்து கொடுத்தாள்.

ஏம்புட்டு வயசுதான் ஒனக்கு. இருந்தாலும் நீ எனக்கு ஆத்தாமாறி கண்கலங்கினாள் காத்தாயி. டீயில் பண்ணை நனைத்து சாப்பிட்டாள்.

ஏத்தா…இதுக்கு எதுக்கு அழுகுற… ஆம… இம்புட்டு நேரமாயும் ஓம்புட்டு ஆம்பளயவே காணோம்.
மீண்டும் கண் கலங்கினாள் காத்தாயி.

ஆயாவுக்கு ஒன்னும் புரியவில்லை. தப்பா ஏதும் கேட்டுப்புட்டோமோ என யோசித்தாள்.
அவரு போயி அஞ்சாறு வருசம் ஆச்சு. மயன் மருமவ பேரப்புள்ளைகனு இருந்து என்ன பண்ண. நானா தான் தட்டுத்தடுமாறி வந்தேன்… அவள் சொன்னதும் ஆயாவுக்கும் கண் கலங்கியது. வீட்டுக்காரு இருக்க நெனப்புலயே வண்டி ஓடுது. ம்… யாரு யாருக்குபோயி ஆறுதல் சொல்றது என நினைத்துக் கொண்டாள்.

ஆயா… நமக்கு ஆறாவது டோக்கனு… சோழனின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
ராசா… உங்க ஆயாவ நல்லா வச்சுக்கயா… எனக்கும்தான் ஒரு பேரன் இருக்கான்… ம்… நா வாங்கி வந்த வரம். நல்லா இருக்கட்டும்.. ஒன்ன மாறி புள்ளைய பாக்குறதே பெரிசுயா. நீ நல்லா இருக்கனும்ய்யா..” காத்தாயி சொன்னதும் கண் கலங்கினாள் சின்னம்மா ஆயா.. ஆயாவின் நிலைமை அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மூனா நம்பர் டோக்கன் கூப்பிட்டதும் எழுந்தாள் காத்தாயி…
“ராசா.. இந்த ஆயாவ டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயா… இந்த டீ கிளாச கொடுத்துட்டு வந்தர்றேன்… ஆயா சொன்னதும் தலையாட்டினாள்.
உன்னக் கூட்டி வந்ததே பெருசு… இதுல… மத்த கெழவிகளுக்கும் பாக்கனுமா எல்லாம் ஏ…நேரம் என அலுத்துக்கொண்டான்”.
சிறிது நேரம் கழித்து,
ஆறா நம்பரு ரெடியா இருங்க… சத்தம் கேட்டது.

இந்தக் கெழவி எங்க போச்சு. ஒரு எடத்துல இருக்க மாட்டேங்குது.. நோட்டமிட்டான். எதிரே வந்து கொண்டு இருந்தாள் ஆயா.

“ராசா… நம்மள கூப்புட்டாங்களா.. அந்த ஆயா புலம்பிக்கிட்டே இருந்துச்சா . அதான் மனச தேத்தி அனுப்பிவச்சேன்…
“சரி.. வாயா…” தலையை சொரிந்து கொண்டான். எப்படா இது விட்டு கிளம்புவோம்னு இருந்துச்சு அவனுக்கு.
டாக்டரிடம் கூட்டிப் போனான். பரிசோதனை செய்தார். எழுதிக் கொடுத்த சீட்டை வாங்கி ரத்தம் எடுக்குற இடத்திற்கு கூட்டி வந்தான். மருத்துவ செலவுக்காக இரண்டாயிரம் பணம் வைத்திருந்தாள். ஆயாவிடம் வாங்கிக் கொண்டான்.

ஆத்தா… மெதுவா குத்துத்தா வயசான உடம்புல… என்று சொல்லிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள். ம்….நறுக்குன்னு குத்திப்புட்டியேத்தா…. பஞ்சை வைத்து அழுத்தினாள்.
இரத்தம் எடுத்த கையை மடக்கிக் கொண்டே வந்த ஆயாவை உட்காரச் சொன்னான்..
மருந்து மாத்திரை பீஸ் என எல்லாவற்றுக்கும் சேர்த்து ஆயிரத்து நானூறு கட்டினான்.
கெழவிக்கு என்ன தெரியவா போகுது. பெட்ரோல் போட நூறு ரூபா வச்சுக்குவோம். ஆயிரத்து ஐநூறுனு கணக்குச் சொல்லிக்குவோம். நூறு ரூபாயை சட்டைப் பைக்குள் வைத்தான்.
ஆயா… மருந்து மாத்திரை இந்தா இருக்கு. மீதி அஞ்சு நூறுபா தாளு வச்சுருக்கேன். பைக்குள்ள வையிங்க… அஞ்சு நாளு கழிச்சு டாக்டர் வரச் சொன்னதா சொன்னான்.

வண்டி தயாரானது.
கம்பியை இறுக பிடித்துக்கொண்டாள்.
சூஸ் கடைக்கிட்ட நிறுத்தச் சொன்னாள்..
கெழவிக்கு சூஸ் வேற கேட்குதாக்கும். போற போக்கப் பாத்தா இப்போதைக்கி வீடு போயி சேரமாட்டேன்…. அலுத்துக் கொண்டான்.

கடைக்காரரிடம் ஆப்பிள் சூசு ஒன்னு போடச் சொன்னாள்.
கொய்யால… இந்த வயசுல ஆப்பிள் சூசு கேட்குதா… ம்… பணங்காசு நெறைய இருக்குமோ…. நினைப்பு அடங்குவதற்குள் அவனிடம் ப்பிள் சூசை நீட்டினாள். இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.

என்னய்யா அப்புடி பாக்குற… உனக்கு தாயா. காலைல நீ சரியா கூட சாப்புட்ருக்க மாட்ட. இந்த கெழவிக்காக ஒன்னோட வேலைய விட்டுட்டு வந்திருக்க… எங்க வீட்டு சாமியா…நீ. ஆயா சொல்லும்போது ஆப்பிள் சூஸ் தொண்டைக் குழிக்கு கீழே இறங்க மறுத்தது.
நூறு ரூபாயை நீட்டி பெட்ரோல் போட வச்சுக்கச் சொன்னாள். வண்டி என்ன நம்ம ஊரு கொளத்து தண்ணியா ஓடுது. புடிய்யா… என சட்டைப் பைக்குள் வைத்து தினித்தாள்.
“பரவா இல்ல ஆயா…”

எம் பேரன்தாயா நீயும்.. வாங்கிக்க… ஒத்தாசைக்கி நீ இல்லன்னா எங்க கதி என்னாவும்.. ஆயாவின் செயலால் அவன் மனசு உறுத்தியது. உடம்பு பொசுக்கென்று வேர்த்தது. முகம் வாட்டமாக இருப்பதை கண்டு அவனை உற்றுப் பார்த்தாள்.

என்ன ராசா… கண்ணுல தூசிகீசி விழுந்துருச்சா…..
‘ஒன்னுல்ல ஆயா.. காசு வேணாம் புடினு திருப்பிக் கொடுத்தான்.
இந்த வயசுலயும் மத்தவங்க செரமத்த பாத்து உதவி செய்யுற ஆயாவ பக்கத்துலருந்தும் புரிஞ்சுக்கலயே…காத்தாயி பாட்டி கண் முன்னே வந்து சென்றாள்.
ஆயா… அவன் அழைத்தான். அவனது அழைப்பு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. கைகளை இறுக பற்றிக் கொண்டதைப் போல் உணர்ந்தாள்.

என்ன ராசா… அவனை ஏறடுத்து பார்த்தாள்.
தாத்தா என்ன பழம் விரும்பி சாப்பிடுவாரு….
இப்படி ஒருநாளும் அவன் கேட்டதே இல்லை. புதுசாக இருந்தது. அம்மா ஏதும் சொல்லி விட்டுருக்குமோ என நினைத்துக் கொண்டாள்.
ஆரஞ்சு பழம்னா அந்த ஆம்பளைக்கி உசுருயா…
ஒங்களுக்கு அது புடிக்காதா..
இந்தக் கெழவிக்கு சாத்துக்குடிதானய்யா புடிக்கும்.. விக்கிற வெலவாசில அதெல்லாம் சாப்பிட்டு வெகு நாளாச்சுய்யா.. அவரு நல்லா இருந்தா போதும்….
இரு ஆயா.. வர்றேன்.. பழக்கடைக்கு போனான். பை நிறைய பழங்களை வாங்கி வந்தான்.
என்ன ராசா ஆயா ஒங்களுக்குத்தான இவ்ளோ பழமா… இதை இவள் எதிர்பார்க்கவே இல்லை.. ரொம்ப காசு வந்துருக்குமே ராசா..

விடுய்…யா.. நா ஒங்க பேரன்தானே…
ராசா.. எம்புட்டுப் பெரிய வார்த்தைய கேட்டுப்புட்ட.. அவன் கையை பிடித்துக்கொண்டாள். கண் கலங்கினாள்.

எதுக்குய்..யா இப்ப அழுகுற… கண்ணீரைத் துடைத்து விட்டான்.
வீட்டுக்கு வந்த சின்னம்மா ஆயா… சகுந்தலாவிடம் மட்டுமல்ல… எல்லோரிடமும் ஏம்…பேரன் பழம் வாங்கி கொடுத்தான் என சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டாள்.
புதிதாய் மலர்ந்தவனாய் சின்னம்மா ஆயாவின் முகத்தையே ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருந்தான் சோழன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *