இலக்கியச்சோலை

பரதக் கலையின் தாய்… இலக்கிய உரை….  அண்டனூர் சுரா

அண்டனூர் சுரா
அண்டனூர் சுரா

அனைவருக்கும் வணக்கம் ,

மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாவட்ட நிகழ்வில் உரையாற்றுகிறேன். வணங்குகிறேன்.

எழுத்தாளர் ஆர். நீலா அவர்கள் எனக்கு வாலி போன்றவர் . எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ‘கொங்கை’ எனும் குறுநாவலுக்கு முதல் விமர்சனம் எழுதியவர் இவர்தான். அந்த நாவல் மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. என் மீது பாய்ந்த சொற்கணைகளின் பாதியை இவர் வாலியைப் போல தன் மீது ஏந்திக்கொண்டார். அதற்காக இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆர்.நீலா அவர்கள் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். அவரது சமீப வரவு ‘அழகனும் அழகிகளும்’. இந்த நூல் குறித்த விமர்சனத்திற்கு நான் வந்துகொண்டிருக்கையில் தமுஎகச மாவட்டச் செயலர் தோழர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்கள் இந்த நூல் குறித்து பேச உங்களுக்கான நேரம் பத்து நிமிடங்கள் என்று குறுந்தகவல் அனுப்பினார். அவர் கொடுத்திருக்கும் இந்த நேர அளவிற்குப் பதில் சொல்வதிலிருந்து இந்த நூலுக்கான விமர்சன உரையைத் தொடங்கலாமென இருக்கிறேன்.

அழகனும் அழகிகளும் எனும் இந்நூல் தேவதாசி எனும் தேவரடியார் குறித்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் கள ஆய்வு செய்து எழுதப்பட்டிருக்கிறது. ஒரு தேவதாசி ஓர் அவையில் சதுர் நடனம் ஆடுகையில் அவளது நடனத்திற்குக் கால நேரம் நிர்ணயிக்கும் அதிகாரம் மன்னருக்குகூட இருந்திருக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பரதக் கலையின் தாய் சதுர் கலை. பரதக் கலை பாவம் என்கிற உணர்ச்சி, ராகம் என்கிற இசை, தாளம் இவற்றால் நிகழ்த்தப்படும் நாட்டியம். பாவம் ஆடுகிறவரிடம் இருக்கும். இசையின் தாளமும் பாட்டும் வெளியில் வாசிப்பார்கள். தாளத்தையும் இசையையும் நிறுத்தினால் பரதம் நின்றுவிடும். தாளமும் இசையுமில்லாமல் பரதம் நிகழ்த்தப்படுவதில்லை. சதுர் நடனம் அப்படியானதல்ல.

சதுர் சதுர வடிவிலான அவையில் நிகழ்த்தப்படும் கலை. எட்டு நடனக் கலைஞர்கள் சதுர அமைப்பில் நின்று ஆடுவதும் உண்டு. சதுர் ஆடுகிறவர் பாடலைப் பாடிக்கொண்டே ஆடுவார். தாளம் இசை இல்லாமல்கூட அவளால் ஆடமுடியும்.

பரதக் கலையில் ஆடுகிறவர் பிரபலமானவராக இருப்பார். பார்க்கிறவர்கள் பாமர மக்களாக இருப்பார்கள். சதுர் நடனத்தில் ஆடுகிறவர் வெளியுலகம் தெரியாதவராக இருப்பார். பார்க்கிறவர்கள் மன்னர், ஜமீன், நிலச்சுவான்தார், செல்வந்தர்களாக இருப்பார்கள்.

சதுர் நடனம் பார்க்க வருவதே நடனமாடும் பெண்ணின் பார்வை தன்மீது பட வேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் எப்படி ஆடுகிறவளுக்கு நேரம் நிர்ணயிப்பார்கள்?

ஜான் கிரே JOHN GRAY எனும் எழுத்தாளர் MEN ARE FROM MARS, WOMEN ARE FROM VENUS என்று ஒரு நூல் எழுதியுள்ளார். ஆண்களும் பெண்களும் இருவேறு கிரகவாசிகள் என்பது இந்த நூல் சொல்லும் செய்தி. ஆகவேதான் என்னவோ பெண்கள் குறித்து, அவர்களின் வாழ்வு, அந்தரங்கம், உடை, அங்கங்கள்… குறித்து ஆண்கள் எழுதினால் அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகிவிடுகிறது. சில பல நேரங்களில் பெண்கள் சொல்லும் கருத்தும்கூட விவாதத்தை உண்டாக்கி விடுகிறது.

‘அழகனும் அழகிகளும்’ எனும் இந்நூல் தேவரடியார் என்கிற தேவதாசி குறித்து ஆய்வுப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளது. நாற்கரம் பதிப்பகம் வழியே 112 பக்கங்கள் அளவில் இந்த நூல் வந்திருக்கிறது.

இந்த நூலுக்கு ‘அழகனும் அழகியும்’ என்று தலைப்பு வைத்திருக்கலாமென்று நினைத்தேன். இந்தத் தலைப்பை மனதிற்குள் அசைப்போட்டுப் பார்த்தேன். தலைப்பு தவறாகத் தோன்றியது. காரணம் ஓர் அழகனுக்கு ஓர் அழகி இருக்க முடியாது. அப்படியிருந்தால் அவன் அழகனாக இருக்க முடியாது. அப்படியாகத்தான் கதைவழி சமூகம் வாய்மொழி கதை, நாட்டார் கதை, மரபு கதை, ஏன் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியும் கூட சொல்கிறது.

இந்த நூலை வாசிப்பதற்கு முன்பாக ஒரு முறை ஆர்.நீலா அவர்களை மனத்தராசில் நிறுத்திப் பார்த்தேன். பிறகு அவர் எழுதிய அழகனும் அழகிகளும் நூலை வாசித்து நிறுத்தினேன். நூலை நான் வாசித்து முடித்ததும் நீலா அவர்கள் ஓர் எழுத்தாளராக அவரது வாசகனாகிய என்னை ஏமாற்றிவிட்டார் என்றே நினைக்கத் தோன்றியது. எழுத்தாளராக என்னை அவர் ஏமாற்றினாலும் அவர் எழுதிய அழகனும் அழகிகளும் எனும் இந்நூல் என்னை ஏமாற்றிடவில்லை.

ஒரு வாசகனை எழுத்தாளர் ஏமாற்றுவது அவர் எழுதிய நூல் ஏமாற்றுவது இவ்விரண்டுக்குமான வித்தியாசம் என்ன என்பதை இந்த உரையில் வழியே விளக்க விரும்புகிறேன்.

அழகனும் அழகிகளும் எனும் இந்நூல் அவரிடம் பெரும் உழைப்பை வாங்கியிருக்கிறது. தூரத்தில் நின்று செய்த ஆய்வுகள் அல்ல,இவை. தேவதாசிகளோடு நெருங்கிப் பழகி அவர்களது வாழ்க்கை, இன்பம், துன்பம், ஏமாற்றம், உடை, நடை, ஒப்பனை, தாளம், சுதி, பாவனை, பாட்டு, புதிர் என்று பலவற்றை இந்நூல் ஆய்வு செய்கிறது. சதுர் நடனத்திற்கென்று இலக்கணம் இருக்கிறது. சதுர நடனத்தை பாடியுள்ள இலக்கியங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

தமிழ்மொழியில் மட்டுமல்ல உலகின் எந்தவொரு மொழிச் சொல்லையும் சுருக்கி அழைக்கின்ற போது அந்தச் சொல் அழகு பெறும். புதுக்கோட்டை – புதுகை, கொடும்பாளூர் – கொடும்பை இப்படியாக. ஆனால் தேவரடியார் எனும் சொல்லின் சுருங்கிய வடிவம், பெண் குலத்திற்கு எதிரான சொல்லாகவும் பெண் குலத்தை நடத்தையோடும் வாழ்வோடும் தாழ்வுப்படுத்தும் சொல்லாகவும் மாறியிருக்கிறது.

தேவர், தேவன் இவ்விரு சொற்களும் வடமொழி சொற்கள். அடிகள் என்பது தமிழ்ச்சொல். தேவடியார் என்கிற சுருங்கிய வடிவம் ஊத்தப்பேச்சு, கெட்டச் சொல் எனும் அளவிற்கு ஆகிவிட்டிருக்கிறது. இந்தச் சொல் தியாகராஜர் பாகவதர் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்றிருக்கிறது. இச்சொல்லை முதன் முறையாக கேட்கையில் ஊத்தச் சொல் எப்படி இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றது என்று அதிர்ந்தேன்.

அந்தப் படத்தில் ஒரு பிராமணப் பெண் சொல்வாள், ஒரு தேவரடி எப்படி ஒரு பிராமணத்து வீட்டுல ஆடலாம் என்று. எனக்கு இந்த உரையாடல் வியப்பாக இருந்தது. தேவதாசி முறையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அவர்கள்தான். அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணே தேவதாசி வீட்டைவிட்டு விரட்டியடிப்பாள். தேவதாசிகளுக்கு அந்தச் சமூகம் கொடுத்த மரியாதை இவ்வளவுதான்.

இன்று தேவதாசி முறை நடைமுறையில் இல்லை. இந்தியாவில் தேவதாசி முறை கடைசியாக ஒழிந்தது புதுக்கோட்டையில்தான். சென்னை மாகாணத்தில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டப் போதிலும் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அந்த முறை நடைமுறையில் இருந்தது. சுதந்திர இந்தியாவில் அந்த முறை ஒழிக்கப்பட்ட போதிலும் புதுக்கோட்டையில் இருந்தது. புதுக்கோட்டை சென்னை மாநிலத்தோடு இணைந்த பிறகுதான் தேவதாசி முறை ஒழிப்பு முழுமையாக நடைமுறைக்கு வந்தது.

தேவதாசி முறை ஒழிப்பு சட்டத்தில் டாக்டர் முத்துலெட்சுமி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. தேவதாசி முறைக்கு எதிராக பிரித்தானிய மெட்ராஸ் பிரசிடென்சி சட்டமன்றத்தில் அவரது வாதம், விவாதம், அவர் ஆற்றிய உரை இவற்றை உள்ளடக்கி அவர் எழுதிய நூல் ‘Why should Devadasi Institution in Hindu Temples be Abolished’ (ஏன் இந்து கோவில்களில் தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும்?)

இந்த நூலுக்கு மறுப்புத் தெரிவிக்கும் படியாகவும் தேவதாசி முறையை மீண்டும் எழுச்சிப் பெற வைக்க வேண்டும் என்கிற முறையிலும் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் எழுத்தாளர் ஒரு பிரபலமான ஒரு இதழில் தேவதாசி முறையை வரவேற்றும் ஆதரித்தும் ஒரு கட்டுரை எழுதினார். தேவதாசி முறை நல்ல முறை என்றும் அவர்களால் கோவிலின் புனிதம் காக்கப்பட்டதென்றும் சில அமைப்புகள் அதைச் சரியாக புரிந்து கொள்ளாமல் தேவதாசி முறைக்கு எதிராக பேசி தேவதாசிகளுக்குக் களங்கம் விளைவித்திட்டார்கள் என்றும் எழுதினார்.

இந்தக் கட்டுரை கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கவனத்திற்குச் சென்றது. அந்தக் கட்டுரையை வாசித்த அவர் எழுத்தாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். “தேவதாசி குறித்த உங்கள் கட்டுரை வாசித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தேவதாசியே எழுதியது போல ” என்று. இந்த சொல்லாட்சியில் கூனிக்குறுகிப் போனார் அந்த பிராமண எழுத்தாளர். பிறகு அவர் இந்தக் கட்டுரைக்காக வருத்தம் தெரிவித்தார்.

அந்த எழுத்தாளர் தேவதாசிகளைப் பார்த்ததைப் போல ஆர். நீலா பார்க்கவில்லை. இவர் தேவதாசிகளைச் சக தோழமையாக, தோழராக பார்த்திருக்கிறார். அந்த உணர்வுதான் தேவதாசிகளை ஆய்வுப் பூர்வமாக எழுத இவரைத் தூண்டியிருக்கிறது.

ஆர். நீலா அவர்கள் இந்த நூலில் தேவதாசி எனும் தேவரடியார் என்கிறார். தேவதாசி என்பதும் தேவரடியார் என்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். ஆனால் தேவரடியார் என்று அழைக்கப்பட்ட காலமும் தேவதாசி என்று அழைக்கப்பட்ட காலம் முன்னது, பின்னது.

இந்த நூல் முற்பகுதி தேவரடியார் குறித்து பேசுகிறது. பிற்பகுதி தேவதாசி குறித்து பேசுகிறது. இந்த நூலை முன் பக்கத்திலிருந்தும் வாசிக்கலாம். பின் பக்கத்திலிருந்தும் வாசிக்கலாம். முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் நோக்கி வாசிக்கையில் தேவரடியார் எப்படி தேவதாசிகள் ஆனார்கள் என்றும் பின் பக்கத்திலிருந்து முன்பக்கம் நோக்கி வாசிக்கையில் தேவதாசிகள் முன்பு எப்படியெல்லாம் தேவரடியார்களாக இருந்தார்கள் என்றும் அறிய முடிகிறது.

இந்த நூல் தேவதாசிகள் குறித்த நூல் என்று சொல்வதைக் காட்டிலும் தேவரடியார் குறித்த நூல் என்று சொல்வது சாலப் பொருத்தமாக இருக்கும்.

அழகனும் அழகிகளும் எனும் நூலின் தலைப்பைப் பார்த்ததும் பலருக்கு ராஜராஜ சோழனும் அவன் உருவாக்கிய தளிச்சேரி அழகிகளும் நினைவுக்கு வருவார்கள். சிலருக்கு விஜய நகரப் பேரரசு கிருஷ்ணத் தேவராயரும் அவர் ஏற்றுமதியாக இங்கே அழைத்து வந்த பெண்கள் நினைவுக்கு வருவார்கள்.

அழகன் என்பவன் விராலிமலையில் குடிகொண்டுள்ள முருகன். அழகிகள் என்பவர்கள் அவனைத் துணைவனாக, காதலனாக, உற்ற முன்னவனாக ஏற்று தொண்டுசெய்த அழகிகள். இதுதான் அழகனும் அழகிகளும்.

இந்நூல் 28 தலைப்புகளின்கீழ் எழுதப்பட்டுள்ளது. தேவடியார்களின் நடனம், அவர்கள் குறித்த ஓவியம், கல், காவியம், கோலம், வாழ்வு, கணிகை, வதை, விடுகதை, தொடுகதை, வேல், பூ, ஊடல்,, கூடல், வரலாறு…பொருண்மைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களோடு இவர்களின் முன்னேற்றத்திற்கு உற்ற வழிகாட்டியாக இருந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களான திரு.சந்திரசேகர், அறிவொளி இயக்கப் புகழ் ஷீலாராணி சுங்கத் மற்றும் திருமதி கவிதா ராமு ஆகியோர்களை இந்நூல் நன்றியுடன் நினைவுகூர்கிறது.

இந்த நூலின் முதல் கட்டுரையான பிந்துமதியின் கதை வாசிப்பதற்கு அவ்வளவு சுவராசியமாக இருக்கிறது. “அவள் பெயர் பிந்துமதி. அவளது வளர்ப்புத் தாய் அவளுக்கு இப்படியொரு பெயர் வைத்திருந்தாள்” என்பதாக அக்கட்டுரை தொடங்குகிறது. பிந்துமதியை எல்லாரும் சிலப்பதிகாரம் மாதவியாகப் பார்க்கிறார்கள். அவள் பேரழகி. அவளது அழகில் மயங்கி வருகிறார் ஒரு ஜமீன். அவள் சதுர் நடனம் ஆடுகையில் கடைசியில் விடுகதை சொல்கிறவள். அதைப் பிரிக்க பலரும் முயல்கிறார்கள். ஜமீன் எப்படியேனும் பிரித்து அவளது அன்பைப் பெற்றுவிட முயல்கிறார். அவருக்கு அவரது குதிரை வண்டியோட்டி உதவு செய்கிறான்.

மறுநாள் சதுர் நடனத்தின்போது குதிரைவண்டியோட்டி சொல்லிக்கொடுத்த ஒரு பாடலைப் பாடி அதன் பொருளைப் பிரித்து பிந்துமதியின் அன்பைப் பெற்றுவிட முயல்கிறார் ஜமீன். அவளது ஜாடைக்கண் அவர் மீது விழுகிறது. அவளுக்காக நகை நட்டுகள், ஆடை, அணிகலன்கள் வண்டியில் ஏற்றிக்கொண்டு அவளைத்தேடி வருகிறார். அவ்வளவையும் அவள்முன்பு வைக்கிறார். இவற்றை அணிந்துகொண்டு வருகிறேன் என்று அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொள்கிறாள். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஆவேசமாகத் தட்டி திறந்து பார்க்கிறார். உள்ளே அவளைக் காணோம். கோபமாக வெளியே வருகிறார் ஜமீன். வெளியே குதிரை வண்டி ஓட்டியவனைக் காணோம். இந்த பிந்துமதியைக் கவர்ந்து சென்றவன் முருகன் என்பதாக தேவசதாசிகள் நம்புகிறார்கள். இந்தக் காட்சியை எழுத்தாளர் அவ்வளவு அழகாக புனைவாக்கம் செய்துள்ளார்.

கடுவன் இளவெயினனார் எனும் பரிபாடல் புலவர் இந்த நூலில் பேசப்பட்டுள்ளார். பரிபாடலில் அவர் இயற்றியது மூன்று பாடல்கள். அவற்றில் இரண்டு திருமால் பற்றியது. ஒன்று முருகனைப் பற்றியது.

முருகனைப் பற்றி கடுவன் இளவெயினனார் இவ்வாறு பாடியுள்ளார். சூரபத்மனை அழிப்பதற்காக முருகப் பெருமான் பிணிமுகம் என்ற யானையின் மீதேறிப் போருக்குச் செல்கிறான். போரில் அவன் எறிந்த வேல் கடலில் புகுந்து கடற் பாறைகளைத் தூள் தூளாக்குகிறது. கடலை வற்றச் செய்கிறது. அவ்வேல் தான் சென்ற வேகத்தில் தீயையும் ஒலியையும் எழுப்பியது. தேவர்கள் முதலாக அனைவருக்கும் துன்பம் கொடுத்து வந்த, கடலின் நடுவே மாமரமாகி நின்ற சூரபத்மனை வேருடன் வெட்டி வீழ்த்துகிறது. அவ்வேல் நாவலந்தீவின் வடபகுதியில் உள்ள கிரெளஞ்சம் என்ற பறவையின் பெயரைப் பெற்ற மலையினைத் துளைத்து வழியே உண்டாக்கியது. அத்தகைய சிறப்புடைய வேலினைக் கையில் ஏந்திய வீரன் முருகப்பெருமான் ஆவான் என்று பாடுகிறான்.

ஐந்தாம் நூற்றாண்டு வரை குமரனுக்கு ஒரு மனைவிதான் வள்ளி. வடபுலக் கதைகளில் ஸ்கந்தனும் அவனது மனைவி தேவசேனாவும் வழிபாட்டு தெய்வங்களாக உள்ளார்கள். இவர்கள் தென்புலத்து கடவுள் முருகனோடு இணைக்கப்பட்டு முருகன் கந்தன் இருவரும் ஒருவராகிய வள்ளி தேவசேனா இருவரும் அவனுக்கு மனைவியாகிறார்கள். இந்த தேவசேனாதான், இன்றைய தெய்வானை. இந்தக் கதையை பட்டினப்பாலை வழியே எடுத்தாள்கிறார்.

இந்த நூலின் மொத்தப் பக்கங்களை விடவும் இந்த நூல் எழுத அவர் வாசித்த புத்தகங்கள் அதிகமாக உள்ளன. தேனீக்கூட்டத்தைக் கலைக்காமல் தேனெடுக்கும் முறை ஒன்று இருக்கிறது. அந்த முறையில் இவர் இந்நூலை எழுதியுள்ளார். இவர் பல நூல்களிலிருந்து கையாண்டிருக்கும் மேற்கோள்கள் கட்டுரையின் ஓரிடத்திலும் ஒட்டுப் போட்டு தைத்ததாகவோ, ஒட்டியதை மறைக்க மேற்பூச்சுப் பூசியதாகவோ துருத்தி நிற்கவில்லை.

ஒரு புனைவு எழுத்தாளர் ஒரு வரலாற்று கட்டுரை எழுதுவதற்கும் புனைவு எழுத்தில் பரிச்சமில்லாத ஒரு வரலாற்று ஆய்வாளன் கட்டுரை எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு புனைவு எழுத்தாளன் வரலாறு எழுதுகையில் எழுதப்படும் வரலாற்றுக்கு சிலை வடிக்கிறான். வரலாற்று ஆய்வாளன் வரலாற்றைக் கோபுரமாக அமைக்கிறான்.

அழகனும் அழகிகளும் இந்நூல் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை முழுமைபெறவில்லை அப்படியென்றால் இந்த நூல் அரைகுறையாக எழுதப்பட்டிருக்கிறது என்பதல்ல. இந்த நூலில் எழுதாத பக்கங்கள் இருக்கின்றன அதையும் எழுதி முழுமைப்படுத்த வேண்டும் என்பதைத்தான் இப்படியாகச் சொல்கிறேன்.

ஒவ்வொரு எழுத்தாளர் மீதும் ஒரு முத்திரை குத்தப்படுகிறது. அந்த முத்திரை அந்த எழுத்தாளரை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துகொள்கிறது. ஆர்.நீலா மீது குத்தப்பட்ட முத்திரை இவர் தேவதாசிகளுக்காக உழைக்கிறார். அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார். அவர்களுக்காக பல நலத்திட்டங்கள் அரசிடமிருந்து பெற்றுக்கொடுத்துள்ளார். அவர்கள் குறித்து ஆர்.நீலா எழுதிக்கொண்டிருக்கிறார்,… இப்படியான முத்திரை எனக்குத் தெரிவதற்கு முன்பு நான் தேவரடியார் குறித்து ஒரு நாவல் எழுதலாம் என்கிற முனைப்பில் இறங்கினேன். இந்த நாவலுக்கான தளம் குடுமியான் மலை. குடுமி என்றால் பாண்டியனைக் குறிக்கும்.

இம்மலையில் ஒரு கோவில் உள்ளது. பாண்டியன் சடையவர்மன் காலத்தில் , கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டு காலத்திய கோவில் இது. தேவரடியார்களில் ஒருவரான துக்கையாண்டி மகள் நாச்சி இக்கோவிலை எழுப்பியுள்ளார். இக்கோவில் அவ்வளவாக அலங்காரமில்லாமல் எழுப்பப்பட்டிருப்பதைப் பார்க்கையில் நாச்சி என்கிற தேவரடியார் வாழ்ந்த காலத்தையும் கோலத்தையும் பார்க்க முடிகிறது. “ இக்கோயில் மேற்றளியுடைய மகாதேவற்கு இவ்வூர்த் தேவரடியாரில் துக்கையாண்டி மகள் நாச்சி எழுந்தருளுவித்த திருக்காமக்கோட்டம்” என்று கூறுகிறது. இக்கோவிலை மக்கள் சவுந்திர நாயகி அம்மன் என்று வழிபட்டாலும் பாண்டியன் வீரபாண்டியன் கல்வெட்டு, ‘திருக்காமக்கோட்டத்து நாச்சியார் அருவுடை மலைமங்கையார்’ என்று குறிப்பிடுகிறது.

ஒரு முறை ஆர்.நீலா அவர்கள் என்னை அமர வைத்து தேவதாசிக்கு அவர் கொடுத்துவரும் உழைப்புகளைச் சொன்னார். அந்த கதைகள் கண்ணீரானது. ஏமாற்றங்களால் ஆனது. துயரங்களால் ஆனது. அவர் சொன்ன செய்திகளை அப்படியே பதிவு செய்தாலே அது மிகப் பிரமாதமான நாவலாக இருக்கும். இந்த அனுபவத்தை நான் நூலாக எழுதுகிறேன் என்று சொன்னதன் பிறகு நான் எழுதும் நாவல் முயற்சியை கைவிட்டேன். அவர் எழுதப் போகும் நூலுக்காக காத்திருந்தேன். அந்த நூல்தான் அழகனும் அழகிகளும்.

இந்த நூல் தேவரடியார்களின் கலை சார்ந்த நுட்பமான கருத்துகள் வரலாற்று ஆய்வு பூர்வமான கருத்துகள் நிறைய இருந்தாலும் இந்த நூல் எழுதப்பட்டிருக்கும் வடிவம் என்னை ஏமாற்றியது. இந்த நூல் பெரும் நாவலாக எழுதியிருக்க வேண்டியது. ஏன் இதை அவர் நாவலாக எழுதாமல் கட்டுரையாக எழுதியிருக்கிறார் என்று யோசித்தேன்.

எனக்கு ‘மார்சல் புரூஸ்ட்’ எனும் ஆங்கில எழுத்தாளர் நினைவுக்கு வந்தார். இவர் ‘இழந்த நேரத்தைத் தேடுகிறேன்’ என்கிற நாவல் எழுதியவர். இவர் சொல்கிறார். “இறுதி காலத்தில் நாம் செய்யும் ஒன்று இரண்டாவது சிறந்த ஒன்றாக இருக்கும்” என்று. இறுதி காலம் எதிர்கால நம்பிக்கை மீது சந்தேகம் கொள்ள வைப்பது. நமக்கு ஏதேனும் ஒன்று ஆகிவிடுமோ என்று பயங்கொள்ள வைப்பது. அந்த தவிப்பில் எழுதும் எழுத்தாளர் அவசரக் கோலத்தில் படைப்பைப் படைத்துவிடுவார். ஆகவே அது முதல் இடம் பிடிக்காமல் இரண்டாம் இடத்திற்கு சென்றுவிடும் என்று.

அப்படியாகத்தான் ஆர். நீலா அவர்கள் இந்நூலை படைத்திருப்பதாக கருதுகிறேன். இந்த நூலிலுள்ள அழகனை எடுத்துவைத்துவிட்டு அழகிகள் எனும் தலைப்பில் பெரும் நாவலாக எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன். அவரது பிறந்திருப்பதே புதுக்கோட்டை தேவதாசிகளின் வாழ்வைப் பெருங்கதையாக எழுத வேண்டும் என்பதற்காகத்தான். அதை அவர் விரைந்து எழுத வேண்டும். இதை நான் அவரது தீவிர வாசகன் என்கிற முறையில் வேண்டலாக வைத்து வாய்ப்புக்கு நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். நன்றி ! வணக்கம்!!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *