இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: நிறைவுத்தொடர் – 27…. சங்கர சுப்பிரமணியன்

சிலமணி நேரங்களை ஊரூனூரானில் செலவிட்டபின் அங்கிருந்து கேன்ஸ் விமான நிலையத்துக்கு புறப்பட்டோம். கேன்ஸ் விமானநிலையத்தின் அருகே நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வாகனத்தை ஒப்படைத்து விட்டு விமானநிலையம் அடைந்தோம். கேன்ஸிருந்து கிளம்பி பிரிஸ்பேன் வந்து சேர்ந்தோம்.
பிரிஸ்பேன் வந்தபின்னும் இரவு உணவைத்தேடி ஓட ஆரம்பித்தோம். குழந்தைகளைப் பற்றிய கவலை இல்லை. அவர்களுக்கு நம் உணவைவிட இங்குள்ள உணவு வகைகளில் அதிகம் நாட்டம். அப்போது என் நண்பர்கள் சொன்னது என் நினைவில் வந்தது. நமது பண்பாடு பாரம்பரியம் என்றெல்லாம் பேசுகிறோம்.
அதைக்கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் போராடுகிறோம். நடைமுறை வாழ்வில் சிக்கல் இருக்கிறதே. ஏடுபிக்கு (அடயாறு ஆனந்தபவன்) போகலாமா என்றால் மெக்டொனால்ட் என்கிறார்கள். அப்போது எங்களைப்போன்றொர் வத்தக் குழம்பும் சுட்ட அப்பளம் என்று சொன்னாலேயே சூடு பட்ட பூனைபோல் ஒட்டமெடுக்கிறார்கள்.
இந்த லட்சத்தில் என் குடும்பத்தில் நான் சிறுவனாக இருந்தபோது தடந்தவற்றையும் எண்ணிப் பார்கத்தவறுவதில்லை. அருகிலுள்ள நகரத்தின் பள்ளிக்கு பல கிலோ மீட்டர் நடந்து செல்வேன். ஒரு கையில் புத்தகப்பை போதாக்குறைக்கு எடைய சமன்செய்ய சாப்பாட்டுத் தூக்கு.
மாட்டுவண்டியில் ஓருபக்கம் பாரம் அதிகமிருந்தால் மாடு சரியாக இழுக்காது. இதை விஞ்ஞான பூர்வமாக அறிந்த எனது பாட்டி அறிந்து சாப்பாட்டுத் தூக்கை என் கையில் தந்தார்களா அல்லது பாசத்தின் வெளிப்பாடா? பாசத்தின் வெளிப்பாடாகத்தான் இருந்திருக்கும். அந்த பாசத்தின் வெளிப்பாடு அந்தத் தூக்கில் கட்டியான எருமைத் தயிர்விட்டு பிசைந்த சாதமும் நார்தங்காய் ஊறுகாயுமாக இருக்கும்.
எதற்கும் ஒரு பின்விளைவு உண்டல்லவா? அந்த பின் விளைவு இந்த எருமைத் தயிர் எனக்கு தந்தது. ஒருமுறை என் மைத்துனியுயிடம் என் அருமை பெருமைகளை இந்த எருமைத் தயிர் சங்கதியையும் சேர்த்து சொல்லும் போது மூக்குடை பட்டதுதான் மிச்சம். அப்படியா அத்தான், நானும் ரொம்ப நாளாக யோசணை பண்ணிட்டிருந்தேன. ஒன்றும் பிடிபடவில்லை.
இன்றுதான் பிடிபட்டது என்றாள். நானும் காலரைத் தூக்கிவிட்டு கம்பீரமாக தலைநிமிர்ந்தேன். அவள் சிரிக்காதல் சிரியசாகவே சொன்னாள். நீங்க எருமைமாடு மாதிரி இருப்பதன் ரகசியம் இதுதானா? அத்தான் என்றாள். எப்படி சொல்வேன் என்று ஒரு அசட்டுச் சிரிப்பை சிரித்து சமாளித்தேன். இதுபோல் மொக்கை வாங்கியது ஏராளம்.
இதுபோல் படிப்பினைகளில் இருந்து என்னை மேம்படுத்தினேன். அதனால் எந்த இடத்திலும்
எனக்கு தகுதியிருப்பினும் என்னை பெரிதாக காட்டிக் கொள்வதில்லை. இந்த பண்பினால் பல இடங்களில் பல நகைச்சுவைகளை உணர்ந்து மகிழ்ந்திருக்கிறேன். பத்து சென்ட் அளவே வைத்துக் கொண்டு பத்துடாலர் கையில் இருப்பதுபோல் நடந்து கொள்பவர்களைக் கண்டு ரசிக்கமுடிகிறது.
அதிலும் ஒன்றும் தெரியாக அப்பாவியாக நடந்து கொண்டால் மற்றவர்கள் நம்மை நடத்தும் விதம் வேறுவிதமாக இருக்கும். அதையும் ரசிக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டால் உண்மையிலேயே ஒன்றும் தெரியாதிருந்தால் உலகம் நம்மை எப்படியெல்லாம் நடத்தும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சரி கட்டுரைக்கு வருவோம். தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது, வாழ வா என்றது, வாசலில் நின்றது என்பதுபோல் பிரிஸ்பனில் இருக்கும் கொலபசி உணவகம் தென்படவே அங்கு எங்கள் உணவை முடித்துக் கொண்டு ஓட்டலுக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை கோல்ட்கோஸ்ட் மூவிவேல்ட் சென்றோம். மூவிவேல்டிலிருந்து நண்பர் குடும்பத்தின் அழைப்பை ஏற்று ரோச்டேல் சவுத் என்ற இடத்திற்கு செல்ல இருந்தது.
நண்பர் இரவு உணவுக்கு வருமாறு அழைத்திருந்தார். ஆதலால் மூவிவேல்டிலிருந்து மவுண்ட் கூட்தா என்ற சுற்றுலா தளத்திற்கு வந்தோம். இந்ந மலையில் ஒரு லுக்அவுட்டும் உள்ளது. இந்த லுக்அவுட்டில் இருந்து பார்த்தால் பிரிஸ்பேன் நகரம் முழுவதையும் நன்றாக காணலாம். காரணம் பிரிஸ்பனுக்கும் மவுண்ட் கூத்தாவுக்கும் இடைப்பட்ட தூரம் ஏழு கிலோமீட்டர்தான்.
மவுண்ட் கூத்தாவிலும் தமிழ் ஒளிந்திருப்பது போன்ற ஒரு எண்ணம். மஞ்சள் காமாலை வந்தவன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளா தெரிவதுபோல் உன் தமிழ்ப்பாசம் தாங்க முடியல என்று மாடசாமி அண்ணாச்சி சொல்கிறார். யார் என்ன சொன்னால் என்ன? எனக்கு கொத்துரொட்டிதான் பிடிக்கும். அதற்காக இட்லிக்குத் தாவமுடியுமா?
மவுண்ட் கூத்தா என்றதும் எனக்கு வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா என்ற கையிலை சிவனைத்தான் ஞாபகத்துக்கு வந்தது. தில்லைக் கூத்தன் அல்லவா அவன். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதே வாடிக்கை என்றாலும் முயற்சியைடையார் இகழ்ச்சியடையார் என்பது எனக்கு கைகொடுத்தது
இப்போது வேறொரு கோணத்தில் ஆய்வை நெருங்குவோம். கூ-தா என்றால் ஆஸதிரேலிய பழங்குடியினரான யுகாராவினரின் மொழியில் தேன் என்று பொருளாம். இப்போது கூடு என்பது கூ ஆகி தேன் என்பது தே ஆகி தா ஆகியிருக்கலாம். தேன்கூடு என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. இந்த கூட்டிலிருந்து தேன் எடுக்க இந்தமலைக்கு பழங்குடியினர் வந்திருந்தார்களாம். கூடு தேன் என்பது கூ- தா என்று மருவியிருக்கலாம்.
வார்தைகள் மருவுவது ஒன்றும் புதிதல்ல. மண்தரை மலை என்பது காமரூனில் மண்டாரு
மவண்டன் ஆகவில்லையா? ஹமில்டன் பிரிட்ஜ் என்பது சென்னையில் ஹாம்டன் பிரிட்ஜ் ஆனது. அதனைத் தமிழில் அம்பட்டன் வாராவதியாக்கி அதன்பின் அம்பட்டன் வாராவதியான அதுவே இப்போது ஆங்கிலத்தில் பார்பர் பிரிட்ஜ் ஆகவில்லையா? அதைப்போல் கவுண்டமணி சொன்னமாதிரி மருவுதலெல்லாம் தமிழில் சகஜமப்பா என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
காரியத்தில் கைவையடா தாண்டவக்கோனே என்பதை மறவாமல் இரவு உணவுக்கு மவுண்ட் கூத்தாவிலிருந்து ராச்டேல் சவுத்தில் உள்ள நண்பரின் வீடு வந்து சேர்ந்தோம். தமிழண்டா என்பதை நிரூபிக்கும்படி விருந்தோம்பலில் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இரவு உணவை அங்கு முடித்தோம். நிறைய சமையல் செய்திருந்ததால் மறநாள் காலையும் உதவும் என்று கொடுத்தும் அனுப்பினார்கள்.
மறுநாள் வெட் அன் வைல்ட் சென்றோம். குழந்தைகளோடு பெரியவர்களும் சேர்ந்து கும்மாளம் அடிக்க கடலில் அலை அடிப்பதுபோன்று அமைத்திருந்த இடத்தில் கடலில் குளித்து மகிழ்வதுவது போல் ஆடி மகிழ்ந்தோம். அடுத்தநாள் சீவேல்டில் ஒருநாள் ஒருநாள் சுற்றிப்பார்த்தோம். எனது கேன்ஸ் பயணம் பவளப்பாறையைக் காண்பதற்கு என்றது போய் பழந்தமிழர் கறியையும் இணைத்து கட்டுரையாக உருவெடுக்கும் என நான் நினைத்தும் பார்க்கவில்லை.
பழம் நழுவி பாலில் விழுந்தமாதிரி நாங்கள் பயணித்த பாதையில் கண்ட ஊர்களின் பெயர்கள் அதிலும் குறிப்பாக ஒரு இடத்தின் ஊரூனூரான் என்ற பெயர் மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் பேசும் மொழியில் ஏராளமான தமிற்சொற்கள் கலந்துள்ளன என்ற கண்டுபிடிப்பு போன்றவை எனக்கு கொடுத்ததே இரட்டிப்பு மகிழ்ச்சி.
இவையாவும் இணைந்ததே இரட்டைக் கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும் என்ற இக்கட்டுரையாகவும் இவ்வளவு காலம் உங்களையும் என்னையும் இணைத்து வைத்திருந்தது. மனதில் ஏதோ சாதித்துவிட்டோம் என்றும் இதுவரை நான் எழுதியதை தொகுத்து இரண்டு நூல்கள்
வெளியிட்ட மனநிறைவில் விமானத்தில் இருக்க மெல்பனை நோக்கி விமானம் பறந்து கொண்டிருந்தது.
(முற்றும்)
![]()