நிலவரை நீள் புகழ் கோகிலா!… எஸ்.ஜெகதீசன்

மகாஜனா தந்த இலக்கியத் தாய் திருமதி கோகிலா மகேந்திரன்.
17.11. 2025 ல் தனது எழுபத்தைந்தாவது அகவையை அடைகின்றார்.
வரலாற்றின் நல்ல பக்கங்களில் அவர் வாழ்வார்! வாழ்த்துகின்றோம்!

அவரைப்பற்றிய எனது நினைவலைகள் 63ம் ஆண்டு வரை நீள்கின்றன.
அதன் பின்னரும் சுமார் 63 ஆண்டுகள் அதற்குள்ளாகவா நீண்டுவிட்டன!
செல்வி கோகிலாதேவி சிவசுப்பிரமணியமாக மகாஜனா கல்லூரியில் அன்று அவர் எனது சக மாணவி.![]()
விளையும் பயிர் முளையிலே தெரியும். தெரிந்தது!
முதல் நாளின் இறுதி வகுப்பு தாவரவியல். இருபது நிமிடங்கள் தெளிவாக போதித்த ஆசிரியர் அதனை ஐந்து நிமிடங்களில் சுருக்கமாக எழுதுமாறு தெரிவித்தார்.
முதலாவதாக மிடுக்குடன் எழும்பியவர் கோகிலா.
அத்துடன் அவர் வகுப்பின் மாணவ முதல்வர் (மொனிட்டர்) கூட.
அதிகார தோரணையும் ‘சீரியஸ்’தன்மையும் இயல்பாகவே ஒட்டி யிருந்தன!
அதற்கேற்ப ஒழுக்கமும் ஒள்ளிமையும் உடன்பிறந்தவையாக அவரிடம் உறவாடின!
அவர் முதலாவதாக எங்கும் இருந்தார் என்பதை அவதானிக்க, எதிலும் இருப்பார் என்பதை ஊகிக்க, மகாஜனாவில் எனது முதல் நாளே போதுமானதாக இருந்தது.
அன்று மட்டுமல்ல இன்று வரை எங்கும் என்றும் எப்பொழுதும் அவர் முதலாவதாக இருப்பதை காலம் உலகிற்குக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. அவரது கிரகிக்கும் திறனும் ஞாபக சக்தியும் அளவிட முடியாதவை.
தினந்தோறும் பாடங்களை இரவில் மீள்பார்த்துப் படிப்பதும், மறுநாள் கற்பிக்கப்படவிருந்த பாடங்களை முன் வாசித்துப் பயின்றுகொள்வதும், புரியாதவற்றை அச்சமின்றி ஆசிரியர்களிடம் கேட்டு விளக்கமாய்த் தெரிந்து கொள்வதும் கோகிலாவிடம் எமது வகுப்பு கற்றுக்கொண்ட பாடம்!
உன்னால் முடியும்.உயர முடியும் என்பது அவர் உணர வைத்த தாரக மந்திரம்.
வியன் என்ற சொல்லில் விருப்புற்றவர் அல்லது வியப்புற்றவர் கோகிலா.
அண்மையில் அவர் எழுதிய முக நூல் தொடருக்கு வியன் வகுப்பு G.C.E. I என்றே தலைப்பிட்டிருந்தார். அது எமது வகுப்பைப்பற்றியது 45 அத்தியாயங்கள் வரை வந்தது.
எமது வகுப்பை வியன் வகுப்பு என்பதற்கான காரணத்தையும் அதன் காரணகர்தாவையும் அத்தொடரில் இவ்வாறு விபரிக்கின்றார் –
“மகாஜனா கல்லூரி கீதத்திலும் இலச்சினையிலும் உள்ள ‘வில்லுறு விளக்கு வியன்மறை எழுத்து விளங்கிடு தாமரை உடையோம்’ என்பது வித்துவான் நா.சிவபாதசுந்தரன் அவர்களின் அற்புத மொழி .
வியன் என்றால் பெருமை என்றும் கொள்ளலாம் .சும்மா பகட்டுப் பெருமையல்ல .ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்ட பெருமை பெரிய விசாலமான உயர்ந்த (செம்மொழித் தமிழ் “வியன் /விசால /விபுல”) என்று பல அர்த்தங்களைக் கொண்ட வியன் என்ற சொல்லைக் கொணர்ந்து மறை எழுத்துக்கு முன் வைத்தவரிடம் எவ்வளவு படித்திருக்கலாம் !
மிக எளிய மனிதராக இயல்பாக கிராமத்து உருவமாக வகுப்புக்கு வரும் வித்துவானிடம் எத்தனை கேள்வி கேட்டுப் படித்திருக்கலாம்! இவர் மறுபடி பிறந்து வரவேண்டும் நாங்கள் மாணவராகப் போகவேண்டும் .கடவுள் வந்து ஒருவரம் தரலாம் என்றால் நான் இதைத்தான் கேட்பேன்.”
அத்துடன் ஒப்பீட்டுக்கு அப்பாட்பட்ட பெருமை G.C.E. I. வகுப்பிற்கும் இருந்தது. ஏனெனில் அது தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளால் நிறைந்த வியன் வகுப்பு என்றும் ஒரு காரணத்தையும் அதில் சொல்லியுள்ளார் கோகிலா.
ஆனால் அந்த வியன் வகுப்பை வியப்பதற்கு அவர் சொல்லாத இன்னொரு காரணமும் இருந்தது. அந்தக் காரணம் அவரேதான் என்பதை ஊரே அறியும்!
G.C.E. I என்பதே எமது வகுப்பின் பதிவு செய்யப்பட்ட ‘டாப்புப்’ பெயர்.
எனினும் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் அது கோகிலாவின் வகுப்பு என்றே பரவலாக அழைக்கப்பட்டது.
அது கோகிலாவின் திறமையின் பெருமை. ஆளுமையின் அங்கீகாரம்.
-சாதாரண தரத்தில் ஆங்கில மொழி மூல விஞ்ஞானக் கல்வியை நிறைவு செய்த கெட்டிக்கார வகுப்பு, கோகிலாவின் வகுப்புத்தானே?
-இரு வருடப் படிப்பைப் பாதிக்காலத்தில் பூர்த்தி செய்த கடைசி ஆங்கிலமொழி மூலக் குழுவாக அப்போது அமைந்த அந்தக்கெட்டிக்கார (Double Promotion) வகுப்பு, கோகிலாவின் வகுப்புத்தானே?
– புத்திசாலிகள் பலர் கோகிலாவின் வகுப்பில்;தானே இருந்தனர்?
இக் கேள்விகள் அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன.
காலம் பல கடந்தோடி விட்டாலும் இன்றும் கூட பலருக்கு அது கோகிலாவின் வகுப்பு என்றே மூளையின் சந்தோஷமான பரப்புகளில் ஆழமாக பதிவாகியிருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.
அது பதின் வயதின் பருவ காலப்பதிவு அல்ல என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ஓரு மாணவியின் பெயரால் அவர் படித்த வகுப்பு 63 ஆண்டுகள் கடந்த பின்பும் அழைக்கப்படுவது உலகில் வேறு எங்கும் உள்ளதாக எனக்குத் தெரியவில்லை!
அன்றைய எமது வகுப்பை பற்றி இன்றைய கோகிலா மகேந்திரனின் முக நூல் தொடரில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளால் நிறைந்த வியன் வகுப்பு” என்று குறிப்பிட்டது எனக்கு நன்கு பிடித்தது.
அந்தக் கெட்டிக்கார வகுப்பு பற்றிய கோகிலாவின் இந்த நினைவு, நானும் கெட்டிக்காரன்தான் என்றோர் மிதப்பை மனதுக்குத் தந்தது.
எனினும் அதனை நீடிக்கவிடாமல் பார்த்துக் கொண்டது கோகிலா தொடர்ந்த அடுத்த பகுதி. மாணவிகள் அனுபவித்த அன்றைய சிரமங்களைப் பற்றி கிஞ்சித்தும் அறிந்து கொள்ளாமல் அல்லது அக் கறை பட்டு கொள்ளாமல் எவ்வளவு ‘சக்கட்டை’களாக நாம் இருந்துள்ளமை இப்பொழுது வெட்கத்தை வரவழைத்தது.
“மாதச்சுகயீனம் வரும் நாட்களில் வெள்ளை uniform எப்போதும் Red Alert இல்! பின்னால் மாணவர்கள் இருக்கும்போது அவசரத்துக்கு Adjust பண்ணுவது கடினம். எங்களுக்கு menstruation புதுப்பழக்கம் இத்தியாதி பிரச்சினைகளை யோசித்து வகுப்பின் முன்பக்கத்தில் -பக்கப்பாடாக -ஆசிரியர் மேசைக்கு அருகில் அமர்ந்துகொள்ளவே மாணவிகள் விரும்புவர்.”
தணிக்கைக்குரிய வார்த்தைகளை தணிக்கை இன்றியே எழுதும் துணிவு, குறிப்பாக பெண்கள் அனுபவித்த அன்றைய சிரமங்களையும், சமூகத்தின் கட்டுப்பாடுகளையும் திறந்த மனதுடன் எழுதும் தைரியம் ,தன்னம்பிக்கை, சொற்களில் உள்ள நேர்மை கோகிலாவின் தனித்துவமான குணங்கள்!
இன்றைய மாணவரது சகஜமாகப் பழகும் சுபாவம் அன்று இம்மியளவும் இருந்ததில்லை.
எதிர்பாலரை ஏறிட்டுப் பார்க்கத் தேவையில்லை -சற்றே கடைக் கண்ணால் பார்த்தாலே போதும். கற்பு பறிபோய்விடும் என்றொரு கட்டுப்பாடான மன நிலை மாணவரிடம் புகுத்தப்பட்டிருந்தது.
அதற்கு எமது வகுப்பும் விதிவிலக்காக இருக்கவில்லை.
நெருக்கம் காட்டாத இறுக்க முகங்கள் வகுப்பறையில் சர்வ சாதாரணம்.
கோகிலா எம்முடன் படிக்கும் காலத்திலேயே மலர்களைப் போல் தங்கை என்ற குறு நாவலை எழுதினார்.
‘முதலாவது படைப்பு பிரசுரமாகாவிடின், பின்னர் எழுத்துலகில் அவர் நன்கு பிரகாசிப்பார் ‘
என்று எழுத்தாளர்கள் மத்தியில் உள்ள எழுதப்படாத சட்டம் கோகிலாவின் வாழ்விலும் நிரூபணமாயிற்று.
பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இவரது எழுத்துகளை வரமாகப் பெற்றன.
இவரது நூல்களாக சுமார் 50 நூல்கள் இணைய நூலகத்தில் உண்டு.
எந்தத் தலைப்பிலும் எவ்வளவு நேரமாயினும் எழுந்தமானமாக பேசும் திறனால் மாணவப் பராயத்திலேயே மாபெரும் சபைகளுக்கும் வியப்பூட்டியவர் கோகிலா.
பின்னேரங்களில் விளையாட்டு மைதானம் அவரது வாலாயம். இவர் ஓடுவார். பயிற்றுனர் தொடர்து ஓடுவார். யார் யாரை பயிற்றுவது எனப் பார்க்கும் கண்கள் வியக்கும்
சின்னையா இல்லத்தில் அவர் இருந்தார். அதனாலே அது பெரியையா இல்லமாயிற்று என்று எம்முள் பேசிக் கொள்வதுமுண்டு. எல்லாவற்றிலும் முன்ணணி வகித்த இந்த இல்லத்தை வேறு எப்படிச் சொல்ல முடியும்?
சனி ஞாயிறு வந்தாலே காணும். நாடக ஒத்திகை அமர்களமாகும்.
அன்று தொடங்கியவர் இன்று வரை 27 நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். வேறு ஆறு நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்ததோடு தானும் நடித்துள்ளார். இரண்டு நாடகங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். வானொலி நாடகங்களையும் எழுதிய இவர் மாணவப் பருவத்தில் ஆசிரியர்களின் நெறியாள்கையில் ஐந்து நாடகங்களில் நடித்துள்ளார்.
“மாணவர்கள் மகாஜனாவில் மீண்டும் ஒன்று கூடுதல் என்ற அடுத்த தலை முறையின் நல்ல பழக்கம் எமது வகுப்புக்கு இன்னும் சாத்தியமாக வில்லை.” என, அண்மையில் வெளியான ‘இன்னும் இருக்கு’ என்ற எனது நூலுக்கு வழங்கிய வாழ்த்துரையில் தெரிவித்திருந்தார் கோகிலா!
உடன் படித்த மகாஜனன்கள் இதில் உடன்படுவார்களோ இல்லையோ என் மனப் பக்கங்களில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கணமேனும் வகுப்பே நடத்தினர்.
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ. எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ என்ற பாடலை இன்றும் முணுமுணுக்கக் கூடியவர்கள் அன்றைய எமது வகுப்பில் இருந்தவர்கள் கோகிலாவின் தந்தையார் திரு செ.சிவசுப்பிரமணியம் அவர்கள் புராண படனகாரராகவும் சமய சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார்.
எமது ஊர் ஆலயத் திருவிழாக்களுக்கு அவரது பிரசங்கத்தை ஏற்பாடு செய்வதற்காக நாலைந்து மாணவர்கள் விழிசிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு இடைக்கிடை செல்வோம்.
வீட்டை அண்மித்ததும் தலையைத் தட்டி நிமிர்த்தி கொலரை கொஞ்சம் எடுப்பாய் தூக்கி விட்டு மெருகூட்டி கொள்வதும் தன்னிச்சையாக நடக்கும்.
தற்செயலாக கோகிலா பார்த்து விட்டால்…?
அது ஒரு தெற்கு வாசல் வீடு.
வேலிக்குப் பின்னால் ஓங்கி வளர்ந்த ஒரு மரம்.
அது கொய்யாவோ நாவலோ ஞாபகமில்லை.
அதில் ஊஞ்சல். அதில் கோகிலா. கையில் அந்த வாரத்துக் கல்கியோ அல்லது அந்த மாதத்து கலைமகளோ ஏதோ ஒன்று.
கோகிலா அதில் மூழ்கியிருப்பாரே தவிர அட்லீஸ்ட் வேற்றுக்கிரக வாசிகளாக கருதிக் கூட எம்மை நிமிர்ந்து பார்த்தது கூடக் கிடையாது.
அவர்கள் வளர்த்த செல்லம் எம்மைக் கொன்று தீர்ப்பது போல குரைப்பதும் அவரது கவனத்தை கலைத்ததில்லை.
என்றுமே எமக்கு ஆபத்பாந்தவனாக வீட்டுக்குள் இருந்து அவரது சின்னம்மாதான் வெளியே வருவார்.
ஆண்டு தோறும் பரிசளிப்பு விழாவில் ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டாவது பரிசு யாருக்கு என அன்று நாம் எம்முள் கதைத்திருந்தாலும் இன்றும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏனெனில் முதலிடம் யாருக்கு என்பது தான் எமக்குத் தெரியுமே!
கோகிலாவின் எழுத்து அதிசய சக்தி கொண்டது. வாசிப்பவரின் உள்ளத்தை குதூகலப்படுத்துவது—அதுவே அவரது தனித்துவ ஆளுமை என வரலாறு பதிவுசெய்யும்.
எழுத்திலும் செயலிலும், சாதனையிலும் அவர் வாழ்ந்த பரந்த வாழ்வு பல தலைமுறைக்கு கணினிக்கோப்பாக எடுத்துச் செல்லும்.
கோகிலா எம் கூடப்படித்தார் என்று சொல்லத்தான் விருப்பம். ஆனால் எம்மிலும் கூடப் படித்தார் என்று காட்டுவதே காலத்தின் விருப்பமாயிற்று.
“எங்கள் இதயங்களில் நீங்கள் உங்கள் சொற்களில் நாங்கள் என்றும் வாழ்கிறோம்.” என்று அவருடன் படித்தவர்கள் இன்றும் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வதுமுண்டு!
கோகிலா எழுதிய நூல்கள், நாடகங்கள், நெறியாள்கை, வானொலி நாடகங்கள்—எதை எடுத்தாலும் அதில் அவர் முத்திரை பதித்திருப்பார்.
அறிவியல் கதைகளிலிருந்து உளவியல் ஆய்வுகள் வரை பரந்த துறைகளில் அவர் சாதித்திருப்பது தமிழ்ச் சமூகத்துக்கே பெருமை.
கோகிலா மகேந்திரனின் இரு நூல்களை அண்மையில் வாசித்தேன்.
ஒன்று அறிவியல் கதைகள். அது சிறுவர் இலக்கியம்.
-கதைகளுக்குள் அறிவியல்!
மற்றது. சீர்மியத்தில் சிறப்பு முறைகள். அது உளவியல் இலக்கணம்.
-சிறப்பு முறையில் சீர்மியம்!
வேறு எவருமே இரு துறைகளிலும் பரிணமிக்கின்றார்களா என்றால் இல்லை என்பதே ஏகோபித்த பதிலாகும்.
அறிவியல் கதைகளை, சிறியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து ரசித்து வாசித்து முடித்தால் தான், அவர்கள் பெரியவர்கள்.
பெரியவர்கள், ஒரே மூச்சில் வாசித்து முடிக்காவிடின் அவர்கள் சிறியவர்கள்.
வாசித்த பெரியவர்கள், சிறுவராக மாறி உள்ளம் குதூகலிக்கவில்லை என்றால்,அவர்கள் வளர இன்னும் பல காலம் உள்ளது என்று பொருள்.
வாசித்த சிறுவர்கள், தமக்குள் ஒரு ‘மெச்சூருட்டி’யை உணர்ந்து கொள்வார்கள் என்றால், அறிவு அகலித்த பெருமிதம் இதயத்தில் நிறைகின்றது என்று அர்த்தம்.
தொட்ட எதிலுமே உச்சம் தொடுவதுதான் கோகிலாவின் மேதமை!
அவர் கலந்து கொண்ட களமெல்லாம் வெற்றி முரசு கொட்டும்!
ஒரு மேதை வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் பெருமையுறுவோம்!
வரலாறு வாழ்த்த உள்ள அவரை வரலாற்றில் வாழப்போகும் அவரை வாழும் பொழுதே வாழ்த்தினோம் என்பதில் மகிழ்வுறுவோம்.
இதயம் நிறைந்த இனிய 75 ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கோகிலா.
![]()