இலங்கை

பேச ஜனாதிபதி இணக்கம்; வாக்கெடுப்பிலிருந்து விலகிய தமிழரசு!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தங்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணங்கியுள்ளதால், அவர் மீது நம்பிக்கைவைத்து வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சித் தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது சாணக்கியன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பார்க்கும் போதுஅதில் உள்ள யோசனைகளில் 65 வீதமானவை பொருளாதார ரீதியலானவை என்றும் சமூக நலன்புரிகள் தொடர்பில் குறைவாகவே இருப்பதாக பல்வேறு நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாங்கள் கூறுவதாயின்,

தமிழ் மக்களின் பிரதான கட்சியான இலங்கை தமிரசுக் கட்சியானது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தியாக வேண்டும் என்ற விடயங்களுக்காகவே உருவானது. பாராளுமன்றத்தில் மூன்றாவது பிரதான கட்சியாக உள்ளது. எமது கட்சிக்கு மக்கள் வாக்களிக்கும் போது தமிழ் மக்களின் இருப்புக்காகவும், அரசியல் நலனுக்காகவும் மற்றும் அரசியல் தீர்வுக்காகவுமே வாக்களிப்பர்.

இந்த கார்த்திகை மாதத்தில் வடக்கு, கிழக்கு முழுவதும் போராடிய வீர மறவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்படுகின்றது. ஆயிரக் கணக்கான போராளிகள் இனத்தின் விடுதலைக்காக போராடினர். அவர்கள் மண்ணில் விதைக்கப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் மாதமாகும். இந்த மாதத்தில் நாங்கள் பிரதானமான தமிழ் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எமது மக்களின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. ஆயுதம் ஏந்தி போராடி எத்தனையோ இழப்புகளை சந்தித்த இனத்திற்காக கொக்கிளாயில் பாலத்திற்காக ஆய்வு செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இரண்டு பாலங்களை நிர்மாணிக்க ஆய்வு செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி நினைக்க முடியாது. பல்லாயிரக் கணக்கான உயிர்களை தியாகம் செய்தது இந்த பாலத்திற்காக அல்ல.

சமத்துவம் தொடர்பில் மாத்திரம் கூறிக்கொண்டிருக்க முடியாது. சகல பிரஜைகளுக்கும் தமது அரசியல் உரிமை இருக்க வேண்டும். வரவு செலவுத் திட்டத்தை பார்க்கும் போது அதனை அவதானிக்க முடியவில்லை. வடக்கு, கிழக்கிற்கான நிதி ஒதுக்கீட்டை பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி ஆளுநர் வசம் இருக்கின்றன. நீங்கள் அரசியலமைப்பு ஊடாக நீண்டகால தீர்வுத்திட்டத்திற்கு வருவதாக இருந்தால் அதுவரைக்குமான மாகாண சபைகளை நடத்திச் செல்லலாம். ஏன் அதற்கான தேர்தலை நடத்தாமல் இருக்க வேண்டும்.

இதேவேளை கால்நடைக்களுக்கான ஒதுக்கீடுகள் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 4.2 பில்லியன் கால்நடை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு, கிழக்கில் மேய்ச்சல் தரைகளை மகாவலி அதிகார சபை ஊடாக வேறு இனத்தவர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றனர். காணி தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன.

அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு எமது ஒத்துழைப்பு இருக்கும் என்பதனை கூறியுள்ளோம். போதைப் பொருள் ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதவளிக்கின்றோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலம் அமைக்க ஆய்வு செய்கின்றது என்பதற்காக வரவு செலவுத்திட்டத்தை ஆதரிக்க முடியாது. எமக்கு 159 உள்ளதுஇ இதனால் எமக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு அவசியமில்லை என்று ஆளும் கட்சியினர் கூறலாம். ஆனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகும் என்பதுடன், 70 வருடங்களுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் இருக்கும் கட்சியாகவும் இருக்கின்றது. இதனால் இந்த பாராளுமன்றத்தில் நாங்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு பயன்படுத்தப்படும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான விடயம் இருப்பதால் இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்க முடியாது என்று கூறலாம். இது வேடிக்கையானது. அப்படியென்றால் இதனை அந்த விடயத்தை மாத்திரம் உள்ளடக்கியே வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க வேண்டும். 2138 ரூபா வரையில் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியில் உள்ள தொழிற்சங்கங்கள் கூறின. எவ்வாறாயினும் நான்காயிரம் ரூபா வழங்கினாலும் எதிர்க்கட்சியினர் அதற்கு எதிர்ப்பு வெளியிடப் போவதில்லை. அந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும்.

இதேவேளை நாங்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான கட்சியாகும். இதனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பது தொடர்பில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். ஜனாதிபதி மீது இன்னும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். அடுத்த வாரத்தில் எமது கட்சியுடன் பேசுவதற்கு எமக்கு நேரமொன்றை வழங்கியுள்ளார். எமக்கு பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. நாங்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளோம். எமது கோரிக்கைகள் தொடர்பில் செவிசாய்ப்பார் என்று நம்பிக்கை கொள்கின்றோம் இதனால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *