அரசை எவராலும் அசைக்க முடியாது; மாகாண சபைத் தேர்தலுக்கும் தயார்

நாட்டில் தற்போது அரசியல் ஸ்தீர தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த அரசாங்கத்தை எவராலும் அசைக்க முடியாது. இதனை மேலும் உறுதிப்படுத்த வேண்டுமென்றால் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் நகர அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்றசபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,
நல்லதை செய்தால் அதனை நல்லது என்று கூறும் எதிர்க்கட்சி இருக்கும் என்றே நாங்கள் நினைத்தோம். ஆனால் அவ்வாறான எதிர்க்கட்சி இல்லையென்று கடந்த மார்ச் மாதத்திலேயே புரிந்துகொண்டோம். எதனையும் விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியே இருக்கின்றது. தனிப்பட்ட ரீதியிலும் விமர்ச்சனங்களை செய்கின்றனர்.
மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் தவறான கருத்துக்களை கூறுகின்றனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்துள்ள முறைப்பாட்டை கட்சியின் நிலைப்பாடு என்றால் தொடருங்கள். இல்லையென்றால் அதனை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். எங்களுக்கு இதில் பிரச்சினை கிடையாது. ஏற்கனவே சம்பளம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் குழப்பமடையத் தேவையில்லை.
இதேவேளை எமது கட்சிக்கு நாட்டில் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். நாங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதி திட்டமிடல்களுக்கு அமைய எதிர்கால வருடங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லும் வகையில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளோம். நாங்கள் புதிதாக வரிகளை அறவிடாமல் வரி அறவீட்டை விரிவுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். டிஜிட்டல் மயமாக்கலை எதிர்பார்த்துள்ளோம். நாங்கள் இன்னும் டிஜிட்டல் மயமாக்கலில் பின்னணியிலேயே இருக்கின்றோம். எங்களுடன் சுதந்திரமடைந்த நாடுகள் முன்னேறி போய் கொண்டிருக்கின்றன. ஆனால் நாங்கள் பின்னணியில் இருக்கின்றோம். இதனால் சின்ன சின்ன விடயங்களில் இருந்து அதனை ஆரம்பிக்கின்றோம். வங்கி அட்டை மூலம் பஸ்களில் கட்டணங்களை செலுத்தக்கூடிய வசதிகளை ஏற்படுத்தவுள்ளோம். 2026ஆம் ஆண்டளவில் பெருமளவில் டிஜிட்டல் மயமாக்களில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் உற்பத்தி பொருளாதாரத்திற்கு தேவையான வேலைத்திட்டங்களையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம். இதனாலேயே பங்குச் சந்தையில் முன்னேற்றம் ஏற்படுகின்றது. நாங்கள் செல்ல வேண்டிய சரியான பாதையை தெரிவு செய்துள்ளோம்.
அத்துடன் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். அதேபோன்று போதைப் பொருளுக்கு எதிராக முடிந்தளவான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகும். இதேவேளை சமூக நீதியை உருவாக்கும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து செல்கின்றோம். இவற்றுக்காக பெருமளவான நிதி செலவாகுவதில்லை.
சமூக நீதிக்காக எமது வேலைத்திட்டங்களில் எம்மால் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அதிகளவில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் எங்களால் 400 ரூபா அதிகரிக்க முடிந்துள்ளமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இதற்கு மேலும் அதிகரிப்போம். அதற்கு இன்னும் எதிர்ப்புகளை வெளியிடலாம். நாங்கள் சமுதகத்தில் கைவிடப்பட்ட சகலரையும் உயர்த்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
நாங்கள் பொருளாதார ஸ்தீர நிலைமை ஏற்படுத்தியுள்ளோம் அதேபோன்று அரசியல் ஸ்தீர நிலைமையும் ஏற்படுத்தியுள்ளோம். அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று கூறினாலும் அரசாங்கம் வீழ்ச்சியடையாது. மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த கூறினால் அதனையும் நடத்துவோம். அதில் நீங்கள் இல்லாமல் போகுமளவுக்கு தோல்வியடைவீர்கள். ஒன்றாக வந்தாலும், தனித்தனியாக வந்தாலும் எதிர்க்கட்சி தோல்விகாணும். .நாங்கள் ஜனநாயக ரீதியில் பலமான அணியுடன் இருக்கின்றோம். பல்வேறு அரசியல் கருத்துக்களை கொண்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் என்றார்.
![]()