கதைகள்

எதுவும் நிரந்தரமில்லப்பா!…. கதை… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

மாசிமாதப் பனி. போத்தியிருந்த அந்த நைந்த போர்வையையும் தாண்டி எலும்பு வரை சென்று கருப்பையாவை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. லொக்கு லொக்கென்று இருமியபடி எழுந்தவர் தெருக்கோடியில் இருந்த டீக்கடைக்கு சென்றார்.

முன்பற்கள் இரண்டு விழுந்திருந்ததால் அதை மறைக்க பெரிதாக மீசை வைத்திருந்தார். மனிதர்கள் மறைப்பதில் வல்லவர்கள். நரையை மறைக்க சாயம் பூசுவார்கள். கண் சரியாகத் தெரியாமல் கண்ணை இறுக்கிக் கொண்டு பார்த்தாலும் கண்ணாடி போடமாட்டார்கள். நொந்து நூடுல்ஸாக இருப்பதை இளமை என்பார்கள்.

மறைப்பது நல்லதுதானே. ஆனால் உண்மையை எத்தனை நாள் மறைக்க முடியும்? தண்ணீருக்குள் பந்தை எவ்வளவு நேரம் அழுத்தி வைக்கமுடியும். ஆனால் மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருப்பவர்களை விட இப்படியெல்லாம் மறைப்பவர்கள் சிறந்தவர்களே. அதனால் அவர்களுக்கு ஒரு பெருத்த கரவொலியை எழுப்புங்கள்.

சில மேடைகளில் ஏதோ கேட்பதுபோல் கேட்டு கேட்டு வாங்குவார்களே அப்படித்தான். தானாக கனியும் கனிக்கும் அடித்துப் பழுக்க வைக்கும் கனிக்கும் வேறுபாடு தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலர் எப்படியான நகைச்சுவையை சொன்னாலும் சிரிக்கமாட்டார்கள். இவன் ஒரு ஆளு இவன் சொல்லி சிரிக்கணுமா என்ற நினைப்பு அவர்களுக்கு.

யாரையும் தப்பு சொல்லமுடியாது. ஒருவேளை பல்லில் கறையிருந்தல் வாய்விட்டு சிரிக்க முடியாதல்லவா? வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று அவர்களுக்கு பாடம் எடுக்கவா முடியும். அதற்காக சுற்றச்சூழலை பார்த்துக் கொண்டும் பின் விளைவுகளையும் உணர்ந்து கரவொலி எழுப்புங்கள். அல்லது இவன் சொல்லி நான் கைதட்டணுமா என்று நினைத்தாலும் சரி. நன்றாக இருந்தால் தட்டுவீர்கள்.

கருப்பையா டீக்கடை பெஞ்சில் அமர்ந்தபடி மீசையை மேல் உதட்டுக்கு மேலே இடது கை பெருவிரலால் தள்ளி கண்ணாடி டம்ளரில் உள்ள டீயை மாடு கழனிப்பானையில் உள்ள கழனியை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சுக் கொண்டிருந்தார். எதிலும் ஒரு ரசனையுள்ள பன்முக கலைஞர் அவர்.

வாய் டீயைக் குடிக்க, காது குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற டீக்கடை வானொலியிலிருந்து வந்த டீக்கடை பாட்டை கேட்க, கால்கள் பாட்டுக்கு ஏற்றவாறு ஆட, கண்கள் எதிரேயிருந்த கோபலுவையும் சந்திரனையும் நோட்டமிட மூளை அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

இப்போது மாடசாமி அண்ணாச்சி கதையில் சில திருத்தம் செய்ய வேண்டுமென்கிறார். அதாவது டீக்கடை வானொலி இல்லையாம் சென்னை வானொலியாம். அது டீக்கடை பாட்டு இல்லையாம். பெங்களூரு ரமணியம்மா பாட்டாம். இப்படி அவர் சொன்னதால் பொறுப்பு துறப்பை பாவிக்கிறேன்.

அது சரி, பன்முக கலைஞர் பட்டத்தை அவருக்கு யார் கொடுத்தது? அதற்கு பதில், இந்த டீக்கடைக்கு டீ குடிக்க நான்கு பேரை யார் கூட்டி வந்தது என்பதுதான். எல்லாம் அதுவாக நடப்பதுதான். திட்டம் போட்டு எதுவும் நடப்பதில்லை. நாலுபேருக்கு தீங்கு நடக்கலைன்னா நமக்கு நாலுபேர் அதை ஆமோதிக்க இருந்தா யார் எந்த பட்டத்தையும் வைத்துக் கொள்ளலாம்.

சரி கதைக்கு வருவோம். கருப்பையா மூளையின் ஆய்வுக்கு விடை கிடைக்காததால பன்முக கலைஞரான அவர் தன் ஏழாம் அறிவைப் பயன்படுத்தி,

“கோபுலு, சந்திரன் முகம் ஏன் வாட்டமாக இருக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்டார்.

“என்னண்ணே நீங்க பன்முக கலைஞர், அந்த கேள்வியை நேரடியா அவருகிட்டய கேக்கலாமுல்ல”

“இல்லப்பா, அடுத்தவங்க விசயத்துல மூக்க நுழைப்பது நாகரிகமில்லப்பா” என்றார்.

அட போங்க நீங்களும் உங்க நாகரிகமும் என்ற கோபுலு அடுத்த வீட்டு குழம்புச்சட்டியில் என்ன கொதிக்கிறது என்று துப்பு துலக்குவது அல்லவா இன்றைய நாகரீகம் என்றார். மனசுல பொத்திவச்சு வேதனப் படுறத நாலுபேருக்கு சொன்னா பாரம் இறங்குமென்ற நல்ல நோக்கத்தில் சந்திரனின் பாரத்தை இறக்கிவைத்தார்.

பக்கத்து இலைக்கு பாயாசம் நினைவுக்கு வருகிறதா? தமிழனை அப்படியெல்லாம் சும்மா நினைத்துவிட முடியாது. தமிழனா கொக்கா? நமக்கே நாலாயிரம் பிரச்சனை அப்படியிருந்தும் பாலஸ்தீனத்தைப் பார் காசாவைப்பார் என்று பேசும் பாரம்பரியத்தில் வந்தவர்கள் அல்லவா நாம்.

உசாத்துணையாக செல்லம்மா பக்கத்து வீட்டில் கடனாக வாங்கிவந்த அரிசியை காக்கைக்குப் போட்டு காக்கை குருவிகள் எங்கள் ஜாதி என்று பாடி மகிழ்ந்த பாரதியைச் சொல்லலாம். ஆகவே கோபுலுவைத் தவறாக எண்ணவேண்டாம். அவர் சொல்வதை மட்டும் கேட்போம்.

அது வேற ஒன்னுமில்ல அண்ணே அவரது பேரனுக்கு பேரு வெச்சது பிடிக்கலயாம். ஏன் அவரு பேர வைக்கலைன்னு பிடிக்கலயான்னு கேட்டன். அதுவும் இல்லையாம் அந்த உருப்படாத நடிகன் பேர வச்சிருக்கானென்ற கவலதான் அவருக்கு என்றான் கோபுலு.

இதைக்கேட்ட கருப்பையா இதுக்கா கவலையா இருக்கான். இப்பல்லாம் எதுஎதுக்கோ யார் யார் பேரெல்லாம் வைக்கிறாங்கப்பா.ஆனா ஒன்னும் மட்டும் நினைவுல வச்சுக்க. இங்க எதுவும் நிரந்தரமில்லப்பா. சோக்கா இருந்த மெட்ராஸ் என்றிருந்த பேரையே சென்னைன்னு மாத்திப் புட்டாங்க டால்மியாபுரத்த கள்ளக்குறிச்சின்னு மாத்திப்பப்புட்டாங்க என்றார்.

அதுக்குத்தான் நாலு எழுத்து படிக்கணுங்குறது. கூறுகெட்ட பயலுகளா மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று கார்ல் மார்க்ஸ் சொன்னதெல்லாம் ஒங்களுக்கு எங்க தெரியப்போவுது. இதுக்கெல்லாம் ஒன்னும் கவலைப்படாத சந்திரான்னு சொன்னார். என்னவோ சந்திரன் இவரிடம் சொல்லி வேதனப்பட்ட மாதிரி ஆறுதல் சொன்னார்.

ஆறுதல் சொன்னவர் கருமத்துலும் கண்ணாயிருந்தார். டீயில் அடியில் தங்கியிருக்கும் வைட்டமின் வீணாகாதபடி டம்ளரை ஒரு சுற்று சுற்றி வாயில் ஊற்றிக் கொண்டார். உடலில் போத்தி மூடியிருந்த போர்வையை தூக்கி தலையில் முக்காடிட்டபடி கோவணமும் தெரியாமல் இடுப்பில் வேட்டியிருப்பதுபோல் பாவணை பண்ணிக்கொண்டு தற்காத்து தற்கொண்ட உடம்மைப்பேணி தகைசான்ற நடையுடன் வீடு நோக்கி நடந்தார் பன்முகக் கலைஞர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சந்திரனுக்கு ஒன்னுமே புரியல. என் குடும்பம் என் பிரச்சனை. பழகிப்போட்டோமுன்னு பக்கத்தில் இருந்து டீ குடிச்சா நம்ம வீட்டுக் கதைய இவனுக ஏன் பேசுறானுங்க. எல்லாம் வாயை மூடிக்கிட்டிருப்பதுதான் தப்பா போச்சுன்னு இப்பத்தான் உணரத்தொடங்கி இருக்கான்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *