கீரிமலை… கதை… சோலச்சி


எப்போதும் இல்லாமல் இன்றைக்கு புதிதாய் தெரிந்தது வானம். சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பமும் சுகமாய் இருந்தது. ஐந்தாறு நாட்களுக்கு முன்னரே தேவையான பொருட்களை பெட்டிகளில் அடுக்கி வைத்து தயார் நிலையில் இருந்தது. இனி ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான். மனைவி பிச்சையம்மாள் மகன் இளவரசன், மகள் தன்யாவுடன் மாய பந்தரில் சரக்கு ஆட்டோவில் பொருட்களை ஏற்றிக் கொண்டு போர்ட்பிளேயருக்கு வந்து சேர்ந்தார் ரவி.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான மறுநாளே மனைவியுடன் பிழைப்புத்தேடி அந்தமான் தீவுக்கு வந்தவர்; எத்தனையோ தடவை சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என நினைத்த போதும் ஏதாவது தடங்கள் வந்து கொண்டே இருந்தது. இந்த தடவை எதையும் பொருட்படுத்தாமல் கிளம்பிச் செல்வது என தீர்க்கமாக எண்ணினார். சொந்த பந்தங்கள விட்டுட்டு இங்க வந்து ஒரேயடியா எதுக்கு கெடக்கனும். நாலுகாச சம்பாதிச்சோமா ஊரு நாட்டுக்குப் போனமானு இருக்கனும். அதவிட்டுட்டு என்ன பொழப்பு இது….. மனசு பாடாய்படுத்தியதால் இப்போதுதான் முதல் முறையாக தனது சொந்த ஊருக்கு செல்கிறார்.
கப்பலில் ஏறுவதற்கு மக்கள் அலைமோதினர். அந்தமானில் இருந்து சென்னை துறைமுகம் செல்வதற்கான நங்கோரி கப்பலில்தான் டிக்கெட் எடுத்திருந்தார் ரவி. நங்கோரியில்தான் மூட்டை முடிச்சுகள் நிறைய ஏற்ற முடியும். பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றக் கூடிய ஒரே கப்பல் நங்கோரிதான்.
பதினஞ்சு நாளைக்கி ஒருமுறை இந்த கப்பல் வந்து செல்லும். அதனால்தான் மக்கள் காத்திருந்து இந்தக் கப்பலில் ஏறுவர். சொல்லிக் கொள்ளும்படி பெரிய வசதிகள் எல்லாம் இதில் இருக்காது என்றாலும் வீட்டில் இருப்பது போன்ற உணர்வு இருக்கும்.
குடும்பத்துடன் கப்பலில் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்தார். கொண்டு வந்த பெட்டி படுக்கைகளை ஓரமாக வைத்தார். அலைகள் மோதி மோதி கப்பலை அசைக்கத் தொடங்கின. கப்பல விட்டு எறங்குரவரைக்கும் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடாம இருக்கனும்…. பிள்ளைகளிடம் கண்டிப்புடன் கூறியிருந்தார். நங்கோரியில் பயணிப்பது என்பது சந்தை கடைகளுக்குள் இருப்பது போன்று. இறங்கும் வரை கசமுசானு கூச்சலும் குழப்பமுமாகத்தான் இருக்கும்.
போர்ட்பிளேர் டூ சென்னை செல்லும் எம்வி நான்கவுரி கப்பல் புறப்பட தயாராக இருக்கிறது. பயணிகள் தங்கள் உடமைகளையும் குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். நான்கவுரி கப்பலைத்தான் நங்கோரி என பேச்சு வழக்காகிப் போனது. கேண்டியனுக்குச் சென்று சாப்பாடு டோக்கன்களை வாங்கி வந்து பிச்சையம்மாளிடம் கொடுத்தார். அங்க போயி எறங்குரவரைக்கும் இந்த டோக்கன் இருந்தாதான் சாப்புட முடியும். டோக்கன்களை பத்திரப்படுத்தினாள் பிச்சையம்மாள்.
போர்ட்பிளேர் டூ சென்னை செல்லும் எம்வி நான்கவுரி கப்பல் புறப்பட தயாராகிவிட்டது. பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கவும்…. அறிவிப்பு வந்ததும் கப்பல் மெதுவாக ஆடி அசைந்து நகர்ந்தது. உப்புக் காற்று உள்ளுக்குள் ஊடுருவியது. நினைவலைகளோ ரவியின் உள்ளத்தை நனைக்கத் தொடங்கின.
கப்பலை விட ரவியின் மனம் வேகமாகவே பயணித்தது. சொந்த கிராமத்தை முதல் முறையாக சந்திக்கப் போவதில் இளவரசனுக்கும் தன்யாவுக்கும் ஆவல் அதிகமாகவே இருந்தது. எத்தனையோ தடவை ஊருக்கு போக வேண்டும் என அடம் பிடித்தும் போகமுடியவில்லை. அப்பறம் போவோம்… அப்பறம் போவோம் என தட்டிக் கழித்தே வந்த அப்பா… இப்போது அழைத்துச் செல்வதால் ஊர் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.
நம்ம ஊரு எப்புடி இருக்கும். இங்கே இருக்கமாறி மேடு பள்ளமா இருக்குமோ…?
உயரமான மரங்கள்; இங்கமாறியே ஆங்காங்கே குட்டித் தீவுகள்; போகவர பஸ்ஸ விட படகுதான் அதிகமா இருக்குமோ..?

இங்கே இருக்கமாறி மண்ணு சூடா இருக்குமோ..? சீக்கிரமாகவே விடிஞ்சுருமோ…?
இங்கமாறியே கடல் இருக்குமா…? கரையில விளையாடலாமா…? மீன் புடிக்கிறதா இருந்தா எம்புட்டு தூண்டியவும் எடுத்து வந்துருப்பேனே..?
எல்லோரும் எப்படிப் பேசிக்குவாங்க..? நம்மல மாறியே பேசுவாங்களா…? நம்மலப் பாத்ததும் என்ன பண்ணுவாங்க…?
அப்பாவும் அம்மாவும் நமக்கிட்ட ஊரப்பத்தி எதுவுமே சொல்லலையே. அப்பச்சியும் அப்பத்தாவும்தான் இருக்குறதா சொன்னாங்க. அவங்களுக்கு மாசம் மாசம் ஆயிரம் ரூபா பணம். அனுப்பி வைப்பாங்க. அவ்ளோதான் தெரியும்…..
குட்டிப் பிள்ளைங்களா இருக்கும்போது அப்பச்சி கடிதம் போடுவாரு. இப்பத்தான் போன்ல பேசிக்கிறோம். அப்பச்சிகிட்டயும் எதும் கேட்கலயே…!
குழந்தைகள் இருவரும் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர்.
“அண்ணே..! கப்பல் போகும்போது பெரிய மீன்கள் எதிரே நீந்தி வருமாம். அதுகளுக்கு தவுடு, பொறி எல்லாம் போடுவாங்களாமே. எங்க பிள்ளைங்க சொன்னாங்க. உண்மையாண்ணா..!”
”ம்… அப்புடித்தான் நெனைக்கிறேன். நானும் கேள்விப்பட்டேன். போகும் போது பார்ப்போம்.” என்று தலையசைத்தான்.
கப்பல் கடலலைகளை கிழித்தவாறு வேகமாகவே பயணத்தைத் தொடங்கியது. மேலும் கீழும் அசைந்து நடனமாடியது.
குழந்தைகள் இருவரும் சன்னலை எட்டிப் பார்த்தனர். காற்றின் வாசம் இதமாய் இருந்தது. புதிய உலகத்துக்கு செல்வதாகவே உணர்ந்தனர்.
“அங்க போயி என்னத்த எட்டிப்பாக்குறீங்க. பேசாம இங்க வந்து உக்காருங்க” செல்லமாக கடிந்து கொண்டாள் பிச்சையம்மாள்.
“பசங்கள அவுக போக்குல விடு. மகிழ்ச்சியா இருக்கட்டும். இப்பத்தானே புள்ளைக முதன்முதலா கப்பல்ல போறாங்க… நம்மல மீறி எங்க போகப் போறாங்க. இம்புட்டு மக்கமனுச இருக்கும் போது என்ன ஆகப் போவுது..” சிரித்துக் கொண்டார் ரவி.
என்னதான் இருந்தாலும் பெத்தவ மனசு பதறத்தானே செய்யும்…. என்பது போல முணுமுணுத்தாள். அதுக்காக ஒரே எடத்துல அடச்சா போட முடியும் இதுக என்ன கோழிக்குஞ்சுகளா… என கிண்டலாக பேசினார்.
“அது சரிங்க.. இது இன்னைக்கே இப்புடியே போறதுல்ல. இன்னும் மூணு நாளு கப்பல்லதான் இருக்கனும். தெரியும்ல… இப்படி ஆட்டம் போட்டாங்கன்னா திங்கிறது எதுவுமே வயித்துல தங்காம போற வரைக்கும் வாந்தி எடுத்துக்கிட்டேதான் இருப்பானுக. அங்க பாத்திகளா.. அந்த அம்மாவ… இப்பவே வாயால பாயசம் கிண்டிட்டாங்க. சுத்தம் பண்றவங்க திட்டிக்கிட்டே போறாங்க.” சுட்டிக் காண்பித்த மனைவியிடம் புன்முறுவலை மட்டுமே பதிலாக தந்தார்.
பெண்களுடன் பயணிப்பதென்பது பெரும் சவால்தான். போக வேண்டிய இடத்துக்கு பத்திரமாக போக வேண்டும் என்பதைத் தாண்டி வேறு என்ன இருக்கப் போகிறது. அந்தக் கவலைதான் அவளுக்கும். அவளது முகம் சற்றே சுருங்கி போய் இருந்தது.
விடும்மா… சின்னப்புள்ளைகதானே. பசங்க படகுல போனதுக்கும் கப்பல்ல போறதுக்கும் நெறைய வித்தியாசம் இருக்குல. இருபது முப்பது பேரு போனதுக்கும் இதுல ஊரே தெரண்டு போகும்போது கொஞ்சம் வெளையாட்டும் சிரிப்புமாத்தானே இருக்கும்…. மனைவியின் கூந்தலை நீவியபடி தோளில் சாய்த்துக் கொண்டார் ரவி.
சிறிது நேரத்தில் குழந்தைகள் இருவரும் ஓடிவந்து பக்கத்தில் அமர்ந்துகொண்டனர்.
“அப்பா! நம்ம ஊரு எப்புடி இருக்கும். அங்க யார் யாரெல்லாம் இருக்காங்க… எப்ப ஊருக்குப் போவோம். ஆவலோடு கேட்ட இளவரசனை அணைத்துக்கொண்டு முத்தமிட்டார்.
“அப்பா, எனக்கும் சொல்லுங்க.”
தன் குழந்தைகள் இருவரையும் தோளில் சாய்த்துக்கொண்டு பயணம் செய்யத் தொடங்கினார்…
“ஊருக்குள்ள நுழையும் போதே கிழக்குப் பக்கமா மூனு மலை, மேற்குபக்கமா ஒரு மலைனு மொத்தம் நாலு மலை இருக்கும். மூனு மலையும் குளத்துக்குள்ள வரிசையா இருக்கும். முதல் மலைல சின்னதா கோயில் இருக்கும். அதுனால அத சாமிமலைனு சொல்லுவோம், அடுத்த மலை பேரு குருவிமலை, கடைசியா உள்ள மலை கொக்குமலை. சாமி மலைல மட்டும் ஒரே ஒரு மரம் இருந்துச்சு. மத்த ரெண்டு மலைலயும் எதுவுமே இல்ல. குளத்துல தண்ணி பெருகுச்சுனா பாக்க அவ்ளோ அழகா இருக்கும். நம்ம மாயபந்தர்கிட்ட இருக்க கடல் மாறி….”
“அப்டினா மேற்கே ஒரு மலை இருக்கே. அது நல்லா இருக்காதா” ஆவலோடு கேட்டான் இளவரசன்.
“இருக்குறதுலேயே அந்த மலைதான் ரொம்ப அழகா இருக்கும். சுத்திலும் வயல்வெளி, மலை மேல நிறைய மரம் இருக்கும். பக்கத்துல பனமரம் கூட்டம் கூட்டமா இருக்கும். மலைல உசுலமரம்தான் நெறைய வளர்ந்து இருந்துச்சு. அந்த மலைல கீரிப்புள்ளைக நெறையா வாழவுந்தான் அத கீரிமலைனு சொல்லுவோம்.”
கீரிப்புள்ளைனா காட்டுக்குள்ள திரியுற மானுமாறியே இருக்குமா…? நம்ம வீட்டுக்கு எவ்ளோ தடவ மானு வந்துருக்கு. மானு கொம்புகூட நமக்கிட்ட இருக்கேப்பா… இளவரசனிடமிருந்து இந்தப் பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை.
மானு கொம்பு வச்சுருக்கோம்னு யார்கிட்டேயும் சொல்லிருவானோ என பயந்தார் ரவி. எப்ப பாத்தாலும் மானு நெனப்பு…..தானா..? அத அங்க போயி காட்டுறேன். இப்ப நா சொல்றத கவனிங்க… செல்லமாக திட்டினார்.
அண்ணம்பய எப்பவுமே இப்படித்தாம்பா. அவன விடுங்க. அப்புறம் அங்க என்ன பண்ணுவீங்க… வினவினாள் தன்யா.
“மாடுகள பத்திக்கிட்டுப் போயி அங்க விட்டுட்டு நாங்க எல்லாரும் அதுலதான் விளையாடுவோம். மலை ஓரத்துல பாத்தா நிறைய சப்பாத்திகள்ளி செடி இருக்கும். எங்களுக்கு பல நேரங்கள்ல மதிய சோறு கொடுக்குறதே இந்த சப்பாத்திகள்ளி பழமும், நுங்கும்தான்…”
“அப்பா, மொதல்லயே கேக்கனும்னு நெனச்சேன். அந்த கீரிக உங்கள கடிச்சிடாதா, வியப்புடன் கேட்டாள் தன்யா..”
“இல்லம்மா, அதுக ராத்திரிலதான் வெளிய வரும். பகல்ல நாங்க விளையாடுறதால அத்தனையும் மலைல இருக்குற பொந்துக்குள்ள அடஞ்சுக்கும். நாங்க இல்லன்னா அப்பப்ப வெளியே வந்து தலை காட்டும்.
“கீரி மட்டும்தான் இருக்குமா.” கேட்டான் இளவரசன். “ம்… முயலும் இருக்கு. ஆசையா இருங்க போனவுடனே உங்களுக்கு புடிச்சுத் தாரேன்.” தன் பங்குக்கு சொல்லி முடித்தாள் பிச்சையம்மாள்.
“அப்பா…. நெசமாலுமே முயலும் இருக்கா…” விழிகளை உயர்த்தினாள் தன்யா.
“ம்… நிறையவே இருக்கு. ஆனா பகல்ல பாக்க முடியாது. நாங்க முயல பாக்குறதுக்காக நிலா வெளிச்சம் இருக்கும் போது பசங்களோட அங்க போயி வரப்புகள்ல மறஞ்சுக்குவோம். முயல், வயல்வெளில மேய வரும் போது நெறைய தடவ பாத்துருக்கோம்..” அவர் சொல்லச்சொல்ல ம்… போட்டுக்கொண்டே கேட்டனர். இன்னும் வேற என்னென்ன இருக்குமோ என தெரிஞ்சுக்க ரெண்டு பேருமே ஆசைப்பட்டனர்.
“வேற எனங்கப்பா அங்கே…ருக்கு தன் முகத்தில் கை வைத்தபடி கேட்டாள் தன்யா.”
ஊருக்குப் பக்கத்துலேயே இருக்கும் கோயில்கரையப் பத்தியும் சொல்ல ஆரம்பித்தார். சின்னதா காடு இருக்க எடத்த கோயில் கரைனு சொல்லுவோம். அதுக்குள்ள குதிரைசாமி இருக்கு. அதுல பனைமரங்களும் பாஞ்சாம் பழ செடிகளும்தான் அதிகமா இருக்கும். ம்…. அந்தப் பழங்கள பறிச்சு சாப்புடுற சுகமே தனிதான்…. என சிலாகித்த அப்பாவை குறுகுறுனு பார்த்தான் இளவரசன்.
“பாஞ்சாம் பழம்னா என்னப்பா….” என்பது போல பார்த்த இளவரசனிடம் “ஆனான் பழம் மாறியே இருக்கும். சிவப்பு நிறத்துல கொத்துக்கொத்தா பழுத்து தொங்கும். எங்க ஊர் திராட்சைப் பழம்னு சொல்லுவோம். அந்தப் பழங்களுக்காகவே குரங்குகள் அதிகமா வாழ்ந்துச்சு…. கர்புர்னு… அதுக கத்திக்கிட்டு மரத்துக்கு மரம் தாவித் திரியும்..”
“குரங்கும் இருந்துச்சா.. ஐ…ய்யா…. அப்புடினா ஊருல நமக்கு நல்லா பொழுது போகும்.. இப்பவே பாக்கனும் போல இருக்குப்பா…” மடியில் படுத்துக்கொண்டாள் தன்யா.
“ம்… அது மட்டும் இல்ல. அந்தக் காட்டுக்குப் பக்கத்துலேயே வெள்ளாறு குண்டாறுனு ரெண்டு ஆறு ஓடுது.” மழைக்காலத்தில் அங்கதான் குளிப்போம் என்றதும் குழந்தைளுக்கு ஆற்றில் குளிக்க ஆசையாக இருக்கு என்பதை அவர்களது கண்களை வைத்தே கண்டுபிடித்தார்.
பேசிக்கொண்டே இருந்ததில் மணி போனதே தெரியவில்லை. டோக்கனை வாங்கிக் கொண்டு சாப்பாடு வாங்குவதற்காக கேண்டியனுக்குச் சென்றார். இளவரசனும் கூடவே வந்தான்.
கிராமத்து நினைவுகள் ஒவ்வொரு நாளும் இப்படியே கழிந்தது. அதனால் பயணம் இனிதானது. மூன்று நாளும் மூன்று நொடி போல் கடந்தது.
மத்தியான வெயிலில் சென்னை துறைமுகம் இனிதாய் வரவேற்றது. பேரம் பேசாமல் ஆட்டோவில் ஏறி கோயம்பேடு வந்தனர். பகல் பொழுதை அங்கேயே கழித்துவிட்டு தயாராக நின்ற புதுக்கோட்டை பேருந்தில் ஏறினர்.
இரவுப் பயணம் என்றாலும் பேருந்தில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. கிராமத்து பசுமை நினைவுகள் எதிரே வட்டமிட்டபடி இருந்தது.
அதிகாலை வந்திறங்கியவர்கள் கிராமத்திற்கு ஆட்டோவில் பயணமானார்கள்.
பொழுது நன்றாகவே விடியத் தொடங்கியிருந்தது. நெறிவயல் கிராமம் வரவேற்க தயாராக இருந்தது. ஆட்டோக்காரரிடம் வீடுகளை சுட்டிக்காண்பித்து அங்கே போய் நிறுத்தப் சொன்னார். பிறந மண்ணில் கொஞ்ச தூரம் நடப்போம் என்று ஊருக்கு வெளியே இறங்கி நடக்க ஆரம்பித்தவர்களை சாமிமலை வரவேற்றது.
“அப்பா நீங்க சொன்ன மலை வந்துருச்சு”
“ஐ… வரிசையா மூனு மலை” மலையைப் பார்த்து ரசித்தனர்.
குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் அது நீடிக்கவில்லை.
மேற்கே திரும்பி பார்த்தால் கிரேன் இயந்திரங்கள் இரண்டு கம்பீரமாய் நின்றிருந்தன.
“அப்பா…கீரிமலை..” ஏக்கத்துடன் கேட்ட தன்யாவுக்கு பதில் சொல்ல முடியாமல் யோசித்தார்.
கீரிமலை அழிக்கப்பட்டு குவாரியாகி இருந்தது. அருகில் இருந்த வயல்வெளிகளில் கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. கீரிமலை இருந்ததற்கான தடயமே இல்லை. அந்தமான்லதான் மலைய ஒடைக்கிறானுங்கனா..

இங்கேயுமா…? மனம் கனத்து போனது. எவ்வளவு பெரிய மலை கொள்ளையடிக்கப் பட்டுவிட்டதே… சாமிமலை தப்பிவிடும். குருவிமலை கொக்கு மலையின் கதியும் இப்படி ஆகிவிடுமோ… மனசு தடுமாற்றம் கண்டது.
குழந்தைகள் இருவரும் அப்பாவின் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். வாயடைத்துப் போய் நின்றாள் பிச்சையம்மாள்.
அப்போது எதிரே பத்துப் பதினைந்து லாரிகள் மணல் ஏற்றியவாறு ஆற்றிலிருந்து வந்து கொண்டு இருந்தன.
ஈரம் மிகுந்த மணலில் இருந்து கண்ணீராக தண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. இவை ஆறுகளும் சுரண்டப்பட்டு விட்டதையேக் காண்பித்தன.
வயல்வெளிகளில் நுங்கு காய்த்த பனைமரங்கள் செங்கல் சூளைக்கு துண்டாடப்பட்டு கொண்டு இருந்தன.
எஞ்சிய இயற்கையையாவது வருங்கால குழந்தைகள் முழுமையாக அனுபவிக்கட்டும் என்ற நினைப்பில் மக்களை கிரட்டி தன் கிராமத்தை மீட்டெடுக்க நிரந்தரமாக இஙயே தங்குவதென முடி வெடுத்து ஊருக்குள் நுழைந்தார் ரவி.
அப்போது அந்தக் காலை வேளையில் வானம் கார்மேகத்தை அணைத்துக் கொண்டு இருந்தது. எங்கோ மயில் அகவும் சத்தமும் கேட்டது.
ரவியின் மனசுக்குள் தானாய் அடைமழை பெய்யத் தொடங்கியது.
![]()
எதிர்பார்த்த முடிவுதான். கதையின் களம் பயணக்கப்பல் சுவாரஸ்யம் கூட்டியது. குழந்தைகளின் ஆர்வம், சொந்த ஊரின் விவரம் என்று கதை நகர்வு தொய்வில்லாமல் நாமக்குள்ளும் குழந்தைகளின் உற்சாகம் தொற்றிக் கொள்ள கதை ரோடு பயணமும் விரைவில் முடிந்துவிட்டதை உணர்கிறோம். வாழ்த்துகள்.