அதிபர் கைது; இந்தக் குற்றங்களும் ராஜபக்சக்கள் மீது அரசு சுமத்துமா?

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் கணவரான அதிபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தையும் ராஜபக்சக்கள் மீது அரசாங்கம் சுமத்துமா என்ற சந்தேகம் எமக்குள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கி டையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு நிபந்தனையற்ற வகையில் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். போதைப்பொருள் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் பாடசாலை அதிபர்.இதனை அலட்சியப்படுத்த முடியாது.
பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போது அவரை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கினோம். தற்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் கணவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கைது செய்யப்படும் போது அரசாங்கம் செயற்படும் விதத்தை அவதானிக்கிறோம்.இந்த குற்றச்சாட்டையும் ராஜபக்சக்கள் மீது அரசாங்கம் சுமத்துமா என்ற சந்தேகம் எமக்குள்ளது என்றார்.
![]()