நிவாரணம் கிடைக்குமா? வரி அதிகரிக்காதா? பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பட்ஜெட்!; இன்று பிற்பகல் ஜனாதிபதி சமர்ப்பிப்பார்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள,தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ளார்.
வரி அதிகரிப்பு இல்லாமல் சகல துறைகளுக்கும் பெருமளவு நிவாரணங்களை வழங்கும் மற்றும் நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதாகவே அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் அமையும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்த நிலையில்,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இன்று முன் வைக்கப்படும் வரவு செலவுத் திட்டம் எப்படி அமையப் போகின்றது என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய 2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவுடன் இணைந்து ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதன்கிழமை இரவு இறுதி செய்தார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் இரண்டாவது வரவு செலவுத்திட்டமான 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக செப்டம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது .
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசின் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டத்தில் செலவீனமாக 4இலட்சத்து 43,435கோடியே 64,68000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4இலட்சத்து 21824 கோடியே 80,18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 21610கோடியே 84,50000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இந்நிலையிலேயே இரண்டாவது மதிப்பீடான வரவுசெலவுத்திட்ட உரையை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை ஆற்றவுள்ளார் , அதனைத் தொடர்ந்து நாளை 8ஆம் திகதி சனிக்கிழமை முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தை நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கு நாழி 8 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான 6 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இறுதி நாளான வெள்ளிக்கிழமை இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு இடம்பெறும்.
அதனைத்தொடர்ந்து குழுநிலை விவாதத்திற்கு 17நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 15 ஆம் திகதி சனிக்கிழமை முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இடம்பெற்று மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்புஅன்றையதினம் மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் இடம்பெறும்.
![]()