எதிர்பாராத யுத்தம்… கதை… சோலச்சி


காஷ்மீரீன் நியூதீது பகுதியிலிருந்து மக்கள் ஒவ்வொருவரும் மூட்டை மூடிச்சுகளை சுமந்து கொண்டு குடும்பம் குடும்பமாக வேற்றிடம் நோக்கி சென்றுகொண்டு இருந்தார்கள். வெள்ளை போர்வையாய் போர்த்தி கிடக்கும் பனி மலைகளின் போர் அபாயத்தை வானொலியும் தொலைக்காட்சியும் அறிவித்துக்கொண்டே இருந்தன.
ஆயுதங்களையும் தேவையான ஆட்களையும் தீவிரவாதிகள் ஆங்காங்கே குவித்து வைத்திருந்தனர். பனித்தூறல்களை துடைத்துவிட்டு சூரியகதிர்கள் மெல்ல உலாவிக்கொண்டு இருந்தன. இந்திய ராணுவ வீரர்கள் எல்லாவற்றுக்கும் தயார் நிலையில் இருந்தார்கள். வழக்கம் போல பதுங்கு குழிகள் வெட்டி வைக்கப்பட்டிருந்தன. மணல் மூட்டைகள் ஆங்காங்கே தடுப்புகளாக அடுக்கப்பட்டு இருந்தன. இடுக்குகளிலும் மலை முடுக்குகளிலும் வீரர்கள் பதுங்கி தங்களை காத்துக்கொண்டும் எதிரிகளை தாக்குவதற்கும் தயாராக இருந்தனர்.
கோக்லாஸ் பெசன்ட், ஸ்னோ காக் போன்ற பறவைகள் மலை உச்சிகளில் அங்கும் இங்கும் கத்திக்கொண்டே திரிந்தன. அவற்றால் எங்கேயும் நிலையாக தங்க முடியவில்லை. சண்டை நடக்கின்ற பொழுதெல்லாம் பறவைகள் அலறிக் கொண்டே திரிவது வாடிக்கைதான் என்றாலும், இன்று இனம் புரியாத பதற்றத்தோடு பறவைகள் கத்திக்கொண்டே திரிவதுதான் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அடுத்து என்ன நிகழும் என்று மக்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
இராணுவ வீரர்கள் சிலர் முதுகில் ரொட்டிகளையும் துப்பாக்கி குண்டுகளையும் சுமந்து சென்றனர். ஆயுதங்களை தாங்கிய லாரிகள் ட்ரூ…ரூ….ட்ரூ என் சத்தத்துடன் மலைகளின் வளைவு நெளிவு பாதைகளில் அணிவகுத்துச் சென்றன. வெடிகுண்டுகளை தாங்கிய பீரங்கிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. எப்பொழுதும் போர் ஏற்படலாம் என்பதன் அறிகுறியாக இவைகள் தென்பட்டன.
தனது அறையிலிருந்து ரொட்டித் துண்டுகளையும், வெடி குண்டுகளையம் முதுகில் சுமந்தும் கையில் பெரிய துப்பாக்கியை ஏந்திக் கொண்டு வெறி பிடித்தவனைப்போல் வெளியே வந்தான் விவேக்.

“சார், உங்களுக்கு தபால் வந்து ரெண்டு நாளாகுது என்றான் ராணுவவீரன் ஒருவன். யாராக இருக்கும் என்றெல்லாம் யோசிக்க நேரமில்லை. “ம்…அதக் கொடுங்க” என்று வேகமாக வாங்கியவன் அனுப்பியவரின் முகவரியைப் பார்த்தான்.
“ஹேமா” என எழுதியிருந்தது. பெயரைப் பார்த்ததும் பொசுக்கென்று கண்ணீர் வழிந்தது. கைகளால் துடைத்தான். நிற்கவில்லை. பனிமலையைப்போல் கசிந்து கொண்டிருந்தது. போர்க்களத்திற்கு செல்லும் வழியில் மனம் சிதறுகிறேதே…! என்று சிந்தனையில் உதித்தாலும் தட்டிக் கழிக்க முடியாமல் தவித்தான். பீரங்கி குண்டு மழைக்குள் பூத்திருக்கும் பனிமலர்களைப் போல் வண்ணமயமாக முகம் மலர்ந்தது. விவேக்கின் கனவு கன்னி ஹேமா.
கருவேலங்காட்டு கிராமத்தில் சின்ன வயசுலேயிருந்து ஒன்னாப் படிச்சவங்க. விவேக்கின் சிந்தனை கடந்த காலத்துக்குள் பயணித்தது.”
“டேய்…. எனக்கு கொஞ்சம் அய்சு கொடுடா…” கையை நீட்டி முத்து எவ்வளவோ கெஞ்சியும் தர மறுத்தான் விவேக். ஏன்டா இவன்கிட்ட கேட்டோம்னு நொந்துபோன முத்துவின் வாயிலிருந்து எச்சில் மட்டுமே ஒழுகியது.
“தொனத்தொனங்காம செத்த நேரம் சும்மா இருக்கியா. நானு பழைய பொசுத்தகத்த அய்சுக்காருக்கிட்ட போட்டுட்டு ஒரு அய்சு வாங்குனதே ஹேமாவுக்காகத்தானு ஒனக்கு தெரியாதா…. வேணும்னா வர்றவரைக்கும் இரு. வந்தவொடனே மூணு பேருமா எப்பவும் போல திம்போம்” விவேக்கின் பேச்சு எப்போதும் பழகிப்போனதுதான். என்ன நடந்தாலும் விவேக்கை விட்டு முத்து விலகியதே இல்லை சின்னஞ்சிறு வயதிலிருந்தே முத்துவைப் போலத்தான் ஹேமாவும், விவேக்கும் பழகினார்கள். பழக்கம் வழக்கமாகி பின்னாளில் காதலாக மாறிப் போனது.
விவேக்கின் மனசு முழுவதும் ராணுவத்தில் சேருவதிலேயே குறியாக இருந்தது. விடுதலைப் போராட்ட கதைகளைக் கேட்டு கேட்டு தன்னை முழுமையாக இராணுவ வீரனாகவே மாற்றிக் கொண்டான். ஹேமாவின் ஆசையும் இதுவாகத்தான் இருந்தது. ஹேமாவின் உதடுகள் சிந்திய குளிர் நிலவுகளை சேகரித்து மனசுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான். காடு கரடுகளில் அவளோடு கை கோர்த்து திரிந்தான். அவளுக்காகவே நேரங்களை ஒதுக்கிக் கொண்டான். அவள் உதடுகளில் பூக்கும் சொற்களை மரங்களுக்கும் பறவைகளுக்கும் மொழி பெயர்த்தான். பள்ளிக்கூடத்து புள்ளைங்க காத்தோடு காத்தா வெளையாடுதுங்க…. வெளையாண்டு திரிவதை ஊரார் வேடிக்கை பார்த்தனர்.
ஹேமா பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியது விவேக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து படிப்பாள் என்று எதிர்பார்த்தான். கூடவே வந்திருந்தால் கோடையும் வண்ணக் குளிராக இருந்திருக்கும் என்பது விவேக்கின் ஆசை. அவன் கூடவே பயணிக்க வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தாள் ஹேமா. என்ன செய்வது… கிராமத்துச் சூழல் மேல் படிப்புக்கு முட்டுக்கட்டை போட்டது. கல்விக்கு தடை போட்டாலும் கண்களுக்குள் ஊற்றெடுக்கும் காதலுக்கு தடையேது…?
அவளின் அம்மாவோடு மாடுமேய்க்கச் சென்றாலும் இவர்களின் காதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இவளின் பேச்சு மொழியை ஏற்கனவே மொழிபெயர்த்து காடெங்கும் விதைத்திருந்தான் விவேக். அவை இப்போது ஓடோடி வந்து ஹேமாவை அணைத்து அவன் இல்லாத பகல் பொழுதை எல்லாம் இனிமையாக மாற்றின. ஆதலால், விவேக் அருகில் இல்லாதது பெரும் குறையாக தெரியவில்லை அவளுக்கு. ஆனாலும், அவளுக்கான நேரங்களை ஒதுக்குவதில் விவேக் தவறியதே இல்லை.

விவேக் தன்னோடு காற்றில் கரைவது பேரின்பத்தை கொடுத்தாலும் அவனின் படிப்பு தடைபட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். விவேக்கும் முத்துவும் நல்ல முறையில் படித்து கல்லூரியில் பி.காம். இளங்கலையை முடித்தார்கள். அந்த நேரத்தில்தான் காஷ்மீர் மாநிலத்தின் எல்லையில் பணியாற்றுவதற்கு இராணுவத்திற்கு நேரடியாக ஆள் எடுத்தார்கள். விவேக் தனது சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு ராணுவப் பயிற்சி நடக்கும் சென்னை பரங்கிமலைக்கு விரைந்தான். ஹேமா தனது உள்ளங்கைகளை இறுக பொத்திக் கொண்டு ஏதேதோ வேண்டிக் கொண்டாள். அவளுக்கு நினைவெல்லாம் விவேக்கைச் சுற்றிச் சுற்றியே வந்தது.
கட்டுடல் குன்றாத துடிப்புமிக்க வீரனை யாருக்குத்தான் பிடிக்காது..? பரங்கிமலைக்கு ஓடோடி வந்தது வீண் போகவில்லை. ஹேமாவின் வேண்டுதலும் நிறைவேறாமல் போகுமா என்ன..? அவள் என்ன சுயநலக்காரியா…? இல்லை… விவேக் நாட்டுப்பற்று இல்லாதவனா…? பொதுநலமும் நாட்டுப்பற்றும் இருந்தால் போதுமா…? . உடல் தகுதியும் மன உறுதியும் மிக முக்கியம். விவேக்கின் திறமையும் தன்னம்பிக்கையும் அவனை இராணுவத்தில் இணைத்துக் கொண்டது. இதைக் கேள்விப்பட்ட ஹேமா வானவிதிகளுக்கே பறந்து சென்று விண்மீன்களை சரமாக்கி கூந்தலில் சூடிக் கொண்டாள். அளவில்லாத மகிழ்ச்சி யை ஓயாத அலைகளைப் போல் அங்குமிங்கும் நடனமாடச் செய்தாள்.
ஹேமாவுக்கு விவேக் அத்தை மகன்தான். தனது மகிழ்ச்சியை சகதோழிகளிடமும் சொல்லி ஆனந்தம் அடைந்தாள். அன்றிலிருந்து விவேக் ஹேமா இருவரது கடிதத் தொடர்பும் ஆரம்பித்தது.
முத்து தனது கிராமத்தின் அருகில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலையில் சேர்ந்தான் கருவேலங்காட்டு சிந்தனையில் மூழ்கியிருந்த விவேக் காதுகளுக்கு மலைச்சரிவில் தாக்குதல் நடத்தும் சத்தம் கேட்டது. தீயில் பட்ட விரல் போல பழைய நினைவுகளில் இருந்து திரும்பினான். தனது கைகளில் ஹேமாவின் கடிதம்; எதிரே யுத்தம். கடிதத்தைப் படிக்காமலேயே தனது சட்டைப் பைக்குள் வைத்தான். போருக்கு வேகமாகச் சென்றான்.
யுத்தம் பலமாக இருந்தது. குண்டு மழைதான் பொழிந்தன. வீரர்கள் குழுக்களாகப் பிரிந்து யுத்தம் புரிந்தார்கள். ஷேக்கப்சிங், பகருல்லா, விவேக் மூவரும் ஒரு குழுவாக பிரிந்தனர். இருபக்கமும் பொருட்சேதமும் உயிர்சேதமும் உண்டானது. காஷ்மீர் பனி மலைகளில் இரத்த ஊற்றுகளே வழிந்தன. ஆங்காங்கே இரத்தம் உறைந்தும் காணப்பட்டன.
டு…மீல்….. ட…மார்… டம்…டம்…..டம்….
ச்டு…ச்டு….டுவில்….. டம்….
போர் ஏழு நாட்கள் நடந்தது. முடிவில் தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். ராணுவத்திடமிருந்து தாக்குப்பிடிக்க முடியாமல் உயிர் பிழைத்தால் போதும் என தீவிரவாதிகள் திக்கு திசை தெரியாமல் ஓடினர். தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கிகளும் குண்டுகளும் பெருவாரியாக பறிமுதல் செய்யப்பட்டது.
இறந்தவர்களின் உடல்களை இந்திய ராணுவம் மீட்டது. ஆனால், எங்கு தேடியும் விவேக் குழுவினர் மூவரையும் காணவில்லை. மூவரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று மூவரது புகைப்படமும் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது. வானொலியிலும் அவ்வப்போது செய்தியாக வந்து கொண்டே இருந்தது.
விவேக் இல்லாத கருவேலாங்காட்டு கிராமம் சோகத்தில் மூழ்கியது. வயதான விவேக்கின் அம்மாவும் அப்பாவும் மிகவும் வேதனை அடைந்தார்கள். எதைச் சொல்லி ஆறுதல் படுத்துவது என யாருக்குமே தெரியவில்லை. விவேக் ராணுவத்தில் சேர்ந்ததிலிருந்து அவனது பெற்றோருக்கு முத்துதான் துணையாக இருந்து வந்தான். விவேக்குடன் யாரும் பிறக்காததால் அவன் பெற்றோருக்கு செல்லப்பிள்ளைதான். விவேக்கின் நிலை அறிந்து தீராத சோகத்தில் ஆழ்ந்தான் முத்து. விவேக் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்ற செய்தி கம்மங்காட்டில் மாடு மேய்த்த ஹேமாவின் காதுக்கும் எட்டியது.
தலை விரிகோலமாய் கதறி அழுதாள். அலரும் சத்தம் கேட்டு காக்கைகளும் குருவிகளும் படபடத்து உச்சி நோக்கி பறந்தன. அவளது கால்கள் கருவேலங்காட்டை நோக்கி ஓட்டம் எடுத்தது. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள்.
“ஏண்டி கழுதை அத்தமயன கட்டிக்கிறேனு ஒத்தக் காலுல நின்னுயே இப்ப என்னடி ஆச்சு. இராணுவத்துல சேர்ந்தாவே உசுரு கையில இல்லேனு, தலையால அடிச்சுக்கிட்டு சொன்னேனே ஓம்…மவ கேட்டாளா. அழு நல்லா அழு. ஏதோ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே போய் சேர்ந்துட்டான்” கத்திக்கொண்டு அவளது கையைப் பிடித்து இழுத்துச் சென்றார் ஹேமாவின் அப்பா அந்தோணி.
“வயசுப்புள்ளைய எதுக்குப்பா இப்புடி இழுத்துப் போற….னு…” பலருக்கும் கேக்கத் தோணுச்சு. இப்ப இருக்குற நெலமையில நாம கேக்கப் போயி அது சண்டையில முடிஞ்சுறக்கூடாதூனுதான் அங்கிருந்த எல்லாருமே பேசாம இருந்துட்டாங்க……
மூன்று நாட்களுக்குப் பிறகு எல்லையில் அமைதி நிலவியது. அவசர அவசரமாக சகாயத்துக்கும் ஹேமாவுக்கும் மாதா கோயிலில் திருமணம் நடந்தது. இதில் ஹேமாவுக்கு துளியும் விருப்பம் இல்லை. அவளிடம் எதுவுமே கேட்கவில்லை.
மனசு முழுவதும் விவேக்தான். சகாயத்தை கட்டிக்கலனா நாங்க அத்தனைபேரும் நாண்டுக்கிட்டு செத்தர்றோம். நீ அவன நெனச்சே இந்த ஊருல எத்தனை நாளு வாழுவ…. ஏதேதோ சொல்லித்தான் கல்யாணம் நடந்தது. அவள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் விவேக்கின் நெனப்பாகவே இருந்தாள். ஊரு உலகத்துல நடக்காததா நடந்துருச்சு.. கல்யாணம் ஆயி புருசனோட இருந்து எந்திரிச்சா எல்லாம் சரியாய்டும் என வீட்டில் உள்ளவர்கள் நம்பினர்.
ஹேமாவின் தாய்மாமன் மகன்தான் சகாயம். மனதில் விவேக்கை சுமந்து கொண்டு மணவாழ்வில் சகாயத்தோடு எப்படி வாழமுடியும்…. உள்ளுக்குள் புலம்பினாள். உள்ளம் வாடினாள்.
விவேக் இல்லாத நாட்களை எண்ணி வருந்தினான் முத்து. இத்தனை நாள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்கலையே. அரசாங்கத்திடமிருந்து எந்த தகவலும் இல்லையே. அவன் உடலும் மனமும் நிலைகொள்ளவில்லை. எல்லைக்குப் போவது என முடிவு செய்தான். எல்லைக்கு தனியாக எப்படி செல்வது..? அங்கே போக முடியுமா..? என்பதை எல்லாம் யோசித்தால் நாட்கள் இங்கேயே ஓடிவிடும். போய்த்தான் பாப்போம். ஏற்கனவே, விவேக்குடன் ஒருமுறை அங்கு சென்ற அனுபவம் இருக்கிறது அது போதாதா…. என துணிச்சலை வரவழைத்துக் கொண்டான்.
“அப்பா நா உடனே எல்லைக்குப் போயி விவேக்கப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு வர்றேன்” விவேக்கின் பெற்றோரிடம் விடை பெற்று இரயிலில் ஏறி உட்கார்ந்தான் முத்து. முத்துவின் மனம் இரயிலின் வேகத்தைவிட அதிகமாக ஓடிக்கொண்டு இருந்தது. டெல்லியில் இறங்கி மீண்டும் காஷ்மீருக்கு விமானம் மூலம் புறப்பட்டான். ஸ்ரீநகர் அரசு மருத்துவமனை அவனை வரவேற்றது. உள்ளே சென்றான். கண் இழந்தவர்கள், கை இழந்தவர்கள், பார்க்கவே வேதனையாக இருந்தது. அவன் கண்களில் விவேக் முகம் தென்படவே இல்லை. தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அங்கிருந்தவர்களிடம் பேசினான். இராணுவ முகாம் இருக்கும் பகுதியில் சென்று விசாரிக்குமாறு கை காட்டினார்கள்.
நீண்ட பயணத்தில் தேசியக்கொடியை ஏந்திக்கொண்டு தளர் நடையோடு இராணுவ முகாம் இருக்கும் ஒரு மலைச்சரிவை அடைந்தான். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. இனி பார்க்க முடியுமா என தெரியலையே. அவன் இல்லாமல் ஊர் திரும்புவதில்லை என்ற முடிவுக்கும் வந்தான்.
இராணுவ கூடாரங்கள் அருகில் இருபது வீரர்கள் வரிசையாக நின்று பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தார்கள். தூரத்திலிருந்தே அவர்களை நோட்டமிட்டான். அவர்களில் விவேக்கின் முகமும் தென்பட்டது. கண்களில் இருந்த கெரக்கம் தெளிந்தவனாக “பாத்துட்டேன் பாத்துட்டேன்” என்று முத்துவின் உதடுகள் உரக்க சத்தமிட்டன.

இராணுவ வீரர்களில் ஒருவன் சத்தம் வந்த திசை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். வீரர்கள் அனைவரும் திரும்பினர். நல்லவேளை முத்துவின் உயிர் தப்பியது. அடுத்த குண்டு பாய்வதற்குள் விவேக் தடுத்து விட்டான். ஆங்கிலத்தில் “அவன் என் நண்பனாக தெரிகிறது” என்று சகவீரர்களிடம் சொல்லிவிட்டு முத்துவை நோக்கி ஓடி வந்தான்.
அவனாகத்தான் இருக்கும் என முத்து நம்பினான். விவேக்கின் மனசும் அதையே சொன்னது. கட்டிப்பிடித்துக் கொண்டனர். கண்கள் கலங்கின.
“டேய் ஒனக்கு எதுவும் ஆகலையே….”
“இல்லடா, அவங்க சுட ஆரம்பிக்கும் போதே விழுந்துட்டேன்ல. அதான் கையில லேசான சிராய்ப்பு” தனது வலது கையை காட்டினான்.
“நீ எப்புடிடா இங்க… இவ்வளோ தூரம்… நாந்தான் லீவுக்கு வருவேன்ல…” விவேக் சொன்னதும் முத்து தலை குனிந்தான்.
என்னடா ஆச்சு… என கேட்க துடித்தான்.
“நீ எறந்துட்டியோனு நெனச்சு அம்மாவும், அப்பாவும் ரொம்ப வேதனையில இருக்காங்க. நீ உசுரோட இருக்குற விசயம் தெரிஞ்சா எப்புடி இருக்கும் தெரியுமா…” முகம் மலர்ந்தான் முத்து.
“என்னோட உயிருக்கு ஆபத்து இல்லடா. போர்ல பாகிஸ்தான் எல்லைக்குள்ள போயிட்டோம். அங்கிருந்து தப்பிச்சு வர ரொம்பவும் கஷ்டப்பட்டோம்.. ஏன் நானு செத்துட்டதா சேதி வந்துச்சா…” சிரித்துக்கொண்டே மற்ற இருவரையும் காட்டினான்.
“சரிடா.. ஹேமா எப்புடி இருக்கா…?” விவேக் இப்படிக் கேட்பான் என முத்துவுக்கு தெரியும். ஆதலால் பதில் சொல்ல தயங்கினான். முத்துவின் தோள்பட்டையை பிடித்து உலுக்கினான் விவேக்.
“நல்லாதான் இருக்கா, ஆனா உனக்கு கிடைக்க மாட்டாடா” இப்படிச் சொன்னதும் “ஏன்டா… எதுக்குனு சொல்லு,.. மனசு படபடக்க அவசரப்படுத்தினான் “ஒனக்குத் தெரியாதா… உங்க காதலுக்கு அவளோட அப்பா என்ன பூ போட்டா கொஞ்சுனாரு. எதுத்துக்கிட்டுதானே நின்னாரு. வண்டு கொடையன கொடஞ்சாருல…” பேச்சை இழுத்தான்.
என்னமோ நடந்துருக்கு. ஆனா… ஒன்னுமே புரியலையே.. மனசு கனத்தது. முத்துவின் கண்களை வெறிக்கவெறிக்க பார்த்தான்.
“நீ எறந்துட்டதா நெனச்சு நம்மோடப் படிச்சானே சகாயம்… அவனுக்குக் கட்டி வச்சுட்டாரு. பாவம்டா ஹேமா… அவ துடிச்சதுடிய யாரும் மறக்க மாட்டாங்க…” சொல்லும்போதே முத்து கலங்கினான். கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.
பெருமூச்சு விட்டபடி தரையில் உட்கார்ந்தான் விவேக்.
“என்னய மன்னிச்சுருடா. நா இனி.. ஊருக்கு வரல. நா உசுரோட இருக்க விசயம் தெரிஞ்சா ஹேமாவோட வாழ்க்கையில கலங்கம் ஏற்பட்ரும். நா எறந்துட்டதா நெனச்சு அவ வாழட்டும். என்னயப் பத்தி போகபோக மறந்துடுவா. அம்மா அப்பாக்கிட்ட மட்டும் சொல்லிட்டு அவங்கள என்னோட சேத்துரு…” முத்துவின் கைகளைப் பிடித்துக் கெஞ்சியவன் துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினான்.
விவேக்கின் நல்ல உள்ளத்தை கட்டித்தழுவி பாராட்டினான் முத்து. அவன் வேறெதுவும் பேசாமல் ஊருக்கு திரும்பினான். அவனது கால்கள் கருவேலாங்காட்டில் மிதித்தது. அவன் எதிரே ஹேமாவின் சடலத்தை தூக்கிக்கொண்டு சென்றனர். அவள் மருந்து குடித்துவிட்டு இறந்ததாக முத்துவிடம் ஒருவர் சொன்னார். முத்துவின் கால்கள் நடக்க மறுத்தன.
![]()