இலங்கை

அவுஸ்திரேலியாவில் பொங்குதமிழ்; மீண்டும் இலங்கையில் பொங்கு தமிழ் பிரகடனம் அவசியம்

மீண்டும் பொங்குதமிழ் பிரகடனத்தின் மூலம் ஈழத்தமிழர்களாகிய நாம் எமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்த வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது எனமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் தீர்வு கிடைக்காதுள்ளது. ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மன்றங்களினால் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களுக்கு குரல்கொடுத்து வருகின்ற போதிலும் அரசியல் தீர்வென்பது கிடைப்பதாக இல்லை.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பொங்குதமிழ் தமிழர் தாயகத்தின் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலையில் மீண்டும் பொங்குதமிழ் பிரகடணத்தின் மூலம் ஈழத்தமிழர்களாகிய நாம் எமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்த வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் பொங்குதமிழ் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.

அந்த வகையில் அவுஸ்திரேலியா – மெல்பேர்ன் நகரில் வரும் 9 ஆம் திகதி பொங்குதமிழ் நிகழ்வு முன்னெடுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை தாயக மக்கள் சார்பில் வரவேற்று பாராட்டுகின்றோம். பொது வாக்கெடுப்பு கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இது முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பொது வாக்கெடுப்பு கோரிக்கையை உள்ளடக்கி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றி இருந்தோம். அதனை குறிப்பிட்டே அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்திருந்தது. இவ்வாறு சர்வதேசம் ஏற்றுக்கொண்ட வழிமுறையான பொது வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது .

அவுஸ்திரேலியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள எல்லா பாதைகளும் வீதிகளும் மெல்பேர்ன் நகரை நோக்கி திரும்ப வேண்டும். இராமருக்கு பட்டாபிசேகம் இடம்பெற்ற போது அயோத்தி நகரை நோக்கி அணிதிரண்டதை போன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் வரும் 9 ஆம் திகதி மெல்பேர்னை நோக்கி அலை அலையாக அணிதிரள வேண்டும் மெல்பேர்ன் நகரை தொடர்ந்து தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.
உலகில் எத்தனையோ நாடுகள் பொதுவாக்கெடுப்பின் மூலம் சுதந்திர தேசமாக உருவாகியுள்ளன. அந்த வகையில் இலங்கைக்குள் எந்தவொரு தீர்வும் சாத்தியமில்லை என்பது உறுதியான நிலையில் பொதுவாக்கெடுப்பு ஒன்றின் மூலமே எமக்கான அரசியல் தீர்வை அடைய முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே பொதுவாக்கெடுப்பு கோரிக்கை தொடர்பில் அனைத்துலக கவனத்தை ஈர்த்து அழுத்தங்களை கொடுக்கும் வகையில் உலகின் சகல நகரங்களிலும் மீண்டும் பொங்குதமிழ் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களும் வாக்களிக்கும் உரிமையுடன் கூடியதான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் வட கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் இணைந்து உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பின் ஊடாக எமக்கான அரசியல் தீர்வுக்கு வாக்களிக்க வேண்டும்.
பொதுவாக்கெடுப்பின் மூலமே சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்கள் தமது விருப்பை தாமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *