இலக்கியச்சோலை

பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 02 … செங்கதிரோன்

காலமாகி வந்த முன்னுரை

2023 இல் வெளிவந்த செங்கதிரோனின் ‘யாவும் கற்பனையல்ல’ சிறுகதைத் தொகுப்புக்கு (அமரர்) தெளிவத்தை யோசப் வழங்கிய முன்னுரை இது. செங்கதிரோனின் குறிப்புடன் ‘அக்கினிக்குஞ்சு’ கலை இலக்கியப் பத்தித்தொடரின் இரண்டாவது பகிர்வாகப் பதிவாகிறது. பகிர்வுகள் தொடரும். – யாழ் பாஸ்கர்

செங்கதிரோனின் குறிப்பு.

எனது ‘யாவும் கற்பனையல்ல’ சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு முன்னுரை கேட்டு எழுத்தாளர் தெளிவத்தை யோசப்புக்கு அத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த பதின்மூன்று சிறுகதைகளையும் தபாலில் அனுப்பி வைத்தேன்.

பல மாதங்கள் கழிந்தபின்பு ஒரு கட்டத்தில் தனது முன்னுரையை எனக்குத் தபாலில் அனுப்பிட்டதாகத் தொலைபேசியில் கூறினார். அப்போது அவர் சுகவீனமுற்றிருந்தார். தபாலில் அனுப்பியதாக அவர் கூறிய முன்னுரை எனக்குக் கிடைக்கவில்லை. இச் செய்தியை அவர் எனக்குச் சொல்லிச் சில நாட்களில் அவரின் மரணம் நிகழ்ந்தது. அவர் தபாலில் அனுப்பியதாகக் கூறிய முன்னுரைக்கு என்ன நடந்தது என்கின்ற அங்கலாய்ப்புடன் ‘யாவும் கற்பனையல்ல’ நூலை 2023 டிசம்பரில் வெளியிட்டேன்.

வெளியீட்டு நிகழ்வு 02.12.2023 அன்று மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் “பித்தன் ஷா” அரங்கில் கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் (அமரர்) பேராசிரியர் மா.செல்வராசா அவர்கள் முன்னிலை வகிக்க, மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நூல் வெளிவந்து சுமார் ஒன்றரை வருடங்களின் பின் மல்லியப்புசந்தி திலகர் எனப் புனைப்பெயர் சூடிய எனது அன்புகெழுமிய இலக்கிய நண்பர் எம்.திலகராஜா ஒருநாள் என்னிடம் தெளிவத்தை யோசப்பின் இறுதிநாள் கோவைகளை ஆராய்ந்தபோது அதனுள் இந்த முன்னுரை இருந்ததாக எனக்கு அதனைத் தபாலில் அனுப்பி வைத்தார். 17.09.2025 அன்று என் கரம் கிட்டியது.

(அமரர்) தெளிவத்தை யோசப் முன்னுரையை எழுதிக் கோவையொன்றுள் வைத்துவிட்டு அதை எனக்குத் தபாலில் சேர்த்துவிட்டதாக எண்ணியிருக்கிறார். சுகவீனமுற்றிருந்த நிலையிலும் கைவலிக்க எழுதியிருந்த அவரது முன்னுரையைப் படித்தபோது அவரது பிரிவால் – நினைவால் கண்கள் பனித்தன. அவரது முன்னுரையை ‘அரங்கம்’ மின்னிதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதனைக் கண்டெடுத்து எனக்கு அனுப்பி வைத்த நண்பர் திலகராஜாவிற்கு (மல்லியப்புசந்தி திலகர்) நன்றிகள்.
செங்கதிரோன் –

முன்னுரை

தீவிரத்தன்மை கொண்ட தமிழ் அரசியல் செயற்பாட்டாளரும் சிற்றிதழ் ஆசிரியரும் கவிஞரும் சமூக மேம்பாட்டிற்காக அயர்வற்றுழைப்பவரும் செங்கதிர் இலக்கிய வட்ட அமைப்பாளரும் அதன் தலைவருமான செங்கதிரோன் த.கோபாலக்கிருஷ்ணன் அவர்களது முதல் சிறுகதைத் தொகுதி இது.

தமிழ் இலக்கியத் துறையில் சிறு கதைக்கான அந்தஸ்த்து அது. எத்தனை எத்தனையோ ஆளுமைகள் தன்னகத்தே இருந்தாலும் தானும் ஒரு சிறுகதைத் தொகுதி வெளியிட்டுக் கொள்ளவேண்டும் என்னும் உணர்வுக்கான உதாரணங்கள் நிறையவே இருக்கின்றன.

1960ல் டொமினிக்ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும் சிறுகதை நூலுக்கு சாஹித்திய விருது கிடைத்தபோது அதை ஏற்கமறுத்த பண்டித வர்க்கம் சிறுகதை ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கிய வடிவம் அல்ல என்று சன்னதமாடினர்கள். பரிசை நிராகரித்தார்கள். அப்படி எதிர் விளையாடிய பண்டிதர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் இன்றும் செழித்துத்தான் நிற்கின்றது. இலக்கியம் என்றால் அது சிறுகதைதான் என்னும் அளவிற்கு உச்சம் தொட்ட இலக்கிய வடிவம் சிறுகதை .

ஆகையினால்தான் எல்லா எழுத்தாளர்களுக்கும் தானும் ஒரு சிறுகதை நூல் வெளியிட்டுக் கொள்ளவேண்டும் என்னும் இலக்கிய வேட்கை உதயமாகின்றது. அதன் விளைவே இந்த நூல்.

செங்கதிரோன் இந்தத் தொகுதிக்கு வைத்திருக்கும் பெயர் “யாவும் கற்பனையல்ல” என்பது. கதை எழுத கற்பனை அவசியமானதுதான். என்றாலும் ஆகாயத்தில் பறந்து ஊஞ்சலாடிக் களிக்கும் அஸன்பே காலத்துக் கற்பனைகள் இன்று கனப்படுத்தப்படு வதில்லை. சூழவாழும் மனிதர்களை கண்டுகொள்ளாது வானமேறி மகிழும் கற்பனைகளின் அபத்தங்கள அறிந்தவராகவே செங்கதிரோன் திகழ்கின்றார். சகஜீவிகளின் வாழ்க்கை சித்திரங்கள் இவருடைய படைப்புகளில் சுயத்துடனும் நிஜத்துடனும் உலா வரும் விதம் உவகையூட்டுகின்றது. குடை கவனத்தில் வரும் கணவன் மனைவி, ஊர் மானத்தில் வரும் வேலாப்போடியும் இளைஞர்களும் கரப்பத்தான் பூச்சியில் வரும் பூச்சிகளும் வீட்டார்களும் என்று நிறையவே உதாரணங்கள் கூறலாம்.
அதீத கற்பனைகளற்ற, அழகும், எளிமையும் கொண்ட மொழி நடையுடனான 13 படைப்புக்களின் தொகுதி இது. படைப்பாளியின் அனுபவங்கள் வாசகனுக்காக விரிந்து மலரும் விதம் மகிழ்வைத் தருகிறது.

வாசகன் அலுப்படையா வண்ணம் சின்னச் சின்னதாகவும் சொல்ல வந்த விடயத்தை இலகுவாகவும் தெளிவாகவும் சொல்லிவிடும் லாவகமும் கொண்;டவராக திகழ்கின்றார் செங்கதிரோன்.

இது அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி என்றாலும் இலக்கியத்துக்கோ எழுத்துக்கோ அவர் புதியவர் அல்ல. நாடறிந்த முக்கிய கவிஞர்களான மகாகவி, நீலாவணன் வரிசையில் வைத்துப்பார்க்கப்படும் தகுதி படைத்தவர் செங்கதிரோன் என்று புகழ்துரைக்கின்றார் அமரர் க.தங்கேஸ்வரி.

மட்டக்களப்பு மாநிலத்துக கிராமமக்களின் குறிப்பாக படுவான்கரைப் பிரதேச மக்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் நீலாவணனின் வேளாண்மைஎன்னும் காவியம் முற்றுப் பெறுவதற்கு முன்னரே தனது 44 ஆவது வயதில் திடீரென மரணமடைந்து விட்டார். முற்றுப் பெறாத வேளாண்மையை பூர்த்தி செய்யவல்ல இன்னொரு நீலாவணன் பிறப்பானா என்று தனது ஏக்கத்தை வெளியிடுகின்றார் எஸ்.பொ.நீலாவணனின் நோக்கங்களை இணைத்து அவர் விட்டுச் சென்ற குறிப்புக்களின் துணையுடன் இறுதி அங்கமான விளைச்சலை ஒரு குறுங்காவியமாக எழுதி முடித்து எஸ்.பொ. வின் ஏக்கத்துக்கு விடை பகிர்ந்த பெருமைக்குரியவர் செங்கதிரோன் அவர்கள். இன்னொரு நீலாவணனாகவே நின்று இக் காவியத்தை முடித்து வைத்துள்ளார் என்று இலக்கிய உலகு பாராட்டி மகிழ்ந்துள்ளது.

இது செங்கதிரோனின் இன்னொரு ஆளுமை.
ஆளுமைகள் பல கொண்ட ஒருசமூக விடுதலைப் போராளியான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணனின் சிறுகதைத் தொகுதி உங்கள் கரம் நோக்கி வந்திருக்கிறது.

இதில் உள்ள கதைகளின் மையப்பொருள் பலவிதமானவை. அவைகளை வாசகனிடம் கொண்டுசெல்ல அவர் கையாளும் மொழிநடை வித்தியாசமானது. அவருக்குப் பிடித்தமானது. தனது விருப்பப்படியே தனது அனுபவங்களை சிறுகதை வடிவில் வாசகன் முன் வைக்கிறார். செங்கதிரோன் தனது சிறுகதை ஒன்றிற்கு ராஸ்கல்ஸ் என்று பெயர் வைத்திருக்கின்றார்.

சமூக விரோத நடவடிக்கைக்காரர்கள் மீதான அவரது ரௌத்திரம் லேசானதல்ல. அவனை கோபிப்பதற்கான ஒரு வார்;த்தையை அவர் தேடியலையவில்லை. தனக்கான மொழியைத் தானே தேடிக் கொள்ளும் வல்லமை வெல்கிறது.

இக் கதைக@டாக அவர் காண்பிக்கும் மட்டக்களப்பின் இட வர்ணனைகள் அலாதியானவை. கூடுதலான கதைகள் இந்;த இட அறிமுகங்களை ஒரு வேட்கையுடனேயே செய்வதுபோல் தெரிகிறது. தன் ஊர்ப்பற்று மிகக் கொண்டவர் செங்கதிரோன்.

சமூக அவலங்களில் இருந்தே ஊற்றெடுக்கும் இக் கதைகள் அந்த அவலங்கள் கண்டு மலைத்துப்போகாத சமூகத்தில் விழிப்பை நாடி நிற்கும் மக்களுடன் கை கோர்த்து நிற்பதற்கான பண்புகள் மிளிர்பவை. வாழ்வின்மீது நம்பிக்கையூட்டுகின்ற தொனியினைக் கொண்டிருப்பவை.

உணர்வின் வீச்சும் சொற்களின் சிக்கலற்ற ஓட்டமும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒரு நுட்பமான ஆராய்வின் மூலம் ஆழமாக எழுதுகின்ற முதிர்ச்சியும் செங்கதிரோன் அவர்களை ஒரு நவீன சிறுகதையாளராக நின்று நிலைக்க இந்தச் சிறுகதை நூல் பெரிதும் உதவும் என்று நம்பலாம்.

நாம் அனைவருமே வாசித்துப் பார்க்கவும் வைத்திருக்கவும் வேண்டிய நூல் செங்கதிரோன் வழங்கியிருக்கும் யாவும் கற்பனை அல்ல என்னும் இச் சிறுகதை நூல்

சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் மானுட விடுதலைக்காகப் போராடவும் ஒரு சமூக அக்கறை கொண்டவரான செங்கதிரோன் அவர்களுக்கு பொறுமையும் சக்தியும் சித்திக்க வாழ்த்தி மகிழ்கின்றேன்.

என்றும் அன்புடன்;
தெளிவத்தை ஜோசப்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *