எழுதுதல் என்பது சரியாக சிந்தித்தல்…. இலக்கிய உரை…. அண்டனூர் சுரா

அனைவருக்கும் வணக்கம்,
இந்த உலகில் ஒருவரைப் பேச வைத்து மற்றவர்கள் கேட்பது என்பது மனிதனின் முதல் கண்டுபிடிப்பான மொழிக்குச் செய்யும் மரியாதையாகவே இருக்க முடியும். அதிலும் உலகில் அதிக மக்களால் பேசப்படும் ஆங்கில மொழியாளர்களின் இலக்கிய கூடலில் தமிழ் எழுத்தாளன் ஒருவரை பேச வைத்து கேட்பது என்பது பறவைகளின் சரணாலயத்தில் எல்லா பறவைகளும் ஒரு கணம் தான் பாடுவதை நிறுத்தி இந்தப் பூமியின் ஆதி குரலான காற்றின் மொழிக்குச் செவிமடுப்பதற்கு ஒப்பானதாகும். அதற்காக தஞ்சாவூர் இலக்கிய அறிஞர்கள் கூடலைத் (LITERARY SCHOLAR SOCIETY, THANJAVUR)’ தலை வணங்குகிறேன்.
இந்த நிகழ்வில் பதினெட்டு சிறுகதைகள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து தொகுக்கப்பட்ட “ஏராளமான கதைகள் ( STORIES APLENTY – Tamil Short Stories in English Translation)” எனும் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றும் இந்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறேன்.
இந்த நிகழ்வில் ‘சிறுகதை எழுத்து அனுபவம்’ எனும் தலைப்பின்கீழ் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறேன். இந்தத் தலைப்பின் கீழ் இதற்கு முன்பு ஒரு கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறேன் என்பதால் எனது சிறுகதைகளில் ஆங்கில சிறுகதைகள், மொழிபெயர்ப்பு கதைகள் ஏற்படுத்திய தாக்கங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஆங்கில இலக்கிய ஆளுமைகள் சூழ்ந்திருக்கும் இந்த அவையில் தமிழில் நான் உரையாற்றுவது என்னைப் பொறுத்த வரைக்கும் சாகசமாக உணர்கிறேன். இந்த சாகசம் எப்படியானதென்றால் லூயிஸ் கரோலின் எழுதிய ALICE’S ADVENTURE IN WONDERLAND எனும் ‘ஆலிஸின் அற்புத உலகம்’ எனும் குறுநாவலில் ஒரு முயல் கடிகாரம் பார்த்துக்கொண்டே ஓடும். இப்பொழுது இந்த ஓட்டத்தை மொபைல் பார்த்துக்கொண்டு ஓடுவதாக கற்பனை செய்துகொள்ளலாம். அந்த முயலை அலெஸ் எனும் சிறுமி துரத்திக்கொண்டு ஓடி ஒரு குழிக்குள் தவறி விழுந்துவிடுவாள். அப்பொழுது அவளுக்கு ஏற்படும் மென்மெல்லிய பயத்தினூடே அவள் பல அற்புதங்களைக் காண்பாள். அப்படியான உணர்வை இந்த அரங்கில் உள்ளூர காண்கிறேன்.
இந்த வாய்ப்பு புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் திரு. எஸ். கணேசன் அவர்களால் கிடைத்த வாய்ப்பு. அவருக்கு இந்நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். LITERARY SCHOLAR SOCIETY – LSS தலைவர் முனைவர் திரு. ஜி. அருணாச்சலம், செயலர் முனைவர் சிவக்குமார், பொருளர் ஏ. சுரையா இவர்களோடு இந்த அமைப்பை நிறுவி வளர்த்து வருகிற முனைவர் திரு. ஜி.வெங்கட்ராமன் அவர்களுக்கும் வணக்கங்கள், நன்றிகள்.
முனைவர் எஸ். கணேசன் அவர்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சியளிப்பவர். முகத்தில் புன்னகை பூக்காமல் அவருக்குப் பேசத் தெரியாது. இவரைப் பார்க்கிற பொழுது எனக்கு ஆங்கில எழுத்தாளர் ஸ்டீபன் லீக்காக் நினைவுக்கு வருகிறார். ஸ்டீபன் லீக்காக் நான் அறிந்த முதல் ஆங்கில சிறுகதையாளர். இவரது சிறுகதையான புகைப்பட கலைஞருடன் (WITH THE PHOTOGRAPHER ) எனும் கதை நான் வாசித்த முதல் ஆங்கில சிறுகதை. இக்கதை பதினொன்றாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் பாடமாக வைக்கப்பட்டிருந்தது.
கதையாசிரியர் தனது அனுபவக் கதையாக எழுதியிருப்பார். தன்னை புகைப்படம் எடுக்கச் சொல்லி ஒரு ஸ்டுடியோவுக்குச் செல்வார் கதையாசிரியர். அந்தப் புகைப்படக் கலைஞர் அவரை காக்க வைத்து அவரது தோற்றத்தை கேலி செய்து அவரை அப்படியும் இப்படியுமாக அமர வைத்து புகைப்படம் எடுப்பார். சனிக்கிழமை வந்து புகைப்படத்தை வாங்கிக்கொள்ள சொல்லி அனுப்பிவிடுவார். அவரும் சொன்ன நாளில் புகைப்படத்தை வாங்க வருகிறவரிடம் அந்தப் புகைப்படக் கலைஞர் அவரது படத்தை எடுத்துக் கொடுப்பார். புகைப்படம் எடுத்துக்கொண்டவர் இது என்னுடைய போட்டோ இல்லை என்பார்.
இது உனது போட்டோதான். உனது அசிங்கமான தோற்றத்தை மறைத்து அழகாக்கி உள்ளேன் என்பார். உன்னை யார் அதையெல்லாம் செய்யச் சொன்னது எனக்கு என் முகம் கொண்ட போட்டோதான் வேண்டும் என்பார். அவரிடம் அந்தப் போட்டோவைக் கொடுத்துவிட எப்படியெல்லாமோ அந்த புகைப்படக் கலைஞர் போராடுவார். புகைப்படம் எடுத்துக்கொண்டவர் படத்தை வாங்காமலேயே வெளியேறிவிடுவார்.
இந்தக் கதையை எனது ஆங்கில ஆசிரியர் வகுப்பில் நடித்து நடத்தினார். எல்லாரும் மெய்மறந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். நான் கதையின் முடிவில் சிரித்துவிட்டேன். நான் சிரித்தது அவரைக் கோபமூட்டியது. அவரது வகுப்பில் யாரும் சிரித்துவிடக் கூடாது. ஆசிரியர் என்னை அழைத்து ஏன் சிரித்தாய், என்று கேட்டார். எனக்கு பயமாகிவிட்டது. எல்லாரும் இன்றைக்கு நீ நல்லா மாட்டினாய் என்று சொல்வதைப் போல பார்த்தார்கள்.
நான் சொன்னேன். “பிறகு என்ன சார். போட்டோ எடுத்தா அப்படியேதானே எடுத்துக் கொடுக்கணும். அதெப்படி திருத்திக் கொடுக்கிறது” என்றேன். அந்த ஆசிரியர் இன்னும் கொஞ்சம் முகத்தைக் கோரமாக வைத்துக்கொண்டு, “இதற்கா சிரித்தாய்?” என்று கேட்டார். நானொரு சம்பவத்தைச் சொன்னேன்.
“சார், போன வருசம் நானும் என் ப்ரெண்டும் பஸ் பாஸ்க்காக ஸ்டுடியோவில போட்டோ எடுத்தோம் சார். நான் என் போட்டோவ அப்படியே எடுத்துக் கொடுத்தேன் சார். என் ப்ரெண்ட் ஒருத்தன் எடுத்த போட்டோவ ரொம்ப மேக்கப் செய்து முடி, பல்லெல்லாம் திருத்தி வாங்கிக்கொடுத்தான் சார். பஸ்ல கண்டக்டர்க்கிட்ட அதைக் காட்டினப்ப என்னோட போட்டோவ பார்த்திட்டு கொடுத்திட்டார் சார். என் ப்ரெண்ட் போட்டோவப் பார்த்திட்டு இது நீ இல்லேனு சொல்லி டிக்கெட்ட கிழிச்சி கொடுத்திட்டாரு சார். அதை நினைச்சேன். சிரிப்பு வந்திருச்சு சார் ” என்றேன்.
இதைக் கேட்டதும் ஆங்கில ஆசிரியர் சிரித்துவிட்டார். இதுநாள் வரைக்கும் அவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை. அவர் சிரிக்க மொத்த வகுப்பறையும் சிரித்துவிட்டது. அதன்பிறகு இந்தக கதை என் வாழ்க்கையில் மறக்க முடியாத கதையாகிவிட்டது. இந்தக் கதைக்குளிருக்கும் சிறு உத்தியை நான் எனது ‘மிடற்றுத் தாகம்’ எனும் சிறுகதையில் பயன்படுத்தினேன்.
‘வித் த போட்டோகிராபர்’ கதையில் புகைப்படம் எடுத்துக்கொண்டவர் ‘எனக்கு என் போட்டோதான் வேணும்’ என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார். இது ஒரு வகையான மொழி உத்தி. இதை குழந்தைகளிடம் கேட்கலாம்.
எனது மகன் குழந்தையாக இருக்கையில் என் மனைவி போட்டித் தேர்வுக்காக கோச்சிங் கிளாஸ் சென்றார். என் மகன் என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பான். மாலை ஐந்து மணியாகிவிட்டால் அம்மாவைத் தேடத் தொடங்கிவிடுவான். அவனிடம் என்ன விளையாட்டுப் பொருட்கள் கொடுத்தாலும் கதை சொன்னாலும் அதைக் கேட்க மாட்டான். “அம்மா, அம்மா..” என்றே சொல்வான். சொன்னதைத் திரும்பத் திரும்ப சொல்வது மேடை பேச்சுக்குப் பிழை. ஆனால் சிறுகதையில் அதுவொரு உத்தி.
மிடற்றுத் தாகம் சிறுகதையில் ஒரு அகதித் தாய் அவளது பிள்ளையைத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று பால் கேட்பாள். கடைசி வீட்டில் எப்படியும் பால் வாங்கிவிடணுமென நிற்பாள். அந்த வீட்டார்கள் பால் இல்லை என்பதை பல விதமாகச் சொல்வார்கள். அந்த அகதிப் பெண் அதையெல்லாம் காதினில் வாங்கிக்கொள்ளாமல் “பால் வேணும், பால் வேணும்” என்று மட்டும் சொல்லிக்கொண்டிருப்பாள். அந்தப் பால் எதற்கானது என்பது கதையின் இறுதி பத்தி சொல்லும். இந்தக் கதை நான் எழுதிய கதைகளில் முக்கியமானது.
இலண்டன் மாநகரில் புதினம் இதழ் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. இக்கதை உள்ளடங்கிய சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்றது. மேலும் இக்கதை கோவை நாடகக் குழுவினரால் நவீன நாடகமாக அரங்கேற்றமானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இக்கதையைக் குறித்து எழுதியது. தற்போது நான் வெளிக்கொணர்ந்திருக்கும் அண்டனூர் சுரா சிறுகதைகள் -100 எனும் தொகுப்பில் முதல் கதையாக இடம்பெற்றுள்ளது. இந்தக் கதை வாசகர்களிடம் பரவலாக சென்றடைந்ததற்கு ஸ்டீபன் லீக்காக் ஒரு காரணம்.
ஸ்டீபன் லீக்காக் எப்படியாக இருந்திருப்பாரென்று இந்நேரத்தில் நினைத்துப்பார்க்கிறேன். அவர் புதுக்கோட்டை முனைவர் எஸ். கணேசன் போல நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருந்திருப்பார். ஸ்டீபன் லீக்காக் எனக்குப் பிடித்துப் போக மேலும் ஒரு காரணம் இருக்கிறது. அவர்தான் எனக்கு அலெஸின் அற்புத உலகம் எனும் புதினத்தை அறிமுகம் செய்தார். அவரது நேர்க்காணலில் ஓரிடத்தில் சொல்கிறார். “Personally, I would sooner have written Alice in Wonderland than the whole encyclopaedia Britannica.” உண்மை ஆதாரங்களைக் கொண்ட பிரிட்டானிகா அறிவுக்களஞ்சியம் எழுதுவதை விடவும் கற்பனையான அலெஸ் இன் வொண்டர்லாண்ட் மாதிரியான கதை எழுதவே நான் பெரிதும் விரும்புகிறேன் என்கிறார். அவரது எழுத்துணர்வையே நானும் கொண்டுள்ளேன். நான் சிறுகதை, கட்டுரை, வரலாறு, சொல்லாய்வு என்று பல துறைகளில் இயங்கினாலும் புனைவு இலக்கியம் எழுதுகையில் இருக்கின்ற பெருமகிழ்ச்சி மற்ற எதிலும் இருப்பதில்லை.
இந்த இடத்தில் இன்னொன்றை நான் சொல்லியாக வேண்டும். அலெஸின் அற்புத உலகம் எனும் நூல் எழுதுவதற்கு காரணமான சம்பவம். அந்தச் சம்பவத்தை பல கல்லூரிகளின் பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் சூழ்ந்திருக்கும் இந்த அவையில் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.
லூயிஸ் கரொல் ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். கல்லூரி முதல்வர் மகளுக்குத் திருமணம். அவளுக்குத் திருமணப் பரிசாக இக்கதையை எழுதினார். அலைஸ் அட்வென்சூர் இன் வொண்டர்லாண்ட் எனும் நாவல்தான் பிறகு அலைஸ் இன் வொண்டர்லாண்ட் என்றானது.
இந்தக் கதை எழுதப்பட்ட காலத்திலேயே கப்பல் ஏறிவிட்டது. கப்பல் ஏறுதல் என்பது உலக மொழிகளில் மொழியாக்கம் பெறுவதாகும். கதைகளைப் பரவலாக்கியத்தில் பேருந்துக்கும் கப்பலுக்கும் பெரும் பங்கு உண்டு. எனது கிராமத்தில் ‘மானம் கப்பல் ஏறிருச்சு ‘ என்பதாக ஒரு சொல்லாடல் உண்டு. எதையும் சரியாக செய்யாமல் தப்பும் தவறுமாக செய்கையில் இந்த வாசகத்தைப் பயன்படுத்துவார்கள். “அவன் செஞ்ச வேலையாலே என் மானம் கப்பல் ஏறிருச்சு” என்பார்கள். இந்த சொல்லாடல் எனது இளமை பருவத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறது. நான் கூச்சச் சுபாவம் கொண்டவன். தொடக்க நிலை வகுப்பில் ஆசிரியர் புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார். பயத்தில் எனக்கு வார்த்தை வராது. “உன்னால என் மானம் கப்பல் ஏறுதுடா ” என்று திட்டுவார் ஆசிரியர்.
எனக்கு வாசிக்கத் தெரியாது என்றே என் ஆசிரியர் நீண்ட காலம் நினைத்துவந்தார். எனது பிரச்சனை வாசிப்பது அல்ல. பயத்தில் என் நாக்கிலிருந்து முதல் சொல் வர மறுப்பது. முதல் சொல்லுக்காக தவமாய் தவமிருப்பேன். அந்தப் பிரச்சனை எனக்க இன்றைக்கும் இருக்கிறது. நான் எழுதும் சிறுகதைகள் பல நேரம் முதல் சொல்லுக்காக காத்திருக்கிறது. சிறுகதையைத் தொடங்கி வைக்கும் முதல் சொல் ‘விதை சொல் என்று சொல்லத் தோன்றுகிறது. மிகச் சரியான ஒரு சொல்லைக் கொண்டு தொடங்கப்படாத ஒரு சிறுகதை வலிந்து வேண்டுமானால் எழுதலாம். அதுவாக அது எழுதிக்கொள்ளாது. இந்த உண்மை எனது இருபது ஆண்டுகால எழுத்து அனுபவம் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.
எனது தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்னை பார்த்து அடிக்கடி சொல்வார் இல்லையா. ” உன்னால் என் மானம் கப்பல் ஏறுது” என்று. உண்மையில் இன்று கப்பல் ஏறிவிட்டது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் எஸ். கணேசன் அவர்கள் நான் எழுதிய கதைகளில் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கப்பலில் ஏற்றிவிட்டார். அக்கதை சுஜாதா, புதுமைப்பித்தன், எம்.ராமச்சந்திரன், கல்கி, லாசரா, கி.ராஜநாராயணன், எஸ்.ராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன், எம்.எம்.தீன், மு.ஆனந்தன், நகுலன், மீனாட்சி பாலகணேஷ், இவர்களின் கதைகளோடு என் கதை ஏராளமான கதைகள் ( STORIES APLENTY ) எனும் தலைப்பில் சேர்ந்துகொண்டது. அந்நூலுக்கான முகப்பு அட்டையில் எனது முகம் இடம்பிடித்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
மொழிபெயர்ப்பு இலக்கியத் துறையில் பெரும் பங்காற்றி இருக்கிறது. “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” எனும் சுப்பிரமணிய பாரதியாரின் வரிகள் மொழிபெயர்ப்பையே குறிப்பிடுகிறது. மொழிபெயர்ப்பு தமிழ் இலக்கியத்திற்குள் வராத வரைக்கும் தமிழ் இலக்கியம் கடலாகவே இருந்துவந்தது. ஒரே இடத்தில் தேங்கி சீற்றம் கொண்டு அலையடித்து ஆழம் அகலத்தால் தன் இருப்பை காட்டிக்கொண்டிருந்தது. இலக்கியத்திற்குள் மொழிபெயர்ப்பு வந்ததும் இலக்கியம் வானமாகிவிட்டது. வானம் அளவிற்கு இந்த உலகில் வேறொன்றும் விசாலமானது இல்லை. வானம் வண்ணமயமானது. அதிசயங்கள் கொண்டது. ரசிக்கத்தக்கது. மர்மங்கள் கொண்டது. எல்லையற்றது. இவ்வளவையும் கொண்டது சிறுகதை. இந்த வண்ணமயமான அற்புதங்கள் மொழிபெயர்ப்பு மொழிக்குள் வந்ததன்பிறகு நிகழ்ந்தது. இது எல்லா மொழிகளிலும் நிகழ்ந்தது. நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கப்பலில் பொருட்கள் ஏற்றுமதியாகையில் கதைகளும் ஏற்றப்படுகின்றன. நம்மூரில் பொன் முட்டையிடும் வாத்துக் கதை அப்படித்தான் கப்பல் ஏறியது. அக்கதை இங்கிலாந்து சென்று திரும்பி வருகையில் பொன் தோகை மயிலாக திரும்பி வந்தது. வாத்தை விடவும் மயில் அழகானது. ஆனால் கதையில் மயிலை விடவும் வாத்து கதையே மக்கள் மனதில் நின்றது. இரண்டுக் கதைகளின் பேசும்பொருள் பேராசை. பொன் முட்டை இடும் வாத்து தரும் அதே நீதியைத்தான் பொன் தோகை தரும் மயில் கதையும் தருகிறது. ஆனால் பொன் முட்டை வாத்து கதையிலிருக்கும் பெரும் சோகம் மயில் கதையில் நிகழ்ந்திடவில்லை. அப்படியென்றால் மூலக்கதையை ஒரு காலமும் தழுவல் கதை வென்றுவிடுவதில்லை என்பதற்கு இக்கதை நல்ல உதாரணம்.
இரண்டு கதைகளிலும் இன்னொரு செய்தி இருக்கிறது. வாத்து முட்டையும் சரி, மயிலின் தோகையும் சரி அது அதன் உடலில் இருக்கும் வரை சாதாரணமாகத்தான் இருக்கிறது. அது உடலிலிருந்து பிரிகையில்தான் பொன்னாக மாறுகிறது. எதுவும் தமக்குளிருக்கையில் அது சாதாரணமாகவே இருக்கிறது. அது மொழியாக, காட்சியாக, வர்ணனையாக வெளிப்படுகையில் அற்புதங்களை நிகழ்த்துகிறது.
நான் 2016 ஆம் ஆண்டு டெல்லிக்கு ஒரு கதையைக் கொண்டுசென்று அங்கேயிருந்து ஒரு கதையை தமிழுக்குக் கொண்டு வந்தேன். அந்த ஆண்டு டெல்லி சாகித்ய அகாடமி THE YOUNG HEARVEST எனும் நிகழ்வில் சிறுகதை வாசிக்க அழைக்கப்பட்டேன். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வு வெவ்வேறு பெயர்களில் நடைபெறுகிறது. இந்த விழாவின் தொடர்ச்சியாகத்தான் அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகின்றது. நான் பங்கேற்ற வருடம் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் ‘ ஒரு சிறு இசை’ எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
இந்த விழாவில் ஜுனியர் பிரிவில் நானும் சீனியர் பிரிவில் எழுத்தாளர் ஜெயமோகனும் கலந்துகொண்டோம். இந்த நிகழ்வுக்காக எனது ஒரு கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அலையாய் அலைந்தேன். அப்பொழுதுதான் எனக்கு மொழிபெயர்ப்பின் அருமையும் அதற்குளிலிருக்கும் கடினமும் தெரியவந்தது. நான் ஒரு டி.எம்.சி கண்ணீர் எனும் கதையை பலரிடம் மொழிபெயர்க்கக் கொடுத்து அவ்வளவாக திருப்தியில்லாமல் நண்பர் மூலமாக ரகுபதி எனும் ஆங்கில ஆசிரியரிடம் மொழிபெயர்த்து வாங்கிச்சென்றேன்.
இக்கதை காவிரி நீர் பிரச்சனை பற்றிய கதை. தமிழ்நாடு – கர்நாடகா இரு மாநிலங்களுக்கிடையில் தலையான பிரச்சனையாக உருவெடுத்து தமிழ்நாடு எண் பதிக்கப்பட்ட வாகனங்களை கர்நாடகப் போராட்டக்காரர்கள் தேடிப் பிடித்து தீ வைத்து எரிக்கையில் ஒரு லாரி தமிழ்நாட்டுக்குள் எப்படி தப்பித்து வருகிறது. அப்படி தப்பித்து வரும் லாரி தமிழ்நாட்டில் நிகழ்ந்த சாதிக் கலவரத்தில் என்ன ஆனது என்பதே இக்கதை.
இக்கதையை நான் அசட்டுத் தைரியத்தில் மொழிபெயர்த்து கொண்டுசென்றேன். இக்கதையை நான் வாசிக்கத் தொடங்கியதும் டெல்லி அரங்கில் நிசப்தம் நிலவியது. கர்நாடக எழுத்தாளர்கள் இக்கதையை அவ்வளவு உன்னிப்பாக கேட்டார்கள். ஒரு கட்டத்தில் அக்கதைக்கு எதிர்ப்பு தெரிவிக்க எழுந்துவிட்டார்கள். இந்த அமர்வுக்கு தலைமை வகித்த அஸ்ஸாம் எழுத்தாளர் அவையை அமைதிப்படுத்தி கதையின் முடிவு வரைக்கும் பொறுத்திருங்கள் என்றார்.
நான் கதையில் லாரியை ஓட்டிக்கொண்டு தமிழ்நாட்டுக்குள் வந்ததும் தமிழ்நாட்டில் நிகழும் சாதிக் கலவரத்தால் லாரி எரியும். இந்த எதிர்பாரா முடிவைக் கேட்டு கர்நாடக எழுத்தாளர்கள் கைக்கொட்டி சிரித்தார்கள். ONE TMC TEAR எனும் இக்கதை பிறகு திசையெட்டும் எனும் இரு மொழி இதழில் பிரசுரமானது.
டெல்லி நிகழ்வு முடிந்து டெல்லி, ஆக்ரா நகரங்களைச் சுற்றி பார்த்து அங்கேயிருந்து ஒரு கதையை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தேன். அந்தக் கதை ‘சத்ரபதி தாஜ்மகால்.’
பூமியின் முகத்தில் கண்ணீர்த் துளியாக இருக்கும் தாஜ்மகாலைப் பார்வையிட்டு திரும்புகையில் சற்று தூரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவப்பட்டிருந்தது. இவை இரண்டையும் ஒரு சேர மனதிற்குள் உருட்டையில் எனக்குள் ஒரு கதை பிறந்தது. அக்கதையே சத்ரபதி தாஜ்மகால். இக்கதை பிரபலமான ஓர் இதழில் பிரசுரமானது.
தமிழ் நாட்டிலிருந்து சென்று இஸ்ரேல் நாட்டில் முனைவர்ப்பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் இணைய வழியில் மாதம் ஒரு சிறுகதையை வாசித்து விவாதித்தார்கள். ஒரு மாதம் சத்ரபதி சிவாஜி கதை விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தில் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு இக்கதையை நான் குறுநாவலாக மாற்றி ஒரு குறுநாவல் போட்டிக்கு அனுப்பினேன். இக்கதை முதல் பரிசுக்குரிய கதையாக தேர்வானது. கதையை பிரசுரம் செய்வதற்கு முன்பாக இதழின் ஆசிரியர் என்னிடம் தொடர்புகொண்டு கதை முதல் பரிசுக்கு தேர்வாகியுள்ளது. உங்களிடம் ஒரு வேண்டல். முதல் வகுப்பு பொதுத்தேர்வு எனும் சிறுகதையின் தலைப்பை நீங்கள் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் மறுத்துவிட்டேன். கதைக்கு அதுதான் பொருத்தமான தலைப்பு. மாற்ற இயலாது என்றேன். அப்படியென்றால் கதையைப் பரிசு பட்டியலிருந்து எடுத்துவிடுவோம் என்றார். நான் எடுத்து விடுங்கள் என்றேன். பிறகு இக்கதை ஒரு பதிப்பகத்தில் வெளிவந்து காலம் கடந்து கவனம் பெற்றது. இக்கதையை நான் கறாரான எனது ஆசிரியரையும் எனது மகனையும் வைத்து புனைந்திருப்பேன். தாஜ்மகாலைக் கட்டியது யார் என்பதே இக்கதை.
17 ஆம் நூற்றாண்டில் ஷாஜஹானால் தன் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்டதே தாஜ்மகால். 1965 ஆம் ஆண்டில் பி.என்.ஓக் எனும் எழுத்தாளர் தான் எழுதிய ஒரு நூலில் ‘தாஜ்மஹால் ஒரு ராஜபுத்திர அரண்மனை. அவர் நான்காம் நூற்றாண்டில் இந்த தாஜ்மகாலைக் கட்டியிருக்கலாம்’ என்று எழுதினார். இந்தக் கருத்துக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. நான்காம் நூற்றாண்டில் தாஜ்மஹால் போன்ற ஒரு கட்டிடத்தை கட்டும் கட்டடக்கலை அறிவு மக்களிடம் இல்லை என்று விமர்சனம் செய்தார்கள். பிறகு அவர் 1989 ஆம் ஆண்டு தாஜ்மஹால்: தி ட்ரூ ஸ்டோரி என்ற மற்றொரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் தாஜ்மகால் 12 ஆம் நூற்றாண்டில் ராஜா ஜெய்சிங்கால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் என்றும், பின்னர் அதை ஷாஜகான் ஒரு கல்லறையாக மாற்றினார் என்று எழுதினார். அவரது இந்தக் கருத்து பி.என்.ஒக் தியரி என்று அழைக்கத் தொடங்கியது. இந்தச் சர்ச்சை கருத்துகளை உள்வாங்கிக்கொண்ட நான் ‘தாஜ்மகாலைக் கட்டியது யார் ’ என்கிற ஒற்றைக் கேள்வியை மையமாக வைத்து ‘முதல் வகுப்பு பொதுத்தேர்வு’ எனும் குறுநாவல் எழுதினேன்.
இக்கதையை ஒரு புத்தகக் கண்காட்சி உரையில் பாலபுரஷ்கர் விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் குறிப்பிட்டு பேசி அந்த உரைமீது பல்வேறு விதமான கருத்துகள் எழுந்துடன் அந்நூல் பெரும் கவனிப்புக்கு உள்ளானது.
சமீபத்தில் தாஜ்மகால் மீது இன்னொரு கருத்து எழுந்துள்ளது. தாஜ்மகாலை கட்டியது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூதாதையர்கள் என்கிற கருத்து அது. அமெரிக்க அரசியலை அங்கதமாக எழுதும் டாக்டர் பி.ஓ. கஸ் என்பவர், இந்தியர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் விதித்துள்ள H1B அதிரடியான கட்டண உயர்வை விமர்சிக்க அவர் தாஜ்மகாலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார். தாஜ் என்பது டிரம்பின் மூதாதையர் ஜாகிர்தாரி என்பதன் சுருக்கமாகும். விசா நிதியைக் கொண்டு, ட்ரம்ப் குடும்பத்தினர் தாஜ்மகாலைக் கட்டினார்கள். இந்த தாஜ்மகால் அட்லாண்டிக் நகரில் உள்ள டிரம்ப் தாஜ்மஹால் சூதாட்டக் குகைக்கு மாதிரியாக செயல்பட்டது என்று அங்கதமாக எழுதினார். அமெரிக்கா, இந்தியா இவ்விரு நாடுகளையும் உருவாக்கியது ட்ரெம்ப்தான் என்று கிண்டல் செய்யும் புனைவு அது.
சிறுகதை என்பது மொழி வழியிலான சமூக விமர்சனம். சிறுகதை யாரையும் கதைக்கவல்லது. உண்மையில் உலக அதிசயம் என்பது தாஜ்மகாலோ, அமெரிக்க சுதந்திர சிலையோ அல்ல. சிறுகதை தான். சிறுகதை என்பது அதிகார வர்க்கத்திற்கு எதிரான மக்கள் உணர்வின் மொழிபெயர்ப்பு.
எனது விளம்பரதாரர் எனும் சிறுகதையை ADVERTISER`S PROGRAMME எனும் பெயரில் முனைவர் எஸ் கணேசன் அவர்கள் மொழிபெயர்த்து இத்தொகுப்பில் சேர்த்துள்ளார். நடன நிகழ்ச்சியின் பெயரால் கல்லூரிப் பருவப் பெண்கள் அரைகுறையான ஆடைகளை அணிந்துகொண்டு கோவில் திருவிழாக்களில் ‘கல்லூரி கலக்கல்’ என்கிற அடையாளத்தோடு ஆடுபவர்கள் பற்றிய கதை.
எங்கள் ஊருக்கும் அருகிலுள்ள ஒரு கிராம திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளித்திருமணம் நாடகம், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரன் நாடகங்கள் முடிவுக்கு வந்து பாட்டுக்கச்சேரி தலையெடுத்து அத்துடன் ஆடலும் சேர்ந்துக் கொண்டு திருவிழா களைக்கட்டிய காலம் அது.
அந்தத் திருவிழாவில் ஒரு பாடலுக்கு ஒரு பெண் ஆடவந்தாள். அவளோடு கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்த ஆடவர்கள் மேடையேறி ஆடினார்கள். பாடல் இறுதி பகுதிக்கு வருகையில் அந்த ஆடவர்கள் அவளது ஆடையை களையவும் பிய்க்கவும் தொடங்கிவிட்டார்கள். இந்தச் சம்பவத்தைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. எனக்கு ‘திக் திக்’ என்றிருந்தது. என்னுடன் வந்தவர்கள் கைக்கொட்டி ரசித்தார்கள். நான் அவளது முகத்தைப் பார்த்தவனாய் நின்றேன். அவள் அதுகுறித்து சற்றும் வருந்தாமல் முகத்தில் கோபம், எதிர்ப்பு, முகச்சுழிப்பு என்று எதையும் வெளிப்படுத்தாமல் சிரித்துக்கொண்டே ஆடைகளை அள்ளிக்கொண்டு உள்ளே ஓடினாள். இந்தச் சம்பவம் என்னைப் பெரிதும் பாதித்தது. அவளது சிரிப்பு என்னை ரொம்பவே வதைத்தது. அவளை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுதினேன். அதுவே ‘விளம்பரதாரர் நிகழ்ச்சி.’ இக்கதை பல்சுவை காவியம் என்றொரு மாத இதழ் தமிழ்ச் சிறுகதையாளர்கள் சேர்ந்து தொடங்கினார்கள். அந்த இதழுக்காக ஒரு சிறுகதைப் போட்டி நடத்தினார்கள். அந்தப் போட்டியில் இக்கதை பரிசு பெற்றது. இக்கதைதான் மொழியாக்கம் பெற்று தற்போது கப்பல் ஏறியிருக்கிறது.
நான் 2004 ஆம் ஆண்டு வாக்கில் எழுதத் தொடங்கினேன். அதிலிருந்து தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது எழுத்தின் பின்னே என் இளைமைப் பருவ பசி இருக்கிறது. என் மூதாதையர்களின் புறக்கணிப்பு இருக்கிறது. ஓநாய் பசியையொத்த எழுத்து தாகம் இருக்கிறது. இந்தத் தாகம் என்னை தொடர்ந்து எழுதவும் இயங்கவும் செய்கிறது. என்னால் ஒரு நாளேனும் எழுதாமல் இருக்க முடிவதில்லை. சிறுகதைகளாக எழுதும்பொழுது ஒரு கட்டத்தில் சோர்வு வந்துவிடுகிறது. கட்டுரை எழுதுகிறேன். கட்டுரை சில நேரம் அயர்ச்சியைக் கொண்டுவந்து சேர்க்கிறது. வரலாறு எழுதுகிறேன். வரலாறு முரண்டு பிடிக்கையில் புதினம் எழுதுகிறேன்.
எழுதுதல் என்பது சரியாக சிந்தித்தல் எனும் செயல்பாடு. இந்த செயலுணர்வு மற்ற எல்லா உணர்வுகளை விடவும் மேம்பட்டதாக தோன்றுகிறது. ஆகவே எழுதுகிறேன். எனது எழுத்து மெல்ல ஊர்ந்து மொழிபெயர்ப்பாளர்களின் கவனத்திற்கு வந்திருக்கிறது. இது பெருமைக்குரியது. பெரிய அங்கீகாரமாகவும் கருதுகிறேன். எனது சமீப வெளியிடான ‘அண்டனூர் சுரா சிறுகதைகள் – 100 இரு தொகுதிகள்’ நூலை உங்கள் வாசிப்பிற்கு பரிசாகத் தருகிறேன். இத்துடன் ‘THANJAVUR, LITERARY SCHOLAR SOCIETY’ எனும் இலக்கிய அமைப்புடன் கைக்கோர்த்து இந்த அமைப்பு தருகின்ற பூரிப்பு, பெருமை, பெருமகிழ்வுடன் நன்றி பாராட்டி இடம் அமர்கிறேன். நன்றி வணக்கம்.
(நவம்பர் 1,2025 அன்று தஞ்சாவூர் ஆல்வின் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற THANJAVUR, LITERARY SCHOLAR SOCIETY – LSS மாதாந்திர நிகழ்வில் STORIES APLENTY எனும் நூலை வெளியிட்டு MY EXPERIENCE AS A TAMIL SHORT STORY WRITER எனும் தலைப்பில் தமிழில் ஆற்றிய சிறப்புரை.)
![]()