மட்டு.எல்லையில் தமிழர் பகுதியில் புதிய விகாரை; ஸ்ரீநேசன் எம்.பி. கூறுகிறார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் உள்ள நெடியகல் மலை பிரதேசத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அந்த இடத்திலிருந்து சுமார் 15 கிலோமீற்றருக்கு அப்பால் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் அந்த 15 கிலோமீற்றருக்கு அப்பாலிருப்பது பொலநறுவை மாவட்டமாகும். அப்பகுதியிலிருந்து எமது தமிழ் மக்கள் வாழுகின்ற மட்டக்களப்பு எல்லைப்புறத்திற்கு பிக்குமார் வந்து அங்குள்ள நெடியகல்மலை பகுதியில் பௌத்த மத வழிபாட்டு தலம் ஒன்றை அமைப்பதற்குரிய செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார் .
இங்கு அவர் மேலும் தெரிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் முன்னர் ஆளுநராக இருந்த அனுராதா ஜஹம்பத் தனது காலத்தில் மக்களுக்கு சேவை செய்த செய்ததைவிட பிரச்சினைகளைத்தான் உருவாக்கினார். அந்த வரிசையில் தான் இந்த நெடியகல் மலை பகுதியிலும் அவருடைய நிர்வாகக் காலத்தில்தான் இந்த பௌத்தமத வழிபாட்டுத்தலம் ஒன்றை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தார்.
பௌத்த சிங்கள குடிமகன் எவருமே வாழாத இடத்தில், நெடிய கல்மலையில் பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலத்தில் இந்த மாவட்டத்தில் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருந்தார்கள் அவர்களுடைய காலத்தில் தான் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக இருந்து அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றதால் இந்த விடயங்களை அவர்கள் கண்டும் காணாததுபோல் விட்டுவிட்டார்கள்.
இப்போது இருக்கின்ற ஆட்சியில்கூட அதன் தொடர்ச்சி காணப்படுகிறது. வனஇலாகாவுக்கு சொந்தமான அந்தப் பகுதியை வன இலாகா பிரிவினர் பௌத்த விகாரை அமைப்பதற்கு வழங்கி இருக்கின்றார்கள். இப்போது அங்கு இந்த பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பௌத்த துறவிகள் வந்து செல்கின்றனர். காலப்போக்கில் அவர்கள் தங்குவதற்குரிய விடுதிகள் அமைக்கப்படும். பின்னர் அவர்களை பராமரிப்பதற்கும், சேவைசெய்வதற்குரிய சிங்கள மக்களை குடியேற்றும் தேவை ஏற்படும்.அவற்றுக்கு ஏதும் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அங்கு பாதுகாப்பும் வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும், இராணுவ கட்டமைப்பு அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே கிழக்கு மாகாணத்தை இவ்வாறு திட்டமிட்டு தமிழ் மக்களிடமிருந்து ஆக்கிரமிப்பதற்கான ஒரு செயற்பாடாகதான் இந்த செயற்பாட்டை நாம் பார்க்கின்றோம். நல்லாட்சி, நல்லிணக்கம், சமரசம், போன்றவற்றையெல்லாம் பேசும் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த அதிகாரி பௌத்த இடிப்பாடுடனாக விடயங்களை அவ்விடத்தில் விதைத்துவிட்டு அங்கு பௌத்த வழிபாட்டுத்தலம் எப்போதோ இருந்திருக்கின்றது என்று தாங்கள் அவ்விடத்தில் போட்ட சின்னங்களை வைத்துக் கொண்டு அடையாளப்படுத்தி இருப்பதாக ஒரு பௌத்த துறவியே தெரிவித்த்துள்ளார்.
அதுபோல் கிழக்கிலும் புதிதாக பௌத்த வழிபாட்டுத் தலம் ஒன்று அமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதற்குரிய வீதியையும் வீதியை அபிவிருத்தித் திணைக்களம் அமைத்துக் கொண்டிருக்கின்றது. இவ்விடயம் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளார்கள். எனவே ஜனாதிபதியிடவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்கள் வசிக்காத பிரதேசங்களில் அவர்கள் சாராத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பது என்பது நல்லிணக்கம் அல்லது சமரசமான வாழ்வுக்கான சூழ்நிலை குழப்பப்படும் என தெரிவிக்கின்றேன்.
இதுபோன்றுதான் மைலத்தமடு, மாதவனை, போன்ற பிரதேசங்களிலும் பொலன்நறுவை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மையின மக்கள் வந்து ஆக்கிரமித்து அங்கு இருக்கின்ற தமிழ் மக்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறங்களில் பெரும்பான்மையின மக்களால் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. எம்மவர்கள் கால்நடைகளை வளர்க்க முடியாமல் உள்ளார்கள்.எனவே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என்றார்.
![]()