நாட்டில் பாசிசவாதம் உருவாகி வருகின்றது அநுரவுக்குள் இருந்த ஹிட்லர் வெளிவருகிறார்! மக்களின் உயிர் வாழும் உரிமையை பாதுகாக்க எதிர்க் கட்சிகள் அணி திரள வேண்டும்

ஜனாதிபதி அநுரகுமாரவுக்குள் இதுவரையில் உறங்கிக்கொண்டிருந்த ஹிட்லர் வெளிப்படத் தொடங்கியுள்ளார் என்றும் இதன்படி நாட்டில் பாசிசவாதம் உருவாகி வருகின்றது என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் உதய கம்மன்பிலவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரிசவசம், பொதுஜன ஐக்கிய முன்னணி செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உதய கம்மன்பில தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரலாற்றில் ஏற்பட்டுள்ள பெருமளவிலான உயிர் அச்சுறுத்தல் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. லசந்த விக்கிரமசேகர என்பவர் அண்மையில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இவர் வழக்கில் சந்தேக நபரே.
சந்தேக நபரொருவருக்கு நீதிமன்றத்தினாலும் மரண தண்டனை வழங்க முடியாது. குற்றவாளிகளுக்கே தண்டனை வழங்க முடியும். குற்றவாளியாக அறிவித்தாலும் மரண தண்டனையை ஜனாதிபதியினால் மட்டுமே செயற்படுத்த முடியும். இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை அதிகாரம் என்பன பாதாள குழுக்களுக்கு பன்முகப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றே கூற வேண்டும். சுருக்கமாக கூறினால் மக்களின் உயிர்வாழும் உரிமையை அரசாங்கம் பறித்துக் கொண்டிருக்கின்றது.
இதேவேளை இலட்சம் பேரை கொன்றாவது நாங்கள் ஆட்சியை பாதுகாக்க தயார் என்று நகர மேயர் ஒருவர் கூறியுள்ளார். அந்த இலட்சம் பேரில் முதலாவது நபரா வெலிகம பிரதேச சபையின் தலைவர்? என்ற கேள்விகள் எழுகின்றன.
இப்போது ஶ்ரீலங்கா பொலிஸ் ஹிட்லரின் கெஸ்டபோ பொலிஸாக மாறி வருகின்றது. அன்று எங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், வரலாற்று கோபங்களை மறந்து பாசிசவாதத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றிணைந்துள்ளோம்.
இன்று இலங்கையில் அந்த பாசிசவாதம் உருவாகி வருகின்றது. துரதிஸ்டவசமாக ஜனாதிபதி அநுரகுமாரவுக்குள் உறங்கிக்கொண்டிருந்த அடோல்வ் ஹிட்லர் வெளிப்படத் தொடங்கியுள்ளார். இதனால் எதிர்க்கட்சிகள் என்ற ரீதியில் எமது அரசியல் கருத்து வேறுபாடுகளை பக்கத்தில் வைத்துவிட்டு மக்களின் உயிர்வாழும் உரிமையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.
இதன்படி அரசாங்கத்தின் பொய்கள், அச்சுறுத்தல்களை இல்லாமல் செய்யவேண்டுமென்று எவராவது நினைத்தால் அவர்கள் அனைவரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடைக்கு ஒன்றிணைய வேண்டுமென கோருகின்றோம் என்றார்.
![]()